குஞ்சு தெய்வம் (மலையாள திரைப்படம் அறிமுகம்) – ‘பஞ்சு மிட்டாய்’ பிரபு

வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

குழந்தை வளர்ப்பில் கடவுள் நம்பிக்கைகளின் தாக்கம் எத்தகையது? குறிப்பாக வீடுகளில்…இங்கு கடவுள் நம்பிக்கை என்பதை வீட்டில் நடக்கும் சடங்குகள் மூலம் ஓர் குழந்தை இயல்பாக கற்றுக்கொள்கிறதா அல்லது அவை குழந்தைகளுக்கு திணிக்கப்படுகிறதா? கடவுள் என்ற அச்ச உணர்வின் மூலமாக ஒழுக்கத்தை போதித்திட முடியும் என்ற நம்பிக்கை இங்கு பரவலாக உண்டு, அந்த நம்பிக்கை எத்தகையது ? 

ஓர் குழந்தை எதேச்சையாக தவறு செய்தால் அந்த தவறு கடவுளின் தண்டனைக்கு உட்பட்டது என்று குழந்தை நம்பும் போது எந்தமாதிரியான மன உளைச்சலுக்கு அவர்கள் ஆட்படுகிறார்கள்? அதிலிருந்து அவர்கள் எப்படி மீள்கிறார்கள் ? போதனையிலிருந்து எத்தனை தூரம் பெரியவர்கள் விலகி இருக்கிறார்கள் என்பதை புரிந்துக்கொள்ளும் தருணம் குழந்தைக்கு எத்தகையது? மத நிறுவனங்களிலிருந்து விலகி ஒரு குழந்தை தன்னிச்சையாக சக மனிதனுக்கு உதவுவதை வீடு ஏன் ஆதரிப்பதில்லை ?

இப்படி பல கேள்விகள் பலரது மனதில் உண்டு. ஆனால் இந்த கேள்விகளை ஓரம்கட்டிவிட்டு தான் கடவுளின் அருமை பெருமைகளை நாம் தினமும் நமது குழந்தைக்கு போதித்து கொண்டிருக்கிறோம். இந்தக் கேள்விகளை தூண்டிவிடுவதை விட கலைக்கு வேறென்ன பெரிய வேலை இருந்துவிட போகிறது. அப்படிப்பட்ட ஒரு படைப்பு தான் மலையாள திரைப்படமான “குஞ்சு தெய்வம்” (அதாவது குட்டிக் கடவுள்). 1.30 மணி நேர திரைப்படம் தான், மிக நேர்த்தியாக இருந்த்ததாக உணர்கிறேன். ஒரு திரைப்படத்தினை அறிமுகம் செய்யும் போது அதன் கதையை கூற கூடாது என்ற மனநிலையில் தான் எப்போதும் இருப்பேன் . ஆனால் இந்தத் திரைப்படத்தினை பொருத்த வரை கதையுடன் பேச நிறைய விசயங்கள் இருக்கிறது. ஆகையால் வேறு வழியின்றி முழு கதையையும் சொல்லப்போகிறேன்.

ஜோசப் என்கின்ற 5வது படிக்கும் சிறுவன்  தான் கதையின் நாயகன். ஜோசப்பை அனைவரும் “அவுசபச்சா” என்று அழைக்கின்றனர். அவனது எண்ண ஓட்டங்கள் வழியே தான் கதை நகர்கிறது. படம் முழுவதும் அவனுடன் அந்த அழகிய சைக்கிளும் அந்த மலை பகுதியும்மேலும் திரைப்படத்தை அழகு படுத்துகிறது.

தனது சைக்கிளில் சர்ச்சிற்கு அந்தச் சிறுவன் செல்வது தான் முதல் காட்சி, கடைசி காட்சியும் அது தான். ஆனால் இந்த இரண்டு காட்சியில் இருக்கும் சிறுவனின் மன வேறுபாடுகள் தான் திரைப்படம். 

