முந்தைய பதிவு : https://www.panchumittai.com/2019/09/24/post_197/
கேரளத்திலும் இயற்கை குறைபாட்டு நோயா?
மேற்குலகின் முக அடையாளம்தான் இந்த அந்நியமாதல் என்று குற்றம் சாட்டும் நாம் , கேரளத்துக் குழந்தைகளுக்கிடையில் வளர்த்து கொண்டிருக்கும் இந்த தன்மையைக் காணாதிருக்க முயல்கிறோம். 1990 களில் கேரளத்தின் பல பகுதிகளில் நடத்தப்பட்ட ‘இயற்கையுடன் வசித்தல் ‘ நிகழ்ச்சிகளில் குழந்தைகளிடமும் இப்படிப்பட்ட குணக் குறைபாடுகள் காணப்பட்டன. தனக்குள் சுருங்கிக்கொள்ளும் இயல்புடைய 12வயது பெண், நாங்கள் வசித்த இடத்தில் இருந்த சிறிய காட்டருவியில் குளிப்பதற்கோ, பிராணிகளைப் பார்ப்பதற்குகோ எந்த ஆர்வத்தையும் வெளிக்காட்டவில்லை. 13 வயது பெண் ஒருத்தி, உயிருள்ள இருவாட்சியையோ, கருங்குரங்கையோ நேரில் பார்த்த போது, ” ஓ, இது அன்று டி.வி.யில் பார்த்தது தானே ” என்று சொல்லி அலட்சியமாக திரும்பிச் சென்றதையும் இங்கே நினைவுகூர வேண்டும்.
இவர்கள், இயற்கையிடமிருந்து அகன்ற, அறிவதற்கான ஆர்வமோ, மகிழ்சசியோ துக்கமோ இல்லாத தலைமுறையின் ஆரம்பக்காரர்கள். அமேசான் காடுகளின் அழிவு, ஓசோன் படலத்தின் சிதைவு, பசிபிக் கடல் மாசடைத்தல் ஆகியவை குறித்த அறிவை வெளிப்படுத்துவதில் இவர்கள் மிகவும் திறமை காட்டினார்கள். ஆனால், தங்கள் வீட்டு வாசலில் உள்ள செடிகள் தொடர்பாகவோ மேற்குத் மலைகளில் உள்ள மழைக்காடுகளைப் பற்றியோ, அரபிக் கடலில் உள்ள உயிரினங்களைக் குறித்தோ இவர்களுக்கு ஒன்றும் தெரியவில்லை.
இயற்கை குறைபாட்டு நோயின் அடையாளங்கள் குழந்தைகளிடத்தில் இரண்டு வகைகளில் வெளிப்படுகின்றன. செயற்கையான உலகத்தில் வாழ்கின்ற குழந்தைகள், இயற்கை மீது ஆர்வமும் அன்பும் காட்டுவதில்லை. ஒரு குழந்தையின் இயல்பான ஆவலோ உற்சாகமோ இவர்களுக்கு இருப்பதில்லை. மற்றோரு பிரிவினரில் தெரியும் உட்சுருங்கிய தன்மைக்கும் அளவுக்கதிகமான சுறுசுறுப்புக்குமான தீர்வு. இயற்கையுடனான இடையீடுதான் இந்தக் குழந்தைகளை கடற்கரை, விசாலமான விளையாட்டுத் திடல், மரங்களின் அண்மை, பூங்கா ஆகியவை சாந்தப்படுத்தும்.
இயற்கை குறைபாட்டு நோயின் அறிகுறிகளையும் தீர்வுக்கான வழிகளையும் இனங்கண்டு, வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் நிறைய நாம் இரண்டு விஷயங்களை புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.
- இயற்கையிடமிருந்து நமக்கு துல்லியமாகக் கிடைப்பது என்ன?
