5ஆம் & 8ஆம் வகுப்பு பொது தேர்வு கண்டனங்கள்

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

5 & 8ஆம் வகுப்பு பொது தேர்வு என்று செய்தி இணையததில் பரவியதும் பலத்த எதிர்ப்புகளும் கிளம்பியது. உடனே மறுநாள் அப்படி ஒன்றுமில்லை என்றும் பின்னர் மூன்று வருடத்திற்கு விலக்கு என்றும் செய்திகள் பரவியது. இதனை அடுத்து ஆசிரியர் மற்றும் செயற்பாட்டாளர்கள் சிலர் அடையாள உண்ணாவிரதம் இருந்தனர். சிலர் கருப்பு பட்டை அணிந்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.  இதற்கிடையில் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் சங்கம் பொது தேர்வு தேவை என்று ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டனர்.அதற்கு அவர்கள் முக்கியமாக சொல்லியது தமிழில் பிழையின்றி யாரும் எழுதவில்லை என்பதை தான். ஆனால் அவர்களின் அறிக்கையிலே பிழைகளை சுட்டிக்காட்டினர் ஆசிரியர்கள் சிலர்.

கல்வி யாருக்கானது? என்ற கேள்வியிலிருந்து நாம் துவங்க வேண்டியிருக்கிறது. தொடர்ந்து கல்வி என்பது அனைவரையும் ஒன்று சேர்த்து பயணிப்பதே தவிர வடிகட்டும் முறை அல்ல என்பதை பல கல்வியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஆனால் சமீபகாலங்களில், இந்தி திணிப்பு, பள்ளிகள் இணைப்பு, பொது தேர்வு, விடுமுறை ரத்து என ஒவ்வொரு கல்வி சார்ந்த அறிவிப்பும் கல்வியின் அடிப்படை தன்மைக்கு எதிராகவே இருக்கிறது.

புதிய கல்விக் கொள்கையில் மறைமுகமாக குறிப்பிட்டு இருக்கும் 3ஆம் வகுப்பிற்கான பொது தேர்வு என்பதற்கு முன்னோட்டமாகவே இந்த அறிவிப்பு என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது. புதிய கல்விக் கொள்கையின் வரைவை முன்னிட்டே இங்கு பல மாறுதல்கள் மறைமுகமாக வருகிறது என்பதை உணர முடிகிறது. இவை அனைத்துமே குழந்தைகளை உளவியல் ரீதியாக தாக்குவதாகும். கல்வி என்பதை பூச்சாண்டியாக மாற்றி குழந்தைகளை துரத்தி அடிக்கும் வழிகளே இவை அனைத்தும். இதற்கு எதிராக ஆசிரியர் சங்கம் போராட வேண்டிய அவசியம் இருப்பது போலவே பெற்றோர்களுக்கும் எதிர்த்து குரல் எழுப்ப வேண்டிய அவசியம் இருக்கிறது. ஏனென்றால் இறுதியில் பாதிப்பு அடைய போவது நமது குழந்தைகளே.

குழந்தைகளை குழந்தைகளாக பார்க்கும் விதத்தை நாம் முன்னிருத்த வேண்டும். இது போட்டி உலகம் என்ற மாயையை தகர்க்க வேண்டும். இவ்வுலகம் குழந்தைகள் மீது அக்கறை கொண்டது என்ற நம்பிக்கையை தான் நாம் விதைக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு தேர்வு என்பதை முன்னிறுத்துவதில் எந்தவித நியாயமும் இருப்பதாக தெரியவில்லை.

பொது தேர்வு குறித்து சில நண்பர்கள் பகிர்ந்த கருத்துக்களை இங்கு தொகுத்துள்ளேன். நண்பர்கள் வாசித்துவிட்டு உங்கள் கருத்துக்களையும் பதிவு செய்யுங்கள்.

ஆசிரியர் மகாலட்சுமி ( அரசு வெளியிட்ட அரசாணை 164 திரும்ப பெற கூறி உண்ணாவிரதம் இருந்தவர் ):

