முகமூடியில்லாக் குழந்தைகள் – பாஸ்கர் ஆறுமுகம்

வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

குழந்தைகள் முகத்தில் உள்ள உயிர்ப்பை, அதன் அருகாமையில் இருக்கும்போது பெறப்படும் வாசத்தை உங்களால் பெயரிட்டு விளக்கிவிட முடியுமா? எவ்வளவு முயற்சித்தாலும் குழந்தைத் தன்மையை வார்த்தைகளால் வடித்துவிட முடியாத இன்ப அலைகளாக இருக்கிறது. அந்த நறுமணத்தை, உயிராற்றலை சிறிது சிறிதாக கரைக்கும் முயற்சியில்தான் இந்த ஒட்டு மொத்த சமுதாயமும் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

ஏதோ ஒரு முகமூடி அணிய வேண்டும் டாக்டரோ, பொறியியலாளரோ, ஜனாதிபதியோ ஏதோ ஒன்று தேவைப்படுகிறது. தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள. இந்த குழந்தையின் உயிர்த்தன்மையை மூழ்கடித்து யாரோ ஒரு நபருக்கான சாயலை, வண்ணத்தைப் பூசிகிறோம். தனக்கே உரித்தான மகரந்தத்தை கொண்டுள்ள, மிகவும் பலவீனமான நிலையில் இருக்கும் பச்சிளம் பிள்ளைகளை நசுக்கிக் கொண்டிருக்கிறது வீடும், சமூகமும். அடுக்கான சட்டதிட்டங்களை வளரும் பருவத்திலேயே அதன் முதுகில் ஏற்றி, என்றுமே நிமிர்ந்து நிற்க திராணியற்ற, முதுகெலும்பற்ற ஜீவனாக நம்மைப்போலவே மாற்றிவிடும் செயலில்தான் நாம் முனைப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். அதன் விளைவுகளே சமூகத்தில் பெரும் பொறுப்பும் வழிநடத்திச் செல்ல வேண்டிய மக்கள் பிரதிநிதிகள் கூட தங்கள் சுயத்தை இழந்து கூனிக் குறுகி கும்பிடுபோட்டுக் கொண்டிருக்கிறார்கள். யார் ஏற்றி வைத்த சுமையோ இன்றும் கூட அவர்கள் நிமிர்ந்து நிற்க இயலவில்லை.

புதிதாகப் பூத்த குழந்தைகளுக்கு கடந்தகாலம் இல்லை. விதி என்பது கூட போலியான ஒன்றாகத்தான் குழந்தைகள் மண்ணிற்கு வருகின்றனர். ஆனால் நம் கடந்த காலத்தை அவர்கள் மீது வைத்து நாம் சவாரி செய்ய தொடங்குகிறோம். சிலுவை சுமக்கும் ஏசுகளும், மகாத்மாக்களும் நாமாக இருந்துவிடக் கூடாது யாரோ ஒருவர் இருந்து சமூகத்தின் அழுத்தத்தையும் வேதனைகளையும் சுமந்து செல்ல வேண்டும் அதனை இலட்சியமாக குழந்தைகள் மனதில் பதியவிட்டு ஒட்டப்பந்தயம் நடத்துவது என்பது பெரும் கட்டாயமாக இருந்து செயல்பட்டு வருகிறது இக்கால கல்விச் சூழல்.

ஒரு விறகுவெட்டி மதிய வேளையில் இளைப்பாற இடம் தேடுவதுபோல தேடுகிறார்கள் பள்ளிக் குழந்தைகள். தனியார் பள்ளி வாசலில் ஒரு அரை மணிநேரம் காலையும், மாலையும் நின்றால் போதும் எத்தகைய வெறுப்பும், சோகமும், சலிப்பும் கொண்டு உள்ளே நுழைகிறார்கள், வெளியே வரும்போது நீண்டநாள் பறக்கத் தெரிந்த பறவைபோல பள்ளியை விட்டு வெளியே ஓடிவருவதைக் காணமுடியும். எதிர்காலத்தை கணக்காகக் கொண்டு அவர்களின் நிகழ்காலத்தை நிர்மூலமாக்கி வருகிறோம். அமைப்புகள்தான் இப்படியென்றால் வீட்டிலோ இதைவிட பன்மடங்கு அழுத்தத்தையும், நெருக்கடியையும் திணிக்கும் சொந்தங்கள், யாரோ ஒருவராக வாழவேண்டும் தனக்கே உரிய பாதையை கனவுகளை குழந்தைகள் வகுத்துவிட முடியாதபடி சங்கிலியால் பிணைத்து வைத்திருக்கிறோம். அதற்கும் நல்ல பெயரும் வைத்திருக்கிறோம் அக்கறை, அன்பு, பாசம் என்றல்லாம்.

