ஊர் சுற்றும் பஞ்சு மிட்டாய் – பிரபு

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

திண்டுக்கல் காந்திகிராமம், ஈரோடு சம்பத் நகர் நூலகம், ஈரோடு கதை களம், காயல்பட்டிணம், பெங்களூர் என கடந்த இரண்டு மாதங்களில் (மே-ஜூன் 2019) பஞ்சு மிட்டாய் வெவ்வேறு நிகழ்வுகளில் பங்கெடுத்தும் நிகழ்வினை நடத்தியும் வந்துள்ளது. கதைகள், பாடல்கள், விளையாட்டுகள் வழியே குழந்தைகளுடன் உரையாடுவது எளிமையாகவும் இயல்பாகவும் இருக்கிறது. வெவ்வேறு நிலப்பரப்பில், வெவ்வேறு சூழலில் வளரும் குழந்தைகளை சந்திப்பதிலும் குழந்தைகள் வழியே பெற்றோர்களுடன் உரையாடுவதிலும் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம்.

திண்டுக்கல் காந்திகிராமம் குழந்தைகள் : சென்ற மாதம்(மே-2019) திண்டுக்கலில் இரண்டாம் உலகத் தமிழ்க் குழந்தை இலக்கிய மாநாடு (காந்திகிராம பல்கலைகழகத்துடன் சேர்ந்து) நடைப்பெற்றது. இரண்டு நாட்கள் பல்வேறு தலைப்புகளில் குழந்தை இலக்கியம் குறித்து கலந்துரையாடல் நடைப்பெற்றது. இந்த மாநாட்டிற்கு கலந்துக்கொள்ளும் வாய்ப்பு பஞ்சு மிட்டாய் இதழுக்கும் கிடைத்தது. இந்த மாநாட்டிற்கு இடையே, காந்திகிராமிய பகுதியிலுள்ள “CHILDREN’S HOME” யில் சிறார் நிகழ்வை நடத்தவும் வாய்ப்பு கிடைத்தது. பெற்றோர், உறவினர் இல்லாத குழந்தைகளுடன் உரையாடுவது என்பது மனதில் பல்வேறு கேள்விகளே எழுப்பிக் கொண்டே இருந்தது. ஆனால் அங்குள்ள‌ குழந்தைகளோ தங்கள் இடத்திற்கு வரும் பெரியோர்களை இயல்பாகவே கையாள்கின்றனர் என்றே தோன்றியது. அவர்களுடன் கதைகள் பேசி, விளையாடிய பொழுதுகள் இன்னும் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. “மீண்டும் எப்போ வருவீங்க அண்ணா” என்று அவர்களது அன்புடன் விடைபெற்று திரும்பும் போது குழந்தைகளின் புன்னகைகள் தான் மனதில் நிறைந்திருந்தது.

ஈரோடு சம்பத் நகர் நூலகம்: நூலகம் பல மாற்றத்திற்கு அடித்தளமாக இருக்க வேண்டிய இடம், முக்கியமாக சிறார் உலகில். ஆனால், நமது ஊரில், ஆர்வமுள்ள தனி நபர்களால் மட்டுமே அந்த மாற்றங்களை கொண்டு வர முடிகிறது. இதுப் போன்ற தனி நபர்களை தொடர்ந்து பயணங்களில் சந்திப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. சென்னையில் வாசக சாலையும், எழுத்தாளர் சுகுமாரன் அவர்களும் நூலகத்தின் துணையோடு பல முயற்சிகளை எடுத்து வருகின்றனர். அதேப் போல் ஈரோட்டில் நூலகர் ஷீலா மற்றும் கதை சொல்லி சரிதாஜோ அவர்கள் சிறார்கள் சார்ந்து இயங்க வேண்டும் என்ற ஆர்வத்தில் தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர். சம்பத் நகர் நூலகத்தில், சென்ற கோடை விடுமுறையில் சிறார்களுக்கு தொடர் நிகழ்வுகளை தங்களது ஆர்வத்தால் நடத்தி இருக்கின்றனர். தொடர்ந்து வெவ்வேறு துறை சார்ந்து சிறப்பு விருந்தனர்களை அழைத்து வந்துள்ளனர். அப்படித் தான் பஞ்சு மிட்டாய் நிகழ்வும் அங்கு நடந்தது. அதன் வழியே நூலகம் சார்ந்து உரையாடவும் வாய்ப்புக் கிடைத்தது. தொடர்ந்து சிறார் உலகம் சார்ந்து இயங்கும் ஆர்வம் அங்கு கொட்டிகிடக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். ஈரோடு நண்பர்கள் அவசியம் சம்பத் நகர் நூலகத்திற்கு உங்கள் குழந்தைகளை அழைத்துச் செல்லுங்கள்.

