நாங்க பஞ்சுமிட்டாய்காரங்க‌ ! – பஞ்சு மிட்டாய் பிரபு

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

இன்றோடு (27/11/2018) பஞ்சு மிட்டாய் துவங்கி மூன்று வருடங்கள் ஓடிவிட்டது. இங்கு எங்களது குடியிருப்பிலுள்ள வாண்டுகளுக்காக முதன்முதலாக கதை சொல்லலாம் என்று பேசி முடிவெடுத்து சின்னதாக துவங்கினோம். முதல் அடி மெல்லமாக இருக்கட்டும் என்பதற்காக நன்றாக அறிமுகமான சுட்டிகளுடன் துவங்கிய முதல் நிகழ்வு இன்றும் நினைவுகளில் இருக்கிறது. புத்தகத்தின் துணையோடு அதிலுள்ள படங்களைக் காட்டித் தான் கதை சொன்னோம். வழக்கமான‌ கதைகளைச் சொல்ல வேண்டாம் என்று முடிவெடுத்ததால் கதைக்கான எங்களது தேடல்கள் நிறைய இருந்தது. அந்தத் தேடல் வழியே இந்தப் பயணம் தொடர்ந்தது. இன்று நாங்கள் கடந்து வந்தப் பாதையை திரும்பிப் பார்க்கையில் மிகவும் உற்சாகமாக இருக்கிறது.

பஞ்சு மிட்டாய் தற்போது மூன்று தளங்களில் இயங்கிக் கொண்டிருக்கிறது. இதன் சிறகுகள் மென்மேலும் விரியும் என்ற நம்பிகையுடன் தொடர்ந்து பயணிக்கிறோம். இந்த நேரத்தில் எங்களைப் பற்றி சிறிய அறிமுகம் செய்ய ஆசைப்படுகிறோம்.

நிகழ்வுகள் :

இதுவரை பஞ்சு மிட்டாய் சுமார் எழுபதிற்கும் மேலான நிகழ்வுகளை நடத்தியுள்ளது. நிகழ்வுகள் அனைத்தும் முழுக்க முழுக்க குழந்தைகளின் மகிழ்ச்சியை மட்டுமே முதன்மைப் படுத்தி திட்டமிடுகிறது. பெங்களூரை மட்டுமே மையமாக கொண்டு இயங்கி வந்த பஞ்சு மிட்டாய் கடந்த வருடத்தில் சென்னை, கோவை, ஓசுர், தஞ்சை, கோத்தகிரி, காயல்பட்டிணம், மன்னார்குடி, ஒரத்தநாடு என பல்வேறு இடங்களில் நிகழ்வுகளை நடத்தில் 1000+ குழந்தைகளை நேரடியாக சந்தித்துள்ளது. பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் தொடர்ந்து உரையாடி வருகிறது. அதேப் போல் குழந்தைகள் சார்ந்து இயங்கி வரும் மற்ற நண்பர்களுடனும் சேர்ந்து இயங்கி வருகிறது. கி.ரா குழம்பு நாடகம், பல்லாங்குழி சார்பாக பாரம்பரிய விளையாட்டு அறிமுகம், கோமாளியுடன் ஒரு சந்திப்பு, ஓரிகாமி கலை, ஓலை மடிப்பு கலை, உதிரி நாடக குழுவின் கோமாளிகளின் குதிரை நாடகம், குட்டி ஆகாயம் இதழ் நடத்தும் குழந்தைகள் குறித்த உரையாடல், பட்டறை நண்பர்களுடன் கலந்துரையாடல், புத்தக அறிமுகம், எழுத்தாளர்களுடன் சந்திப்பு என தொடர்ந்து வெவ்வேறு கலை வடிவங்களையும் வெவ்வேறு செயற்பாட்டாளர்களையு ம் இணைந்து பயணிக்கிறது. இதன் தொடர்ச்சியாக சமீபத்தில் தஞ்சையில் முழு நாள் நிகழ்வை உதிரி நாடக நிலத்துடன் சேர்ந்து வெற்றிகரமாக நடத்தியது. “குழந்தைகளுக்காக போட்டி” என்ற மனப்பான்மையில் வந்திருந்த பெற்றோர்களும் ஆசிரியர்களும் குழந்தைகளுக்கான நிகழ்வு என்ற புரிதலை ஏற்றுக்கொண்டதையே நிகழ்வின் வெற்றியாக நினைக்கின்றோம்.

இன்னும் வாய்ப்பிருக்கும் போதெல்லாம் நிகழ்வுகள் மூலம் இன்னும் பல குழந்தைகளை சந்திக்க ஆசைப்படுகிறோம். அதேப் போல பல்வேறு கலைகளை நிகழ்வுகள் மூலம் குழந்தைகளுக்கும் பெற்றோர் ஆசிரியர் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யும் ஒரு தளத்தினை உருவாக்க எண்ணுகிறோம்.

