அப்பாவியா? முட்டாளா? – ச.மாடசாமி

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

கதைகள் மட்டுமல்ல சில நேரங்களில் கதைத் தலைப்புகளே விவாதங்களைக் கிளப்புவதுண்டு. கதைக்குத் தலைப்பு, குழந்தைக்குப் பெயரிடுவதைப் போல! அழகு, அறிவு, வீரம், கருணை என்று ஏதோ ஒன்றை அடையாளப் படுத்தி வீட்டில் குழந்தைக்குப் பெயரிடுகிறோம்.

பெயரிடுவதோடு அடையாளப்படுத்தல் நின்றுவிடுவதில்லை. அது தொடர்கிறது வகுப்பறையிலும், அக்கம் பக்கத்திலும், சமூகத்திலும், கஞ்சன், வள்ளல், நல்லவன், கெட்டவன், புத்திசாலி, மடையன், திருடன், பொய்யன், உத்தமன், சிடுமூஞ்சி, தின்னிப் பிசாசு என எத்தனையோ அடையாளங்கள்.

ஒருவரைப் பற்றிய நம் புரிதல் சரியா? அவருக்கு நாம் வழங்கும் அடையாளங்கள் சரியா? இவை எப்போடும் கேள்விக்குரியவை.விவாதத்துக்கு உரியவை. கதையின் தலைப்பு கூட ஒர் அடையாளம்தான். கதையின் சாராம்சத்தைப் புரிந்துகொண்டு, கதைக்கு நாம் வழங்கும் அடையாளம் அது. புரிதல் சரியா? அடையாளம் சரியா? என்ற கேள்விகள் இங்கேயும் இருக்கின்றன. உதாரணத்திற்கு ஒரு கதை. இது ஈரான் நாட்டில் பிறந்து உலகம் பூராவும் சுற்றி வந்த கதை. முட்டாளும் கழுதையும் என்பது கதையின் தலைப்பு, “The Fool and the Donkey” என்ற பெயரில் பல நாடுகளின் பாடப் புத்தகங்களிலும் இடம் பிடித்த கதை, கதையைப் பார்ப்போம்.

உடல் உழைப்பில் வாழும் எளிய மனிதருக்கு ஒரு கழுதை தேவைப்பட்டது. கழுதை அவர் சுமையைக் குறைக்கும். அவர் பெயர்? தங்கப்பன் என்று வைத்துக்கொள்வோம். தன் சேமிப்பை எல்லாம் திரட்டி, தங்கப்பன் ஒரு கழுதை வாங்கப் போனார். கழுதை வியாபாரி வரிசையாகக் கழுதைகளை நிறுத்தி வைத்திருந்தார். வரிசையில் ஒரு கழுதை பெரிய காதுகளுடன் நின்று கொண்டிருந்தது. தங்கப்பனுக்கு அந்த கழுதையை மிகவும் பிடித்துவிட்டது. அதை மறைக்காமல் தங்கப்பன் வியாபாரியிடம் சொன்னார். “ஐயா! இந்த கழுதை மிகவும் அழகு! எனக்கு ரொம்பப் பிடிக்கிறது இதன் விலை என்ன?” என்று வியாபாரியிடம் கேட்டார். யாரும் வாங்கும் பொருளைப் பாராட்டி விலை கேட்பதில்லை. அரை மனதோடு வாங்குவதுபோல் காட்டிக் கொள்வார்கள். தங்கப்பன் பாராட்டிக் கேட்டதும், வியாபாரி அந்தக் கழுதையின் விலையைக் கொஞ்சம் கூட்டிச் சொன்னார். “ஓ! இது விலை கூடுதலான கழுதை போல!” என்று நினைத்துக் கொண்டார் தங்கப்பன். கேட்ட விலையைக் கொடுத்து கழுதையை வாங்கினார். இவர் கழுதை வாங்கும் அழகை இளைஞர்கள் இருவர் பார்த்துக் கொண்டு இருந்தனர். ஒருவன் சொன்னான், “இவன் சரியான ஏமாளி! அடுத்தவன், உடனே சொன்னான், நாமும் கொஞ்சம் ஏமாத்தலாம்!” ஒரு ரகசிய திட்டம் உருவானது.

