நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்!

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

சிறுவர்களே நடிக்கும் நாடகம், கோமாளி, கதை சொல்லிகள், எழுத்தாளர் சந்திப்பு, புத்தக வெளியீடு, சின்னதாக ஒரு புத்தக கண்காட்சி, பறை இசை , நினைவு பரிசாக காத்தாடி, நடுநடுவே சிறார் பாடல்கள் மற்றும் சிறிய விளையாட்டுகள் என திட்டமிட்டபடியே நிகழ்வு அழகாக நடந்தது. சிறுவர்களின் மகிழ்விற்காக ஓர் நிகழ்ச்சி அதுவும் பெங்களூர் தமிழ் மக்களுக்கு. 120க்கும் மேலானவர்கள் கலந்துக்கொண்டனர். குழந்தைகளோடு பெரியவர்களின் சிரிப்பொலிகளும் கைத்தட்டல்களும் விசில் சத்தங்களும் அரங்கத்தை அதிர வைத்தது. அதோடு சிறுவர்களுடன் போட்டிப் போட்டுக்கொண்டு காத்தாடியை பெரியவர்களும் சுத்தியது இரட்டிப்பு மகிழ்சசியை அள்ளித் தந்தது. வந்திருந்த அனைவரது புன்னகைகள் தொடர்ந்து இயங்க உற்சாகத்தை அள்ளி தருகிறது.

சென்ற நிகழ்விற்கு பிறகு வெவ்வேறு காரணங்களால் அடுத்த நிகழ்வை உடனே செய்ய முடியாமல் போனது. அதுவே இந்த நிகழ்வை அதுவும் 100வது நிகழ்வை ஓர் சிறப்பான நிகழ்வாக வடிவமைத்தது. 4 மணி நேர நிகழ்வாக வடிவம் கொடுத்தது அதுவும் புதிய இடத்தில் புதிய நண்பர்களின் துணையோடு புதிய மக்களை சந்திக்கும் வாய்ப்பினையும் கொடுத்தது. நிகழ்வை சிறப்பித்த அனைத்து நண்பர்களுக்கும் பஞ்சு மிட்டாய் சிறார் குழுவின் அன்பும் நன்றியும்.

நாடகம் என்றதும் அதில் பங்கேற்கும் சிறார்களை தொடர்ந்து பஞ்சு மிட்டாயுடன் பயணிக்கும் நண்பர் வட்டத்திலுள்ள ஆர்வமுள்ள நண்பர்களின் வழியே இணைத்துக் கொண்டோம். 26 சிறார்கள், முதல் நாள் அவர்களுடன் பழகி அழகான நாடகத்தினை வடிவமைத்திருந்தார் உதிரி நாடக நிலம் விஜயகுமார். மதியம் 2.30 நிகழ்வு என்பதால் 1 மணிக்கு அரங்கில் ஒரு முறை பயிற்சி செய்ய திட்டமிட்டிருந்தோம். ஆனால் நண்பர்கள் புது இடத்திற்கு வருவதில் சிக்கல்கள் இருந்ததால், முதலில் ஒப்பனைகள் செய்ய துவங்கினோம். விஜயகுமார் & வேல்முருகன் இருவரும் ஒப்பனைகள் செய்ய துவங்க பெற்றோர்கள் சிலரும் அவர்களுடன் இணைந்துக் கொண்டனர். கூட்டு உழைப்புடன் ஓர் குடும்ப நிகழ்வாக உருமாறுவதை உணர முடிந்தது. குழந்தைகள் ஒப்பனைகளை ரசித்தபடியே மற்ற நண்பர்களின் ஒப்பனைகளையும் கவனிக்க துவங்கினர். ஒப்பனை வேலைகள் முடிவதற்கும் மக்கள் அரங்கில் வந்து சேர்வதற்கும் சரியாக இருந்தது.

பஞ்சு மிட்டாயின் அறிமுகத்துடனும், வந்திருந்த நண்பர்களுடன் சிறிய விளையாட்டுக்கள், பாடல்கள் ஆடல்கள் என நிகழ்வு இனிதே துவங்கியது. நாடகத்திற்காக சிறார்கள் தயாராக இருந்தனர். 4.5 வயது முதல் 12 வயது வரை மொத்தம் 26 சிறார்கள் புலி,எறும்பு, பூ ,கிளி ,யானை என தயாராக இருந்தனர். இசைக்கேற்ப அவர்கள் இயங்கி மேடையில் அழகிய நாடகத்தினை அரங்கேற்றினர். ஒவ்வொரு குழந்தையும் தனது பகுதியை மட்டும் செய்யாமல் மொத்தமாக நாடகத்தினுள் இருந்ததை உணர முடிந்தது. ஓர் குழு செயல்பாடாகவே அந்த நாடகத்தினுள் அனைவரும் இருந்தனர். எனக்கு ஏற்கனவே  ஒவ்வொரு குழந்தையின் அறிமுகம் இருந்ததால் அவர்களுக்குள் இருந்த ஆக்கப்பூர்வமான மாறுதல்களை நன்கு உணர முடிந்தது.

