ஆனால் சிறியவர்கள் ஒவ்வொன்றையும் முழு மனதோடு வாழிவியலின் ஒரு பகுதியாக ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். தொலைக்காட்சிக்கான நேரத்தை தங்களது நாட்களின் ஒரு முக்கிய பகுதியாக நினைத்தே குழந்தைகள் செலவு செய்கிறார்கள். குழந்தைகள், தனியே கார்ட்டூன் சானல்களில் அல்லது குடும்பத்துடன் (குறிப்பாக தாத்தா பாட்டிகளுடன் ) நெடுந்தொடர்களில் ஒரு நாளின் குறிப்பிடத்தக்க நேரத்தை செலவு செய்கிறார்கள். அந்த நேரத்தில் சரிபாதியான பங்கை விளம்பரங்கள் எடுத்துக்கொள்கிறது என்பதை நாம் கவனிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இங்கு விளமப்ரங்கள் வழியே எது மாதிரியான விசயங்கள் கட்டமைக்கப்படுகிறது? நுகர்வு கலாச்சாரத்தை ஊக்குவிப்பது தான் விளம்பரங்களின் முதல் நோக்கம் என்றாலும் அதனுடன் பல உளவியல் சார்ந்த விஷயங்களும் பார்வையாளர்களுக்கு தரப்படுகிறதே என்பதே நிதர்சனம்.
தீபாவளியே முன்னிட்டு “Kinder Joy” ஒரு புதிய விளம்பரத்தை எடுத்துள்ளது. அதன் முதல் காட்சி . பெற்றோர் தங்களது குழந்தைகளிடன் “எல்லா பெரியவங்க காலில் விழுந்து தீபாவளி வாழ்த்துக்கள் சொல்லி ஆசிர்வாதம் வாங்குங்க” என்று சொல்கிறார்கள். உடனே சிறுவர்கள் தாத்தா-பாட்டி முதல் சித்தி வரை காலில் விழுவதையும் அவர்கள் பரிசு தருவதையும் அதனைக் கண்டு சிறுவர்கள் ஆனந்தம் அடைவதுமாக வருகிறது. இங்கு நமது சமூகத்தில் ஏனோ பெரியவர்களின் காலில் விழுந்தால் மட்டுமே சிறியவர்களுக்கு ஆசிர்வாதம் கிடைக்கிறது. இதுப் போன்ற தேவையில்லாத பழமைவாதத்தை போற்றி புகழ்ந்து புனிதப்படுத்தியத்ததின் விளைவு தான் சென்ற ஆண்டு சென்னையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நடந்த பாத பூஜை திருவிழா. முதலில், பெற்றோர்களை வரவழைத்து குழந்தைகளை பாத பூஜை செய்த பள்ளி நிறுவனம் மறுநாள் ஆசிரியர்களுக்கு பாத பூஜை செய்ய வைத்திருக்கிறது. அத்துடன் நிற்காமல் பெண் பிள்ளைகளை போற்றுகிறோம் என்று சொல்லிக்கொண்டு சக மாணவர்களுக்கும் பாத பூஜை செய்ய வைத்திருக்கிறார்கள். இவையனைத்துமே பழமையை போற்றுதல் என்பதின் பக்க விளைவாகவே பார்க்க முடிகிறது. “நான் ஏன் விழ வேண்டும்?” என்று குழந்தை கேட்கும் எதார்த்தமாக கேள்விக்கு நம்மிடயே நியாமான பதில் என்றைக்குமே இருந்ததில்லை.