படத்தின் துவக்கத்தில் வரும் சிலக் காட்சிகள், சிறுவனுக்கு உள்ள கடவுள் நம்பிக்கை எத்தகையது என்பதை விளக்குகிறது. அதில் அந்த குழந்தை தன்மையோடு கடவுள் நம்பிக்கை எப்படியெல்லாம் பிணைந்திருக்கிறது என்பதை அழகாக காட்சிப் படுத்திருப்பார்கள். பின்னால் அந்தக் காட்சிகளிலிருந்து சிறுவன் எவ்வாறு மாறுபடுகிறான் என்பதையும் தொடர்பு படுத்தியிருப்பார்கள். 

அவனது வீட்டில் அம்மாவும், வயதான உடல்நிலை சரியில்லாத தாத்தாவும் தான் இருக்கிறார்கள் . அப்பா வெளிநாட்டில் இருக்கிறார். தாத்தா தான் அவனது நண்பன். ஆனால் அம்மாவிற்கு தாத்தாவை அவ்வளவாக பிடிக்காது. திட்டிக்கொண்டே இருப்பார். தாத்தாவிற்கும் பேரனுக்குமான அன்பு பரிமாற்றங்களை அழகாக காட்டிருப்பார்கள் . 

அவர்களது வீட்டில் தினமும் பைபிள் வாசித்து இறைவனை வணங்கும் பழக்கம் உள்ளவர்கள்.  அதேப் போல பைபிள் வசனங்களை கார்டுகளாக வைத்திருப்பான் சிறுவன். அதில் வருவது அவனது தினசரி வாழ்வோடு தொடர்புடையதாக நம்புகிறவன். ஜெபத்திற்கு 100 நாள் தொடர்ந்து சென்று கடவுளுக்கு பூக்கள் வைத்து வேண்டினால் கடவுள் கண்டிப்பாக பிரார்த்தனைகளை நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையை அவனது வீடும் சுற்றமும் அவன் மனதில் விதைத்து விடுகிறது. அதை தீவிரமாக அவனும் நம்புகின்றவன். 

அவனது வேண்டுதல்களில் முக்கியமானது;

 “அவன் எப்படியாவது உயரமாக வளர்ந்துவிட வேண்டும்” (ஏனென்றால் அவன் தான்  வகுப்பில் குள்ளமானவன், அதனால் அவன் தான் முதலில் நிற்க வேண்டும் )

அடுத்த வேண்டுதல் , அவனது கணக்கு வாத்தியார் எப்படியாவது வண்டியிலிருந்து கீழே விழ வேன்டும். ஏன்னெறால் அவர் வகுப்பில் கடுமையாக நடந்துக்கொள்வார். வகுப்பே அவரைப் பார்த்து நடுங்கும். வீட்டுப்பாடம் செய்யாமல் சென்றாலும் ஏதோ ஒரு செயல் மூலம் கடவுள் தன்னை காப்பாற்றுகிறார் என்று நம்பும் வகையில் சில விஷயங்கள் அவனுக்கு தொடர்ந்து நடந்துக்கொண்டே இருக்கும். அதற்கான காரணம் அவன் செய்யும் பிரார்த்தனைகள் தான் என்று மிக தீவிரமாக நம்புகிறவன் அவுசபச்சா.

இப்படியிருக்க ஒரு நாள் அவனது அம்மா, பக்கத்து வீட்டுடன் இருக்கும் ஒரு நில பிரச்னை காரணமாக அவர்களுக்கு எதிராக ஒரு வேண்டுதலை நடத்துகிறார். அதற்காக அந்தச் சிறுவனை கூட அழைத்துச் செல்கிறார். யாரிடமும் சொல்ல கூடாது என்றும் எச்சரிக்கிறார். முதல் முறையாக ஒருவரை எதிர்த்து கடவுளிடம் வேண்டிட முடியும் என்பதை சிறுவன் ஆச்சரியமாக பார்க்கிறான். அந்த நேரத்தில் தான் கணக்கு வாத்தியார் ஒரு தேர்வை அறிவிக்கிறார். தேர்வில் மதிப்பெண் குறைந்தால் வீட்டிலிருந்து பெற்றோரை அழைத்துவர வேண்டும் என்கிறார். தேர்வைப் பற்றி நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் போது, தலைவர் ஒருவர் உடல்நிலை சரியில்லாமல் இருக்கும்செய்தி வருகிறது. அவர் இறந்துவிட்டால் விடுமுறை கிடைக்கும் தேர்வும் ரத்தாகிவிடும் என்று நண்பர்கள்  சொல்ல இவனும் தீவிரமாக பிராத்தனை செய்கிறான். அவன் நினைத்தது நடக்கிறது. 