பார்வையாளர்களின் மத்தியிலும் பல்வேறு விசயங்களை கவனிக்க முடிந்தது. மேடை என்ற அச்ச உணர்வில்லாமல் சிறுவர்கள் இருந்தது, குழு மனப்பான்மை, நாடகத்தை விளையாட்டு போலவே அவர்கள் அரங்கேற்றிய விதம் என பல்வேறு விசயங்களை நண்பர்கள் கவனித்தனர். நாடகம் முடிந்ததும் விஜயகுமார் அவர்கள் சிறார்களை அவர்களது பெயருடன் அறிமுகம் செய்தது பெரிய வரவேற்பை பெற்றது.

நாடகத்தினை தொடர்ந்து சிறப்பு விருந்தினராக எழுத்தாளர் பாவண்ணன் அவர்கள் மேடைக்கு அழைக்கப்பட்டார். எழுத்தாளர் பாவண்ணன் அவர்கள் தொடர்ந்து பஞ்சு மிட்டாயுடன் பயணித்தும் அதன் முயற்சிகளுக்கு ஆதரவு அளித்தும் வருபவர். சிறார் உலகில் பாவண்ணன் அவர்கள் தனது பாடல்கள் மூலம் சிறார் இலக்கியத்தை  அலங்கரித்து வருபவர். தனது சிறுவயது நினைவுகள் மூலமாகவும், தற்கால சிறுவர்களை கவனித்தும் அந்த குழந்தைமையை பற்றி தொடர்ந்து உரையாடியும் வருபவர். தனது படைப்புகளிலும் நேரடியாகவும் மறைமுகமாவும் குழந்தைமையை நினைவு கூறுபவர். பெங்களூரில் இருக்கும் தமிழ் இலக்கிய ஆளுமைகளில் முக்கியமானவர். அவர் சிறப்பு விருந்தினராக வந்திருந்து முழு நிகழ்வும் எங்களுடன் இருந்து , குழந்தைகளுக்கு அழகிய ஒட்டக கதையையும் சொல்லி அனைவரையும் மகிழ்வித்தார். அத்துடன் பஞ்சு மிட்டாயின் 150வது நிகழ்விலும் தான் பங்கேற்க வேண்டும் என்று சொல்லி எங்களை உற்சாகப்படுத்தினார் . ஐயா அவர்களுக்கு எங்களது அன்புகள்.

எழுத்தாளர் பாவண்ணனை தொடர்ந்து அரங்கில் திடீரென குசுகுசு பேச்சுக்கள் அடுத்து யார் வர இருக்கிறார்கள் ? கோமாளி தான் … கோமாளியை பெரியவர்களுக்கு கூட பலருக்கு (சர்க்கஸ் தவிர) நெருக்கத்தில் பார்த்திருக்க வாய்ப்பிருந்திருக்காது. கோமாளியாக நண்பர் வேல் முருகன் புதிய பாடலுடன் (குறிப்பு அவரே எழுதிய பாடல் அது ) பாட்டுப் பாடி ஆட்டங்கள் ஆடி சேட்டைகள் செய்து அசத்தினார். குழந்தைகளை உரிமையுடன் பேச வைத்து தயக்கம் என்ற உணர்வை முற்றிலுமாக நீக்கி அனைத்து சிறார்களையும் தொடர்ந்து தனது சேட்டைகளால் கட்டிப் போட்டார். அவ்வப்போது அரங்கில் வெவ்வெறு வேசத்துடன் வந்து புதுப்புது வடிவில் கோமாளித்தனத்தை செய்தார். தொடர்ந்து குழந்தைகள் மனதில் அடுத்து கோமாளி வருவாரா? என்று கேட்க வைத்தார் … பலூன்களால் தனது உடம்பை நிறைத்து அதனை குழந்தைகளை கொண்டு உடைக்க வைத்தார்..மூன்று முறை அரங்கில் தோன்றி அனைவரையும் கவர்ந்தவர். டாப்பு டாப்பு தான் பாடலும் குழந்தைகளை மகிழ்வித்து பஞ்சு மிட்டாய் நிகழ்வை நிறைவு செய்தவர் ..அவருக்கு எங்களது அன்புகள்.

கதை சொல்லிகளாக முதலில் ‘ரயில் வண்டி’ அனிதா அவர்கள் அய்யாசாமி தாத்தாவின் பலாப்பழம் கதையை சொன்னார். சென்னையில் தொடர்ந்து நிகழ்வினை நடத்தி வருபவர். இந்த 100வது நிகழ்வில் கதைகள் வழியே சிறுவர்களை மகிழ்வித்தார்.மரத்தின் மேலே ஏறி கீழே விழும் காட்சியில் கீழே விழுந்து தனது உடல் மொழியாலும் கதைகளை சிறுவர்களுக்கு கொண்டு சேர்த்தவர். சென்னையிலிருந்து குடும்பத்துடன் வந்து நிகழ்வை சிறப்பித்த நண்பருக்கு எங்களது அன்புகள். அனிதா அவர்களை தொடர்ந்து ராம்பிரியா அவர்கள் மரத்தில் எறி மாட்டிக்கொண்ட கரடியின் கதையை சொன்னார். கதைக்கு அழகாக தனது குழந்தைகளுடன் சேர்ந்து உருவாக்கிய ஓவியங்களையும் எடுத்து வந்திருந்தார். பஞ்சு மிட்டாய் நிகழ்வில் தொடர்ந்து பங்கேற்று வருபவர். அவருக்கு எங்களது நன்றிகள். இரண்டு நண்பர்களும் கதைகளின் வழியே நிறைய உரையாடல்களை குழந்தைகளுடன் நடத்தினர். குழந்தைகளும் உரிமையுடனுன் அவர்களுடன் உரையாடியது பெரும் மகிழ்சசியை தருகிறது.