- ஒரு குழந்தையின் மன மற்றும் உடல் ரீதியான வளர்ச்சிக் கட்டங்களில் இயற்கையுடன் வசிப்பதன் முக்கியத்துவம். அதிலிருந்து விலகும்போது குழந்தைகளுக்கு ஏற்படும் குணக் குறைபாடுகளை எப்படி நீக்குவது ?
இயற்கையிடமிருந்து நமக்கு என்ன கிடைக்கிறது ?
அமெரிக்காவில் மாணவர்களிடத்தில் நடத்திய அவதானிப்புகள் மற்றும் ஆய்வுகளின் வெளிச்சத்தில்தான், இயற்கை குறைபாட்டு நோய் முதன் முதலாகக் கண்டறியப்படுகிறது. இதை பற்றிப் படித்த ரிச்சர்டு லௌவ் (Richard Louv) எனும் எழுத்தாளர், தன் கண்டுபிடிப்புகளை சேர்த்து ‘காட்டில் கடைசிக் குழந்தை’ [Last child in the woods(Saving our children from Nature – Deficit Disorder)] எனும் ஒரு நூல் எழுதினார். இந்த நூலில், குழந்தைகளை வெளியே கொண்டுவரவில்லை (Keep the child out) என்றால் ஏற்படக்கூடிய பரந்த விளைவுகளை வெகு விரிவாக வெளிப்படுத்துகிறார். இயற்கையின் அண்மை ஏன் மனிதர்களின் ஆளுமை வளர்ச்சிக்கும் குண உருவாக்கத்துக்கும் தவிர்க்க முடியாததாக இருக்கிறது என்று தெளிவுபடுத்துகிறார்.
இயற்கையிடமிருந்து பல்வகை அனுபவங்கள் கிடைக்கின்றன.
நம்மைச் சுற்றியுள்ள உயிருலகம் வடிவம், நிறம், வகைமை ஆகியவற்றால் வளம் பெற்றிருக்கிறது. இயற்கையின் சமச்சீர் தன்மையும் உயிரின் நிலைநிற்பும் உறுதிப்படுத்தும் வசிப்பிட நிலைகளின் வளமான காட்சிகள், ஒவ்வொரு மனிதரிடத்திலும் வித்தியாசமான அனுபவங்களை ஏற்படுத்துகின்றன. மழைக்காட்டின் இருட்டும் புல்வெளியின் விசாலமும் மனதில் ஏற்படுத்துவது, ஆர்த்து வரும் அலைகளும் பாறைகளும் மணற் கரையும் கொண்ட கடல் தரும் அனுபவமல்ல. காலங்கள் மாறுவதற்கு ஏற்றபடி இயற்கையிலும் மாற்றங்கள் வருவது, மனித மனதில் விவரிக்க முடியாத சலனங்களை ஏற்படுத்தும். மழைக்காலத்திலும் பனிக்காலத்திலும். இருக்கும் ஆகாயம். கோடைகாலத்து ஆகாயமல்ல. இவை ஒவ்வொன்றும் நாம் உட்பட்ட உயிரினங்களிலும் தாவரங்களில் வித்தியாசமான எதிர்வினைகளையும் மாற்றங்களையும் ஏற்படுத்தும்.
மனிதர்களால் உருவாக்கப்பட்ட உலகத்திலிருந்து வித்தியாசப்பட்ட ஒரு இயல்பான உலகத்தை இயற்கை உருவாக்குகிறது.
எலக்ட்ரிக் ஸ்விட்ச்சுகளும் பிளக்குகளும் நிறைந்த அறையிலிருந்து கேம் விளையாட மட்டுமே தெரிந்த குழந்தைகளின் எண்ணிக்கை இன்று அதிகரித்துவருகிறது. வெறுமையையும் சலிப்பையும் அகற்றுவதற்காக வீட்டைவிட்டு வெளியேறி விசாலமான பூங்காவில் அபயம் தேடும் அச்சுவைப்போன்றவர்களை நாம் அதிகம் காண முடியவில்லை. கொய்யாமரத்தடியில் படுத்திருந்த சிறுவன் நேரம் போனது தெரியாமல் சுகமாகத் தூங்குகிறான். தொலைக்காட்சிக்கு முன்னால் அவன் நேரத்தைக் கொன்றுகொண்டிருந்தான். இயற்கையில் நேரத்தின் மதிப்பு ஒவ்வொரு நொடியும் இருமடங்காகிறது. புதுமையான காட்ச்சிகள் ஆகியவற்றால், இயற்கையில் செலவிடும் நேரத்தின் மதிப்பு அதிகரிக்கிறது.
