இரயில் வண்டி சிறார் இலக்கிய எழுத்தாளர்கள் சந்திப்பு – 1

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

வானம் பதிப்பகம் ஆரம்பித்து மூன்று ஆண்டுகள் ஆகின்றன. வானம் பதிப்பகத்தின் மூலமாக இதுவரை 50க்கும் மேற்பட்ட சிறார் புத்தகங்களை வெளியிட்டுள்ளோம். அவை புத்தக ஆர்வலர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், சிறார்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளன.குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையிலான புத்தகங்கள் பல அமைப்புகளின் விருதுகளை பெற்றுள்ளன. இதை சாத்தியமாக்கிய அனைவருக்கும் இத்தருணத்தில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

தற்சமயம் சிறார் இலக்கியத்தை பலரும் கவனிக்க ஆரம்பித்துள்ளனர். பெற்றோர்களும் பொருட்படுத்ததக்க வகையில் தங்கள் குழந்தைகளுக்கு புத்தகங்களை தேர்வு செய்து தருகிறார்கள். இந்நிலையில் நாம் சிறார் இலக்கியத்தினை இன்னும் மேம்படுத்தும் முயற்சியாக சிறார் இலக்கிய எழுத்தாளர்களின் சந்திப்பை அல்லது உரையாடலை திட்டமிடலாம் என்று அண்ணன் உதயசங்கள் உட்பட பலர் பல மாதங்களாக சொல்லிவந்தார்கள். அதனை நடைமுறைப்படுத்தும் முயற்சியில் ரயில்வண்டி சிறார் இலக்கிய அமைப்பும் வானம் பதிப்பகமும் சேர்ந்து ஓர் இலக்கிய சந்திப்பை நடத்த திட்டமிட்டோம்.

உதயசங்கரின் ஆலோசனையின்படி சமகால சிறார் எழுத்தாளர்களின் சந்திப்பை கடந்த ஏப்ரல் 7 ந்தேதி சென்னையில் நடந்தினோம். அதில் சுகுமாரன், உதயசங்கர், நீதிமணி, யெஸ்.பாலபாரதி, விஷ்ணுபுரம் சரவணன், விழியன், கன்னிக்கோவில் இராஜா, சரவணன் பார்த்தசாரதி, சரா சுப்ரமணியம், ஆதி வள்ளியப்பன், இனியன், மணிகண்டன், பிரபு ஆகியோர் கலந்து கொண்டனர். காலை 11 மணிமுதல் நடந்த உரையாடல் மாலை 6 மணி நீடித்தது. (மதியம் 2-3 உணவு இடைவேளை)

உரையாடலின் இறுதியில் சிறார் எழுத்தாளர்களுக்கான ஒரு பயிற்சிப் பட்டறையை சென்னையில் மே மாதம் இறுதியில் நடத்தலாம் என்று முடிவு செய்தோம். இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும். 7ந் தேதி நடந்த கூட்டம் முதல் கூட்டம் என்பதால் குறிப்பிட்ட நண்பர்களை மட்டுமே அழைத்திருந்தோம். இனி அடுத்தடுத்து நடக்கும் கூட்டங்களில் அனைவரும் கலந்து கொள்ளும் விதமாக வடிவமைக்கத் திட்டமிட்டுள்ளோம். இந்த கூட்டம் ஒரு முன்னெடுப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரின் உரையாடலில் தெரிந்தது.

கூட்டத்தில் கீழ்கண்ட விசயங்களை முன்வைத்தே உரையாடல் நிகழ்ந்தது.