ஏதோ ஓர் அவசரத்தில் எடுத்த முடிவாக இந்தத் தொடர் போராட்டத்தை நான் அறிவித்திடவில்லை. கடந்த கல்வியாண்டில் இதே கல்வித்துறை 5 மற்றும் 8ம் வகுப்பிற்குப் பொதுத்தேர்வு என்று அறிவித்ததும் தமிழகத்தின் எதிர்ப்புக்குரலாக,நம் பள்ளிக்குழந்தைகள்,பெற்றோர் மற்றும் பள்ளி மேலாண்மைக்குழுவினுடையதாக இருந்தது. அதன்பிறகு அமைச்சர் வெளியிட்ட கல்வி அமைச்சரின் அறிக்கைகள்குறித்து நாம் நன்கு அறிவோம். தடாலடியாக அரசாணைகள் வெளியிடப்படுவது சமீப ஆண்டுகளில் நிகழ்ந்து வருகிறது.இதில் உச்சக்கட்டம் கல்வித் தொடர்பாக வரும் அரசாணைகள். ஒட்டுமொத்தக் குழந்தைகளையும் உளவியல் ரீதியாகக் குறிவைத்துத் தாக்கும் அரசாணைதான் 164. பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பிக்கொண்டே இருந்தாலும் அனைவரையும் ஓரிடத்தில் ஒன்றிணைக்கும் ஆற்றலை உடனடியாக செய்தாக வேண்டிய கட்டாயம். அந்தக் கட்டாயத்திற்கு உங்களை நகர்த்தும் வேலையாக மட்டுமல்லாமல், என் குரலற்றக் குழந்தைகளின் குரலை இந்த சமூகத்திற்கு நான் வெளிப்படுத்தியாக வேண்டிய அவசியமிருந்தது.அதன் பொருட்டே நான் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்தேன்.

உடல் நன்றாகவே ஒத்துழைத்தது நேற்று இரவு எட்டுமணிவரை. அதன்பிறகு உடல் நடுக்கத்தைக் குழந்தைகள் அருகிலிருந்து பார்த்தபோது அழத்தொடங்கிவிட்டனர். ஒன்னுமில்ல சாமி என்று சொல்லித் தேற்றினாலும். அவர்களின் அடுத்தடுத்த வார்த்தைகள் இன்னும் என்னை தைரியப்படுத்தவும் கூடவே நடுக்கத்தையும் கொடுத்தது. என் குழந்தைகளின், தோழர்களின்,சகோதரர்களின், உணர்வாளர்களின் வேண்டுகோளை ஏற்று என்னுடைய உண்ணாவிரதத்தைத் தற்காலிகமாக நிறுத்திக்கொள்கிறேன்.
நீட் தேர்வில் விளையாடியது போன்று இந்த விசயத்திலும் நீங்கள் விளையாடியமாட்டீர்கள் என நம்புகிறேன்.ஒருவேளை அப்படிச் செய்வீர்களானால் பெற்றோர்களும்,குழந்தைகளும்,கல்லூரி மாணவர்களும்,சமூக ஆர்வலர்களும்,குழந்தை&மனித உரிமை செயற்பாட்டாளர்களும் களம் காண்பார்கள் என்று சொல்லிக்கொள்வும் செய்கிறேன்!

உடனுறைந்த அத்துணை தோழமைகளுக்கும் பேரன்பும் பெருமுத்தங்களும்!

புதுகை செல்வா 9865974080 (பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கம்,புதுக்கோட்டை – அடையாள உண்னா நோம்பு இருந்தவர் )

அரசாங்கத்தின் அதிலும் பள்ளிக்கல்வித்துறையின் அறிவிப்புகளை ஏற்கவும் மறுக்கவுமான முன்னெடுப்பை குழந்தைகள் மீதான நேயத்தோடே துவங்கினோம்.

ஆனால் கல்வி துறை எப்படியோ அப்படியே பல அரசுப்பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் தகுதியும். மாணவர் நலனில் அக்கறையற்ற ஆசிரியர்களாலேயே இப்போதுள்ள நிலை. தமிழக பள்ளிக்கூட கல்வி ‘ரெட்’ அலெர்ட் நிலையில் உள்ளதை அரசின் ஆய்வு சொல்கிறது. இதற்கான பொறுப்பு ஆசிரியர்களிடமும் இருக்கிறது.

எங்கே நெஞ்சை தொட்டு சொல்லுங்கள். கல்வித்துறைக்கும் மாணவர்களுக்கும் இடையேயான பாலத்தை எப்படி கட்டியிருக்கிறீர்கள். பெற்றோர் கூட்டங்கள் காலியாக அல்லது ஒப்புக்காகத்தானே நடக்கிறது.

மாதமொரு முறை கூட்டினீர்களா. அப்போது அது வெறும் பள்ளி மேலாண்மைக்குழு நிலை ரெக்கார்டாக இருக்கும். அதில் உயிர் இருந்ததா ? இப்படி ஒவ்வொரு பள்ளியிலும் ஆசிரியர்களின் ஒரு முகத்தை பெற்றோர் அறியாமலில்லை.. என்றாலும்…

கல்வியை… குழந்தைகளை… அவர்தம் குடும்பங்களை நேசிக்கும் பல ஆசிரியர்கள் எங்களோடு இருக்கிறார்கள்…. அவர்களால் கஜா புயலின் நிவாரணத்தை கடைக்கோடி வரை சென்று வழங்க முடிந்தது.
அப்படியானவர்கள் இன்று 5 & 8 க்கான பொதுத்தேர்வினை உள்ளார்ந்தே எதிர்க்கிறார்கள்… எம் குழந்தைகளின் தேவை உணர்ந்தே எதிர்க்கிறார்கள்.

