மழையுடனும் மரங்களுடனும் நட்புகொள்ளட்டும் குழந்தைகள் -எஸ். அனிதா

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

மூடிய கதவுகளுக்குள் இருக்கும், மூடப்பட்ட கதவுகளுக்குள் வளர்க்கப்படும் குழந்தைகள் மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் ‘இயற்கை குறைபாட்டு நோய்’, அல்லது இயற்கை இல்லாத நோய் (Nature Deficit Disorder) எனும் ஆபத்தான நோய்க்கு ஆட்படுகிறார்கள். அவர்களின் படைப்பூக்கமும் அவர்கள் காணவேண்டிய கனவுகளும் அவர்களின் பேச்சுகளும் அவர்கள் விளையாட வேண்டிய விளையாட்டுகளும் அவர்கள் சிரிக்க வேண்டிய சிரிப்புகளும் அடைபட்ட அறையில் முடிந்து போகின்றன. வெளி உலகத்தில் விளையாடி வளரவில்லை என்றால், அறிந்துகொள்வதற்கான ஆர்வமும் வியப்பும் இல்லாமல், சமூகத்திடமிருந்து அந்நியப்பட்ட மனிதர்களாக அவர்கள் மாறுவார்கள் எனும் முன்னறிவுப்புதான், இயற்கை குறைபாட்டு நோயை முன்னிறுத்திய இந்த ஆய்வு.

நான்காம் வகுப்பில் படிக்கும் அச்சு, வழக்கம் போல அன்றும் பள்ளிவிட்டு வீட்டுக்கு வந்தான். எட்டாம் மாடியில் இருக்கும் வீட்டைத் திறந்து, உடை மாற்றி, அம்மா போவதற்கு முன்பு எப்போதோ உணவு மேசையில் எடுத்து வைத்த உணவைச் சாப்பிட்டு தொலைக்காட்சி பார்க்கத் தொடங்கினான். ஆனால் அன்று அவனுக்கு காரணமில்லாமல் மிகவும் பயமாக இருந்தது. யாரவது தன் அருகில் வந்து அமர்ந்து ஒரு கதை சொன்னால் நன்றாக இருக்குமே என்று அவன் விரும்பினான். வெட்ட வெளிக்குச் சென்று ஓடி விளையாடி காற்று வாங்க வேண்டும் என்று ஆசைப்பட்டான். அவன் சன்னல் வழியாக வெளியே பார்த்தான். கீழே பூங்காவில் பிள்ளைகள் விளையாடுகிறார்கள். அவன் வீட்டைப் பூட்டிவிட்டுக் கீழே இறங்கினான். சாலை ஓரத்தில் உள்ள பூங்காவுக்குச் சென்று ஒரு கொய்யாமரத்தின் அடியில் படுத்தான். அப்படியே தூங்கிவிட்டான். விழித்தபோது மங்கிய வெளிச்சத்தில் அவன் பார்த்தது, அழுது கொண்டிருக்கும் அம்மா, தாத்தா, போலீஸ்காரர்கள்… அம்மாவை கட்டிபிடித்துக் கொண்டு அச்சு சொன்னான்! “தனியாக இருந்து சளித்துப் போய்விட்டது, அம்மா. இங்கே காற்றில் மரத்தடியில் படுத்தபோது எனக்கு நேரம் போனதே தெரியவில்லை !”

சரத்துக்கு பத்து வயது. வகுப்பில் டீச்சர் கணக்கு எழுத கரும் பலகையை நோக்கித் திரும்பியபோது வெளியே ஓடினான். படிப்பில் கெட்டிக்காரனான சரத் அடிக்கடி வகுப்பில் இருந்து காணாமல் போய்விடுவான். சாப்பாட்டு நேரத்தில் பள்ளி வளாகத்தின் புல்தரையில் பார்த்த ஓணான், இன்னும் அங்கேயே இருக்கிறதா என்று பார்ப்பதற்காகத்தான் இந்த ஓட்டம். இரண்டு அறைகள் மட்டுமே கொண்ட அவன் வீடு, அவனுக்குப் பெரும்பாலும் சிறையாகவே இருக்கும். பள்ளியின் விசாலமான வளாகத்தின் மரங்களும் காற்றும் பறவைகளும் மற்ற பிராணிகளும் அவனுக்கு நண்பர்களை போல.

மேலே குறிப்பிட்ட குசந்தைகளை நம் வாழ்க்கையிலும் நம்மால் பார்க்க முடியும். தங்களின் சிறிய உலகத்தில் இல்லாததும் பார்க்க முடியாததுமான எதையோ தேடி, இந்தப் பிஞ்சுகள் இயற்கையை நோக்கித்தான் ஓடிச் செல்கின்றன. செயற்கையான வாழ்க்கையின், ஒழுங்கு முறைகளின் வெறுமையிலிருந்து தப்பவும் மனதின் திணறலுக்கு தீர்வு கண்டுபிடிக்கவும் இந்தக் குழந்தைகள் தாமே முயல்கிறார்கள். இவர்களின் மிகப் பெரிய அதிர்ஷ்டம், இவர்களைச் சுற்றிலும் இன்னும் இயற்கை மிச்சமிருக்கிறது என்பதுதான்.