அமர்வு 1

1. தமிழில் நாவல் இலக்கியம் தோன்றி நூறுஆண்டுகள் ஓடிவிட்டன. சிறுகதைக்கும் ஒரு நூற்றாண்டுக்கு மேலேயே வயது ஆகிவிட்டது. இவற்றுக்கெல்லாம் துல்லியமான வரலாற்று நூல்கள் வெளிவந்திருக்கின்றன. ஆனால், சிறார்களுக்கான இலக்கியம் குறித்தும், அதன் தோற்றம், வளர்ச்சி, குறித்தும் கால வரையறைகளுடன் துல்லியமான – ஆதாரப்பூர்வமான ஒரு வரலாறு எதுவும் எழுதப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. துண்டு துண்டாக சில நூல்களிலும், தனிக்கட்டுரைகளிலும், பழைய இதழ்களிலும் வெவ்வேறு தரவுகள் புதையுண்டு கிடக்கின்றன. அந்தத் தகவல்களை ஒருசேரத் தொகுத்து, ஆவணப்படுத்துவது அவசியத் தேவையான ஒரு பணியாகத் தோன்றுகிறது. கடந்த காலத்தின் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில், தமிழில் சற்றேறக்குறைய நானூறு பேர் சிறார் இலக்கிய எழுத்தாளர்களின் பட்டியலில் இடம்பெற்றிருப்பதாக ஒரு குறிப்பை வாசிக்க நேர்ந்தது. இவர்கள் அனைவரும் எழுதிய படைப்புகள் அத்தனையும் நூல்வடிவம் பெற்றிருக்குமா? அப்படி நூல்வடிவம் பெற்றவற்றுள் இன்றைக்கு எத்தனை புத்தகங்களை நாம் பார்க்கவாவது முடியும்?

2. ‘சிறார் இலக்கியம்’ என்று நாம் சொல்லும்போது, அதன் துல்லியமான வரையறை, பொருள் என்ன என்பதில் ஒருமித்த கருத்து எதுவும் தமிழ் இலக்கிய உலகில் உருவாகி நிலை பெற்றிருப்பதாகத் தெரியவில்லை. பொதுவாகக் கடந்த சில வருடங்களாக பல தமிழ் எழுத்தாளர்களின் கவனம் இந்தப் பக்கம் திரும்பியுள்ளது. நிறையப் புத்தகங்கள் இப்போது சிறார்களுக்கென வெளியாகின்றன. ஓரளவு நல்ல விற்பனையும் இருப்பதைக் காண முடிகிறது. எனவே இயல்பாகவே சிறார் இலக்கியம் பற்றிய விவாதங்களும் எழத்தொடங்கியுள்ளன. சமீபகாலமாக, குறிப்பாகக் கடந்த இரண்டு ஆண்டுகளுக்குள் தமிழில் சிறார் இலக்கியப் படைப்புகள் பற்றி எழுதப்பட்டுள்ள கட்டுரைகள், முன்னுரைகள், நேர்காணல்களின் பதில்கள், குறிப்புகள் போன்றவற்றில் இழையோடும் ஒற்றைத்தொனி இதுதான்: ‘தமிழில் இதுவரை வந்துள்ள சிறார் இலக்கியப் படைப்புகளை, கறாரான விமர்சனத் தராசில் இட்டு நிறுத்தால் பெரிதாக ஒன்றும் தேறாது’ என்பதுதான். இந்த விமரிசனங்களில் இருக்கிற உள்ளார்ந்த அக்கறையைப் புரிந்து கொண்டு தற்கால சிறார் இலக்கியத்தின் போதாமைகள் என்ன என்று உரையாடிப் பார்க்கலாம்.

3. தற்காலச் சிறார் இலக்கியம் காலத்தின் தேவைகளுக்கு முகம் கொடுத்திருக்கிறதா? அப்படிக் கொடுத்திருக்கிறது என்றால் என்னென்ன மாதிரி கொடுத்திருக்கிறது. அல்லது கொடுக்கவில்லை என்றால் ஏன்?

4. ஏராளமான நூல்கள், மலையாளத்திலிருந்தும் ஆங்கிலத்திலிருந்தும் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவருகின்றன. அவை தமிழ்ச் சிறார் இலக்கியத்தில் செலுத்துகிற பாதிப்பு என்ன?

5. மற்ற மொழிகளில் சிறார் இலக்கியத்தின் நிலை எப்படியிருக்கிறது.

அமர்வு 2

1. வயது வாரியான சிறார் இலக்கியம் குறித்து எழுதுகிறவர்களுக்குக் கவனம் இருக்கிறதா? அதற்கான தேவையை பதிப்பகங்கள் உணர்ந்திருக்கிறார்களா?