கழுதை கழுத்தில் நீண்ட ஒரு கயிற்றைக் கட்டி, தங்கப்பனின் கையில் கொடுத்தார் வியாபாரி. தங்கப்பன் கயிற்றைப் பிடித்துக் கொண்டு முன்னால் நடந்தார். கழுதை சாவதானமாகப் பின்னால் நடந்து வந்தது. தன் முதுகுப் பக்கம் என்ன நடக்கிறது என்பதைக் கவனிக்காமலே தங்கப்பன் வீட்டுக்கு நடந்தார். இளைஞர்கள் இருவரும் சத்தமில்லாமல் அவரைப் பின் தொடர்ந்தனர் வீடு நெருங்கிறது.
இருவரில் ஒருவன் மெதுவாகத் தங்கப்பனின் பின்னால் போயிக் கழுதையின் கழுத்தில் இருந்து கயிற்றைக் கழற்றினான். அதைத் தன் கழுத்தில் மாட்டிக் கொண்டான். மற்றவன் விடுவிக்கப் பட்ட கழுதையைப் பிடித்துக் கொண்டான். கழுதையை ஓட்டிக் கொண்டு போனான். கழுதையை விற்ற அதே கழுதை வியாபாரியிடம் சென்றான். இது மோச்மான கழுதை குறைந்த விலைக்குத் தான் வாங்கமுடியும் என்றார் வியாபாரி. அவர் கொடுத்த பணத்தை வாங்கிக் கொண்டான் இளைஞன். வீட்டுக்கு வந்தபிறகுதான் தங்கப்பன் திரும்பிப் பார்த்தார் கழுதையைக் காணோம். அதற்குப் பதிலாக ஒரு இளைஞன். தங்கப்பனுக்கு அதிர்ச்சி, “ஏய்! நீ யாரப்பா? என் கழுதை எங்கே?” என்று கேட்டார். இளைஞன் சொன்னான் ஐயா, நான் தான் நீங்கள் வாங்கிவந்த கழுதை முதலில் மனுசனாக இருந்தேன். அப்போது எங்க அம்மா பேச்சைக் கேட்க மாட்டேன். ஒரு நாள் கோபத்தில் அம்மா என்னைக் கழுதையாகச் சபித்துவிட்டார். நானும் கழுதையாகி விட்டேன். புன்னியவாளன் உங்க கை பட்டதும் மறுபடி மனுசனாகிட்டேன் இனி உங்க கூடவே இருப்பேன்.நீங்க சொன்ன வேலையைச் செய்வேன் என்று பணிந்த குரலில் சொன்னான்.

தங்கப்பனுக்கு மனது இளகிவிட்டது. “அடடே! நீ வீட்டுக்குப் போ! இனிமேல் அம்மா பேச்சைக் கேள்! நல்ல பிள்ளையாக இரு!” என்று அறிவுரை சொல்லி அவன் கையில் திண்பண்டங்களையும் கொடுத்து அனுப்பினார். வாங்கிய கழுதை இப்படி ஆகிவிட்டது எப்படியும் கழுதை வேண்டும். மிச்சப் பணத்தை திரட்டினார்.போதவில்லை பழைய பண்ட பாத்திறங்களை விற்றார். போதுமான பணம் சேர்ந்ததும் மீண்டும் கழுதை வாங்கப் புறப்பட்டார். கழுதை வியாபாரியிடம் சொன்னார் முன்பு வாங்கிய அதே நீண்ட காதுக் கழுதை அங்கு நின்றது, தங்கப்பனுக்குச் சந்தேகம் வரவேண்டுமே! வரவில்லை. கோபம் வர வேண்டுமே! வரவில்லை மாறாக வருத்தப்பட்டார். கழுதையை நெருங்கிப் பேசினார்,” அட மக்குப் பையா, பழையபடி கழுதை ஆகிவிட்டாயே! அம்மா பேச்சைக் கேட்டால் என்ன? திரும்ப உன்னை இப்படிச் சபித்து விட்டாரே?” என்றார் பெரும் இரக்கத்த‌தோடு.