குழந்தைகளுக்கு என்ன தேவை ?

குழந்தைகளுக்கு என்ன தேவை என்று பெரியவர்களின் உலகம் ஆராய்கிறதா? 2011 ல் ‘யுனிசெப்’ அமைப்பு குழந்தைகளுக்கிடையில் நடத்திய ஆய்வில் கலந்து கொண்டவர்கள், மகிழ்ச்சியடைய அவர்களுக்குத் தேவை என்று மூன்று விஷயங்களைக் குறிப்பிடுகிறார்கள்;

  1. வீட்டாருடன் அதிக நேரம் இருக்க வேண்டும்,
  2. தோழமைகள் வேண்டும்,
  3. வெளியே சென்று விளையாடுவதற்கான சுதந்திரம் வேண்டும்.

குழந்தைகள் வெளியே சென்று விளையாடும்போது கிடைப்பது பாதுகாப்பான சுற்றுப்புறச் சூழலா?

யுனிசெபின் ஆய்வு அறிக்கையில் (இந்து நவம்பர் 1 , 2016 ), 300 மில்லியன் குழந்தைகள் மிகவும் ஆபத்தான காற்றைத்தான் சுவாசிக்கிறார்கள் என்று நிறுவுகிறது. இதில் 220 மில்லியன் குழந்தைகள் தெற்காசிய நாடுகளில் வசிப்பவர்கள். உலக ஆரோக்கிய அமைப்பின் ஆய்வுகள், இந்தப் பிரதேசத்து காற்று மாசுபாடு, அனுமதிக்கக்கூடிய அளவைவிட ஆறு மடங்கு அதிகமென்று முன்னறிவிப்பு செய்திருக்கின்றன. இது குழந்தைகளின் நுரையீரலை மிகக் கடுமையாக பாதிக்கக்கூடியது.

இயற்கை சீர்கேடு ஏற்படுத்தும் ஆரோக்கியப் பிரச்சினைகளுடன் இன்று காணப்படும், மௌனமாகத் தாக்கும் ஒரு நோய் நிலைதான் இயற்கை குறைபாட்டு நோய். இயற்கையிலிருந்து அகன்று செயற்கையான சுற்றுச் சூழலில், எலக்ட்ரானிக் உலகத்தில் வாழும் குழந்தைகளிடம்தான் இந்த நோயின் அடையாளங்கள் காணப்படுகின்றன.

இயற்கை குறைபாட்டு நோய் அடையாளங்கள்

மேற்குலகில் 1980 களில்தான் முதன்முறையாக ஆசிரியர்களும் பெற்றோர்களும் உளவியல் வல்லுனர்களும் அசாதாரணமாக நடந்துக்கொள்ளும் குழந்தைகளை இனங்காணத் தொடங்கினார்கள். இந்தக் குழந்தைகள் வெளிப்படுத்திய சிலகுணக் குறைபாடுகளுக்கு, இயற்கையின் அண்மை நிம்மதியளிப்பதாகவும் தீர்வளிப்பதாகவும் ஆய்வுகளின் மூலம் புரிந்துகொள்ள முடிந்தது. இயற்கை குறைபாட்டு நோயின் அறிகுறிகள் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் வெளிப்படும். அளவுக்கு மீறிய பரம சோர்வு தனக்குள் சுருங்குவது (introvert), வன்முறை மனோபாவம் , ஓத்துழைப்பு இல்லாமை ஆகியவையும் இந்த குழந்தைகளின் குணமாற்றத்துடன் வருகின்றன. ஒரே நேரத்தில் பல எலெக்ர்ட்ரோனிக் இசை ஓசைகள் மூலம் அமைதியைச் சிதைக்கும் ஆர்வமும் இந்தக் குழந்தைகளிடம் காணப்படும்.

அறைக்குள் இருந்து ஒரு சுவிட்சை அழுத்தினால் தெரியும் மனதை வசீகரிக்கும் காட்சிகள், இயற்கை காட்சிகள் ஆகியவை குழந்தைப் பருவத்தின் சாபமாக மாறிவிட்டிருக்கின்றன. இதனால் குழந்தைப் பருவத்தின் மிக உயரிய அனுபவங்களான அறிந்துகொள்ள வேண்டுமென்று பேரார்வம், களங்கமற்ற மகிழ்ச்சி, தடையற்ற அவதானிப்புகள் ஆகியவை மரணமடைகின்றன. குழந்தைமை இழந்த குழந்தைப் பருவம் இல்லாத ஒரு தலைமுறை இப்போது வளர்ந்து வருகிறது.

தொடரும் ….

குறிப்பு : இயற்கை குறைபாட்டு நோய் குறித்து ஆசாவின் மண்ணெழுத்துக்கள் என்ற புத்தகத்தில் வெளியான இணைப்பு கட்டுரை. புத்தகம்: ஆசாவின் மண்ணெழுத்துக்கள்- ஏ.கே.ஷிபுராஜ் தமிழில்: யூமா வாசுகி. பாரதி புத்தகாலயம். விலை.ரூ.100/-

 

Leave a comment