பஞ்சு மிட்டாய் 150வது பதிவு – சம்பத் குமார்

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

எனது குழந்தைகளுடன் பொது இடங்களுக்கு குறிப்பாக கடைகளுக்கு வணிக வளாகங்களுக்கு சென்று வருவது எனக்கு தனி அனுபவமாக இருக்கும். அப்பா உடன் இருக்கிறார் என்கிற காரணத்தால் இம்மாதிரியான இடங்களில் எனது குழந்தைகளின் உற்சாகம் அளவு கடந்து செல்வதை கவனித்திருக்கிறேன். அவர்களை மேலும் உற்சாகமூட்டி விளையாடச் செய்வதில் எனக்கும் ஓர் ஆர்வம் உண்டு. ஆயினும் கடந்த சில மாதங்களாக அவர்களிடம் ஒரு மாற்றத்தை நான் காண்கிறேன்.

இரண்டு மகன்களில் சிறியவன் இப்படியான இடங்களில் வெகுவாக விளையாட்டு மனோபாவத்துடன் இருந்தவன். அவன் இப்போதெல்லாம் அந்த வணிக வளாகங்களில் பொருத்தப்பட்டிருக்கும் கேமராவினை கைகாட்டி “ஏய், இங்க கவனிங்க எல்லோரும் நம்மள பார்க்கறாங்க, அமைதியா இருங்க இல்லன்னா உங்கள புடிச்சுக் கொடுத்திடுவேன்” என்பதாக பாவனை செய்வதை கண்டு வருகிறேன். அப்படியான நேரங்களில் அவனுடன் நான் கூடுதலாக விளையாடுவேன் என்றாலும் அவனிடம் கேமராவை கண்டு அச்சப்படும் போக்கு எப்பொழுது இருந்து துவங்கியிருக்கும் என எண்ணிப் பார்க்கிறேன்.

அவன் பள்ளியில் சேர்ந்து ஒரு வருடமே ஆகியுள்ள நிலையில் அவனது பள்ளியில் புதிதாக வந்திறங்கிய கண்காணிப்பு கேமராவும் அது சார்ந்த ஆசிரியர்களின் பயமுறுத்தல்களும் அவனது ஒட்டுமொத்த குழந்தைப்பருவ மனோபாவத்தையும் சிதைத்து விடுவதை கண்டு என்ன செய்வதென்று தெரியாத சூழல் என்னைப் போன்றவர்களுக்கு ஏற்படுகிறது. அதே கேமராவைக் கைகாட்டி குழந்தைகளை அடக்கி ஒடுக்கி அழைத்துச் செல்லும் பெற்றோர்களும் இருக்கவே செய்கிறார்கள்.

ஒழுக்கம் என்கிற பெயரிலும், அறிவு என்கிற பெயரிலும் குழந்தைகள் அடக்கி ஒடுக்கப்படுகின்றனர். இயற்கையோடு இணைந்து இயல்பாக வளரும் திறன் பெற்ற குழந்தைகளின் வாழும் சுதந்திரம், விளையாட்டு தரும் மகிழ்ச்சி, கூடி உறவாடுவதில் உள்ள கல்வி என அனைத்தில் இருந்தும் துண்டிக்கப்பட்டு அவர்கள் தனித்தனி மனிதர்களாக வளரும் சூழலை உருவாக்குகிறது தனக்குத்தானே கடிவாளம் இட்டுக் கொண்ட சமூக அமைப்பு.

இதை மீற எத்தனிக்கும் பெற்றோர்களும் பெரியவர்களும் இந்த சமூகத்தில் இல்லாமல் இல்லை. அவர்கள் ஒவ்வொரு முறையும் குழந்தைகளுக்காக அவர்களின் சுதந்திரமான வாழ்வுமுறைக்காக கேள்வி எழுப்ப தயங்குவதும் இல்லை. இத்தகையவர்களின் குரலை மட்டுப்படுத்தவும் பலமிழக்கச் செய்யும்படியான வழிகளையும் எதிர்தரப்பினர் திறம்படவே செய்து வந்தாலும் அப்படியானவர்கள் வீட்டில், வெளியுலகில் நிகழ்த்தும் சின்னச்சின்ன கலகங்களே ஓரளவு குழந்தைகளுக்கு ஆதரவானதாக இருக்கிறது.

