கடந்த சில தினங்களாக தமிழக மக்களை பதட்டத்திற்கு உட்படுத்தி வரும் செய்தி 5,8 ஆம் வகுப்பு குழந்தைகளுக்கு பொதுத் தேர்வு அறிவித்த ஆணை வெளியிட்ட, எதற்காக இப்படி ஓர் அறிவிப்பு? இது குறித்து மாணவர் இயக்கங்கள், பெற்றோர், ஆசிரியர்கள் தரப்பில் எதிர்ப்புகள் கிளம்பி வருவதும் தொலைக் காட்சி விவாதங்களில் இது மையமாகிப் போனதும் கவன ஈர்ப்பை எல்லோரிடமும் உருவாக்கி உள்ளது. இதன் விளைவுகள் என்னவாக இருக்கும் ? ஆராய்வோம்.
அரசாணை :
தமிழக மாநிலப் பாடத்திட்டத்தைப் பின்பற்றும் அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், சுயநிதிப் பள்ளிகள் மெட்ரிகுலேசன் பள்ளிகள், கள்ளர் பள்ளிகள், சிறுபான்மையினர் மற்றும் பழங்குடியினப் பள்ளிகள் ஆகியவற்றில் 5,8 வகுப்புகள் பயிலும் குழந்தைகளுக்கு இந்த கல்வியாண்டு முதல் 2019-20, அதாவது நடப்பு கல்வியாண்டின் இறுதியில் மாநிலப் பொதுத் தேர்வு நடத்த வேண்டும் என்றும் அதற்கான அனைத்து தொடர் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், அதாவது, தேர்வு அட்டவணை தயாரித்தல், தேர்வுக் கட்டணம் வசூலித்தல், மாவட்டத் தேர்வுக் குழு அமைத்தல், தேர்வு மையம் பார்வையிடல், விடைத்தாள் மதிப்பீட்டுக் குழுக்கள் அமைத்தல், தேர்வு முடிவுகள் வெளியிடுதல் என அனைத்திற்கும் வழிகாட்டு நெறிமுறைகள் அளிக்க தொடக்கக் கல்வி இயக்குநர் கோரியுள்ளதாகவும் இவ்வாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கான கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் மைய அரசால் 2009 இல் வெளியிட்ட பிறகு, 1. 04 .2010 முதல் நடைமுறைக்கு வந்தது. அதனைத் தொடர்ந்து 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8ஆம் தேதி முதல் தமிழகத்தில் விதிகள் வகுக்கப்பட்டு அரசாணை (173 ), அரசால் வெளியிடப்பட்டு பள்ளிக்கல்வித் துறை பின்பற்றி வருகிறது. மத்திய அரசு அவ்வப்போது இதில் திருத்தங்கள் செய்து வருகிறது . அதன்படி 2019 இல் பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதியிட்ட மத்திய அரசிதழ் வெளியிட்டீன் படி, இங்கு தொடக்கக் கல்வி இயக்குநர் கடிதம் அதே பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதியைக் குறிப்பிட்டுள்ளது. மத்திய அரசு வழிகாட்டுதல்படி என்றால் மாநில அரசு மார்ச் முதல் தேதிக்குப் பிறகோ அல்லது மார்ச் 1 என்றோ தான் வர வேண்டும். ஆனால், இந்த தேதி முரண் என்னவென்று புரியவில்லை. இதன் அடிப்படையில் தான் 2019 கல்வி உரிமைச் சட்டத் திருத்தத்தின் படி 16 ஆம் பிரிவு 4 உட்பிரிவுகளில் , இந்த தேர்வு குறித்த தகவல்கள் வெளியிட்டிருப்பதாக ஆணை தெரிவிக்கின்றது.
ஆனால் …
16(1) There shall be a regular examination in the fifth class and in the eighth class at the end of every academic year
என்று தான் கல்வியுரிமைச் சட்டத் திருத்தம் செய்யப்பட்டு தரப்பட்டு இருக்கிறது. அதாவது ரெகுலர் எக்ஸாம் என்று.