2. சிறார் இலக்கியத்தில் மொழிப்பயன்பாடு, நடை குறித்து வெவ்வேறு கருத்தோட்டங்கள் இருக்கலாம். ஆனால் சில பொதுவான வழிகாட்டுதல்கள் வேண்டாமா?

3. ஒவ்வொரு படைப்பிற்கு எடிட்டிங் தேவை என்பதை எழுத்தாளர்கள் உணர்ந்திருக்கிறார்களா?

4. சிறார் இலக்கியத்தில் சிறார்களுக்கான இலக்கியம், சிறார்களைப்பற்றி பெரியவர்களுக்கான இலக்கியம், சிறார்களே படைக்கும் இலக்கியம் என்று மூன்று வகைமைகளைப் பொதுவாகச் சொல்லலாம் என்றாலும் சிறார்களுக்கான இலக்கிய நூல்கள், சிறார்களைப் பற்றிய இலக்கிய நூல்கள் வெளிவந்திருக்கிற அளவுக்கு சிறார்கள் படைக்கும் இலக்கியம் வெளிவரவில்லை. அதற்கு சிறார் இலக்கிய எழுத்தாளர்கள், குழந்தை நலசெயல்பாட்டாளர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் இணைந்து செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் என்ன?

அமர்வு 3

1. பேய்கள், பிசாசுகள், பூதங்கள், அற்புத ஆற்றல்கள கொண்ட முனிவர்கள், ‘சுவாமி’கள், வினோதமான ஜந்துகள் – இப்படி பகுத்தறிவுக்கு முற்றிலும் புறம்பான பல பாத்திரங்கள் சர்வ சாதாரணமாக இன்றைய சிறார் இலக்கிய நூல்களில் உலா வருகின்றன. இது சரியா? இவற்றைக் குழந்தைகள் எப்படிப் புரிந்துகொள்வார்கள்? அவர்களின் உளவியலை இவை எப்படிப் பாதிக்கும்?

2. அறிவியலுக்கும் அதீதப்புனைவுக்கும் இடையிலான உறவு முரண்படாமல் படைப்புகள் வெளிவருகிறதா? அப்படி வெளிவருவதில் ஏதேனும் சிக்கல் இருக்கிறதா?

3. சிறார் இலக்கியத்தைப் பொறுத்தவரை பல்வேறு கருத்துக்கள் வலியுறுத்தப்படுகின்றன. முதலில் இப்படியான கருத்துக்களை பொருட்படுத்தக்கூடிய சூழல் உருவாகியிருப்பது மிக முக்கியம். சிறார் இலக்கியம் என்றாலே ஃபேண்டசியாகத்தான் இருக்க வேண்டும். ஃபேண்டசி இல்லாத கதைகளை குழந்தைகள் வாசிக்க மாட்டார்கள். சிறார் இலக்கியம் நம்பமுடியாதவற்றை நம்பச்சொல்கிற மாதிரி இருக்கக்கூடாது. அது அறிவியல் கண்ணோட்டத்தை வளர்க்கும் விதமாக இருக்க வேண்டும். அறிவியல் சிந்தனைகளை விதைக்க வேண்டும். சிறார் இலக்கியத்தில் நன்னெறிகளும், அறநெறிகளும் போதிக்கப்பட வேண்டும். சிறார் இலக்கியம் யதார்த்தத்தைப் பிரதிபலிக்க வேண்டும். யதார்த்தமான படைப்புகளின்வழி குழந்தைகள் வாழ்க்கையைப் புரிந்துகொள்ள ஏதுவாக இருக்க வேண்டும். இப்படிப் பல்வேறு கருத்தோட்டங்கள் இருந்தாலும் உலகச்சிறந்த சிறார் இலக்கியம் எல்லாம் பெரும்பாலும் ஃபேண்டசி என்று சொல்லப்படுகிற அதிமாயாஜாலக்கதைகளாக இருக்கின்றன. ஃபிரெஞ்ச் செவ்வியல் சிறார் இலக்கிய நூலான அந்து வான் எக்சுபரியின் ‘குட்டி இளவரசன்’ ஆக இருக்கட்டும் லூயி கரோலின் ‘ஆலிசின் அற்புத உலகம்’ ஆக இருக்கட்டும் அல்லது மற்ற நாடுகளின் சிறார் இலக்கியமாக இருக்கட்டும் பெரும்பாலும் ஃபேண்டசியாகவே இருக்கின்றன என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டியதிருக்கிறது.

