ஆட்டிசம் : எப்படி அறிவது? எங்கே செல்வது? – சரவணன் பார்த்தசாரதி

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

எனது நெருங்கிய நண்பர் ஒருவரின் குழந்தை இரண்டு வயதுவரை கண்ணோடு கண் நோக்கிப் பேசவில்லை. ஆகவே அவரது மனைவி இது ஆட்டிசமாக இருக்குமோ என்று நினைத்து கவலைகொள்ள நண்பர் என்னை அணுகினார்.

சிலபல கேள்விகளுக்குப் பிறகு அக்குழந்தைக்கு ஆட்டிசம் இருக்க வாய்ப்பில்லை என்று உறுதியாகத் தெரிந்தது. சில நாட்கள் கழித்து மீண்டும் அதே சந்தேகம். அருகில் இருக்கும் குழந்தைகள் நல மருத்துவரைப் பார்க்குமாறு கேட்டுக்கொண்டேன். அவரும் ஆட்டிசம் சார் அறிகுறிகள் ஏதுமில்லை என்று கூறி, குழந்தையின் செல்போன் பயன்பாட்டைக் குறைக்குமாறு கேட்டுக்கொண்டார். சில வாரங்கள் போயின. அக்குழந்தையின் தாயாருக்கு மீண்டும் சந்தேகம் எழ, நான் அருகில் இருக்கும் அரசு நிறுவனம் ஒன்றைப் பரிந்துரை செய்தேன். அங்கு அக்குழந்தையின் நிலையைச் சோதித்து ஓர் அறிக்கை அளித்துவிட்டனர். குழந்தைக்கு ஆட்டிசம் இல்லை. ஆனால் சில சூழல் மற்றும் சமூகக் காரணங்களால் கற்கும் திறனில் குழந்தை பின்தங்கியுள்ளது என்று கூறினர். அதற்கான சில பயிற்சிகள் குறித்து அறிமுகம் அளித்து அனுப்பிவிட்டனர். தற்போது அக்குழந்தை நல்ல முன்னேற்றம் கண்டுள்ளான்.

இதேபோல் இங்கு பலருக்கும் சந்தேகம் இருக்கலாம்.

முதலில் திரு. யெஸ்.பாலபாரதியின் இக்கட்டுரையைப் படியுங்கள்.

இந்த அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றோ/பலவோ தங்கள் குழந்தைக்கு இருப்பதாக நீங்கள் கருதினால், அருகில் இருக்கும் “நல்ல” குழந்தைகள் நல மருத்துவரை அணுகுங்கள். பெரும்பாலும் அவர் இதுதொடர்பாகச் சரியான கணிப்பினைத் தருவார்.

குழந்தைக்கு ஆட்டிசம் அல்லது வேறு ஏதோவொரு மூளை நரம்பியல் சிக்கல் இருக்கலாமோ என்ற ஐயம் அவருக்கு எழும்பட்சத்தில் கீழ்க்கண்ட இடங்களை நீங்கள் அணுகலாம்.

வாய்ப்பு ஒன்று:

National Institute for Empowerment of Persons with Multiple Disabilities (NIEPMD)

East Coast Road, Muttukadu, Kovalam Post Chennai – 603112,

Tamil Nadu,

India.

044 2747 2113

www.niepmd.tn.nic.in

வாய்ப்பு இரண்டு:

National Institute of Mental Health and Neurosciences (NIMHANS)

Hosur Road

Bangalore – 560029, India

Telephone: 91-080-26995201, 26995202

http://www.nimhans.ac.in/

வாய்ப்பு மூன்று:

தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் மாவட்டத் தலைமை மருத்துவமனைகள்.

தற்போதுதான் மாவட்டம்தோறும் ஆட்டிசம் சார்ந்த மையங்கள் அமைப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டுவருகின்றன. ஒருவேளை நீங்கள் அணுகும் மாவட்ட மருத்துவமனையில் அதற்கான மையம் இல்லை என்றால் மேற்கண்ட இரு இடங்களை உடனடியாக அணுகவும். காலதாமதம் குழந்தையின் நலனுக்கு எதிரானது.

கவனம் கொள்ள வேண்டிய சில விஷயங்கள்

எண்ணற்ற மூளை நரம்பியல் குறைபாடுகள், வளர்ச்சிநிலைக் குறைபாடுகள் மற்றும் கற்றல் குறைபாடுகள் மனிதர்களிடையே காணப்படுகின்றன. இவற்றில் சில மட்டுமே தீவிர பாதிப்புகளை உருவாக்கக்கூடியவை. அவற்றில் பெரும்பாலானவற்றைப் பயிற்சிகள் வழியே கடந்துசெல்ல இயலும். பயம் வேண்டாம்.