அடுத்து ஒரு சோப் விளம்பரம், “நிம்மி நிம்மி” என சொல்லிக் கொண்டு யாரையோ தேடும் வெறும் 5-6 வயதுள்ள ஐந்து குழந்தைகள், அந்தக் குழுவிலுள்ள ஒரு குழந்தையின் அம்மாவை பார்க்க அவர்களது வீட்டிற்கு வருவார்கள். தங்களது பிஞ்சு கைகளை வைத்து அழகாக கண்களை மூடிக்கொண்டு அந்த அம்மாவை பார்க்க காத்திருப்பார்கள். அவர் குழந்தைகளிடம் வந்து “இன்னைக்கு என்ன?”” என்று கேட்டதும் தாங்கள் இசைப் போட்டியில் வெற்றிப் பெற வேண்டும், உங்கள் முகம் ரொம்ப ராசியானது என்பார்கள்…..இதை விட ஒரு மூடத்தனத்தை குழந்தைகளிடன் பரப்ப முடியுமா? ஒருவர் முகத்தில் விழிப்பது ராசி என்பதும் மற்றோருவர் முகத்தில் விழிப்பது ராசி அற்றது என்பதெல்லாம் நாம் கடந்து வந்துவிட்டோமே..இவற்றை நாம் ஏன் மீள் உருவாக்கம் செய்ய வேண்டும்.
பாரம்பரியம் என்ற பெயரிலும், முன்னோர்களின் பெருமைகளை பேசுகிறோம் என்ற பெயரிலும் இவர்கள் தயாரிக்கும் விளம்பரங்கள் பல மூடநம்பிக்கைகளை தொடர்ந்து பரப்பி வருகிறது. இங்கு தான் விஞ்ஞானமும் வேதமும் ஒன்று சேர்ந்து விற்பனைக்கு வருகிறது. எது வேதம் ? என்று கேட்டால் எவருக்கும் விடை தெரியாது. ஒரு சாமியார் தியானம் செய்யும் புகைப்படத்தை பின் திரையில் ஓடவிட்டு சில மூலிகைகள் என்ற பெயரில் இலை தழைகளை காட்டிவிட்டால் போதும் இங்குள்ள மக்களை கவர்ந்திடலாம். இதுப் போன்ற விளம்பரங்களும் சரி, டஜன் கணக்காக நெடுந்தொடரில் வரும் கோயில் பூஜை காட்சிகளும் / பேய் காட்சிகளும் சரி மக்கள் மனதில் பல்வேறு மூடநம்பிக்கைகளை தொடர்ந்து விதைத்து வருகிறது.
பள்ளிக்கு செல்லும் குழந்தைகளின் Tiffin box களை குறிவைத்து பிஸ்கட், பாக்கெட் பழசாறு, ஊட்டச் சத்து பானங்கள், ஜாம், உடனடி உணவு பொருட்களின் விளம்பரங்கள் நிறைய வருகிறது. இதில் வெறும் நான்கு பிஸ்கட்களோ அல்லது இரண்டு பிரெட்களோ காலை உணவிற்கு போதுமானதாகவும் அதிலும் அதில் பாலின் சக்தி இருப்பதால் குழந்தையின் தாய் மிகவும் புத்திக்கூர்மையுடன் இருப்பதாக காட்டப்பப்படுகிறது. தற்போது மதிய உணவிற்கும் அதே பிஸ்கட்கள் போதுமானது என்றும் சொல்ல ஆரம்பித்துள்ளனர். இவர்கள் காட்டும் உணவுகள் அனைத்துமே நமக்கு தின்பண்டங்களே அவற்றை நமது வாழ்வியலில் முக்கிய உணவாக தொடர்ந்து காட்சிப்படுத்தி வருகிறார்கள். இவற்றைத் தான் தொடர்ந்து குழந்தைகளும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
மேலும் இதுப் போன்ற குழந்தை உணவுகள், சோப்பு , அழகு சாதன பொருட்கள் & மருத்துவ பொருட்களின் விளம்பரங்களில் முக்கியமாக மூன்றுவிதமான அணுகுமுறையை கையாள்கிறார்கள். முதலாவது அம்மாக்களின் புத்திசாலித்தனங்களும் அக்கறைகளும், இரண்டாவது மருத்துவர்களின் ஆய்வும் அறிவும், மூன்றாவது கல்வி நிலையங்களில் கிடைக்கும் வெற்றிகள்.
