பாதகம் செய்பவரை கண்டால்! – காருண்யா

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
“மார்பு பகுதி”
“ம்ம்ம். உதடும் கூட “
சில சிரிப்புகளும் பல வெட்க முகங்களும் உடனடியாக அவ்விடத்தை ஆக்கிரமித்தன. தொடர்ந்து பெரும் நிசப்தம். எதெல்லாம் அந்தரங்க உறுப்புகள் என்ற விவாதத்தின் பொழுது, மேற்கூறிய உறுப்புகளை தாண்டி அச்சிறுமிகளுக்கு மற்றவற்றை பற்றி கூற பெரும் கூச்சம்.

அவர்களுக்கு இது நாள் வரையில் “பிரைவேட் பார்ட்” எனப்படும் அந்தரங்க உறுப்புகளின் பெயரை நாம் சொல்லி கொடுத்ததில்லை என்பது புரிந்தது. கொஞ்சம் யோசித்து பார்ப்போம். ஒரு வேளை அந்த உறுப்பில் ஏதேனும் பாதிப்பை அவர்கள் சந்தித்தால் அதை பற்றி தெளிவாக சொல்லத் தெரியாமல் போகலாம். இதனால் பிரச்னை முழுமையாக வெளியில் தெரியாமலும் போகலாம். இதனால் பாதிக்கப்படப்போவதும் குழந்தைகள் தான். இது குறித்தான விவாதம் வீடுகளிலோ, பள்ளிகளிலோ நடைபெற்றுருந்தால் இந்த மௌனம் இப்பொழுது நிச்சயம் உடைபட்டிருக்கும்.
சின்னஞ் சிறுகுருவி போலே –
 நீ திரிந்து பறந்துவா பாப்பா
அத்தகைய குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள் நாள்தோறும் அதிகரித்து கொண்டே வருகின்றன என்கிற நிதர்சனமும், அவர்களுக்கு  எதிராக நடக்கும் இத்தகைய சீண்டல்கள் பெரும்பாலும் அவர்களுக்கு நன்கு தெரிந்தவர்களாலேயே நடத்தப்படுகிறது என்கிற கசப்பான உண்மையும் நமக்கு வேதனைஅளிப்பதாக உள்ளது. இது குறித்தான “பாதுகாப்பான மற்றும்  பாதுகாப்பற்ற தொடுதல்” விழிப்புணர்வு நிகழ்ச்சி இக்காலாண்டின் முதல் பருவத்தில் பெற்றோருக்கும் அதன் தொடர்ச்சியாக இப்பருவத்தில் மாணவர்களுக்கும் நடத்தப்பட்டது.  அந்தரங்க உறுப்புகள் எவை என்பது பற்றி தெரிந்து கொள்ளவும், பாதுகாப்பான மற்றும் பாதுகாப்பில்லாத தொடுதலை இனங்கண்டு கொள்ளவும், பாதகாப்பற்ற தொடுதலில் இருந்து  தற்காத்து கொள்ளும் முறைகளும், யாரை பாதுகாப்பு வளையத்தினுள் கொண்டு வரலாம் மற்றும் இக்கட்டான நேரங்களில் உதவி கோரலாம் என்பதை மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும்  என்பதே இந்த விழிப்புணர்வின் நோக்கம்.
“ஐயே பப்பி ஷேம்! பேட் பாய்” குளித்துவிட்டு உடை அணியாமல் வரும் குழந்தையிடம், நம் வீட்டு பெரியவர்கள் இப்படி சொல்வதை கேட்டிருப்போம். அதே குழந்தை உள்ளாடையை அணிந்த பின் “குட் பாய்” என்றும் பாராட்டுவோம். அக்குழந்தைக்கு “பப்பி ஷேம்” என்கிற வார்த்தைக்கு முழு அர்த்தம்புரியாவிட்டாலும்,பெரியவர்கள் தரும் முகபாவங்கள் மூலம் அந்த வார்த்தையின் உணர்வை அறிந்து கொள்வார்கள். “குட்” என்கிற வார்த்தை ஏற்றுக்கொள்ள கூடிய, சரியானது என்கிற  உணர்வையும்,“பேட்” என்கிறவார்த்தை நிராகரிப்பு, குற்றம், களங்கம் போன்ற உணர்வையும் அவர்களுக்கு தருகிறது. இதில் மறைமுகமாக உடம்பின் சில உறுப்புகள் அசிங்கமானவை என்றும் கெட்டது என்றும் அவர்கள் மனதில் பதிய நாமே வழி வகுப்பதாய் உள்ளது.இதனால் “பேட் டச்” ற்கு ஆளாகும் பொழுது, தான்அசுத்தம் அடைந்து விட்டதாக உணர்ந்து முழு பாரத்தையும் தன் மேல் போட்டுக் கொள்வரே தவிர அதை செய்யதவரை பற்றி சிந்திக்க தவறுவர். அதே சமயம் “safe”மற்றும் “unsafe” டச் என்று சொல்லி தரும் பொழுது, அது முறையே பாதுகாப்பான, நம்பிக்கையான மற்றும் எச்சரிக்கை, ஆபத்து போன்ற உணர்வினை தருவதால்,தன்  மேல் தவறு இல்லை என்றும், குற்றம் செய்தவரை சுட்டி காட்டுவதாகவும் அமையும்.
“யாரேனும் இந்த மௌனத்தை தகர்த்திருந்ததால்” என்கிற புத்தகத்தில் வரும் குறிப்பிட்ட சில சம்பவங்களை அடிப்படையாக கொண்டே  இவர்களுடனான உரையாடல் நகர்த்தப்பட்டது. உரையாடலின் ஒரு பகுதியாக,
“சரி, இந்த சமயத்துல கவிதா என்ன பண்ணிருக்கணும்னு நினைக்கிறீங்க?”- புத்தகத்தில் வரும் ஒரு சம்பவத்தை மேற்கோள் காட்டியதற்கு,
“அவ அம்மா கிட்ட உடனே சொல்லணும்”- ஆறாம் வகுப்பு படிக்கும் சிறுமி
“சரி, கவிதா பக்கத்துல யாருமே இல்லனா என்ன பண்ணுவா?”
“அந்த இடத்துலேந்து இல்லனா அவங்க கிட்டேந்து  ஓடி வந்துடனும்”- இன்றொரு குரல்
“நல்லது, இதெல்லாம் பாதுகாப்பில்லாத தொடுதல் நடந்தபிறகு கவிதா கட்டாயம் செய்ய வேண்டியது. ஆனால் அச்சமயத்தில் கவிதாவிற்கு அத்தொடுதல் பிடிக்கவில்லை என்கிற எதிர்ப்பை எப்படி வெளிப்படித்திருக்கணும் ?”
“அவளுக்கு அது பிடிக்கலனு சொல்லிருக்கணும்”- மற்றொரு சிறுமி
இந்நேரத்தில்  “மோதி விளையாடு பாப்பா” என்கிற காணொளி காட்சி ஒளிபரப்பி, அதன் மூலமாக, யாராவது தன்னுடைய உடலின் அந்தரங்க பகுதிகளைக் காட்ட சொன்னாலோ அல்லது அனுமதியின்றி  தொடமுயன்றாலோ, ‘No’  என்று கத்தவேண்டும்.  பிறகு, அவர்களிடம் இருந்து ஓடிச் சென்று, பெற்றோர்களிடமோ அல்லது அவர்களின் நம்பிக்கைக்குரியவரிடமோ  சொல்லவேண்டும் என்கிற மூன்று வழிமுறைகள் தெளிவாக எடுத்துக்கூறப்பட்டது.

