Shame Shame Puppy Shame – மருத்துவர் பவானி

மூன்று வயது சூர்யா குளித்துவிட்டு வீட்டு கூடத்தில் விளையாடிக் கொண்டிருந்தாள். உள்ளே வந்த பாட்டி “shame shame puppy shame” என்று கிண்டல் செய்தார். பாட்டி சொன்னதின் அர்த்தம் புரியாமலேயே சூர்யா அம்மாவிடம் சென்று ஆடை உடுத்திக்கொண்டாள். சிறு குழந்தைகள் இருக்கும் வீட்டில் இது அன்றாடம் காணக்கூடிய காட்சி தான்!

பாட்டியின் எண்ணமோ குழந்தையை ஆடையை உடுத்திக்கொள் என்று சொல்வது தான். ஆனால் அவர் பயன்படுத்திய சொல்லாடல் “shame shame puppy shame”.

குழந்தைகள் ஆடையின்றி இருப்பது அவமானமா?

மற்றவர் முன்னிலையில் ஆடையுடன் இருத்தல் நல்லது என்பதை உணர்த்துதல் அவசியமானது. ஆனால் அதற்கு பதிலாக‌ ஆடையின்றியிருப்பது அசிங்கமானதாகவும் அவமானதாகவும் கூறுவது சரியானதா என்பதை நாம் சிந்திக்க வேண்டும். அப்படி ஆடையின்றி இருப்பதை அசிங்கமானதாக நாம் கூறும் போது அக்குழந்தை அசிங்கம், அவமானம் போன்ற உணர்வுகளை தன் உடலுடன் உடலுறுப்புகளுடன் பொருத்திப்பார்க்க வாய்ப்புள்ளது. தன் உடலில் ஏதோ அசிங்கம் உள்ளது அதை மறைக்காமல் இருப்பது அவமானம் என கருதவும் வாய்ப்புள்ளது. அதுவே பல நேரங்களில் குழந்தைகள் பிறப்புறுப்பு மற்றும் ஆசனவாய் அசிங்கம், சீச்சீ என கருத வழிவகுக்கின்றது.

கண், காது, மூக்கு போல பிறப்புறுப்பும் நம் உடம்பின் அத்தியாவசிய உறுப்பு. கண் பார்ப்பதற்கு காது கேட்பதற்கு தேவை. அதுப்போல பிறப்புறுப்பும் ஆசனவாயும் உடல் கழிவுகளை வெளியேற்ற தேவை.

இதில் அசிங்கம் என்ன உள்ளது? அவற்றின் வேலையை அவை செய்கின்றன. பின்பு ஆடை எதற்கு? அவ்வுறுப்புகள் கூர் உணர்ச்சியுடையவை. அவற்றை பாதுக்காக்கவே ஆடைகள். மறைப்பது பாதுகாப்பு கருதியே தவிர அசிங்கம் என்பதால் அல்ல.

Shame என்ற வார்த்தையை குழந்தைக்கள் எவ்வாறு உள்வாங்கிக் கொள்கின்றனர்?

6மாதம் – 2 வயது குழந்தைகளுக்கு Shame என்ற வார்த்தையின் அர்த்தம் புரியாவிட்டாலும், அதை கூறும் பெரியவர்களின் முகப்பாவம் , உடல் மொழி மற்றும் உணர்ச்சி வெளிப்பாடு ஆகியவற்றை கவனிக்கின்றனர். Shame என்ற வார்த்தையை அவர்களாக உணரும் முன்னரே பெரியார்களின் முகபாவத்தாலும் உணர்ச்சி வெளிப்பாடாலும் அது தவறான உணர்ச்சி என புரிந்துக்கொள்கின்றனர். அசிங்கம்/அவமானம் என்ற உணர்ச்சியே தவறு என உணர வாய்ப்புள்ளது.

பெரும்பாலும் பெரியவர்கள்- பெற்றோர்கள், குழந்தைகளின் செய்கையை சரி செய்ய சீச்சீ , அய்ய, shame shame போன்ற வார்த்தைகளை பயன்படுத்துகின்றனர். மீண்டும் மீண்டும் அவ்வாறு சொல்லும் போது குழந்தைக்கள் பெரும்பாலும் தாங்கள் அசிங்கமானவர்கள் தவறானவர்கள் என உணர்க்கிறார்கள்.

செய்கை (behaviour) தவறு என்பதில் இருந்து தான்(person) தவறு என மாறும் போது குழந்தைகளின் சுயமதிப்பு மற்றும் தன்னம்பிக்கை பாதிப்படைகின்றன. தான் நேசிக்கும் பெரியவர்களிடமிருந்து வெளிப்படும் அவ்வார்த்தைகள் குழந்தைகளின் மனவெழுச்சியைப்(inner emotions) பாதித்து அவர்களின் தன்னம்பிக்கையை குலைக்கின்றது. பிற்காலத்தில் அவர்கள் சுயமதிப்பும் சுயமரியாதையும் குன்றிய ஆளுமைகளாக வளர்க்கின்றனர்.

குழந்தைகளின் உள்ளுணர்வு அகவுலகம் அறியாமல் நாம் காலம் தொட்டுச் செய்யும் சிறு பழக்கமும் அவர்கள் அகத்தில் பெரிய குழப்பங்களை மாற்றங்களை விதைக்கவல்லது!

 

நன்றி,

பவானி,
குடும்ப நல மருத்துவர்.
( வாழ்வியல திறன் கல்வி, குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பாலியல் கல்வி ஒருங்கிணைப்பாளர்)

1 Comment

  • Gowri says:

    Well said, Dr. Bhavan. Yes, it is absolutely true that kid’s low esteem starts from home… Parents behaviour and comments are the main factors for their children to build healthy or low self esteem.

Leave a comment