உண்மையான அன்பு சுதந்திரத்தை வழங்கும், தனக்கே உரியவாழ்வை தேர்ந்தெடுக்கும் சூழலை மட்டுமே ஏற்படுத்தி கொடுக்கும். இப்படியாக சிதந்திரமற்ற அன்பு திணிக்கப்பட்ட பாசம் நாளடைவில் திருமணத்திற்கு பின்பும் அன்பு, பாசம் என்ற பெயரில் அடக்குமுறைகள் செய்வதைக் கண்கூடாக காணமுடியும். எங்கிருந்தோ வந்ததல்ல இந்த குணம். அன்பு என்றால் கட்டாயப்படுத்தியாவது எதையாவது செய்து கொண்டே இருக்க வேண்டும் என்று நம் மனதில் பதிந்துள்ளது. நான் கஷ்டப்பட்டு, நான் துன்பப்பட்டு, நான் என் ஆசைகளை துறந்து, “நான்” என் கனவுகளை மறந்து இப்படியாக பல “நான்”களின் கலவையால் எதிரே இருப்பவரின் வாழ்வை கொஞ்சம் கொஞ்சமாக சிதைத்து விடுகிறோம். சரி அது போகட்டும் இந்த உலகத்தில் பணம், அந்தஸ்து, சொத்து, சுகம் இல்லாமல் வாழ்ந்துவிட முடியுமா என்று கேள்வி கேட்கலாம். இங்கே பணம், இன்பம், சுகம் போன்றவைகளுக்கு எதிரிகளாக மாறச் சொல்லவில்லை, மாறாக மருத்துவனாக வேண்டிய ஒருவனை பைலட்டாக மாற்ற விரும்புவதும், ஓவியராக விரும்பும் பெண்ணை செவிலியராக மாற்றுவதும் தான் தவறு என நினைக்கிறேன்.

சற்று சிந்தித்துப் பாருங்கள் ஒரு ஆண் ஓவியக் கலைஞனாக வாழவேண்டும் என தீர்மானிக்கிறான். அவனை கட்டாயம்மக மருத்துவராக்கி விட்டு, அவன் ஏதோ கனவுலகத்தில் அறுவை சிகிச்சையின் போது கத்தியை கொண்டு வயிற்றில் ஓவியம் வரைய தொடங்கினால் எப்படி இருக்கும். ஆழ்மனங்களில் கனவுகள் இப்படித்தான் சஞ்சரித்துக் கொண்டிருக்கின்றன. இந்த வரிகளைப் படிக்கும் போது மனதில் ஒரு கேள்வி எழும், இப்படியாக சமூகத்தையும், பெற்றோர்களையும் குறை கூறுவதனால் மட்டும் குழந்தைகளின் வாழ்வில் எவ்வாறு மாற்றம் ஏற்பட்டுவிடும்? இந்த நெருக்கடிகளில் இருந்து கழந்தைகளை, நம் எதிர்கால சந்ததிகளை மீட்டெடுக்க ஏதேனும் வழி இருக்கிறதா?

