அரும்பு மொழி செயலி அறிமுகம்

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

ஆட்டிசம் குறித்து தொடர்ந்து உரையாடியும், எழுதியும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் செயல்பாட்டளர்களில் முக்கியமானவர்கள் யெஸ்.பாலபாரதி & லஷ்மி அவர்கள். ஆட்டிசம், டிஸ்லெக்ஸியா, ADHD போன்ற குறைபாடுகள் பற்றிய விழிப்புணர்வை பரவலாக்கும் நோக்கத்தில் “அரும்பு” என்ற‌ அறக்கட்டளையை துவங்கியுள்ளனர். அரும்பு அறக்கட்டளை – குறும்படங்கள், பிரசுரங்கள், ஆவணப்படம் என்று பல தரப்பட்ட தளத்திலும் ஆட்டிசம் குறைபாடு பற்றிய விழிப்புணர்வை பரவலாக்கவும், ஆட்டிசம் குறித்த செய்திகளை ஆவணப்படுத்தவும் தொடங்கப்பட்டுள்ளது.
ஆட்டிசம், டிஸ்லெக்ஸியா என்படும் கற்றல்குறைபாடு, டவுன்சின்ரோம், ADHD என குழந்தைகளின் வளர்ச்சியில் பாதிப்புக்கு உள்ளாக்கும் குறைபாடுகள் பற்றிய விழிப்புணர்வையும் சேர்த்து அரும்பு செய்யும். எதிர்காலத்திட்டமாக இச்சிறார்களை ஆரம்ப நிலையில் அடையாளம் காண்பதற்கான பயிற்சி மையம், சிறப்புப்பள்ளி, தெரபி வகுப்புகளுக்கான மையங்கள் போன்றவைகளும் தொடங்குப்படும் என்கிறது அரும்பு.

தொழிநுட்ப வளர்ச்சியில் எண்ண‌ற்ற மாற்றங்களை செயலிகள் மூலம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். ஒரு பக்கம் உணவு, போக்குவரத்து, மளிகை பொருட்கள் வாங்குவது துவங்கி மருத்துவமனைகளி தங்களது மருத்துவர்களுடன் உரையாட கூட செயலிகளை உருவாக்கி சாதாரண மக்களை கூட உபயோகப்படுத்த வைத்திறக்கிறது. ஆனால் மறு பக்கம் இன்னும் சில அடிப்படை தேவைகளுக்கு கூட செயலிகள் இல்லாமல் தான் இருக்கிறது. வளர்ந்து மலைப் போல் நிற்கும் தொழிநுட்பம் ஆட்டிசநிலை குழந்தைகளுக்கு அடிப்படை தேவைகளை ஏற்படுத்தாமல் இருக்க , அதற்கான வேலைகளை அரும்பு அறக்கட்டளை துவங்கியுள்ளது. அதன் முதல் கட்டமாக கடந்த மார்ச் மாதம் “அரும்பு மொழி” என்ற செயலியை வெளியிட்டுள்ளது.

இந்தச் செயலி குறித்து யெஸ்.பாலபாரதி அவர்களின் வார்த்தைகளில் :

ஆட்டிசநிலைக் குழந்தைகளில் பலரால் பேச முடியாது. பேசுபவர்களிலும் பெரும்பாலானோர் முழுமையான வடிவில் பேசமாட்டார்கள். பெரும்பாலும் துண்டு துண்டான சொற்களையே சொல்லுவார்கள். அதன் மூலம் அவர்கள் என்ன சொல்லவருகிறார்கள் என்பதை எதிரில் இருப்பவர்கள் தான் புரிந்துகொள்ள வேண்டும். பல சமயங்களில் அந்த துண்டுவார்த்தைகளையும் புரிந்துகொள்ளாமல் கடந்துவிடுவோர் அதிகம். ஆட்டிசம் என்றில்லை, வேறுபல வகையான அறிவுசார் குறைபாடு உடையவர்களும் கூட சரளமான பேச்சுத் திறன் அற்றவர்களாகவே இருப்பர்.

