பையன்களுக்கும்  பீரியட்ஸ்  வருமா? – காருண்யா

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
ஆமாம், நான் பாத்துருக்கேன். அந்த விளம்பரத்துல வெள்ளை துணில ப்ளூ கலர் தண்ணி ஊத்துவாங்க.“- ஆறாம் வகுப்பு படிக்கும் பிரியா.

எனக்கு கைல்ல நிறைய முடி வளருது. சின்ன வயசுல இப்படி இல்லையே.”- ஒன்பதாம் வகுப்பு சாந்தியின் ஆதங்கம்.
பையன்களுக்கும்  பீரியட்ஸ்  வருமா?“- ஏழாம் வகுப்பு லதாவின் சந்தேகம்.
எனக்கு மட்டும் ஏன் முகத்துல இத்தனை பருக்கள் வருது? என் தோழிகளுக்கு இந்த மாதிரி இல்லையே.“- மாலினியின் புலம்பல்.
எனக்கு இரண்டு மாசமா பீரியட்ஸ் வரலையே. நான் என்ன பண்ணனும்?“- கவிதாவின் வருத்தம்.
பேச ஆரம்பித்த முப்பது நிமிடங்களிலேயே எத்தனை  விதமான கேள்விகள்!    இதற்கு முன்பாக இதை பற்றி பேசியதே இல்லை என்பது போன்ற அடுக்கடுக்கான சந்தேகங்கள்.   கெட்ட  வார்த்தைகள் சரளமாக புழங்கும் நம் சமூகத்தில், பீரியட்ஸ், நாப்கின் போன்ற சொற்களை கூற தயக்கமும் கூச்சமும் இன்னுமும் இருக்கத்தான் செய்கிறது.  மேலும், பூப்பெய்தும் சிறுமிகளுக்கு இதை பற்றிய தெளிவான விளக்கமோ, மாதவிடாய் குறித்த உரையாடல்களோ இல்லாததால் தான், இத்தனை  கேள்விகள் அவர்களை விரட்டுகிறது.
மாதவிடாய் என்பது இயற்கையான ஒரு நிகழ்வு. அதை குறித்த அறிவியல் ரீதியான விளக்கங்களையும்,  அச்சிறுமிகளுக்கு தன்  உடலை பற்றிய சரியான புரிதலையும், ஊட்டச்சத்து உணவுகளை சரிவிகிதத்தில் எடுத்துக் கொள்வதைப் பற்றியும் ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு சிறுமிகளுக்கு நடத்தப் பட்டது.
ஒருவர் பின் ஒருவராக வரிசையில் வந்தமர்ந்த அச்சிறுமியர் முகத்தில் எதற்காக இங்கே வந்துள்ளோம் என்கிற பெரிய கேள்விக்குறியோடு என்னை நோக்கினர். எவ்விதமான அறிவிப்பும் அவர்களுக்கு சென்றிருக்கவில்லை.
“யாருக்கெல்லாம் கதை கேட்க பிடிக்கும்?” என்றவுடன் பல முகங்கள் பிரகாசித்து, கைகள் உயர்ந்தன. வழக்கமான கேள்வி பதில் நிகழ்ச்சியாகவோ அல்லது விரிவுரையாகவோ அல்லாமல் கதைக்கூறல் மூலமாக இந்நிகழ்ச்சி கொண்டு செல்லப்பட்டதால், அவர்களிடம் இருந்த இறுக்கமான மனநிலை மாறி சகஜமாக உரையாட தொடங்கினர்.  அந்த சகஜமான மனநிலையால் தான், உள்ளே மறைத்து வைக்கப்பட்டிருந்த கேள்விகள் அனைத்தும் வெளிப்பட்டன.
“மென்ஸ்ட்ரோப்பீடியா” என்கிற கதைப்புத்தகம், மாதவிடாய் பற்றிய விளக்கங்களை காமிக் வடிவில் தெளிவாக கூறுகிறது. மூன்று தோழியர் ஒரு பிறந்தநாள் விழாவில் ஒன்று கூடுகின்றனர்.  அதில் ஒரு சிறுமியின் சித்தியும் அவ்விழாவிற்கு வருகை புரிய, அவர் மாதவிடாய் பற்றி தெளிவாக இச்சிறுமியருக்கு எடுத்துக் கூறுவதாக அக்கதை அமைந்திருக்கும். அப்புத்தகத்தை அடிப்படையாக கொண்டே  இந்நிகழ்ச்சிக்கான கதையும் வடிவமைக்கப்பட்டது.
மெல்ல மெல்ல உடல் வளர்ச்சி பற்றியும், பூப்பெய்தல் என்றால் என்ன என்பதற்கான அறிவியல் விளக்கம் வரையிலும் மாணவியரிடம் எவ்விதமான சங்கோஜமும் இன்றி சிரிப்பும், உரையாடலுமாக சென்றது.  அனைத்தும் “நாப்கின்” என்கிற வார்த்தையின் உச்சரிப்பைக் கேட்கும் வரையில் தான்.