இதழ் :

மின்னிதழாக துவங்கிய பஞ்சு மிட்டாய் ஐந்தாம் இதழிலிருந்து அச்சு இதழாக மாறியது. பல்வேறு உந்துதல் இதற்கு காரணம். முக்கியமாக குட்டி ஆகாயம் மற்றும் வானம் பதிப்பகத்தை சொல்ல வேண்டும். நேரடியாக சந்திக்க முடியாத குழந்தைகளை இதழ் மூலமாக சந்தித்து உரையாடி வருகிறோம். ஒரு முறை குட்டி ஆகாயம் வாட்ஸ் ஆப் குழுவின் எதேச்சையாக பஞ்சு மிட்டாயின் நோக்கம் என்ன என்று கேட்டார்கள். அது வரை மனதில் ஓடிக்கொண்டிருந்த விசயத்தை தொகுத்து வெளியிட்டோம். அதை இங்கு பகிர்கிறோம்….

  1. குழந்தைகளின் படைப்பாற்றலை தூண்டுதல் , அதற்காக மேடையையும் சூழலையும் அமைத்துக் கொடுத்தல்
  2. இலக்கியத்திற்கும் ( சிறார் இலக்கியம்) சிறார்களுக்குமான இடைவெளியை குறைத்தல். அதன் துவக்க நிலையாக ஒரு குழந்தைக்கு இலக்கியம் நோக்கிச் செல்ல வாசிக்க தெரிந்திருக்க வேண்டிய கட்டாயம் இல்லை என்று நம்புகிறோம்.
  3. எந்தவித உள்நோக்கமில்லாமில்லாத இயற்கையான படைப்பாற்றலை எடுத்து முதன்மை படுத்துதல்.
  4. பள்ளியின் தொடர்ச்சியாக நாங்கள் இருக்க விரும்பவில்லை. பள்ளி சம்மந்தப்பட்ட விசயங்களை குறைத்துக் கொள்ளுதல் – ஒரு குழந்தையைப் பற்றிய விசயத்தில் பள்ளி என்பது ஒரு பகுதியே என்று நம்புகிறோம்.
  5. கலைகள் முக்கியமாக விளையாட்டிற்கான விசயங்களை எடுத்துச் செல்ல விரும்புகிறோம். விளையாட்டு என்பது பாலினம் மற்றும் வயது என்ற எல்லைகளை தாண்டியது. நமது மரபில் விளையாட்டு என்பது பொருளாதாரத்திற்கு அப்பாற்பட்டது. போன்ற கருத்துகளை கொண்டுள்ளோம்.
  6. நேர்த்தியான ஓவியங்கள், நேர்த்தியான கதைகள் , பாடல்கள் என ஒரு சில சிறார்களுடன் சுருங்கி விடாமல் அனைத்திற்குமான இதழாக பஞ்சு மிட்டாய் இருக்க வேண்டும்.
  7. எதையும் சொல்லிக் கொடுக்க வேண்டுமென்ற எண்ணங்களை தவிர்க்கிறோம்.
  8.  இதழுக்காக படைப்புகளை உருவாக்காமல் , ஆங்காங்கே செயல்பாடுகள் நடத்தி அங்குள்ள ஆர்வமுள்ள பெரியோர்களுக்கும் சிறியோர்களுக்கும் இணைந்து செயல்பட ஒரு சூழலை உருவாக்கி அதன் மூலம் உருவாகும் படைப்புகளை தான் இதழில் உபயோகிக்குறோம்.
  9. பஞ்சு மிட்டாய் என்பது ஒரு மேடையாக நினைத்து தற்கால சிறார் உலகில் இருக்கும் அனைத்துத் துறை சார்ந்த படைப்பாளிகளையும் (பெரியோர்கள்) இணைக்க நினைக்கிறோம்.
  10. பஞ்சு மிட்டாயை துவங்கும் போது சிறார்கள் கொண்டே அனைத்தையும் செய்திட ஆசைப்பட்டோம். ஆனால் அதை செய்வதில் நிறைய சிரமங்கள் இருந்தது. வாய்ப்பிருந்தால் எதிர்காலத்தில் அதை முயற்சிப்போம்.