தங்களுடைய எண்ணங்களை பகிரமுடியாமல் போவதின் காரணமாகவே சிறப்புத்தேவை உடைய இக்குழந்தைகள் சமூகத்தின் நடத்தை விதிகளை மீறுபவர்களாக இருக்கிறார்கள் என்று லக்ஷ்மி அடிக்கடி சொல்லுவார்.

இக்குழந்தைகள் தங்கள் எண்ணங்களை பகிர்ந்துகொள்ள ஒரு மொபைல் செயலியை ஏன் நாம் செய்யக்கூடாது என்று யோசித்தோம். அதுகுறித்த தேடலில் ஏற்கனவே சந்தையில் இருப்பனவற்றைப் பார்த்தோம். அதில் சில போதாமைகள் இருப்பதாக எங்களுக்குத்தோன்றியது. மேலும் (அதிக) விலைகொடுத்து வாங்கவேண்டிய தேவையும் இருந்தது. எனவே பயனர்கள் பயன்படுத்த எளிமையானதாகவும் இருக்கவேண்டும், இலவசமாகவும் இருக்க வேண்டும் என்பதால் வேறு ஒரு புதிய மொபைல் செயலியை உருவாக்குவது என்று முடிவெடுத்தோம்.

துறைசார்ந்த சில நண்பர்களிடம் பேசினோம். அவர்கள் பெரியதாக ஆர்வமே காட்டவில்லை. இந்நிலையில் தான், எங்களின் ஆசை பற்றி பண்புடன் குழும நண்பர் தம்பி உதயனிடம் பேசினோம். அவர் தம்பி தமிழ்ச்செல்வனை அறிமுகப்படுத்தினார். அவரும் உற்சாகமாக ”செய்யலாம்ண்ணே” என்றார். அவரது அலுவலகத்தில், வெளியில் எங்கள் வீட்டில் என அடுத்தடுத்து பல்வேறு சந்திப்புகள், திட்டமிடல்கள் என்று நிதானமான வேகத்தில் செயலி உருவாகி வந்தது.

கடைசியாக, ‘அரும்புமொழி’செயலி ஒருவடிவம் பெற்றது. சின்னச்சின்ன சோதனைகளுக்குப் பின் வெளியே கொடுத்து, சோதித்துப் பார்க்கலாம் என்று முடிவெடுத்தோம். தொடர்பில் இருந்த 50க்கும் மேற்பட்ட பெற்றோரிடமும், பல நண்பர்களிடமும் சோதனைச் செய்யச்சொன்னோம். அவர்களிடம் இருந்து பெறப்பட்ட, கருத்துக்களையும் கவனத்தில் கொண்டு, சீர் செய்தோம்.

செயலியின் உள்ளே பயன்படுத்த சில படங்கள் தேவை என்றதும், ஐ2 ஸ்டூடியோ ஓனர் நண்பர் சரவணவேலிடம் தகவலைச்சொன்னோம். சிறப்பான படங்களை எடுத்துக்கொடுத்தார்.

இதில், மேலும் புதிய படங்களையும், அதுதொடர்பான ஒலிக்குறிப்புகளையும் சேர்க்க, நீக்க எடிட் செய்யவும் முடியும். எளிமையாகப் பயன்படுத்தக்கூடியது. எனவே அந்தந்தக் குழந்தையின் படங்களையே உள்ளிட்டுக் கொள்ள முடியும் என்பதால் குழந்தைகளுக்கும் ஆர்வம் கூடும். நிச்சயம் இச்செயலி சிறப்புக்குழந்தைகளுக்கும் அவர்தம் பெற்றோருக்கும் பயனுள்ளதாக இருக்குமென்றே நம்புகிறோம்.

சிறப்புக்குழந்தைகளின் தொடர்புத்துணைவன் ‘அரும்பு மொழி’ மொபைல் செயலி, பயன்பாட்டிற்கு தயாராக உள்ளது. விரைவில் இந்த செயலியின் அடுத்த version மற்றும் ஆப்பிளுக்கான செயலியும் வெளிவர இருக்கிறது.

வீடியோ வடிவில் சிறிய அறிமுகம்:

 

Leave a comment