மான்ஸ்டர் எலியும் தமிழ் சினிமாவும் – சம்பத் குமார்

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

கடந்த வாரத்தில் மான்ஸ்டர் திரைப்படம் பார்த்த அனுபவம் எனக்குச் சற்றே புதுமையானது. கோடை வெயிலின் உக்கிரம் தனிந்த ஒரு இரவு வேளையில் குடும்பத்துடன் திரைப்படத்திற்கு சென்றிருந்தேன். திருப்பூரின் பிரதானமான திரையரங்கில் அதிலும் படம் வெளியாகி ஒருவாரம் மட்டுமே ஆகியுள்ள நிலையில் அதிகமான கூட்டத்தை எதிர் நோக்கித்தான் சென்றிருந்தேன்.
எனது எண்ணத்திற்கு மாறாகவே அங்கு சூழல் நிலவியது. திரைப்படம் பார்க்கச் சென்ற சூழல் இப்படிப்பட்டதாக இருந்தாலும் திரைப்படம் எல்லோருக்கும் நிறைவு தரக்கூடிய வகையிலேயே அமைந்திருந்தது. வள்ளலார் அவர்கள் இப்படியான திரைப்படத்தின் வழியே எனது குழந்தைகளுக்கு அறிமுகமாவார் என நான் எதிர்பார்க்கவே இல்லை. கூடவே எலி என்கிற எளிய உயிரோடு இரண்டு மணி நேரம் உறவாடியது எனது குழந்தைகள் உள்ளிட்ட அனைவருக்கும் மகிழ்ச்சியை தரக்கூடிய அனுபவமாக இருந்தது.

ஆண் பெண் உறவு குறித்து பெற்றோராக முறையான உரையாடலை கூட செய்து விடாத நான், தொலைக்காட்சி வழியாகவும் பிரபலமான திரைப்படங்களின் வழியாகவும் காதல், கல்யாணம், கணவன் மனைவி சிக்கல் குறித்தெல்லாம் எனது குழந்தைகள் அறிமுகமாகி வருவது குறித்து குழப்பமடைவது உண்டு. ஆயினும் இவ்வகையான ஊடகங்களிலிருந்து குழந்தைகளை முற்றிலும் புறக்கணிக்க முடிவதில்லையே என்கிற ஆதங்கம் மட்டும் எனக்கு உண்டு. இப்படத்திலும் அப்படியான காட்சிகள் இருக்குமோ என்கிற எனக்கிருந்த அச்சம் படம் பார்க்கும் போது அவ்வளவு இல்லை.அச்சத்திற்கு காரணம் இப்படத்தில் நடித்திருக்கும் கதாநாயகரின் முந்தைய படங்கள் அப்படி. எனது நண்பர் இப்படத்தை பார்க்கச் செல்லாததற்கு சொன்ன காரணமும் இவ்வாறே இருந்தது.

பெரியவர்களுக்கான சிரமங்கள் இப்படி பல இருந்தாலும் குழந்தைகள் படத்தில் எலி கதாப்பாத்திரம் வரக்கூடிய காட்சிகளுக்காகவே அதிகம் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். எலி சிறிய துளையின் வழியே வருவதும் போவதுமாக இருக்கும் காட்சிகள், சமையலறையில் நடத்தும் களேபரங்கள், குப்பைக்கிடங்கிலிருந்து மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரும் காட்சிகள் என அனைத்தும் அவர்களுக்கும் எலிக்கும் இடையே சிறிய பினைப்பை ஏற்படுத்திவிடுகிறது. எலிப்பொறியில் சிக்கிய எலியை தண்ணீர் வழியில் மூழ்கடிக்கும் போது குழந்தைகள் எனது கையிரண்டை கட்டிக் கொண்டு கண்ணை மூடிக் கொண்டனர். இந்தக் காட்சியைத் தவிர பிறகெப்போதும் ஒருவித புன்சிரிப்போடே காட்சிகளை கடந்து சென்றனர். “எவ்வுயிரும் தம்முயிர் போல் என்றெண்ணி” என்கிற நீதியை படத்தின் வழியே நாம் உணர தலைப்பட்டாலும் அதுகுறித்தெல்லாம் சிந்தனையின்றி குழந்தையாக மட்டுமே இருந்து மகிழச்சியாக படத்தை பார்த்து திரும்பவும் வாய்ப்புள்ள படமாக இது அமைகிறது.