கல்வி என்ற பெயரில் அரசும் ஒழுக்கம், பண்பாடு என்ற பெயரில் சமூகமும் தொடர்ந்து குழந்தைகளின் மீதும் அவர்களின் செயல்பாடுகளின் மீதும் கொடுத்து வரும் மிகையான அழுத்தமே ஒரு கட்டத்தில் அதற்கெதிரான சிந்தனையை அனைவரிடத்திலும் தூண்டிவிடுகிறது. இப்படியான தூண்டலுக்கு உள்ளானவர்கள் சேர்ந்து சிந்திக்கவும் செயல்படவும் நல்ல ஆரோக்கியமான சமூகத்தை படைக்கவுமே “பஞ்சுமிட்டாய்” போன்ற அமைப்புகள் துளிர்க்கத் தொடங்கி இருக்கின்றது.

எனது மகனின் கேமரா குறித்த அச்சம் போலவே சிலருக்கு வகுப்பறையில், வேறுசிலருக்கு ஆசிரியரின் சொற்களில், இன்னும் சிலருக்கு மதிப்பெண்களில் என சிறார்களை அச்சம் துரத்திக் கொண்டே இருக்கிறது. பெற்றோர்களாக அவர்களின் வாழ்விற்கு நம்பிக்கை அளிக்க, மாற்று வழிகள் குறித்து உரையாடிப் பார்க்க என்னை போன்றவர்களுக்கு ஆதரவாக இருப்பது “ பஞ்சு மிட்டாய்” இணைய இதழ் தான். இங்கு உதிரிகளாய் சிதறி சின்னக் குரலாய் கேள்வி எழுப்பி கொண்டிருந்தவர்கள் இன்னும் அழுத்தமாக பேசவும் கற்றுக் கொள்ளவும் “பஞ்சு மிட்டாய்” இணையதளம் நல்லதொரு வாய்ப்பை உருவாக்கித் தருகிறது. அது மட்டுமின்றி குழந்தைகள் குறித்த ஆக்கபூர்வமான அனைத்து பதிவுகளும் ஒரே இடத்தில் ஆவணப்படுத்தப்படுவதும் ஒரு சேர நடைபெறும் நல்ல முயற்சி எனலாம்.

பஞ்சு மிட்டாய் இணையதளம் புதியவர்களுக்கும் வாய்ப்பளித்து தொடர்ச்சியாக செயல்படுவதற்கும் தூண்டுகோலாக அமைகிறது. இணையத்தின் உள்ளடக்கத்தில் வாசிப்பவர்களின் வசதிக்காக மூன்று பிரிவாக இருந்தாலும் குழந்தைகளின் அகம், புறம், கல்வி, அரசியல், மருத்துவம், பாலியல் என எல்லாத்தளங்களிலும் தனது பார்வையை செலுத்துகிறது என்றே சொல்லலாம். நான் அறிந்தவகையில் குழந்தைகளுக்கான திரைப்படங்கள் குறித்த பதிவுமட்டும் இதுவரை ஏதும் வரவில்லை என்று கருதுகிறேன். மற்றபடி தகுந்த வேளையில் சரியான நபர்களைக் கொண்டு சமூகத்திற்கு சரியான சிந்தனையை கொண்டு சேர்ப்பதில் சோர்வின்றி ஆசிரியர் குழு செயல்படுவது பாராட்டிற்குரியது. இன்னும் பல புதிய முயற்சிகளோடு தொடர்ந்து திறம்பட செயல்பட ஊக்கமும் சக்தியும் வஞ்சமும் சூதும் அறியா குழந்தைகளின் மலர்ந்த முகமே நமக்கு தரும். இந்த 150 பதிவை அடுத்ததொரு தொடக்கமாகக் கொண்டு இனிதே பயணிக்கட்டும் “பஞ்சு மிட்டாய்” இணைய இதழ் கூடுதல்
செழிப்போடு.

1 Comment

Leave a comment