இந்த சிக்கல்கள் இயற்கையாக வந்தவை அல்ல மனிதன் ஏற்படுத்தியது. நாம் நிச்சயமாக ஒன்றை செய்ய முடியும் நாம் அனுபவித்த இன்னல்களை, நாம் இழந்த வாழ்வை அவர்கள் கண் முன்னே அனுபவப் பாடமாக கொண்டு வருவதுதான் இதற்கான தீர்வு. சுதந்திரம் பற்றிய விழிப்புணர்வை நாம் அவர்களுக்கு கொடுப்பது தான் தலையாய கடமை. சுதந்திரம் தான் அவர்களை சிந்திக்க வைக்கும். சுதந்திரமாக இருக்கும் நபர்கள் மரியாதைக்கு உரியவர்களாக இருப்பார்களே அன்றி, கீழ்ப்படிதலை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.ஆனால் நிறுவனங்களுக்கும் சமூகத்திற்கும் கீழ்ப்படியும் ஒருவனே தேவைப்படுகிறான். கீழ்படிதலில் இருந்து துளியேனும் அன்பு சாத்தியமா?

குழந்தையின் அறியாமை எங்கிருந்தோ பெறப்பட்டதல்ல. அதுதான் குழந்தையின் இயல்பு. கற்றறிந்த மேதைகளை விட குழந்தையின் அறியாமையை வார்த்தைகளை, தர்க்கங்கள் ,தத்துவங்கள், கோட்பாடுகள் மற்றும் அறிவிற்குரிய பேராசையும் அகந்தையும் கொண்டு முகமூடி இட்டு மறைந்துகொள்கிறான். ஒரு சிறு கீறல் போதும் அவன் உண்மை முகமும் இருள் நிறைந்த மனமும் சட்டென வெளிப்பட்டுவிடும். குழந்தைகள் இந்த உலகை உற்று ஆர்க்கின்றனர். அந்த பார்வையில் அறியாமையின் நீட்சி இருந்தாலும் இயற்கையோடு ஒத்திசையும் தன்மையிருக்கும். மூளையை நிறைத்து கொண்டவர்களோ கருத்தாளர்களாக மட்டு மில்லாமல் வழி காட்டியாகவும் உருமாறுகின்றனர்.

ஒரு குழந்தை தன் அம்மாவிடம் ‘எனக்கு விக்கல் வருகின்றது என சொல்லத் தெரியாமல் நான் தலைகீழாக இருமுகிறேன்’ என்று கூறும் போது எத்தனை உண்மை இருக்கின்றது. ஒரு நாள் தன் குழந்தையை மனோதத்துவரிடம் அழைத்து சென்ற அறிவின் உச்சியில் இருக்கும் தாய் ஒருவர், என் குழந்தைக்கு என்ன பிரச்சனை என்று கொஞ்சம் பாருங்களேன் சார் என்று கூறி குழந்தையை அவரிடம் விட்டு வெளியே வந்தார். கேள்விகள் தொடங்கியது.

டாக்டர்: உனக்கு காது சரியாக கேட்குமா?

குழந்தை: அதெல்லான் ஒன்னுமில்ல டாக்டர், எனக்கு காது கேட்பதில் பிரச்சனை இல்லை. நான் உற்று கவனிக்க முயல்கிறேன். வெறுமனே கேட்பதற்கும் கவனிப்பதற்கும் உள்ள வித்தியாசம், அறியாமையில் உள்ள குழந்தைக்கும் பெரியவர்களின் மூளைக்கும் எட்டாது.

ஒரு அதிகாரியின் குழந்தை அதிகாலை மூன்று மணிக்கும் எழுந்து தன் நாயுடன் நடனம் ஆடிக்கொண்டிருந்தாள், இதைப் பார்த்த அவளின் தந்தை பிசாசுக்கு பிறந்த மாதிரி இந்த நேரத்தில் எழுந்து ஆடிக்கிட்டு இருக்குனு சொல்ல, அந்த குழந்தை புன்னகைத்து நடனமாடிக்கொண்டு காலை வணக்கம் அப்பா என்றது. காலை வணக்கம் அப்பா என்ற ஒற்றை வரி கணவன் மனைவிக்கு இடியே யார் பிசாசு என்ற கேள்விக்கு பதில் தேடி பெரிய யுத்தம் நடந்தது. ஒரு ஆசிரியை இன்று கணக்குபாடம் கற்றுக்கொள்வோமா என வகுப்பை தொடங்கினார். ஒரு மாணவனிடம் உன் தந்தை மாதத்திற்கு ஐம்பதாயிரம் சம்பாதிக்கிறார் என்று வைத்துக் கொண்டு, வாடகை 7000, காப்பீடு 2000, கார் லோன் 6000, மளிகை 10000, பள்ளிக் கட்டணம் 3000, இதரச் செலவுகள் 1000, பெட்ரோல் டீசல் என்ற எரிபொருள் 3000 இவை அனைத்தையும் கணக்கிட்டு மீதி என்ன இருக்கும் என ஆசிரியர் கேட்ட அடுத்த நொடியே, “ஹார்ட் அட்டாக்” இருக்கும் என பதில் சொன்னான் மாணவன்.