அம்மாக்களே அனைத்தும் அறிந்தவர்களாகவும் குடும்பத்தின் மீது அக்கறை உணர்வு அதிகமாக உள்ளவர்களாகவும் சித்தரிக்கப்படுகிறார்கள் . அக்கறையையும் அதன் வழியே புத்திக்கூர்மையையும் இங்கு விளம்பரங்களாக வந்து நமது வீட்டினுள் நுழைகிறது அந்தப் பொருள். அப்பா தனது குழந்தைக்கு உணவு ஊட்டினாலும் அதிலும் அம்மாவின் புத்திசாலித்தனத்தை மிகைப்படுத்தி காட்டுவதில் தான் விளம்பரங்கள் முக்கியத்துவம் காட்டுகிறது. குழந்தையின் உணவு, வீட்டின் சுத்தம், விதவிதமான சுவையான உணவு, உடலுக்கு உபயோகிக்கும் சோப்பு, பவுடர் மற்றும் தலைமுடி உதிர்தல் என அனைத்தையும் அம்மா அறிவார் இல்லையெனில் பாட்டி அறிவார். இவை அனைத்திலும் தந்தையோ தாத்தாவோ அறிவில்லாதவர்களாகவே இருப்பார்கள். வீட்டிற்குள் உணவு மற்றும் மருத்துவம் சார்ந்து எடுக்க்கப்டும் முடிவுகள் அனைத்தையும் அம்மாக்களுக்கு எடுத்துக் கொடுத்துவிட்டு அவர்களது அருமை பெருமைகளை பாடி மிக நேர்த்தியாக வியாபாரம் செய்துக் கொண்டிருக்கிறார்கள்.
அடுத்து மருத்துவர்களும் அவர்களுது Clinically proven ஆய்வுகளும் ; இவை தொடர்ந்து வீட்டில் இருக்கும் உணவுகளை (குழந்தைகள் ஒழுங்காக சாப்பிடாததால் என்று சொல்லி தப்பித்துக் கொள்கிறார்கள்) ஊட்டச் சத்து குறைப்பாடு உள்ளதாகவும் அதனை ஈடுகட்ட ஊட்டச் சத்து பானங்களை பரிந்துரை செய்வார்கள். இதை அன்றாடம் குழந்தைகள் இரண்டு-மூன்று தடவை குடித்தால் மட்டுமே பெற்றோர்களாகிய நமக்கும் ஒரு திருப்தி. நமது திருப்திக்காகவே தொடர்ந்து மருத்துவர்களின் வேடத்தில் வந்து தொடர்ந்து சில வண்ணமையமான Chart களை நொடிப் பொழுது மட்டும் காட்டிவிட்டு செல்கிறார்கள். அன்றாடம் பருகும் ஊட்டச் சத்து பானங்கள் தாண்டி தற்போது வெயிலில் விளையாட சென்றாலும், அதற்கும் சத்துள்ள குளிர்பானங்கள் வந்துவிட்டது.
ஒரு குழந்தை வயிற்று வலியால் பள்ளியில் நோயுற்று இருக்கும். பள்ளிக்கு தந்தை சென்று வீட்டிற்கு அழைத்து வருவார். உள்ளே வந்தது குழந்தையின் தாய் “மருத்துவர் சொல்வதை கேளுங்க” என்று சொல்லவிட்டு மருத்துவர் உடையை அணிந்துவிட்டு ஒரு கருவி மூலம் குழந்தையின் கையில் உள்ள கிருமியை காண்பிப்பார். கிருமிகளை 99.9% சதவீதம் கொல்லும் சோப் என்று விளம்பரம் அமையும். நானும் நீண்ட நாட்களாக, கிருமியை கண்டுபிடிக்கும் கருவியை கையில் வைத்திருக்கும் மருத்துவரை தேடிக்கொண்டிருக்கிறேன், இன்னும் கிடைத்தப்பாடில்லை.
