5 மற்றும் 8 வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு : குழந்தை உளவியலுக்கு எதிரானது – மூர்த்தி

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

பொதுத்தேர்வு அவசியம் என்பதை எதை வைத்து முடிவெடுத்திருக்கிறார் என்றே தெரியவில்லை. மாநிலம் முழுவதும் பொதுப் பாடத்திட்டம் இருக்கலாம். ஆனால் 10 வயது, 13 வயதுக் குழந்தைகளுக்கு மாநிலம் முழுவதும் ஒரே வினாத்தாள் மூலம் தேர்வு நடத்துவதும் விடைத்தாள் மதிப்பீடு செய்வதும் அதன் அடிப்படையில் தேர்ச்சி மற்றம் தேக்கம் செய்வதும் சரியான முறையல்ல. இதன் மூலம் கல்வித் தரம் உயரும் என்று பொதுத் தேர்வு முடிவை எடுத்தவர்கள் நம்புகிறார்கள். கல்வித்தரத்தை உயர்த்த பொதுத் தேர்வு என்ற ஒற்றை வழிமுறையைத் தவிர வேறு பல வழிமுறைகளைப் பின்பற்ற முடியும். இது குறித்து கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் எல்லோரிடமும் விவாதிக்க வேண்டும்.

உலகளாவிய குழந்தைகள் கல்வி சார்ந்த பல ஆய்வுகள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். கல்வி பற்றியும் குழந்தை உளவியல் பற்றியும் குழந்தை உடலியல் பற்றியும் புரிதல் இல்லாமல் பொதுத் தேர்வு என்ற வடிகட்டுதல் முறையைப் பின்பற்றுவது கல்வி உரிமைகளை தொடக்கக் கல்வி நிலையிலேயே மறுப்பதற்கு வழிவகுக்கும். தேர்வு என்பது குழந்தைகளின் பன்முகத் திறன்களை மதிப்பீடு செய்வது. ஆனால் இரண்டு மணி நேர எழுத்துத் தேர்வில் மனப்பாடத் திறனைத் தான் அளவிட முடியும். சில குழந்தைகளால் கருத்துகளைச் சொல்ல முடியும். ஆனால் எழுதுவதில் முழுமையாக வெளிப்படுத்த முடியாமல் இருக்கும்.

குழந்தைகளின் திறமைகளை ஊக்கப்படுத்தவே மதிப்பீடு தேவை. அவர்களைப் பயமுறுத்துவதாக இருக்கக் கூடாது. இப்போது அறிவித்திருக்கும் பொதுத்தேர்வு எனும் சொல்லே குழந்தைகளுக்கு அச்சம் தருவதாக இருக்கிறது. ஒரு வகுப்பிற்கு ஒரே மாதிரியான பொருளாதார, குடும்பச் சூழலிலிருந்து குழந்தைகள் வருவதில்லை. பல்வேறு சூழலிலிருந்து வருகிறார்கள். இவர்களைப் பொதுத்தேர்வு என்ற ஒற்றை எழுத்துத் தேர்வு அலகால் மதிப்பிடுவது என்பது கல்வி உளவியலுக்கு மட்டுமல்ல, குழந்தை உளவியலுக்கும் எதிரானது.
குழந்தை உளவியலுக்கு எதிரானது: அடிப்படை எழுத்தறிவும் எண்ணியல் அறிவும் தொடக்கக் கல்வியின் முதன்மையான நோக்கம். அறிவியல், சமூக அறிவியல் பாடங்கள் அறிமுகப் படுத்தப்படுகின்றன. இன்று தொடக்கப் பள்ளிகளில் ஐந்து பாடங்கள் கற்றுக்கொடுக்கிறோம். ஆனால் எல்லாப் பள்ளிகளிலும் தமிழாசிரியர், ஆங்கில ஆசிரியர், அறிவியல், சமூக அறிவியல், கணிதம் கற்பிக்கத் தனித்தனி ஆசிரியர்கள் நியமிக்கவில்லை. சுமார் 25 ஆயிரம் பள்ளிகள் ஈராசிரியர் பள்ளிகளாக உள்ளன.

ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனி ஆசிரியர்கள் இருந்தால்தான் குழந்தைகள் முழுமையாகக் கற்றுக்கொள்ள முடியும். அதற்கான வாய்ப்புகளை உருவாக்காமல் பொதுத்தேர்வு நடத்துவது கொடுமையானது. பொதுத் தேர்வு நடத்தினால் ஆசிரியர் சரியாக வேலை செய்வார்கள். குழந்தைகள் நன்றாகப் படிப்பார்கள் என்ற எதிர்மறைக் கண்ணோட்டம் கல்வி சார்ந்த கொள்கை முடிவெடுப்பவர்களிடம் உள்ளது. கல்விக் கொள்கை முடிவெடுக்கும் அதிகாரத்தில் உள்ளவர்கள் மனத்தூய்மையோடு முடிவெடுக்கவேண்டும். கல்விக் கட்டமைகளில் உள்ள குறைகளை சரிசெய்யவேண்டும்.

விருப்பத்துடன் குழந்தைகள் கற்பதே மறக்கப்படாமல் இருக்கும். கல்விக்கான வாய்ப்புகளை அளிப்பதில் பல குறைகளை வைத்துக்கொண்டு குழந்தைகளுக்கு பொதுத் தேர்வு என்ற கொடிய மதிப்பீட்டு முறை மூலம் கல்வி உரிமையை மறுக்கக் கூடாது. எதிர்க் குரலற்ற, வலிமையற்ற குழந்தைகளுக்கு அநீதி இழைக்காத கல்விக் கொள்கைகளை உருவாக்க அதிகார பீடங்கள் அக்கறை கொள்ளவேண்டும்.

 

Leave a comment