இந்த எதார்த்த பதில்களில்தான் எத்தனை உண்மை இருக்கிறது. இதற்கு எவ்வளவு மனோதைரியமும் தெளிவும் வேண்டும். ஆனால் காலம் காலமாக அறியாமையை அழிப்பதற்கு எத்தனை எத்தனை யுக்திகள் கையாளப்படுகிறது. அறியாமை என்பது அடைய வேண்டிய ஒன்றல்ல, அது சுவாசத்தை போல, ஒரு குழந்தை பிறந்ததில் இருந்தே தன்னைச் சிற்றியுள்ள நைத்தையும் தானாகவே பார்க்கும்.நீங்கள் உற்று கவனித்தால்,பிறந்தது முதலே அந்த குழந்தை சிதறி கிடக்கும் அனைத்தையும் சேர்த்துக்கொண்டே இருப்பதை அறியலாம். அதன் கைகள் எப்பொழுதும் முழுமையையே தேடும். மணலை மேடாக்கி மலைகளாகச் செய்வதும், கூழாங்கற்களைக் கொண்டு குவியல்களை உருவாக்குவதும் மட்டுமல்ல சோடா மூடி, சிகரெட் அட்டை என அனைத்தையும் முழுமையின் வடிவமாகவே பார்ப்பது தான் இவர்களின் சேகரிப்பு செயல்களில் ஈடுபடச் செய்கிறது.

என் குழந்தையின் அறியாமையை எப்படி போக்குவது என்ற கேள்வியே பெரும்பாலான பெற்றோர்களின் கேள்வியாக இருக்கிறது. இந்த கேள்வியே அந்த சிசுவின் இயல்பிற்கு எதிராக செயல்பட வைக்கிறது. அந்த குழந்தையின் இயற்கை தன்மையில் இருக்கும் வீரியத்தை உணரத் தொடங்கினால் என் குழந்தைத்தன்மையும் மாறாமல் இருக்க நான் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வியே உங்கள் மனதில் எழும். இதே குழந்தைத்தன்மையை, குக்கிராமத்து திண்ணையில் அமர்ந்து இருக்கும் எண்பது வயது கடந்த ஒரு தம்பதியினர், காலை முதல் இரவு வரை அவர்கள் கடந்து செல்லும் ஆடு, மாடு, கோழி, மனிதர்கள், பேரப்பிள்ளையின் சிணுங்கல்கள் அனைத்தையும் ஒவ்வொரு நாளும் எதோ புதிய நிகழ்காலத்தில் இருக்கிறார்கள், தாத்தா பாட்டிகளோ நிகழ்காலத்தில் வாழ்பவர்கள், அதனால் தான் என்னவோ குழந்தைகளுக்கு தாத்தா பாட்டி என்றால் அவ்வளவு பிரியம், சக உயிரைப் போல சக நண்பர்களைப் போல நேசிக்கின்றனர்.