இணையதளம் :

நிகழ்வுகளும் இதழும் கொடுத்த அனுபவத்தின் வழியே இணையத்தின் தேவையை உணர்ந்தோம். குழந்தைகள் பற்றி உரையாட ஆங்கிலத்தில் எண்ணற்ற இதழ்கள், இணையதளங்கள் உள்ளன. தமிழில் இணையதளத்தின் தேவையை உணர்ந்தோம். சோதனை முயற்சியாக www.panchumittai.com என்ற இணயதளத்தினை நண்பர்கள் பலரின் துணையோடு துவங்கினோம். 90க்கும் மேலான பதிவுகளை மூன்று மாதங்களில் வெளியிட்டுள்ளோம். குழந்தைகள் சார்ந்த உரையாடலை பல்வேறு குழுக்களில் மெல்ல மெல்ல உருவாக்கியுள்ளது என்று நம்புகிறோம். வெவ்வேறு தலைப்புகளில் விவாதித்து பல்வேறு கருத்துகளை கொண்டு வர முயற்சிகள் எடுக்கிறோம். தற்கால சிறால் இலக்கிய அறிமுகங்களின் அவசியம் நிறைய தேவைப்படுகிறது. இணையம் வழியே நிறைய பெற்றோர், ஆசிரியர்களை இணைய மூலம் சென்றடைய முடிகிறது. கல்வி, குழந்தை வளர்ப்பு, நிகழ்வுகள், சிறார் இலக்கியம் என்று நான்கு பகுதிகளில் பல்வேறு தலைப்புகளில் உரையாடி வருகிறோம். அதேப் போல் “சுட்டிகள் கேட்ட குட்டிக் கேள்விகள்” என்று சுட்டிகளின் கேள்விகளை தொகுத்து வருகிறோம்.

கதைப் பெட்டி:

நிகழ்வையும் இதழையும் தொடர்பு ஏற்படுத்த அதே நேரம் குழந்தைகள் சார்ந்து மற்ற நண்பர்களின் பயணத்துடன் இணைந்துக்கொள்ள பஞ்சுமிட்டாய் மற்றும் குட்டி ஆகாயம் இதழ்கள் சேர்ந்து கதைப் பெட்டிகளை வெவ்வேறு இடங்களில் வைத்துள்ளது. அது வழியாக கிடைக்கும் படைப்புகளை தொடர்ந்து இதழ்களிம் வெளியிடுகிறோம். இது மென்மேலும் வெவ்வேறு இடங்களுக்கு செல்லும் என்று எதிர்ப்பார்க்கிறோம்.

ரகசியம் ஒன்று சொல்லட்டுமா:

சென்ற ஆண்டு அரசு 1,6,9 மற்றும் 11 ஆம் வகுப்புகளின் பாட திட்டத்தை புதுப்பித்துள்ளது. அதில் 1ஆம் வகுப்பு தமிழ் பாடத்தில் பஞ்சு மிட்டாய் குழுவில் உருவான இரண்டு பாடல்கள் இடம் பெற்றுள்ளது. தேசிங் அய்யா அவர்கள் இயற்றிய பாடல்கள். பாடல்களுக்கும் குழந்தைகளுக்கும் உள்ள தொடர்பை நிகழ்வுகளில் அய்யா அவர்கள் தான் முதன்முதலாக எடுத்துக்காட்டினார். தற்போது பஞ்சு மிட்டாய் நிகழ்வுகளிலும் இதழ்களிலும் பாடலுக்கு முக்கிய இடமுண்டு. பாடல்கள் வழியே குழந்தைகளுடன் மிக நெருக்கமாக உணர்கிறோம். பாடலை நாங்கள் பாடி ஆடும் போது குழந்தைகள் முகத்தில் தெரியும் அந்த மகிழ்ச்சி தான் தொடர்ந்து பல பாடல்கள் எங்களை இயக்கவும் செய்தது.

அதேப் போல் நான் (‘பஞ்சு மிட்டாய்’ பிரபு) எழுதிய சிறார் நாவல் “எனக்குப் பிடிச்ச கலரு” வானம் பதிப்பக வெளியீடாக வந்துள்ளது.

அடுத்தது என்ன?

எங்களது குழு செயற்பாடுகள் குறித்து தொடர்ந்து எங்களுக்குள்ளும் பேசுகிறோம் விவாதிக்கிறோம். வெளியிலுள்ள நண்பர்களுடனும் தொடர்ந்து விவாதிக்கிறோம். பயணத்தின் வழியே எங்களது புதிய முயற்சிகளை முடிவு செய்கிறோம்.

நன்றி,

பஞ்சு மிட்டாய் ஆசிரியர் குழு (பிரபு, ஜெயக்குமார், அருண் கார்த்திக், சர்மிளா, திவ்யா, ராஜேஸ்)

சமகால எழுத்தாளர்கள், பள்ளிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், செயற்பாட்டாளர்கள், பதிப்பக நண்பர்கள், விற்பனை நிலையங்கள் மற்றும் சுட்டிகள் என எங்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகளை சொல்லிக்கொள்கிறோம்.

Leave a comment