குறிப்பு: ஈரோட்டை சுத்திக் காட்டிய சுட்டி சச்சினுக்கு பஞ்சு மிட்டாயின் அன்பு முத்தங்கள்.

ஈரோடு கதைக் களம்: நண்பர் வனிதாமணி அவர்களையும் அவரது பட்டாம்பூச்சி நூலகத்தையும் அங்கு நடக்கும் கதைக் களம் நிகழ்வையும் பார்க்க நீண்ட நாட்களாக திட்டமிட்டு தற்போது தான் அந்த வாய்ப்புக் கிடைத்தது. வீட்டின் ஒரு பகுதியில் அழகான நூலகத்தை அமைத்து அங்கு கதைகளையும் சொல்லி வருகிறார் வனிதாமணி அவர்கள். மகிழ்வும் குதூகலமும் நிறைந்ததாக உள்ளது பட்டாம்பூச்சி நூலகம். புத்தக வாசிப்பா? அதுவும் தமிழ் புத்தக வாசிப்பா? அது சாத்தியமில்லை என்று நம்பும் நண்பர்கள் கண்டிப்பாக பட்டாம்பூச்சி நூலகத்திற்கு ஒரு முறை சென்று வரவும். குழந்தைகள் அவர்களாகவே புத்தகங்களை எடுத்து புரட்டும் காட்சிகளை பார்ப்பதில் தான் எத்தனை பரவசம். நிகழ்விற்காக நாங்கள் தான் குழந்தைகளிடம் புத்தகங்களை கொஞ்ச நேரம் ஓரமாக வைக்கும்படி அன்புடன் கேட்டுக்கொண்டோம். 25-30 சிறார்களும் பெற்றோர்களும் சூழ பஞ்சு மிட்டாய் நிகழ்வு அங்கு நடந்தது. “டொக்கு” கதையை நான் சொன்னதிலிருந்து அங்குள்ள இரண்டு சிறார்கள் அடிக்கடி என்னிடம் வந்து “அந்த மந்திரத்தை மட்டும் இன்னொரு தடவை சொல்லுங்க” என்று கேட்டனர். அதிலும் ஒரு சிறுமி, நிகழ்வு முடிந்து கிளம்பும் போது கூட அந்த மந்திரத்தை என்னிடம் கேட்டாள், “வீடியோ கால்ல அப்பாவுக்க அந்த மந்திரத்தை சொல்லப் போறேன்” என்று சொல்லிவிட்டு வெட்கம் கலந்து சிரிப்புடன் கிளம்பினாள். நிகழ்வில் மூத்த சமூக ஆர்வலர் கந்தசாமி அவர்கள் மேஜிக் செய்து சிறுவர்களை அசத்தினார். அதேப் போல் நிகழ்வில் நண்பர் ஒருவர் “சின்ன குடம் பெரிய குடம்” என்ற விளையாட்டினை அறிமுகம் செய்தார். சிறார் நிகழ்வினை தொடர்ந்து பெற்றோர்களிடமும் சிறு உரையாடல் நடைப்பெற்றது. அழகிய சூழலை உருவாக்கி தொடர்ந்து பயணிக்கும் வனிதாமணி அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் சுட்டி மகிழுக்கும் பஞ்சு மிட்டாயின் அன்புகளும் நன்றிகளும்.

