பயமும் படபடப்புமாய் நெருங்கிக் கொண்டிருகிறது இறுதித் தருணங்கள். அதிலும் ஒரு பரிசாத்திய முயற்சியாய் துவங்கப்பட்ட நிகழ்வு. ஆம், பரிசாத்திய நிகழ்வுதான். அப்படியென்ன பரிசோதனை?
முழுநாள் நிகழ்வு என்பதே பரிசோதனைதான். அதிலும் முழுநாள் என்பதை எப்படிக் கணக்கில் கொள்வது என்னும் கேள்வியும் வந்து நிற்க, வெறுமென பள்ளி நேர அடிப்படையில் வைப்பதா? நிகழ்வின் அடிப்படையில் வைப்பதா? முழுநாள் நிகழ்வு என்றால் உடன் வருகிற பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பாதுகாவலர்கள் போன்றவர்களை என்ன செய்வது? அப்போ அவர்களுகென்று ஓர் தனி உரையாடல்கள் கட்டமைக்கப்பட வேண்டும். அப்படியான உரையாடல்களை யாரையெல்லாம் வைத்து நிகழ்த்துவது? குழந்தைகளிடம் யாரெல்லாம் உரையாடி, கதைகள் பேசி, விளையாடி, சிரிக்கிறார்களோ அவர்கள் அனைவருமே பெற்றோர்களிடமும் உரையாடிட வேண்டும். எனவும் திட்டமிட்டோம். அப்படிதான் முழுநாள் நாள் நிகழ்வையும் திட்டமிட்டுள்ளோம்.
முழுநாளையும் இரண்டாகப் பிரித்து திட்டமிட்டு பள்ளி நேர அடிப்படையில் காலை 9.30 – மாலை 4.30 வரையிலும். மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணிவரை நமது கொண்டாட்ட நிகழ்வுவாக பிரித்துக் கொள்வோம் என வரையறை செய்துள்ளோம்.
இப்படியானத் திட்ட அமைப்பில் குழந்தைகள் சோர்ந்து விடமாட்டார்களா என்னும் கேள்வியும் எழாமல் இல்லை? ஆனால், அவர்களுக்கு சோர்வு தட்டிவிடாத அளவிற்கான கூட்டுக்குழு தான் செயல்படபோகிறது. அதாவது குழந்தைகளிடம் உரையாடும் ஆளுமைகள் மற்றும் தமிழகம் முழுவதும் சுற்றித்திரியும் குழந்தைகளுக்கான கலைஞர்கள் என இரு பகுதியும் ஒன்றிணைந்து தான் நடைபெற இருக்கிறது. அதனால், நிச்சயம் சோர்வை நோக்கி குழந்தைகள் செல்ல மாட்டார்கள்.
எல்லாம் சரி, யார் அந்த ஆளுமைகள், குழந்தைகளுக்கான கலைஞர்கள்?
வாழ்வில் எந்நேரமும் இந்தச் சமூகம் பற்றியச் சிந்தனைகளுடன் இருப்பவர்கள். ஓவியர்கள், எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், மருத்துவர்கள், வரலாற்று ஆய்வாளர்கள் எனப் பலத்தரப்பட்டத் தளங்களில் இயங்கிக் கொண்டிருக்கும் ஆளுமைகள் தான் அவர்கள்.
இத்தனைத் தளங்களில் இருப்பவர்கள் ஏன் குழந்தைகள் நிகழ்விற்கு?
ஏன் இருந்திடக் கூடாதா? மேலும் அவர்கள் அனைவருமே ஏதோவொரு வகையில், வடிவத்தில் குழந்தைகளுடன் உரையாடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். குழந்தைகளுடன் உரையாடுவதை அவ்வளவு நேசிக்கவும் செய்கிறார்கள். இவற்றை விட வேறென்ன வேண்டும். கூடவே நம் கோமாளிகளும் இருக்கிறார்கள் இணைகிறார்கள். அந்த இணைப்பு புள்ளியைதான் பரிசாத்திய முயற்சி எனச் சொல்லி வருகிறோம். அதேநேரம் இவர்கள் அனைவரும் குழந்தைகள் உடன் மட்டுமல்லாது பெற்றோர்களுடனும் உரையாடவிருக்கிறார்கள் தனித்தனியாக. (ஆளுமைகளின் பட்டியில் அடுத்தடுத்த பதிவுகளில்.)