‘அவனது ரகசியம்’ எனும் ரஷ்யக் கதையில், பள்ளிக்குச் செல்ல காட்டின் ஊடே குறுக்கு வழி தேடும் பையன், இயற்கையின் அற்புதமான காட்சிகளைப் பார்த்து தன்னை மறைக்கிறான். இயற்கை, வித்தியாசமான, சுவையான, புதுமையான அனுபவங்களை நமக்குத் தருகிறது. ‘சலிப்பாக இருக்கிறது’ எனும் குழந்தைப் பருவத்தின் நிரந்தரப் பல்லவியை மறந்து. தன்னுடைய மனநிலைக்கு ஏற்றவாறு நேரத்தைச் செலவிடமும் பகற்கனவுகள் காண்பதற்கும் கற்பனை மலர்வதற்கும் இயற்கை குழந்தைகளுக்கு இடமளிக்கிறது.
பிராணிகளிடம் உறவு ஏற்படுத்திக்கொள்ள குழந்தைகளுக்கு வாய்ப்பு உருவாக்கித் தர வேண்டும். பிறந்தநாள் பரிசாக நிறைய பொம்மைகள் கிடைக்கப்பெற்ற நான்கு வயதுப் பையன், தன் ஆசையை வெளிப்படையாகச் சொல்வதைக் கவனியுங்கள்: “எனக்கு உயிருள்ள ஒரு விளையாட்டுப் பொருள் வேண்டும். ஒரு கன்றுக்குட்டியோ , ஆமையோ, கோழியோ போதும்.” ஆறு வயதுக்கு கீழே உள்ள குழந்தைகளின் கனவில் முக்கியமாகத் தோன்றுபவை விலங்குதான் என்று ஆய்வுகள் நிரூபிக்கின்றன. குழந்தைகள் தங்களின் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்கான விளையாட்டுக் களமாக விலங்குகளைக் காண்கிறார்கள் என்று, உலகப் புகழ்பெற்ற இயற்கையிலாளர் டேவிட் அட்டன்பரோ தெரிவித்திருக்கிறார். குழந்தைகளும் விலங்குகளும் தங்கள் விருப்பப்படி விளையாடுவதைக் கவனத்திற்கும் எவரும் இந்தக் கருத்தை ஏற்றுக்கொள்வார்கள்.
குழந்தைகளால் இயல்பாகவே மரங்களுடனும் செடிகளுடனும் உறவு ஏற்படுத்திக்கொள்ள முடியும். ‘ஒரு மரத்தை நண்பனாக்குவது’ எனும் பாடச் செயல்முறையில் கலந்துகொண்ட குழந்தைகள், மரங்களுக்கும் தங்களுக்குமான அழகானதொரு ஆன்ம உறவை எளிதாக விவரிக்கின்றன. 2015ல் திருவனந்தபுரத்தில் குழந்தைகளுக்காக நடத்திய ‘மரத்துக்கு ஒரு அஞ்சலட்டை ‘ எனும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாணவர்கள், மிகவும் முக்கியமான விஷயங்களை மர நண்பர்களுடன் பகிர்ந்துகொண்டார்கள். இதன் மூலமாகக் குழந்தைகள், கற்பனையின் வகைமையிலிருந்து மொழிப் பிரயோகங்களின் முழுமைவரை வெளிப்படுத்தினார்கள். குழந்தைகளின் மனதைத் தூண்டுவதற்கு உயிரினங்களுடனான தோழமை தவிர்க்க முடியாததாகும். இந்த அமைதியான, நிபந்தனையற்ற தோழமையினூடே, குழந்தைகளின் அந்நியப்பட்ட உணர்வு மறைந்துபோகிறது. மனநோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு, பிராணிகளுடனான தோழமை நல்ல சிகிச்சை என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
இயற்கை நம்மை எப்போதும் செயல்படச்செய்கிறது. அறிவதற்கான ஆர்வத்தையும் அன்புறவையும் ஏற்படுத்துகிறது.