காயல்பட்டிணம்: நண்பர் இப்ராஹிம் தொடர்ந்து காயல்பட்டிணமான தனது ஊரில் புத்தகத் திருவிழா, சிறார் நிகழ்வுகள், பெற்றோருக்கான நிகழ்வுகள், இலக்கிய நிகழ்வுகள் என தொடர்ந்து ஆர்வத்துடன் இயங்கி வருபவர். அதேப் போல் குட்டி ஆகாயம் (சிலேட்டு இதழுடன்) தொடர்ந்து “குழந்தைகள் குறித்த உரையாடல்” நிகழ்வினை நிதானமாக பல்வேறு ஊர்களில் நடத்தி வருகிறது. இம்முறை குட்டி ஆகாயமும், கண்ணுமா முற்றமும் சேர்ந்து காயல்பட்டிணத்தில் “குழந்தைகள் குறித்த உரையாடல்” நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தார்கள். அத்துடன் சிறார்களுக்கான நிகழ்வையும் ஏற்பாடு செய்திருந்தார்கள். காயல்பட்டிணத்தில் நிகழ்வு என்றதும் திருச்செந்தூர் காஞ்சி ஸ்ரீ சங்கரா பள்ளியிலிருந்தும் சிறார்கள் சேர்ந்துக்கொண்டனர் ஆர்வத்துடன் தங்கள் பள்ளி சிறார்களை இதில் பங்கெடுக்க வைத்த பள்ளி முதல்வர் அவர்களுக்கு எங்களது நன்றிகள் . குட்டி ஆகாயம் மற்றும் பஞ்சு மிட்டாய் இதழ்கள் சேர்ந்து சிறார்களுக்கான நிகழ்வை நடத்தியது. சிறார்கள் ஆர்வத்துடனும் அதே நேரம் எந்தவித தயக்கமுமின்றி உரையாடி, கதைகள் பேசி, விளையாடி, ஓவியங்கள் வரைந்து நிகழ்வினை சிறப்பித்தனர்.

அதனைத் தொடர்ந்து முழு நாள் நிகழ்வாக குட்டி ஆகாயம், சிலேட்டு இதழ் சார்பாக குழந்தைகள் குறித்த உரையாடல் நிகழ்வு நடந்தது. முற்றிலும் புதுமையான சூழலில் மிக ஆர்வத்துடன் பெற்றோர்களும் ஆசிரியர்களும் நிகழ்விற்கு புது வடிவம் கொடுத்தனர். நண்பர் வெங்கட் மற்றும் கதிரவன் அவர்களின் தொடர் பயணங்கள் நிகழ்விற்கு அழகான‌ வடிவத்தை கொடுத்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். நிகழ்வில் தோழர் மதியழகன் அவர்கள் கதைகள் பேசி, கோமாளியாக வந்து அரங்கை மகிழ்ச்சியில் அதிர செய்தார். ஆசிரியராகவும் பெற்றோராகவும் பல கேள்விகள் எழுந்தது. அதற்கு அனுபவங்கள் வழியாகவும் ஜான் ஹோல்ட் அவர்களின் புத்தகத்தின் வழியாகவும் உரையாடினோம். நிகழ்வில் ஒரு பகுதியாக நடைப்பெற்ற புத்தகக் காட்சியில் ஜான் ஹோல்ட்டை நிறைய நண்பர்கள் விசாரித்தனர்.