எனில், ஏற்கனவே நடைமுறையில், பள்ளி அளவிலான ஆண்டுத் தேர்வு ( Regular Exam) நடைபெற்று தான் வந்தது. அப்போது நிறைய இடைநிற்றல் ஏற்படும், அதாவது 35 மதிப்பெண்களுக்குக் குறைவாகப் பெறும் குழந்தைகள் அந்த ஆண்டின் தேர்ச்சி முடிவுகளில் தேர்ச்சி பெறவில்லை என்பதால் அதே வகுப்பில் தேக்க நிலை பெற்று அடுத்த ஆண்டும் அதே வகுப்பல் பயில்வர்.
அரசு , 2012-2013 ஆம் கல்வியாண்டு முப்பருவக் கல்வியை அறிமுகம் செய்தது, தேர்வு, தேர்ச்சி குறித்த பல விமர்சனங்களுக்கும் குழந்தைகளுக்கான தேர்வு குறித்த பல்வேறு முற்போக்கு இயக்கங்கள், சமூக செயல்பாட்டாளர்கள், கல்வியாளர்கள் ஆகியோரது தொடர் குரலுக்கு மாற்றாகவே பள்ளி அளவிலான பொதுத் தேர்வு என்ற நிலை மாற்றம் செய்யப்பட்டு தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை (Continuous and Comprehensive Evaluation – CCE) என்ற முறை கொண்டு வரப்பட்டு 40 மதிப்பெண்கள் அவர்களது திறன் அடிப்படையில் செயல் திட்டமும், 60 மதிப்பெண்கள் எழுத்துத் தேர்வு எனவும், ஒவ்வொரு பருவத்தின் இறுதியிலும் வடிவமைக்கப்பட்டு மூன்று பருவங்களையும் கணக்கில் எடுத்து ஒரு குழந்தையின் ஒட்டு மொத்த தேர்ச்சி நிலைகளைக் கண்டறிந்து 1 முதல் 8 வகுப்புகள் வரை கட்டாயத் தேர்ச்சி அறிவிக்கப்பட்டு மாணவர் கல்வி ஆண்டின் இறுதியில் உயர் வகுப்புகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்.
இப்படியான போக்கு நிலவி வரும் வேளையில் 5,8 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு என்பது பல நடைமுறை சிக்கல்களை ஏற்படுத்தும், ஆசிரியர்கள் நிலைப்பாடு, பெற்றோர் நிலைப்பாடு, நிர்வாக சிக்கல்களைப் புறந்தள்ளினாலும் குழந்தைகள் உளவியல் சார்ந்து மட்டுமாவது நாம் கவனம் கொள்ள வேண்டும்.
5 ஆம் வகுப்பிலேயே பொதுத் தேர்வு என்றால் குழந்தைகள் 1 (அ) 2 ஆம் வகுப்பிலேயே தனி வகுப்புகளுக்கு ( டியூஷன் ) அனுப்பப்படும் சூழல் உருவாகும் .
இங்கு தேர்வு என்றாலே மனப்பாடம் தான் , எழுத்துத் தேர்வு தான், மதிப்பெண்கள் தான், வினா விடைகளுக்கு பதில் எழுதுவதைக் கடந்த, பலவிதமான கற்றல்கள் நிகழும் பருவம்தான் 8 ஆம் வகுப்பு வரையிலான பருவம். உதாரணமாக ஓவியம் வரைதல், கதை படைத்தல், படித்தல், பாட்டு பாடுதல், இப்படியானவையும், புதிய சிந்தனைகள், வினாக்கள், சந்தேகங்கள் அனைத்தும் தோன்றும் மாணவப் பருவம் இது. இந்த பருவத்தில் கற்பித்தல் (Teaching) அழிந்து பயிற்சி Coaching) என்ற ஒன்றை வலுக்கட்டாயமாக திணித்து, மாணவர் அறிவு சார் மூளைப் பகுதி செயல்படாமல் (Psychomotor domain) படைப்பாற்றல் உருவாக்கமே தடைபடும் சூழல் நிச்சயம் நிகழும் .அறிவியல் பூர்வமான எந்த காரணமும் இல்லாமல் தேர்வு தான் தரமான கல்விக்கு வழி என்பது சரியல்ல .
