நிலவில் அமர்ந்திருக்கும் கதைசொல்லி – நிழல்

வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்

மரணமடைந்தவர்களும் நம் காலத்துக்கு தொடர்பற்ற காலத்தில் வாழ்ந்து மறந்தவர்களும் நம் ஆன்மாவிற்கு நெருக்கமானவர்களாக வாழ்ந்துவிட முடியும் என்பதை சில புத்தகங்கள் சொல்கின்றன.

அப்படி புத்தகம் வழியாக குழந்தைகளின் தூய ஓடை போன்ற அகவுலத்தை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள் ஜான் ஹோல்டும், கிறிஸ்டியன் ஆண்டர்சனும். ஹோல்ட் குழந்தைகளின் உளவியலை அவர்களுடன் நெருக்கமாக இருந்து அனுபவப் பதிவுகளாகச் சொன்னவன். ஆண்டர்சன் வியப்பான கதை வடிவில் மனித மனங்களின் உளவியலைச் சொன்னவன். இந்த இரண்டு மனிதர்களையும் வாசித்து முடிக்கையில் நாம் நமது பழைய மனவுருவத்தைத் தொலைப்பது மெல்லமெல்ல நடந்துவிடுகிறது. அந்த நொடியில் நம்மைப் பற்றியிருக்கும் குழந்தைகளுக்கான பெருவாழ்வின் புதிய பாதை திறக்கிறது.

சொல்லப்பட்டதும் சொல்லப்படாதுமாக நம்மைச் சுற்றிக் கதைகள் மிதந்தபடிக் கிடக்கின்றன. கதை சொல்லிகளும் குழந்தைகளும் மட்டுமல்ல. தெருவிளக்கும், நாணயமும், பந்தும், காய்ந்த இலையும் கூட கதையை மனதில் வளர்த்தபடி நமக்காகச் சொல்லக் காத்துக் கொண்டிருக்கின்றன. குழந்தைகளுக்கு உயர்ந்த எண்ணங்களைக் கொடுப்பது என்ற மூடநம்பிக்கை இல்லாமல் மரணம் பற்றியும் மனிதனின் அற்பகுணங்கள் பற்றியும் பலவீனங்கள் பற்றியும் யாரும் தொடுவதற்கு அரிய வாழ்வின் புதிரான மகிழ்ச்சி பற்றியும் ஆணடர்சன் கதைகள் குழந்தைகளிடம் பேச விரும்புகின்றன.

கதைகள் குழந்தைகளுக்கு மட்டும் என்ற அபத்தத்தைக் கடந்து பரந்தவெளியில் நிலத்தில் இருக்கும் அனைத்து உயிர்களுக்கும் தங்கள் சொற்களைப் பகிர்ந்து கொடுக்கின்றன. கதைகள் நிலத்தைவிட்டும், தன் நகரத்தைவிட்டும், காலத்தைவிட்டும், மேலெழுந்து நிலவிற்குச் சென்ற காலாட்டியபடி அமர்ந்துகொண்டு எப்போதும் வாழ்ந்து வருகின்றன. இன்னும் நிறைய சித்திரங்களை, கதைகள் பற்றிய நவீன சித்திரங்களை நம் மனதின் வெற்றுப் பக்கங்களில் எழுதிக்கொண்டே இருப்பவை ஆண்டரசனின் கதைகள். மனிதர்களுக்கு அழிவு இல்லை என்பதை கதைகதையாகச் சொல்லும் கதைகள் ஆண்டர்சனுடையவை.

ஆண்டர்சன் கதைகள் – ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சன் (ஆசிரியர்) , தமிழில் – யூமா வாசுகி , வெளியீடு – பாரதி புத்தகாலயம் , விலை – ரூ.195/-

Leave a comment