அவர்கள் அனைவரும் உரையாட இருப்பது ஓவியம் மற்றும் கலை, சூழலியல், மனநலம் மற்றும் உடல்நலம், சமூகப் பார்வையில் குழந்தைகள் வளர்ப்பு, கதைகள், ஆசிரியர் பெற்றோர்கள் தொடர்புகள் என அனைத்தும் உரையாடப் படப்போகிறது.
இவையனைத்தும் காலை 9.30 – மாலை 04.30 வரையிலான நிகழ்வுகள் மட்டுமே. அதனால் தான் இந்தப்பகுதிக்கு வயது வரம்பு 7-14 வரையிலான குழந்தைகளுக்கு மட்டும் அதிலும் பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே அனுமதி என்றும் முடிவு எடுத்தோம். ஏனென்றால் பொருளாதாரம் மற்றும் சமாளிப்புகள் என அனைத்தும் உள்ளதால் தான் இந்த வழிமுறைகள். அதிலும் 100 – 120 குழந்தைகள் வரைதான் அனுமத்திக்கலாம் என்னும் திட்டமிருந்தது. ஆனால் தற்போது 127 குழந்தைகள் வரை பதிவு ஆனதால் நேற்று காலை முதல் முன்பதிவுகள் நிறுத்தவும் பட்டது. ஆனால் மாலை 4.30 மணிக்கு பிறகான “கதையாடிகள்” மற்றும் இசை மற்றும் வானவில் குழந்தைகளின் “பொம்மைமுகச் சிங்கங்கள்” நாடக நிகழ்வுகளுக்கு எவ்விதக் கட்டுப்பாடுகளோ முன் பதிவுகளோ அவசியமில்லை. அப்படி வருகிற பொழுதுகளில் உங்கள் குழந்தைகளையும் அழைத்து வந்தால் நலம்.
முன்பதிவு செய்திருக்கும் நண்பர்களுக்கு ஓர் வேண்டுகோள். சரியாக காலை 9.3௦ மணிக்கெல்லாம் SIGA POLYTECHNIC COLLEGE வளாகத்திற்கு வந்து இணைந்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. முதல் நிகழ்விலிருந்த தாமதங்கள் படிப்படியாக குறைக்கப்பட்டு கடந்த நிகழ்வு எல்லாம் குறித்த நேரத்திற்கு முன்பாகவே நிகழ்வினை துவங்கி விட்டிருந்தோம். அதனால் உங்கள் முழு ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கிறோம்.
மீண்டும் மீண்டும் சொல்லிக் கொள்கிறேன் இதுவொரு பரிச்சாத்திய முயற்சி மட்டுமே. பார்த்து பார்த்து மிகக் கவனமான அட்டவணைகள் போடப்பட்டுள்ளது. அதேபோல் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியராக குழந்தைகள் அல்லாமல் வர விரும்புகிறவர்கள் இன்று மாலைக்குள் அலைபேசியிலேயோ, அல்லது உள்பெட்டியிலோ தொடர்புகொண்டு பதிந்துக் கொள்ளவும்.
நிகழ்ச்சி நிரல்:
காலை 9.30 முதல் மாலை 4.30 வரை (முன்பதிவு அவசியம்)
குழந்தைகளிடமும் பெற்றோர்களிடமும் உரையாடும் ஆளுமைகள்
ஓவியர். டிராஸ்கி மருது
எழுத்தாளர். பசு.கவுதமன்
எழுத்தாளர். பாமரன்
எழுத்தாளர். அருள்மொழி
எழுத்தாளர். விழியன்
எழுத்தாளர். மதிவதனி
மருத்துவர். மகேஸ்வரன்
மருத்துவர். சிவபாலன் இளங்கோவன்
கதை சொல்லி. இந்திரா காந்தி
கதைசொல்லி. எழிலன்(களிமண் விரல்கள்)
கோமாளிகள் : கதைசொல்லி சதீஷ், கதைசொல்லி வேல்முருகன், ஆஷா
மாலை 5.30 மணியிலிருந்து ( யார் வேண்டுமானாலும் வரலாம்)
கதையாடிகள் நிகழ்வு
டிஜிருடு இசை – குமார் அம்பாயிரம்
வானவில் பள்ளி நாடகக் குழு, நாகப்பட்டினம் வழங்கும் “பொம்மைமுக சிங்கங்கள்” – சிறார் நாடகம்
(பனுவல், நெறியாள்கை – விஜயகுமார்)
நன்றி,
இனியன்