ஒரு விளம்பரத்தை பார்க்கும் குழந்தைகள் அதில் வரும் மருத்துவர்களையும் அவர்கள் சொல்லும் விசயங்களையும் உண்மையென நம்புகிறார்கள். மருத்துவர்களின் உடையில் வந்து குழந்தைகள் உயரமாக பலமாக புத்திசாலியாக வளரவும் பல்வேறு போட்டிகளில் வெற்றி அடையவும் இவை உதவுகிறது என்ற பிம்பத்தை விளம்பரங்கள் பெற்றோர் மனதில் விட குழந்தைகளின் மனதில் அதிகமாக பதிவு செய்கிறது.
சமீபத்தில் ஒரு விளம்பரம். ஒரு ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த 5ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி அதிகாலை சீக்கிரம் எழுந்து படிப்பாள். அவளது அம்மா “ஏன்மா இவ்வளவு சீக்கிரம்?” என்று கேட்க..”மருத்துவர் ஆக கஷ்டப்பட்டு படிக்கணும்ல” என்பாள். உடனே அம்மாவும் தனது பங்கிற்காக ஐந்து ரூபாயில் கிடைக்கும் ஊட்டச் சத்துபானத்தை தந்து தனது தாய்மையின் அக்கறையும் புத்திசாலித்தனத்தையும் வெளிப்படுத்துவார். இதேப் போன்று இருமலின் தொல்லையால் தூக்கம் வராமல் 5 வயது சிறுவன் தவிக்க ..குறிப்பாக அவன் விண்வெளிக்கு செல்லும் கனவு இருமலால் பாதித்து அவன் எழுந்துவிடுவான். அப்துல்கலாம், கனவு காணுங்கள் என்று சொன்னதை இணைப்பது போல வடிவமைப்பு கொடுத்து அந்த இருமல் மருந்தின் விளம்பரம் அமைந்திருக்கும். கல்வியும் அம்மாவின் புத்திசாலித்தனமும் அத்துடன் மருத்துவரின் பிம்பமும் சேரும் இடம் விளம்பரங்களில் இன்னும் அதிகமான அபத்தங்களை கொண்டதாகவே இருக்கிறது.
கல்விவையும், விளையாட்டுகளையும், கலைகளையும் கூட போட்டி வடிவமாக மாற்றி அதனில் வெற்றி அடையும் தன்மையை அதிலும் குறிப்பாக முதல் இடத்திற்கு வருவதை முன்னிட்டு இங்கு எண்ணற்ற விளம்பரங்கள் வருகிறது. தேர்வில் வேகமாக எழுதும் பேனா, கிரிக்கெட் விளையாட தேவையான Stamina, பரதநாட்டிய அரங்கேற்றம், கராத்தே, விண்வெளி செல்லும் வீரர்கள், யோகா, புலியின் சக்தியை கொடுக்கும் பிஸ்கட், சினிமா/ விளையாட்டு கதாநாயகர்களாக நினைத்து அதற்கு உதவும் பொருட்கள் என இவர்கள் தொட்டு செல்லும் விசயங்கள் அனைத்துமே போட்டி மனப்பான்மையை மையமாக கொண்டு செயல்படுவதை கவனிக்க முடியும். இது சகமனிதனோடு சேர்ந்து மகிழ்வாக வாழும் உலகம் என்ற உண்மையை மறைத்து தொடர்ந்து இது போட்டி உலகம் என்று சொல்லி சொல்லி பெற்றோர்களையும் கூடவே குழந்தைகளையும் ஓட வைத்து அந்த ஓட்டத்தின் நடுவே தங்கள் பொருட்களை விற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
நுகர்வு பொருள் அல்லாது திரைப்படம்,நெடுந்தொடர், சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் பண்டிகை நாட்களில் வரும் நிகழ்ச்சிகளின் விளம்பரங்களையும் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டிருக்கிறது. விஜய் டிவியில் “கில்லி” திரைப்படத்திற்காக விளம்பரம் செய்தார்கள். படத்தில் எத்தனையோ நல்ல காட்சிகள் இருந்த போதும் தேடிப் பிடித்து திரிஷா கழுத்தில் விஜய் கத்தி வைக்கும் காட்சியை விளம்பரம் செய்தார்கள். அந்தக் காட்சியை எதிர்பாராத நேரத்தில் திடீரென வந்ததால் என் 6 வயது மகள் பார்ப்பதை தடுக்க முடியவில்லை. அதுவரை அவளது விளையாட்டு பொருட்களில் வெறும் விளையாட்டு சமையலுக்காக மட்டும் பயன்பட்ட கத்தி அவ்வப்போது விஜய் போல் நடிக்கவும் பயன்படுத்தப்படலாம் என்ற நிலையே மிஞ்சுகிறது.