நாடகம்,கதை சொல்லல்,கோமாளியை தொடர்ந்து பெங்களூரை சேர்ந்த அக்னி கலைக் குழுவின் பறை இசை நிகழ்வு நடந்தது. 20 நிமிடம் ஒட்டுமொத்த அரங்கத்தின் கவனத்தையும் தன் பக்கம் வைத்தது. இசையை பார்வையாளர்கள் அனைவரும் ஆடியும் விசில் அடித்தும் கொண்டாடினர். நிகழ்விற்காக அழகான இசையுடன் நடனத்தை வடிவமைத்து அனைவரையும் மகிழ்வித்த அக்னி குழுவிற்கு எங்களது நன்றிகள். நிகழ்வு முடிந்து பல நண்பர்களும் பறை ஆர்வத்தை வெளிப்படுத்தினர். இசை மீதான பேதங்கள் நீங்கி சமத்துவம் மலர அவர்களது  இந்த பயணம் உறுதுணையாக இருக்கும். அதற்கு எங்களது வாழ்த்துக்கள்.

வந்திருந்த சிறுவர்களுக்கு காத்தாடியை அன்பு பரிசாக பஞ்சு மிட்டாய் ஏற்பாடு செய்திருந்தது. இதனை கோவையை சேர்ந்த நண்பர் சுபாஷினி அவர்கள் வடிவமைத்து அனுப்பி இருந்தார். அவருக்கு எங்களது அன்புகள். நிகழ்வில் காத்தாடியுடன் அழ.வள்ளியப்பாவின் பாடல்கள் தொகுப்பு “ஏழும் ஏழும் பதினாலாம்” என்ற தலைப்பில் வெளியானது. வானம் பதிப்பகம் மணி வெளியிட எழுத்தாளர் பாவண்ணன் & குழந்தைகள் செயற்பாட்டாளர் இனியன் (பல்லாங்குழி அமைப்பு)அவர்கள் பெற்றுக்கொண்டனர். சிறப்பு விருந்தினர் அனைவருக்கும் பஞ்சு மிட்டாயின் சார்பாக புத்தகங்கள் வழங்கப்பட்டது. அதேப் போல நிகழ்வில் வானம் பதிப்பகம் மணிகண்டன்,செயல்பாட்டாளர்கள் இனியன், கிருத்திகா தரன்,அனிதா பழனிசாமி மற்றும் இலக்கிய ஆர்வலர்கள் மகாலிங்கம் மற்றும் திருஞானம் அவர்களும் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.

இந்த நிகழ்வின் சாத்தியமாக்கிய அனைவருக்கும் எங்களது நன்றிகள். குறிப்பாக, எங்கள் குழுவிலுள்ள அனைத்து நண்பர்களுக்கும் அவர்கள் வெவ்வேறு தளங்களில் செய்த உதவிகளையும் இங்ஙனம் நினைவு கூறுகிறேன். இரண்டு வாரங்களாக அனைத்து வித திட்டமிடலுக்கும் அதிலுள்ள அனைத்துவிதமான பொறுப்புகளையும் பகிர்ந்துக்கொண்ட அருண் அவர்களுக்கும், இரண்டு முழு நாட்கள் நிகழ்வை நினைத்தபடி நடைமுறைப்படுத்த காரணமாக இருந்த ராஜேஸ்,ஜெயகுமார், சர்மிளா,பிரவீன் மற்றும் எங்களுடன் எப்போதும் பயணிக்கும் குடும்பத்தினர் திவ்யா,சந்தியா,ஸ்ரீதேவி,புனிதா மற்றும் எங்கள் அனைவரது குடும்பத்தினருக்கும் நன்றிகளும் அன்பும்.

100வது நிகழ்வை தொடர்ந்து வெவ்வேறு குழந்தைகள் செயற்பாட்டாளர்களும் செயற்பாடுகளையும் பெங்களூர் சிறுவர்களுக்கு கொண்டு வர விரும்புகிறோம். மூன்று மாதத்திற்கு ஒரு முறை இதுப் போன்ற நிகழ்வினை நடத்திட வேண்டும் என்ற எண்ணம் பரவலாக இருந்ததை உணர முடிந்தது, உங்கள் அனைவரது ஒத்துழைப்போடு அதனை செய்திட முடியும் என்று நம்புகிறோம்.

நன்றி,
பிரபு
பஞ்சு மிட்டாய் சிறார் குழு

Leave a comment