இது தங்கப்பனின் கதை, கதையில் தங்கப்பனுக்குக் கிடைத்த அடையாளம் முட்டாள். குழந்தைகள் சிரிப்பதற்காக இந்த கதையைச் சொன்னார்கள். குழந்தைகள் சிரிக்கவும் செய்தார்கள். ஆனால் எல்லோரும் சிரிக்கவில்லை.ஒரு சில குழந்தைகள் தங்கப்பனுக்காக மனம் உருகினார்கள். அவர்கள் தான் கதை சொன்னவர்களிடம் இந்த கேள்வியை எழுப்பினார்கள்.அப்பாவியை ஏன் முட்டாள்னு சொல்லணும்? கதைத் தலைப்பை நோக்கிய கேள்வி மட்டுமல்ல இது சமூகத்தின் மனோபாவங்கள், மதிப்பீடுகள் மீதான கேள்வி. மறைக்காமல் உண்மையைப் பேசுகிற‌வன் முட்டாளா? பிறர் சொல்வதை உண்மை என நம்புபவன் முட்டாளா? இரக்கப்படுபவன் முட்டாளா?சமூகத்தின் மீது நம்பிக்கை வைத்து நடப்பவன் முட்டாளா? அப்படியானால், இந்த சமூகத்தை எப்படி அடையாளப்படுத்துவது? சூழ்ச்சிதான் சமூகத்தின் அடையாளமா?

குழந்தைகள் ஆதங்கத்துடன் கேட்ட கேள்வியை டால்ஸ்டாய் வேரொரு கதையில் ஆதங்கத்துடன் கேட்டார். இரஷ்ய நாட்டுப்புற கதைகளில் ஒன்று முட்டாள் இவான், அந்தக் கதையின் சாராம்சம் இதுதான். ஒரு வீட்டில் அண்ணன் தம்பி மூவர்.அண்ணண்மார் இருவரும் எந்த வேலையும் செய்யாமல் தம்பி இவானின் உழைப்பைச் சுரண்டிப் பிழைக்கின்றனர். இவான் விவரம் தெரியாதவன். அண்ணன்மார் சொல்லும் பொய்களை எல்லாம் நம்புகிறான். இவானின் உழைப்பு, செல்வம் அனைத்தையும் அண்ணன்மார் அபகரிக்கின்றனர். கதையில் இவானுக்குக் கிடைத்த அடையாளம் முட்டாள்.

இந்தக் கதையின் பாதிப்ப்பால் டால்ஸ்டாயும் ‘முட்டாள் இவான்,'(Ivan the Fool) என்றொரு கதை எழுதினார். டால்ஸ்டாய் கதையில் தம்பி இவான் ஒரு விவசாயி, கடின உழைப்பாளி, மூத்தவன் ராணுவ அதிகாரி, அடுத்தவன் வியாபாரி, இருவரும் வாழ்வில் தோல்வி காணும்போதெல்லாம் தம்பியைத் தேடி வந்து அவனிடம் இருப்பதைப் பறிக்கிறார்கள். தம்பி இவானும் அண்ணன்மார் கேட்பதை எல்லாம் தருகிறான். ‘முட்டாள் இவான்,’ என்று கதைக்குத் தலைப்பு இருந்தபோதும், அறிவார்ந்த கேள்வி ஒன்றையும் கதையின் வழி டால்ஸ்டாய் முன்வைத்தார். அதிகாரத்தில் இருப்போர்க்கும், பணம் படைத்தோர்க்கும் நாளெல்லாம் உழைக்கக் கிடைத்த முட்டாளா விவசாயி? என்பதுதான் அந்தக் கேள்வி.

சமூகம் உருவாக்கியுள்ள ஏற்றத்தாழ்வுகள் ஒரு விதமான அநீதி என்றால், சமூகம் வழங்கும் அடையாளங்கள் மற்றொரு விதமான அநீதி. வகுப்பறையும் இதற்கு விதிவில‌க்கல்ல. வகுப்பறையிலும் இந்தப் பிரச்சனை இருக்கிறது. குழந்தைகளைப் புரிந்து கொள்வதிலும் அவர்களுக்கு அடையாளம் வழங்குவதிலும்!

நன்றி : தாய்மொழிக் கல்விச் சிறப்பு மலர், தாய்த்தமிழ் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி, திருப்பூர். தங்களது கல்விச் சிறப்பு மலர் கட்டுரையை இணையத்தில் வெளியிட அனுமதி தந்த திரு.தங்கராசு அவர்களுக்கு பஞ்சு மிட்டாய் சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

Leave a comment