எடுத்தவுடன் குழந்தையை மனநல மருத்துவரிடம் அழைத்துச்செல்ல வேண்டாம். மூளை நரம்பியல் குறைபாடுகள் குறித்த புரிதலற்றுச் செயல்படும் சில மனநல மருத்துவர்கள், குழந்தைக்கு நரம்பமைதி மருந்துகளை (sedative) அளித்து அவர்களை செயல்படா நிலைக்குத் (vegetative state) தள்ளுவதையும் இங்கு நாம் காணமுடிகிறது. இது ஒருபோதும் நிரந்தரத் தீர்வினை அளிக்கப்போவதில்லை.

ஜாதகம் போன்ற விஷயங்களில் நம்பிக்கை வைக்காதீர்கள். கோடாங்கி, குறி பார்த்தல், மந்திரித்தல் போன்ற அறிவுக்கு ஒவ்வாத காரியங்களில் ஈடுபடாதீர்கள். உங்கள் குழந்தையை எங்கோ இருக்கும் ஏதோவொரு கிரகம் ஒருபோதும் பாதிக்கப்போவதில்லை. ஆனால் நீங்கள் எடுக்கும் முடிவுகள் ஒவ்வொன்றும் அவர்களைக் கண்டிப்பாகப் பாதிக்கும்.

ஏற்கனவே உங்கள் ரத்த உறவுகளில் யாருக்கேனும் இப்படியான அறிகுறிகள் இருந்திருக்கலாம். வீட்டில் இருக்கும் பெரியவர்கள் அவர்களை உங்கள் குழந்தையுடன் ஒப்பிட்டு, இது ஒரு பெரிய பிரச்சினை அல்ல என்று கூறலாம். அதைப் புறம் தள்ளுங்கள். நெருங்கிய ரத்த உறவுகளில் மூளை நரம்பியல் சிக்கல் கொண்டோர் யாரேனும் இருந்து, குழந்தையிடம் மேற்கண்ட அறிகுறிகள் தென்பட்டால், நீங்கள் விரைந்து அக்குழந்தையைச் சோதிப்பது நல்லது. அதேசமயம் அதீத பயம்கொள்ளத் தேவையில்லை.

குழந்தையைச் சோதிப்பதற்கு உங்கள் இணையர் மறுப்பு தெரிவிக்கலாம். முதலில் நீங்கள் அவருடன் மனம்விட்டுப் பேசிப்பாருங்கள். பிறகு வீட்டில் இருக்கும் பெரியவர்கள் வழியே அறிவுரை கூறுங்கள். அப்போதும் தனது நிலைப்பாட்டில் இறுக்கமாக இருக்கிறார் என்றால், தங்கள் இணையரை தேர்ந்த மனநல ஆலோசகரிடம் அழைத்துச்செல்லுங்கள். முதலில் அவரைத் தயார் செய்யுங்கள். இதற்கு நீண்டகாலம் எடுத்துக்கொள்ளாதீர்கள்.

குழந்தையைச் சோதிப்பதற்காக NIEPMD, NIMHANS போன்ற இடங்களுக்கு அழைத்துச் செல்லும்போது பெற்றோர் இருவரும் செல்லவேண்டியது கட்டாயம். அவர்கள் தங்கள் சோதனையின்போது குழந்தை குறித்த இருவரது பார்வையையும் பெற விரும்புவார்கள். குழந்தையின் நிலைப்பாட்டை அளவிட அது அவசியம் என்பதால் உங்களிடம் பல கேள்விகளைக் கேட்பார்கள். நிதானமாகப் பதிலளியுங்கள்.

அவர்கள் தரும் அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை அமைத்துக்கொள்ளலாம். ஒருவேளை தங்கள் குழந்தைக்கு ஏதேனும் ஒரு மூளை நரம்பியல் சிக்கல் இருக்கிறது என்றால் கவலைப்படாதீர்கள். நோகாதீர்கள். நீங்கள் தனியே இல்லை – நீங்கள் உலகெங்கும் உள்ள பல லட்சம் பெற்றோரில் ஒருவர். அவ்வளவுதான்.

ஆனால் சோம்பலை ஒழித்துவிட்டுக் கடுமையாக உழைக்கத் தயாராகுங்கள்.

குறிப்பு: ஆட்டிசம் மட்டுமல்ல. குழந்தைகளிடம் காணப்படும் எந்தவொரு மூளை நரம்பியல் சிக்கலையும் NIEPMD, NIMHANS நிறுவன சோதனைகள் வழியே அறிய முடியும்.

Leave a comment