4. சிறார் இலக்கிய வகைமைகளில் பாடல்கள், கதைப்பாடல்கள், நாடகங்கள், வாழ்க்கை வரலாற்று நூல்கள், இயற்கையியல் நூல்கள், இவற்றின் நிலை என்ன? இவற்றுக்கான இடம் என்ன?

அமர்வு 4

1. குழந்தைநல செயற்பாட்டாளர்களின் செயல்பாடுகளைப் பற்றிய எழுத்தாளர்களின் பார்வை என்ன?

2. சிறார்ப் படைப்பாளிகள் (கதை, பாடல், ஓவியம், விளையாட்டு, படைப்பூக்கச் செயல்பாடு) உருவாக என்ன விதமான திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும்?

3. சிறார்களின் வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்த இன்னும் செய்யவேண்டிய பணிகள் என்ன?

அமர்வு 5

1. சிறார் இலக்கியம், சிறார்ப் படைப்பாளி, குழந்தைகள் நலச் செயற்பாட்டாளர், சிறார் இலக்கிய மொழிபெயர்ப்பு, இவற்றுக்கான விருதுகளைத் தனித்தனியே காத்திரமாக வழங்கும் சுதந்திரமான நிறுவனம் அல்லது நிறுவனங்களைக் கண்டறிதல் குறித்து.

2. சிறார் இலக்கியப் பத்திரிகைகளின் இன்றைய நிலை என்ன?

  1. பெரும் வணிகப்பத்திரிகைகள்,
  2. சிறு பத்திரிகைகள். இவை பற்றிய நம்முடைய பார்வை என்ன?

3. சிறார் இலக்கியத்தில் ஓவியங்களைப் பற்றி ஓவியர்களைப் பற்றி நம்முடைய கருத்து என்ன?

4. சிறார் இலக்கியப் படைப்பாளிகளுக்கும் பதிப்பகங்களுக்கும் இடையில் உள்ள உறவு எப்படி இருக்கின்றன?

5. சிறார் இலக்கிய நூல்களுக்கான சந்தையை விரிவாக்குவது குறித்து யோசனைகள்.

6. குழந்தைகளுக்கு கல்வி சம்பந்தமான புத்தகங்களை வாங்கிக் கொடுப்பதையே தங்களுடைய முன்னுரிமையாகக் கொண்ட பெற்றோர்கள், சிறார் இலக்கியப் புத்தகங்களை வாங்கிக் கொடுப்பதற்குத் தயங்குகிறார்கள். கேரளாவில் பாலசாகித்ய இன்ஸ்டிடியூட் என்ற அரசு அமைப்பு சிறார் இலக்கிய நூல்களை அச்சிட்டு அனைத்துப்பள்ளி நூலகங்களுக்கும் கொடுக்கிறது. அதனால் மற்ற பதிப்பாளர்களும் விரிவான சந்தை கருதி ஏராளமான சிறார் இலக்கிய நூல்களை வெளியிடுகிறார்கள். அத்தகைய ஆதரவு தமிழக அரசிடமிருந்தும் கிடைப்பதற்கு சிறார் இலக்கிய எழுத்தாளர்கள், செயல்பாட்டாளர்கள், பெற்றோர்கள் ஆசிரியர்கள், என்ன செய்யவேண்டும்?

7. அடுத்தகட்ட செயல்பாடுகள் பற்றிய ஆலோசனைகள்.

இந்நிகழ்வினை சாத்தியப்படுத்திய எழுத்தாளர்கள் அனைவருக்கும் வானம் பதிப்பகம் மற்றும் இரயில்வண்டி சிறார் கலை இலக்கிய அமைப்பின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

(சிறார் இலக்கிய எழுத்தாளர்கள் பயிற்சி பட்டறைக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.)

நன்றி,
மணிகண்டன்
ரயில் வண்டி அமைப்பு & வானம் பதிப்பகம்

Leave a comment