பெற்றோர்களோ அந்த பள்ளி ஸ்டேட் பஸ்ட் இந்த பள்ளி டிஸ்டிரிக் ரேங்க் , குழந்தைகள் வளரும் வேளையில் எந்த பொறியியல் மருத்துவக் கல்லூரி, அவன் பலட் இவன் டாக்டர் என இவர்கள் அடைய முடியாத ஆசைகளை கனவுகளை கற்பனைகளின் ஒட்டுமொத்த சுமையும் குழந்தைகள் மீது ஏற்றி சவாரி செய்கின்றனர். ஆனால் தாத்தா பாட்டியோ “செத்துப்போன ராசு கன்னுக்குட்டி என் கையை எப்படி நக்கும் தெரியுமா”, உன் அப்பா பதினாலு வயசு வரைக்கும் படுக்குற பாய்லையே மூத்திரம் போய்டுவான் தெரியுமா, என்ற உண்மைகளை அந்த குழந்தைகளோடு கதைப்பதனால் என்னவோ பேரங்களையும், தாத்தா பாட்டிகளையும் சேர விடுவதில்லை நாம். அறியமையும் உண்மையும் நாணயத்தின் இருவேறு பக்கங்கள் போல, உங்கள் குழந்தையை ஆசிரியர்கள், டாக்டர்கள், மனோதத்துவ நிபுணர்கள் மற்றும் கல்வியாளர்களிடம் விடுவதைக் காட்டிலும் படர்ந்து விரிந்த ஆலம் விழுதுகளான தாத்தா பாட்டியின் நிழலில் விளையாட, தலைசாய கற்றுக்கொள்ள விட்டுவிடுங்கள். கணிதம் அறிவியலை காட்டிலும் உண்மையும், இயற்கையும் உயிர்களை வாழ்நாள் முழுவதும் கைபிடித்துக் கூட்டிச் செல்லும்.

ங்ங்கா, சுச்சு,கக்கா,சர்,புஸ்ஸ்,டும்,டுமீல் போன்ற வார்த்தைகளைக் கொண்டு கட்டமைக்கப்பட்ட மழலை மொழி ஒன்று இருந்தது. யார் குழந்தைகளுக்கு இந்த வார்த்தைகளைச் சொல்லிக் கொடுத்தார்களெனத் தெரியவில்லை. அவர்களின் உள்ளிருப்பு சைகை மொழியில் சிலவற்றைக் கூறும் அவைகளைப் புரிந்து கொண்டு வழி நடத்தி வந்த பெற்றோர்களை, உறவினர்களைக் கொண்ட சமூகம் எல்லாவற்றுக்கும் மருத்துவர்களை உளவியலாளர்களை அணுகி பாடம் கற்கும் நிலைக்கு மாறிவிட்டோம். அவர்களோ புதுப்புது இலத்தீன் ,கிரேக்க மொழி கலந்த ஆங்கிலச் சொல்லைக் கொண்டு அந்த நோய் இந்த நோய் என குழந்தைகளைப் பிஞ்சிலேயே முடமாக்கி வாழ்நாள் வாடிக்கையாளர் பட்டியலில் இணைத்து விடுகின்றனர். உகாரணமாக நன்றாக ஓடி, ஆடி, பாடி சத்தமாக பேசும் குழந்தைகளை Hyper Active பிரிவில் இனைத்து மருத்துவம் வழங்கி வருகிறது நவீன (So called) அறிவியல், சுட்டிக் குழந்தை சூடு பட்ட பூனையாகி போகிறது. தன் உடற்கூறியலை நன்கு கவனித்து அதில் ஏற்படும் மாற்றங்களை சைகை அல்லது மழலை மொழியில் வெளிபடுத்தி கொண்டிருக்கும் குழந்தைகளை கவனிக்க மருத்து மூன்றாம் நபரின் ஏட்டுக் கல்வியை நம்பி எவ்வாறு நாம் செயல்படுகிறோம் என்பது அவலமான கேள்வி.