நாப்கின்கள் பற்றி பேசும் பொழுது, அம்மாணவிகளுக்கு தான் எவ்வளவு கூச்சம். “நாப்கின்” என்கிற வார்த்தையை வெளிப்படையாக கூறியதையே   புதிதாக பார்த்தவர்கள், நாப்கினை கையில் எடுத்து காட்டியதும்  அதிர்ச்சி அடைந்திருக்க வேண்டும். வெட்கம் ஒரு புறம், தயக்கம் ஒரு புறமுமாக தலை குனிந்து அமர்ந்திருந்தனர். இந்த இரும்புத் திரையை உடைக்காமல் மேற்செல்வது பயனில்லை என்பதறிந்து, நாப்கின் உபயோகிக்கும் முறையை அவர்களாகவே ஒருவருக்கொருவர் கற்று கொடுக்குமாறு கூறியபொழுது தான், அந்த அதிசயம் நிகழ்ந்தது.
அனைவரும் கூச்சமும், தயக்கமுமாக அமர்ந்திருந்த பொழுது, ஆறாம் வகுப்பு படிக்கும் அச்சிறுமி அத்திரையை உடைத்து வெளியே வந்தாள். நாப்கினை எப்படி உபயோகிப்பது என்பது பற்றியும், உபயோகித்தபின் அதை எவ்வாறு அகற்றுவது என்பததை பற்றியும் கூற, தன் வயதொத்த அந்த சிறுமியை அனைவரும் கைத்தட்டி வரவேற்றனர். மேலும் பல கேள்விகளுக்கு அத்தருணம் வழி வகுத்தது.
மாதவிடாய் பொருட்கள் குறித்தும், அவற்றைப் பயன்படுத்தும் பொழுது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்களை பற்றியும் உரையாடும் பொழுது,  “எங்கள் கழிவறைகளில் தான் குப்பைத் தொட்டியே இல்லையே!”, “அந்த மூன்றாவது கதவில் பெரிய ஓட்டை இருக்கு.”, “நான் துணி தான் பயன்படுத்துறேன். ஸ்கூல்ல அதை மாற்ற வசதியா இல்ல. அதனால அம்மா லீவ் போட சொல்லுவாங்க.”  போன்ற எண்ணற்ற விஷயங்கள் அவர்களிடம் இருந்து வெளிவந்தன. அவர்கள் சர்வசாதாரணமாக கடந்து போகும் இந்நிகழ்வுகள், உண்மையிலேயே சாதாரண விஷயங்களா? குப்பைத்தொட்டி இல்லா கழிவறைகளில், பயன்படுத்திய மாதவிடாய்ப் பொருட்களை கழிவறைகளிளேயே  பிளஷ் செய்வது மற்றும் அப்படியே ஓரமாக வைப்பது போன்ற நடத்தைகள் எண்ணற்ற பின்விளைவுகளை கொண்டது. அதே நேரம், சரியான பராமரிப்பில்லாத கழிவறைகளை உபயோகிக்க யோசித்து பல மாணவியர் நீண்ட நேரம் ஒரே சானிட்டரி நாப்கினை உபயோகிப்பதும் தெரிய வந்தது.  மேலும் இது போன்ற அடிப்படை தேவைகளை கேட்கக் கூட அச்சப்படும் நிலையில் தான் அச்சிறுமியர் இருந்துள்ளனர்.
மூன்று வெல்வேறு பாதைகள் கழிவுகளை அகற்ற பெண் உடலில் உள்ளன என்பதை அறிந்த பொழுது எழுந்த வியப்பும், மாதவிடாய் ரத்தம் அசுத்தமானது அல்ல என்பதை அறிந்த பொழுது எழுந்த ஆச்சரியமும், இவள் இவ்வளவு பேசுவாள் என்பதையே நான் இப்போதுதான் அறிகிறேன் என்று ஆசிரியை கூறியதும் வெட்கச்  சிரிப்பை படர விட்ட அச்சிறுமியும், வாரா வாரம் இவ்வகுப்பு இருக்குமா என்று கேட்ட ஆர்வமும் குறிப்பிடத் தகுந்த நிகழ்வுகளாக அமைந்தது.
“ஆனா, டிவி-ல ப்ளூ கலர் தண்ணி தான காட்டுறாங்க”
மாதவிடாயை பற்றி பேசுவது அசிங்கம் அல்லது பேச கூடாத விஷயம் என்று பெரும்பாலானோர் மனதில் பதிந்து விட்டமையால் வந்த குழப்பம் இது.  ரத்தம் பொன்ற விஷயங்களை ஒலிபரப்ப சென்சார் தடை உள்ளதால், தொலைக்காட்சியில் ஊதா நிறத்தில் காட்டப்படுகிறது என்கிற தெளிவான விளக்கங்கள் நம் குழந்தைகளுக்கு தரப்படுகிறதா? இது போன்ற பல கேள்விகளை  மனதில் வைத்திருக்கும் நம் பக்கத்து வீட்டு சிறுமியோ அல்லது நம் வீடு சிறுமியோ, நாளை பூப்பெய்தும் பொழுது அவர்களுக்கு ஏற்படும் குழப்பங்களை யார் தீர்ப்பது?
இது போன்ற பல மௌனத்திரைகளை அகற்ற, வித்யா விதையின் இந்த பயணம் தொடரும்…

Leave a comment