பள்ளி திறந்ததும் தேர்வை நடத்த ஆசிரியர் தயாராகிறார். யாரையாவது இறந்திட செய்து தேர்வை ராத்தாக்க வேண்டும் என்று  பிராத்தனை செய்கிறான் அவுசபச்சா. எதிர்பாராதவிதமாக அவனது தாத்தாவே இறந்துவிடுகிறார். அவன் மனம் மிகப்பெரிய குற்ற உணர்ச்சிக்கு உள்ளாகிறது. இறந்த தாத்தாவின் உடல் அருகில் செல்லும்போதெல்லாம் “ஏன் டா நான் சாகணும்னு வேண்டுன” என்று கேட்கிறது. அந்தக் குரல் அவனை கனவிலும் தொடர்கிறது. தாத்தாவின் சமாதிக்கு சென்று கெஞ்சுகிறான். அப்போது அருகிலிருந்த ஒருவர் “உனது தாத்தா இயற்கையாக தான் இறந்தார், பிரார்த்தனையின் பெயரால் கடவுளால் ஓர் உயிரை எடுக்க முடியுமென்றால் அதே பிரார்த்தனையின் வழியாக உயிரை கொடுக்கவும் முடியும் அல்லாவா” என்று கேட்க…

அவனது குற்றஉணர்ச்சி சகமனிதன் மீதான அக்கறையாக மெல்ல மெல்ல உருமாறுகிறது. அந்த நேரத்தில் தான் அவன் பள்ளியில் இருக்கும் 9ஆம் வகுப்பு மாணவிக்கு சிறுநீரக பிரச்சனை இருப்பது தெரியவருகிறது. அவளுடன் நடப்பாகி மெல்ல மெல்ல அவளது பிரச்சனைகளை புரிந்துக் கொள்கிறான் சிறுவன். அதுவே அவனது குற்றஉணர்ச்சியின் மாற்று செயல்பாடுகளாக மாறுகிறது. அந்த சிறுமிக்கு மாற்று சிறுநீரகம் ஏற்பாடு செய்வதில் தனி ஒருவனாக அவனது முயற்சியே மீதி திரைப்படம்.

அவன் மெல்ல மெல்ல சர்ச்சிற்கு செல்வதை குறைத்துக்கொள்கிறான். பாதரிடம் ஜபக் கூட்டத்தில் நோயாளிக்காக உதவியை கோர சொல்கிறோம், ஆனால் அவரோ சர்ச் கட்டடத்திற்கு மட்டுமே உதவி கோருகிறார். அவர் மீதான மரியாதை குறைகிறது. விளையாட்டில் பொய் சொன்னதற்காக கூட அவரிடம் பாவமன்னிப்பு கேட்டவன் தற்போது பாதர் இல்லாத நேரத்தில் அவனது சில தவறுகளுக்காக நேரடியாகவே இறைவனிடத்தில் பாவமன்னிப்பு கோருகிறோன்.

அவனது முயற்சிகள் இறுதியாக மருத்துவ உதவிகளை பெற்றுத் தருகிறது. அந்த நேரத்தில் வீட்டில் அம்மா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து இனி அந்தச் சிறுமியை பார்க்க செல்லக் கூடாது என்று கண்டித்து அடித்தும் விடுகிறார். அப்பாவிற்கு வேறு போன் செய்து இவன் கெட்டுப்போயிட்டான் உடனே வாங்க என்று அழுது புலம்புகிறார். அன்று இரவு கனவில் தாத்தா வருகிறார்.