குழந்தை இயல்புகள்:
தேர்வு என்றாலே பயம் தான், தரம் பிரித்தல், தோல்வி என இகழுதல், இப்படி குழந்தைகள் பல வகைகளில் பாதிக்கப்படுவர். தேர்வு குறித்த அச்சம் அவர்களை இயல்பாக குழந்தைகளாக இருக்க விடாது. எப்போதும் படிப்பு படிப்பு என வீட்டில் பெற்றோர்கள் குழந்தைகளை விளையாடக் கூட அனுமதிப்பதில்லை தற்காலத்தில், எந்தக் குழந்தையிடம் பேசினாலும் இதை சொல்லி வருத்தப்படும் இன்று, இது பொதுத் தேர்வு என்று பெரிதாக பேசப்படும் போது குழந்தைகளின் சுதந்திரமான கற்றல் முழுமையாகத் தடைபட பெற்றோரே காரணமாக இருப்பார்கள். விளையாடுதல் ஏற்கனவே குறைந்து குழந்தைகளுக்கு ஒபிசிட்டி என்ற உடல் பருமன் நோய் சாதாரணமாக காணப்படுகிறது. இந்த நிலை மாறும், மொத்த குழந்தைகளும் பல வித நோய்களுக்கு ஆளாவர். மன அழுத்தம், மனச் சிதைவு என பல வித பிரச்சனைகளுக்கும் ஆளாவர், ஏனெனில் பெற்றோரின் ஒட்டு மொத்த மதிப்பெண் பேராசையும் குழந்தைகள் மீது பாயும். இதனால் ,குழந்தைகளின் மனப்பாடத் திறன் மதிக்கப்பட்டு மற்ற திறன்கள் கேலிக்குள்ளாகிடும் .
குழந்தைகள் இந்த பொதுத் தேர்விற்காக பிறந்த உடனே தயாரிக்க ஆரம்பிக்கப்படுவார்கள், படிப்பு மட்டுமே வாழ்க்கையாகிப் போக எப்போதும் படித்தால் குழந்தை எப்போது குழந்தையாக இருக்கும் ? குழந்தையாக வாழும்? பெண் குழந்தைகள்.
பள்ளி நடைபெறுவதில் என்ன சிக்கல்
பொதுத் தேர்வு கலாச்சாரம் மாவட்ட தேர்வுக் குழு, மையம் கண்டறிதல், மதிப்பீட்டு நடைமுறைகள் என ஆசிரியர்கள் பிப்ரவரி மாதம் முதலே மாற்றுப் பணிக்கு அழைக்கப்படுவர், பள்ளிகளில் கற்பித்தல் நிகழாது. பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் 3 மாதங்கள் ஏற்கனவே 10,11,12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் நடக்கும் அத்தனை சடங்குகளும் நிகழும், கற்பித்தல் 50% கூட நிகழாது, கற்றல் 30% கூட நிகழாது. ஏற்கனவே உயர் நிலை, மேல்நிலைப் பள்ளிகள் மட்டும் பாதிக்கப்பட்டன இந்த பொதுத் தேர்வு கலாச்சாரத்தால், இனிமேல் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கும் அந்த கலாச்சாரம் தொற்றிக் கொள்ளும். ஒரு வேளை தனியார் பள்ளிகள் எப்போதும் போல் தங்கள் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்திக் கொள்ள எல்லா பாணி வில்லத்தனங்களையும் செய்யும். அரசாங்கப் பள்ளிகளிலும் தேர்வுகளை எதிர்கொள்ள ஆசிரியர்கள் போலி ஆவணங்களை உருவாக்கும் போக்கும் பிறக்கும்.
இந்த வருடமே பொதுத் தேர்வு என்றதால் குழந்தைகள் முழுப் புத்தகத்தைப் படிப்பார்களா? அல்லது மூன்றாம் பருவம் மட்டும் படிப்பார்களா என்ற சிக்கலும் நிர்வாகத்திற்குள் அடங்கும்.
கல்வி அரசியல் குறித்த பார்வை
தேர்வு என்றாலே வடிகட்டுதல் என்பது தான் கல்வி அரசியல் . நீ படிப்பதற்கு லாயக்கில்லை என பள்ளிகளிலிருந்து
வெளியேற்றும் அமைப்பாக பள்ளிகள் மாறும் , பள்ளிக்குள் வா என்று அழைக்காமல் , வெளியேற வாயிலை அமைக்கும் செயல்களே இந்த பொதுத் தேர்வு கலாச்சாரம் .