இறுதியாக அவர்களுக்கான கேள்விகள், சந்தேகங்கள், மற்றும் பயங்கள் பற்றி அறிந்து கொள்ள  கடிதம் எழுதும் செயல்முறைக்காக பத்து நிமிடம் ஒதுக்கப்பட்டது.  மிக வெளிப்படையாக அவர்களின் அனுபவங்கள் மற்றும் சந்தேகங்களை எழுதியது இந்நிகழ்ச்சியின் அடுத்த தொடர்ச்சிக்கு வழி வகுத்தாற்போன்று இருந்தது.
பாதகஞ் செய்பவரைக் கண்டால் –
நாம் பயங்கொள்ள லாகாது பாப்பா
இவர் பாதகர் பாதகரல்லர் என்று இனங்காணும் பகுத்தறிவை விதைப்பது அவசியம். அதை விட அவற்றை பற்றி பேசுவதற்கும் விவாதிப்பதற்கும் பாதுகாப்பான களத்தை உருவாக்குவது தான். அத்தகைய களத்தை உருவாக்க “வித்யா விதை” தொடர்ந்து முயற்சிக்கும்.

நன்றி,

காருண்யா,
வித்யா விதை.

http://vidhyavidhai.org/

புத்தகம் : யாரேனும் இந்த மெளனத்தை தகர்ந்திருந்தால் , வெளியீடு : குட்டி ஆகாயம் , தொடர்புக்கு : 98434 72092

Leave a comment