இயற்கையின் அழகும் புதுமையும் வகைமையும் இளம் நெஞ்சங்களில் அறிவார்வத்தையும் உத்வேகத்தையும் ஏற்படுத்துகின்றன. பரந்து விரிந்த இயற்கையில் தன்னைக் கண்டடையவும் கற்பனையின் தளங்களை இனங்காணவும் வாய்ப்புக் கிடைக்கும் குழந்தை, பிறகு தனிமைக்கு அடிமையாவதில்லை; தனக்குள் ஒடுங்குவதில்லை.
ரேச்சல் கார்சன் (Rachel Corson) தன அழகான சிறு படைப்பில் (வியப்பனுபவம்) சொல்கிறார்:
ஒரு குழந்தைக்குப் பெயரிடும் நிகழ்ச்சியில் கண்ணுக்குத் தெரியாதபடி அங்கே இருக்கும் தேவதை என் வார்த்தைகள செவிமடுப்பாள் என்றாள், எல்லாக் குழந்தைகளுக்கும் ஒரு பரிசு தரும்படிக் கேட்டுக்கொள்வேன். வாழ்க்கை முழுதும் நிலைத்திருக்கும், அழிக்க முடியாக வியப்பனுபவத்தை கொடுக்கும்படி வேண்டுவேன். இது,வயதாகுந்தோறும் மனதில் ஏற்படும் ஆர்வமற்ற தன்மையையும் சலிப்பையும் நீக்கும் மாற்றும் மருந்தாகும்.”
லட்சத்தீவு கடற்கரையிலும் காடுகளிலும் வசிக்கும் பழங்குடி சமூகங்களுக்கிடையிலும், பெரியவர்களுடன் வாழ்க்கை அனுபவங்கள் பெறும் குழந்தைகளுக்கு உரியாதவதும் இந்த வியப்புதான். இங்கே ரேச்சல் கார்சன் எழுதிய வரிகள் பொருத்தமுடையவையாக இருக்கின்றன.
ஒரு குழந்தையின் அறிவார்வத்தையும் வியப்பையும் நிலை நிறுத்துவதற்கு கூட்டாளியாக ஒரு முதிர்ந்த மனிதர் இருக்க வேண்டும். புதியதொரு வசீகர உலகத்தின் – இயற்கையின் – காட்சிகதையும் கண்டடையவும் அவற்றில் ஆர்வத்தையும் களங்கமற்ற மகிழ்ச்சியையும் வியப்பையும் இனங்காணவும் இந்தக் தோழமை மிகவும் முக்கியமாகும்.
குழந்தையின் அடிப்படை உரிமைகளில் ஒன்றுதான், வாழ்க்கையில் இயல்பாகக் கிடைக்கவேண்டிய கவனமும் அன்பும் அறிவுப் பகிர்தலும். கடற்கரையிலும் புல்வெளியிலும் காயல் ஓரத்திலும் நதிக்கரையிலும் அடர் காட்டிலும் ஒரு குழந்தையின் கைப்பிடித்து வியப்பான காட்சிகளைப் பகிர்ந்து கொள்வதற்கு பெரியவர்களுக்கு மனதும் பொறுப்பும் ஏற்பட வேண்டும். அப்பாவும் நண்பர்களும் கடலில் ஒட்டிச் செல்லும் படகு போன்று தேங்காய் மட்டையும் தெர்மாகோலும் கொண்டு சிறிய மாதிரி செய்யும் குழந்தையிடம், செயல்புரியும் தன்மை விழிப்பதை நாம் காணலாம். அம்மாவுடனும் தோழிகளுடனும் கடல் வற்ற (…) சமயத்தில் கடற்கரையில் நடக்கும் குழந்தை தன்னையறியாமலேயே வாழ்க்கைத் திறன் கல்வி பெறுகிறது. கிளிஞ்சசல்களும் சோழிகளும் பொருக்கி நடக்கும் அந்த பால்யத்தில் அந்தக் குழந்தைக்கு அன்றைய இரவு உணவுக்கு சிறிய மீன்கள் கிடைக்கக்கூடும்.