ஜனநாயக நாட்டில் கல்வி இலவசமாக எல்லோருக்கும் வழங்கப்பட வேண்டும் என்ற சமூக நீதி மறுக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. வரைவு தேசியக் கல்விக் கொள்கையில் கூறப்பட்ட 3, 5, 8 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு குறித்து கருத்துகளை பரிசீலிக்காமலேயே 5, 8 வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு என்பது ஜனநாயக வன்முறையாகவேப் பார்க்கலாம்.
முதல் தலைமுறை குடும்பங்களில் இருந்து பள்ளிக்கு வரும் குழந்தைகள் 5 ஆம் வகுப்பிலேயே கல்வி மறுக்கப்பட வாய்ப்புகள் உருவாகும். படிக்காத சமுதாயம் ஒன்று அழகாக உருவாகி குடும்பத் தொழில் பழகச் செல்லும், இடைநிற்றல் அதிகரித்து குழந்தைத் தொழிலாளர்கள் பெருக பெரிய இடம் உருவாகும். பழங்குடியின பள்ளிகளில், மலைவாழ் குழந்தைகள் கல்வி முற்றிலும் மறுக்கப்படும் .
டியூசன் என்ற ஒரு கலாச்சாரம் தமிழ்நாடு முழுவதும் பெருகும், நோட்ஸ் விற்பனைகள் கொடி கட்டிப் பெருகும். அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லை, ஆகவே நம் குழந்தைகள் பொதுத் தேர்வுகளில் மதிப்பெண்கள் வாங்க முடியாது என தனியார் பள்ளிகளை நாடிச் செல்லும் வழிகள் ஏராளமாக உருவாகலாம். மக்களின் கல்வி உரிமை பலவந்தமாகப் பறிக்கப்படும் சூழலுக்கு இந்த சமூகத்தை இந்த அரசாணை தள்ளுகிறது.
எதை வரவேற்கலாம்?
தொடக்க வகுப்புகளுக்கு வகுப்புக்கு ஓர் ஆசிரியரை நியமித்து குழந்தைகளை அடிப்படை வாசிப்புத் திறன் பேசுதல் , எழுதுதல் , அடிப்படைக் கணிதத் திறனில் (கூட்டல் , கழித்தல் ,பெருக்கல் , வகுத்தல் ) ஆகியவற்றில் தேர்ச்சி அடையச் செய்து , பாடநூல்களின் பாடக்கருத்துகளை உள்வாங்கி சுய சிந்தனைக்கு வழிகாட்டி , உள்ளூர் வளங்களைத் தொடர்பு படுத்தி கற்பித்தல் செயல்பாடுகளை சுதந்திரமாக ஆசிரியர்களை உருவாக்க வழிகாட்டில் வேண்டும்.
கல்வி அடுக்குகளில் உள்ள அதிகாரிகள் அலுவலர்கள் நேரடியாக மாணவரை சந்தித்து உரையாடி பிரச்சனைகளை அறிந்து தீர்க்கும் எதார்த்தங்கள் உருவாகிடல் வேண்டும். தொடர்ச்சியான நல்ல மாற்றங்களை உருவாக்கும் உயிரோட்டமுள்ள வகுப்பறைகளை ஊக்கப்படுத்தி ஆசிரியர்களை கற்பித்தல் பணிகளுக்கு அனுமதிக்க வேண்டும். மதிப்பீட்டு முறைகளை எழுத்துத் தேர்வு என்ற கண்ணோட்டத்தை மாற்றி, செயல்பாடுகள், விளைந்த மாற்றங்கள், அதற்காக துறை சார்ந்த வழிகாட்டுதல்கள், அறிவுறுத்தல்கள் என வேறு ஒரு பரிமாணத்தை பெற்றோர் ஆசிரியர் சமூகத்திடம் விதைத்தால் சிறப்பான கல்வி முறையாக மாறி, உண்மைையான கல்வி மலரும். குழந்தைகளின் திறன்களை முடக்கும் இந்த அரசாணை வேண்டாம் .
உமா
பள்ளிக் கல்விப் பாதுகாப்பு இயக்கம்
நன்றி: தின செய்தி நாளிதழ்