ஆக குழந்தைகள் அவர்களுக்குரிய மனநிலையில் இருந்து பார்ப்பதற்குரிய படமாக இருந்தாலும் இதனை தமிழில் வந்துள்ள குழந்தைகளுக்கான படமாக கருத முடியுமா எனத் தெரியவில்லை. கதாநாயகன் எலியின் காரணமாக அடையும் சிரமங்களை சற்றே மெல்லிய நகைச்சுவையோடு சொல்ல முயற்சிக்கிற படமாக இது அமைகிறது. மேலைநாடுகளில் இருந்து நமக்கு காணக்கிடைக்கிற திரைப்படங்கள் சொல்லும் குழந்தைகளின் உளவியலை, அவர்களின் அகவுலக பிரதிபலிப்புகளை, குழந்தைகளிடம் இயல்பாக வெளிப்படும் மனிதநேயக்கூறுகளை சம்ப்படுத்தும்படியான திரைப்படமாகவெல்லாம் இதனை நாம் கருத முடியாது. ஆனால் தமிழ் திரைப்படவுலகம் குழந்தைகளையும் உள்ளடக்கிய சமூகத்திற்கான திரைப்படங்களை உருவாக்க முனையும் முன்னகர்வாக இப்படத்தைக் கருதலாம்.

காரணமென்னவென்றால் நமது சூழலில் குழந்தைகள், திரைப்படத்திற்கான விளம்பர உத்தியாகவே  பயன்படுத்தப்படுகின்றனர். மற்றபடி இங்கு குழந்தைகளுக்கான திரைப்படம் என்பது குழந்தைகளைக் கவரும்படியான குரலொலிப்பு உள்ள பாடல்கள், குழந்தைகள் மத்தியிலான நடனக்காட்சி, துள்ளலான சண்டைக் காட்சிகள் கொண்ட பெரிய நடிகர்களின் படங்கள்; மிகை உணர்ச்சி கொண்ட அறிவியல், வலாற்றுப் புனைவுகளை
அடிப்படையாகக் கொண்டவை; முற்றிலும் குழந்தைகளுக்கான படமாக உருவாக்கி அதன் வழியே அவர்களுக்கே அறக் கருத்துகளை போதிப்பது என ஒருசில வரையறைகளுக்குள் அடங்கி விடுகிறது. வணிகரீதியான வெற்றியை மட்டும் எதிர்நோக்கியுள்ள நமது திரைப்பட உலகிற்கு கிடைத்துள்ள நான்காவது வரப்பிரசாதம் விதவிதமான பேய்களை களமிறக்கும் மூடநம்பிக்கைகளைக் களமாகக் கொண்ட திரைப்படங்கள். கடவுளின் இருப்பு குறித்து குழந்தைகள் தம் மனதில் கேள்விகளை உருவாக்கி பதில் தேடும் முன்பே இப்படியான படங்கள் பேய்களின் வழியே கடவுளின் இருப்பை அவர்களின் மனதில் உறுதியாக்கிவிடுகின்றன. இத்தன்மையான திரைப்படங்களே குழந்தைகளுக்கான திரைப்படமாக தமிழ் திரைப்பட உலகில் அறியப்படுகிறது. இப்படியான திரைப்படங்கள் திரையிடப்பட்ட நாட்களில் அரங்கு நிறைந்ததாக திரையரங்குகள் மாறிவிடுவதை நாம் நம் நினைவில் கொண்டு வர வேண்டும்.

மான்ஸ்டர் திரைப்படமானது குழந்தைகளுக்கான திரைப்படமாக பெரியளவில் விளம்பரப்படுத்தப்படாமல் வெளிவந்துள்ளது. ஆயினும் எல்லாத்தரப்பு மக்களும் எவ்வித ஆபாசமான முகச்சுளிப்புகளுக்கும் உள்ளாகாமல் நிறைவாகப் பார்க்கும்படியாக இப்படம் அமைந்துள்ளது மகிழ்வானது. இந்த மாதிரியான திரைப்படங்கள் தான் நல்ல திரைப்பட அனுபவத்திற்காக திரையரங்குகளை நாடிவரும் குடும்பத்தினர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும். தணிக்கைத் துறை போன்ற கண்காணிப்புக் குழுக்கள் இருந்த போதும் கூட அவை குழந்தைகள் குறித்து என்ன பார்வையை கொண்டிருக்கின்றன எனத் தெரியவில்லை. சண்டைக் காட்சி போன்ற வெளிப்படையான வன்முறைகளைக் கடந்தும் கூட குழந்தைகளோடு சேர்ந்து அமர்ந்து ரசிக்கும் திரைப்படங்களில் நுண்ணியதாகவும் வெளிப்படையாகவும் எத்தனையெத்தனை நெறிபிறழ்வான காட்சிகள் அமைகின்றன. இப்படியான சீரழிவுகளை மனதில் கொண்டு பார்த்தால் மான்ஸ்டர் படத்திற்கான நமது வரவேற்பு குழந்தைகளையும் கருத்தில் கொண்டு படமெடுக்கும் சூழலை தமிழ் திரைப்பட இயக்குநர்கள் மத்தியில் உருவாக்கும். ஆரோக்கியமான மாற்றங்களை எதிர்நோக்கும் நமக்கான சூழலில் இருந்து முழுக்க முழுக்க குழந்தைகளுக்கான திரைப்படங்களை நோக்கி நாம் நகர மான்ஸ்டர் மாதிரியான திரைப்படம் ஒரு நல்ல வாய்ப்பைத் தருகிறது என நான் நம்புகிறேன்.

1 Comment

Leave a comment