தொடர்ந்து பல பெற்றோர்களையும் ஆசிரியர்களையும் சந்தித்து வரும் குழந்தைகள் குறித்த உரையாடல் மென்மேலும் பல பயணங்களை மேற்கொள்ள வாழ்த்துக்கள். நிகழ்வினை அழகாக ஏற்பாடு செய்த காயல்பட்டிண நண்பர்கள் இப்ராஹிம்,சாலை பஷீர், அப்பாஸ் அவர்களுக்கு அன்புகள். (குறிப்பாக எங்களுக்கு புதுவிதமாக உணவுகளை அறிமுகம் செய்த நல் உள்ளங்களுக்கு நன்றிகள்).

பெங்களூர்: நீண்ட இடைவெளிக்கு பிறகு பெங்களூர் துபாரஹள்ளி பகுதியில் வழக்கமான பஞ்சு மிட்டாய் நிகழ்வுகள் புதுப் பொலிவுடன் துவங்கியது. ஆம், விளையாட்டுகளுடன் துவங்கியது. எங்கள் பகுதிக்கு அருகில் வசிக்கும் சில நண்பர்கள் வந்து கலந்துக்கொண்டது மிகவும் உற்சாகமாக இருந்தது. நிகழ்வில் எண்களை வைத்து விளையாடும் பஸ் விளையாட்டு, நான்கு சிறார்கள் சேர்ந்து விளையாடும் சேசே நோட்டு விளையாட்டு மற்றும் சில்லு விளையாட்டும் விளையாடி மகிழ்ந்தோம். நடுவே கதைகளும் பேசினோம், கதைகள் பேசும் போது நடுநடுவே சிறார்கள் எதார்த்தமான பல்வேறு கேள்விகளை கேட்டு அசத்தினார்கள். இதற்கு முன்பு எங்கள் நிகழ்வில் மற்ற குழந்தைகளுடன் பழகாத குழந்தைகளும் இம்முறை மிகவும் உற்சாகத்துடன் அனைவருடன் பேசியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. தொடர்ந்து ஒரே பகுதியில் நிகழ்வை நடத்திட வேண்டிய அவசியத்தையும் உணர்த்துவதாக அமைந்தது. அதேப் போல் “சில்லு விளையாடலாம்” என்றதும் கூட இருந்த நண்பர்களுடன் விளையாட்டு பற்றிய உரையாடல் நடத்தினோம். ஆனால், அங்கிருந்த நண்பர்களுக்கு சில்லு விளையாட்டு பற்றிய சிறுசிறு ஞாபகங்கள் மட்டுமே இருந்தது தவிர விளையாட்டை முழுவதுமாக யாராலும் நினைவு கூற முடியவில்லை. விளையாட்டினை நாம் தொலைத்துக் கொண்டிருக்கிறோம் என்ற உணர்வினை மெய்பிக்கும் வகையிலே இது அமைகிறது. இன்றைய பெற்றோர்கள் அனைவரும் விளையாண்ட ஒரு விளையாட்டு அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படாமல், அப்படியே மறைய துவங்குகிறது (குறிப்பாக நகரங்களில்). அதேப் போல் விளையாட்டை குழந்தைகள் எவ்வாறு அனுபவிக்கின்றனர், விளையாடும் போது அவர்களது உடல் சார்ந்த விசயங்களையும் கவனிக்க முடிந்தது. விளையாட்டினை அறிமுகம் செய்வதோடு கடமை முடிந்துவிடவில்லை,அதனை முழுமையாக எடுத்த செல்ல வேண்டிய அவசியமும் இன்றைய பெற்றோர்களுக்கு உண்டு என்ற உணர்வே நிகழ்வின் முடிவில் மனதில் தங்கியது.

பஞ்சு மிட்டாய் தனது 100வது நிகழ்வை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. 100வது நிகழ்வை பெங்களூரில் சிறப்பாக கொண்டாட திட்டமிட்டுக்கொண்டிருக்கிறோம். விரைவில் அதற்கான விபரங்களை அறிவிக்கிறோம்.

Leave a comment