ஆனால் அரசு ?அரசு நமது குழந்தைகளை தண்டித்திட வேண்டாம் என்று மன்றாடுகிறோம்.எங்களோடு பேசுங்கள்.

இனியன் – செயற்பாட்டாளர்

இந்தப் பிரச்சனையையும் அதன் பாதிப்புகளையும் மக்களிடம் எடுத்து செல்ல அரசியல் இயக்கங்கள் அதனை கையில் எடுக்க வேண்டும். அவற்றிக்கான வழிகளை ஒருங்கிணைந்த செயல்பாடுகள் மிக முக்கியமாக தேவைப்படுகிறது.

தற்போதைக்கு sfi மிக வீரிய அளவில் போராட்டங்கள், வகுப்புகள் புறக்கணிப்பு போன்றவை செய்து வருகின்றனர். அதேபோல் நேற்று ASFI/Y அமைப்பினரும் போராட்டங்கள் செய்திருக்கின்றனர்.

நீட் ற்காக அனிதா கொலை செய்யப்பட்ட போது கூட sfi மற்றும் தன்னெழுச்சி மாணவர்களின் போராட்டங்கள் பெரிதும் பேசுபொருளானது. ஆனால் நடந்து கொண்டிருக்கும் செவிட்டு அடிமைகள் ஆட்சியில் அவை அனைத்தும் காற்றோடு மட்டும் கரைந்து நிற்கிறது.

அதேநேரம் இந்தப் பிரச்சனைக்கு நாம் செய்ய வேண்டியது பெற்றோர்களை ஒன்றிணைப்பது தான். அதில் இந்தப் பொதுதேர்விற்கு எதிர்ப்பு மனோநிலையில் இருக்கும் ஆசிரியர்கள் தங்களிடம் பயிலும் குழந்தைகளின் பெற்றோர்களிடம் உரையாடலாம். உரையாடி இதன் பாதிப்புகளை எடுத்துக்கூறி ஓர் ஒருங்கிணைப்பு ஒன்றினை செய்யவேண்டும். பெற்றோர்கள் களத்திற்கு வராமல் நிச்சயம் இதில் எவ்வித முன்னேற்றத்தையும் அடைந்து விட முடியாது.

மவுனம் காத்து பொதுத்தேர்வு முடிவுகளுக்கு பிறகு குழந்தைகள் காணவில்லை, குழந்தைகள் தற்கொலைகள் என்னும் செய்திகள் வந்த பிறகுதான் எழுவேண்டும் என்னும் அவசியமல்லாமல் தற்போது விழித்துக்கொள்வது நலம். அன்பான எதிர்க்கட்சிகள் இவ்விசயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வெறும் அறிக்கைகளுடன் நின்று கொண்டிருந்தால் அதுவும் சிக்கலில் தான் போய் முடியும்.

இதெல்லாம் களத்தில் இருக்கட்டும். அதனுடன் இணைந்து இங்கே facebook மூலம் மற்றும் சமூக வலைத்தளம் மூலம் ஓர் ஒருங்கிணைவை செய்ய இயலுமா என முயற்சித்து பார்க்கலாம் என்னும் சிந்தனை எழுந்துள்ளது.

அதனால் உங்கள் வீட்டில் குழந்தைகள் இருக்கிறார்களா? அதிலும் 5ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு படிக்கும் குழந்தைகள் இருக்கிறார்களா? அவர்களுக்கு பொதுத் தேர்வு தேவையில்லை என்னும் சிந்தனையில் பெற்றோராக நீங்கள் உணர்கிறீர்களா? மற்றும் ஓட்டுமொத்தமாக இந்த தேர்வு தேவையில்லை என விருப்பம் கொண்டவராக இருக்கிறீர்கள் என்றால் உங்களது எண்களை கமெண்ட் அல்லது inbox லையோ தெரிவியுங்கள்.

Facebook மற்றும் watsapp களில் குழுக்கள் உருவாக்கி ஓர் ஒருங்கிணைவை முன்னெடுப்போம். அல்லது இதிலெல்லாம் எனக்கு விருப்பம் இல்லை இருந்தாலும் இந்த பொதுத்தேர்வு முறையை எதிர்க்கிறேன் என்பவர்கள் ஓர் # tag ஒன்றை உருவாக்கி அதன் கீழாவது தொழிநுட்ப ஒருங்கிணைப்பை மேற்கொள்வோம். அந்த tag என்னவென்று நண்பர்களே முடிவு செய்யலாம்.

இவைகள் அனைத்திற்கும் ஒத்துழைப்பு மற்றும் செயல்வடிவங்களை பற்றிய உரையாடல்களை துவங்குவோம்.

சில வீடியோ பதிவுகள் :

மக்கள் & செயற்பாட்டாளர் இனியன் கருத்துக்கள் :

Dr.Shalini Interview (Psychiatrist) | 5th & 8th STD Public Exam Issue:

 

Leave a comment