இயற்கை தருவது சுதந்திரம், அந்தரங்கம், அமைதி
குழந்தைப் பருவத்தின் முத்திரைகள்தான், மகிழ்ச்சியாக வளர்வதற்கும் முன்னேற்றமடையச் செய்வதற்கான சுதந்திரமும் அந்தரங்கமும். ஒரு குழந்தை தன தேவைக்கும் திறமைக்கும் ஏற்றபடி ஒரு உலகத்தை உருவாக்கவும் மகிழ்ந்திருப்பதற்கான வாய்ப்பை இயற்கை அளிக்கிறது. நிறையக் குழந்தைகளுடன் நதிக்கரைக்கோ, கடற்கரைக்கோ சென்றால், அங்கே ஒவ்வொருவரும் வித்தியாசமான ரீதியில்தான் இயற்கையின் பகுதியாக ஆக முயற்சிப்பார்கள். சிலர் ஓடிச்சாடியும் நடத்தும் மற்ற சிலர் அமைதியாக அமர்ந்தும் நனைந்தும் வேறு சிலர் செடிகளையும் பிராணிகளையும் அவதானித்தும் இந்த அனுபவத்தை ரசிக்கிறார்கள்.
படிப்பு மற்றும் போட்டி மனப்பான்மையின் அழுத்தம் தாங்காமல் மௌனியாக மாறும் இளம் மனங்களுக்கு ஆறுதலளிக்கும் ஒரே வழிதான் அமைதியான இயற்கை. ஒரு சிறு குழந்தையை சமாதானப்படுத்த காக்கையையும் பூனையையும் காட்டுவது எவ்வளவு பயனளிக்கும் என்று தனியாகச் சொல்ல வேண்டியதில்லையே, அச்சுவும் சரத்தும் இந்த அமைதியைத்தான் தீடிச் சென்றார்கள் .
இயற்கை நம்மை அச்சுறுத்துகிறது
விசாலமானதும், ரகசியங்கள் நிறைந்ததும், வனப் பாங்கானதுமான இயற்கை நம்மை அச்சகருத்துகிறது. மனிதர்கள் உருவாக்கிய உலகத்துக்குள் ஒதுங்க சிலர் முயற்சிக்கும்போது, மற்ற சிலரில் இந்த பயம் அறிவதற்கான ஆர்வத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்த்துகிறது. பயம் கலந்த இந்த ஆர்வத்தின் காரணத்தால்தான் குழந்தைகள், இயற்கையோடு கலந்து மேலும் ஆராயவும் கிரகிக்கவும் விரும்புகிறார்கள். இந்த பயம் குழந்தைகளிடம் சரியான திசையில் வளர்ந்தால், அது அவர்களுக்குள் எளிமையையும் மரியாதையையும் அன்புறவையும் அதிகரிக்கிறது. இந்த செயல்பாட்டில் பாதகமான செல்வாக்குச் செலுத்துவதில் மொழிக்குப் பெரிய பங்கு இருக்கிறது.’கடல் வஞ்சித்துவிட்டது’, ‘ஆபத்தான மரம் ‘ , பகைகொண்ட காட்டு யானை’, ‘கொடூரமான புலி’ என்று, இயற்கையிடமிருந்து அகற்றும் விதமான பயங்கரமான காட்சிகளை மனதில் உருவாக்க மொழிப் பிரயோகங்களால் முடியும்.