சீரியல்களை தவிர்த்தாலும் அதன் விளம்பரங்களை இங்கு யாராலும் தவிர்க்க இயலாது. சீரியல்களின் வரும் வீட்டை விட்டு துரத்தும் காட்சிகளோ, கருவை கலைக்கும் காட்சிகளோ, திருமணங்களை அல்லது முதல் இரவை தடுக்கும் காட்சிகளோ, கொலை செய்ய வரும் ரவுடிகளின் மிரட்டல்களோ, குழந்தையை கடத்தும் காட்சிகளோ தான் செய்திகளுக்கு நடுவில் விளம்பரங்களாக வருகிறது. ஆக, செய்திகள் பார்த்தாலும் கூட சீரியல்கள் காட்சிகளிலிருந்து நாம் தப்பிக்கவே முடியாது .
(இதுப் போன்ற விளம்பரத்திற்கு நடுவே இங்கொன்றும் அங்கொன்றுமாக சில விளம்பரங்கள் மட்டும் ஆக்கப்பூர்வமான விசயங்களை முன்னெடுத்திருக்கிறது என்பது மட்டுமே சற்று மனதிற்கு அமைதியை தருகிறது.) தொலைக்காட்சியில் ஒரு குழந்தையை அதிகம் கவர்வது விளம்பரமே, ஒளிபரப்பாகும் அந்த 10 நொடி நேரப் பொழுதில் பார்வையாளரை கவரும் தன்மைக்கு முதலில் பலி ஆவது குழந்தைகளே. குழந்தைகள், தொலைக்காட்சியின் வழியே வாழ்வியலை பார்க்கிறார்கள் . ஏனென்றால் அதனை உண்மையென அவர்கள் நம்புகிறார்கள். எது உண்மை, எது பொய் என்பதை புரிந்துக்கொள்ளும் காலம் வரும்வரை இவை தொடர்ந்து காட்சிகளாக அவர்கள் மனதில் பதிவு செய்யப்படுகிறது.
தொலைக்காட்சி பற்றிய விவாதங்கள் வரும்போதெல்லாம் பல பெற்றோர்கள் “நாங்க குழந்தைகளுக்கு நல்லது கெட்டது காட்டி வளர்க்கிறோம்” என்று தான் பதில் தருகிறார்கள். எதார்த்தத்தை கைவிட்டுவிட்டு வெறும் கற்பனைகளை வாழ்வியலாக காட்டுவதில் என்ன நல்லது என்ன கெட்டது. பிம்ப வாழ்வியலை விட்டு எதார்த்த வாழ்வியலை குழந்தைகளுக்கு காட்டவேண்டிய பொறுப்பு பெற்றோர்களாகிய நம்முடையது. எதார்த்த வாழ்வில் நிலவும் நல்லதும் கெட்டதும் தான் இங்கு நமது குழந்தைக்கு தேவையானதே தவிர யாரோ எங்கோ உட்கார்ந்து நுகர்வு சார்ந்து உருவாக்கும் காட்சிகள் அல்ல.