தாத்தா வந்தவுடனே “உன் பிரார்த்தனையால் நான் சாகல..எனக்கு வாழ பிடிக்கல அதான் சாக வேண்டும் என்று கடவுளை வேண்டிக்கிட்டேன்” என்பார்..

அப்புறம் ஏன் பயமூட்டுனீங்க என்று கேட்க..”அதனால தான் நீ இன்னைக்கு யாருமே உதவி செய்யாத அந்த சிறுமிக்கு உதவி செஞ்ச” என்று அவர்களின் உரையாடல் செல்லும்…

சிறுவன் சிகிச்சை நல்லபடியா நடக்க கடவுளை நிறைய பிராத்திக்கணும் என்பான்..அப்பொழுது தாத்தா..

டேய் அவுசபச்சா, எதுக்குடா பிராத்திக்கணும்? நீ இதுவரை செய்த்ததை பாரு.. பிராத்திக்கிறவன் வெறும் மனுசன்..செயல்படறவன் தான் தெய்வம்..நீ என் குஞ்சு தெய்வம்” என்று சொல்லும் அந்த தருணம் மொத்த படத்தையும் தூக்கி நிறுத்திவிடுகிறது. 

கனவு கலைகிறது… மறுநாள் சர்ச்சிற்கு அவனை கட்டாயப்படுத்தி அம்மா அழைத்துச் செல்கிறார். சர்ச் வாசல் வரை வந்தவன் திடீரென சைக்கிளை எடுத்துக்கொன்டு தனது தோழி வீட்டிற்கு சிட்டென பறக்கிறான் என்று படம் முடிகிறது. 

படம்  கண்டிப்பாக  பார்வையாளர்களை சிந்திக்க வைத்துவிடும் என்று  நம்புகிறேன். குடும்பத்துடன் திரைப்படத்தை பார்த்து ரசியுங்கள். இதுப் போன்ற முயற்சிகள் தமிழிலும் வர வேண்டும். இந்தத்  திரைப்படம் முடிந்ததும் எதேச்சையாக ஜெ.கிருஷ்னமூர்த்தி அவர்ளின் வார்த்தைகள் வாசிக்க  நேர்ந்தது. குழந்தைகளுக்கு மத போதனைகளின் அவசியம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் இவ்வாறு பதில் அளித்தார்…

Religion has very little importance in our lives. You may go to the temple, do puja, wear the sacred thread, repeat words and mantras, but that does not mean you are a religious person. That is merely the expression of a mechanical mid of very little content. Surely, religion consists in seeking the truth, reality, not in surrounding yourself with substitutes and false values. The search of reality does not lie far off; it lies very near, in what you are doing, in what you are thinking, what you are feeling. Therefore truth must be found, not beyond your horizon, but in you, in your words, actions, relationships, and ideas. But we do not want such a religion. We want belief, we want dogma, we want security. As a rich man seeks security in pictures and diamonds, so you seek security organised religion, with its dogmas, with its superstitions, with its exploiting priests, and all the rest of it. There is not much difference between the so-called religious person and a man of the world: both are seeking security, only at different levels. Surely, that is not religion, that is not beauty.

– J. Krishnamurthy (EDUCATING THE EDUCATOR)

குறிப்பு : இந்தத் திரைப்படம் தேசிய விருதை பெற்றுள்ளது(best child actor national award). திரைப்படம் அமேசான் & யூடூபிலும் கிடைக்கிறது.

2 Comments

  • gowthamakanthan gopal says:

    Brilliant Writeup Prabhu! Will watch this movie for sure!!

  • கிருஷ்ணப்ரியா says:

    ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க பிரபு. நம் வாழ்விலும் பிள்ளைகள் இப்படி இருக்கிறார்கள். நாம் தான் அந்த வழியில் அவர்களை போக விடுவதில்லை

Leave a comment