ஒரு விதை மண்ணில் முளைத்து சிறிய செடியாக வளர்வதைக் கவனிக்கும் குழந்தை, அறியாத உயிரின் ரகசியத்தை நேரில் காண்கிறது. ஒரு மலையில் ஏறும்போதும் கடல் அலைகளைக் கவனிக்கும் போதும் நதி நீரில் கால்கள் நனைத்து பாறையில் அமர்ந்திருக்கும்போதும் குழந்தைகள் பயம் கலந்த வியப்பைத்தான் அனுபவிக்கிறார்கள்.
மேலே சொல்லப்பட்ட ஐந்து வித்தியாசமான பகுதிகளை அறிந்துகொள்வதன் மூலம், நவீன உலகம் இன்று உருவாக்க முயற்சிப்பது, தொந்தரவற்ற, விழுந்து கைகால்களை உடைத்துக்கொள்ளாத, ஓடி விளையாடாத, சத்தம் போடாத ‘நல்ல’ தொரு குழந்தையைத்தான். சுவிட்சுகளும் பிளக்குகளும் மட்டும் உள்ள செயற்கையான உயிரற்ற உலகமே தங்கள் குழந்தைகளுக்கு ஏற்றது என்று உறுதியாக நம்பும் தாய் தந்தையார் இருக்கிறார்கள். அந்தக் குழந்தைகளால் எந்த தொல்லையுமில்லை. டி.வி. யின் முன்னாள் அமர்ந்து கேம்ஸ் விளையாடுவார்கள். டி .வி.யின் முன்னால்தான் உணவும் சாப்பிடுவேன் என்று பிடிவாதம் பிடிக்கும் குழந்தைகளும் உண்டு. வெறுமனே விளையாடிக் கழித்து காற்றிலாடித் திரிந்த அந்தக் குழந்தைப் பருவம் எங்கோ எட்ட முடியாத தொலைவுக்குச் சென்று மறைந்துவிட்டது. “அம்மாவைத் தொந்தரவு செய்யாமல் வெளியே போய் விளையாடு!” என்று அனுமதியளிக்கும் அம்மாக்களும் சொற்பமாகிவிட்டார்கள்.
குழந்தைகளுக்கு சலிப்பு ஏற்படாதவாறு பெரியவர்கள், அவர்களைப் பல விதமான டியூஷன்களுக்குத் துரத்துகிறார்கள். அதை அவர்களின் திறமையாகக் கருதும் பெரியவர்கள் ஒரு உண்மையை அறியாதுபோகிறார்கள். சுதந்திரமான, அமைதியான நிபந்தனையற்ற சுற்றுப்புறத்தில் வளர்வது என்பது, ஒரு குழந்தையின் அடிப்படை உரிமையாகும். இவை மூன்றையும் குறைவற்றுக் கொடுப்பது இயற்கை மட்டும்தான். விளையாட்டு, கனவு காண்பது, நேரடி அனுபவங்கள் உண்டாவது ஆகியவற்றின் மூலமாக மட்டும்தான், குழந்தைகள் இயற்கையின் அறிந்துகொள்ள முடியும்.
விசாலமும் ரகசியமுமான இயற்கையின் ஒரு உலகம் வெளியே நின்று குழந்தைகளை கைகாட்டி அழைப்பதை, பெரியவர்கள் கவனிக்க வேண்டும். இலவசமாகக் கிடைக்கும் இந்த வியப்பான காட்சிகள், விலையுயர்ந்த ஒரு பரிசுப் பொதியைவிடவும் மதிப்பிடற்கரிது. ஒரு குழந்தையின் ஆளுமை வளர்ச்சி முடிவாகும் கட்டத்தில் இந்த அனுபவங்கள் கிடைத்தால், அதன் நன்மைகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் வாழ்க்கை அனுபவங்களையும் நாம் மீண்டும் உருவாக்கவில்லையென்றால் நம் இளைய தலைமுறை, இயற்கை குறைபாட்டு நோயின் அடிமையாகிவிடும்.