தொழிற் கூடங்களில் செய்தது போல அச்சுப் பிசகாத தன்மை கொண்ட இரண்டு குழந்தைகள் இதுவரை இல்லை. இனியும் இருக்கப் போவதில்லை. அப்படி இருக்க பொது புத்தியில் குழந்தைக்கான மொழியை கல்வியை வாழ்வியலை போதிக்கும் கல்வி, மருத்துவம் எவ்வாறு ஒரு ஆரோக்கியமான எதிர்கால சந்ததிகளை உருவாக்கும்.
குழந்தை மொழியைப் புரிந்துகொள்ளும் பெற்றோர்கள் சமூகம் தேவையாக இருக்கிறது. அது சைகையாக, நயனபாசையாக புரியாதவார்த்தைகளாக இருக்கலாம் ஆனால் அர்த்தம் பொதிந்த அந்த மொழியில் தான் அவர்களின் கல்வி, மருத்துவம் எதிகாலம் அடங்கி இருக்கிறது.

குழந்தைகளை தியானிப்பதே அவர்களை புரிந்துகொள்ள உதவும், அவர்களை புரிந்து கொள்வதே நாம் அவர்களுக்குச் செய்யும் ஆகச் சிறந்த நன்மை. தாய்மொழிக் கல்வி வாசிப்பதற்கும் நேசிப்பதற்கும் இணக்கமான மொழி அவரவர் தாய்மொழி தான். மற்ற மொழிகளை தனி நபர் விருப்பத்திற்கு ஏற்ப கற்றுக் கொள்ளலாம், ஆனால் கல்வியை பொருத்தவரை தாந் மொழி இனையான ஒன்று இல்லை, இருந்த போதிலும் அறிவியல் மற்றும் தொழிற்நுட்ப பாடங்களுக்கு தமிழில் சிறப்பான புத்தகங்களோ மொழிபெயர்ப்புகளோ இல்லாமல் போனதும் அவலம் தான். குறைந்தபட்சம் உயர்நிலை வரையிலும் குழந்தைகள் தாய்மொழிக் கல்வி சிறந்தது என்று பல ஆராய்ச்சிகளில் நிருபனமாகிய்ள்ளது. பெற்றோர்களின் மனதில் ஆங்கில மொழி என்பதை கடந்து ஆங்கிலம் தலையாய அறிவு என திட்டமிட்டு திணிக்கப்படுகிறது. சற்று ஆழமாக சிந்த்தித்தோமானால் வட்டார வழக்கில் கற்பிக்கும் ஆசிரியர்கள் குழந்தைகளுகு நெருக்கமாக இருக்கிறார்கள்.

குழந்தைகள் தினசரி வாழ்வில் கண்டும், கேட்டும் பழகும் மொழியில் தான் சிந்திக்கின்றனர். அவர்களின் சிந்தனையோட்டமும் அம்மொழியில் இருக்கிறது. ஆனால் நவீன காலத்தில் ஆங்கிலமோ, ஹிந்தியோ அல்லது வேற்று மொழியை கற்கும் குழந்தைகள் புத்திசாலியாக முன்னிருத்தும் கல்விக்கூடங்கள் அதை நாடும் பெற்றோர்களும் குழந்தைகளின் மனதிலும் ஆங்கில மோகத்தை வளர்க்கின்றனர். அந்த ஆசை பயமாக மாருவதை கண்டிருப்போம் அல்லது அனுபவித்து இருப்போம். வாழ்வதற்கு நாம் இருக்கும் மாநிலமோ, நாடோ அங்கே வழக்கத்தில் உள்ள மொழியை கற்றுக்கொடுக்கும். அது மட்டுமின்றி தாய்மொழி மூலம் பிற மொழிகளை கற்பது மிகவும் சுலபம். தம்முடைய ஆங்கில அறிவைக் காண்பிப்பதற்கு சரியான ஆங்கிலச் சொற்களை கண்டுபிடிப்பதில் தன் இயல்பான சிந்தனையோட்டத்தை ஏன் கொடுத்துக்கொள்ள வேண்டும்?
மொழி அறிவல்ல…… மொழி அறிவை அடையும் பாதை…… கருவி……

நன்றி : தாய்மொழிக் கல்விச் சிறப்பு மலர், தாய்த்தமிழ் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி, திருப்பூர். தங்களது கல்விச் சிறப்பு மலர் கட்டுரையை இணையத்தில் வெளியிட அனுமதி தந்த திரு.தங்கராசு அவர்களுக்கு பஞ்சு மிட்டாய் சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

Leave a comment