தஞ்சாவூர், மன்னார்குடி, பாப்பாநாடு என பஞ்சு மிட்டாய் கடந்த வாரம் நான்கு பள்ளிகளில் நண்பர்களின் உதவியால் நிகழ்வுகளில் பங்கெடுத்தும் நிகழ்வுகளை நடத்தியும் இருந்தது.இதில் மன்னார்குடியில் ஆசிரியர் மணிமாறன் அவர்களும் பள்ளி தலைமை ஆசிரியர் தேவி அவர்களும் கதைத் திருவிழாவை (முழு நாள் நிகழ்வு) ஏற்பாடு செய்திருந்தனர். அதில் எழுத்தாளர்கள் விழியன் மற்றும் விஷ்ணுபுரம் சரவணன் அவர்களுடன் பஞ்சுமிட்டாய் சார்பாக நானும் கலந்துக்கொண்டேன்.
கிட்டத்தட்ட 300+ மேலான சிறார்களை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. மன்னார்குடி தவிர மற்ற நிகழ்வுகள் 2 மணி நேர நிகழ்வுகள். கதை சொல்லல், பாடல்கள் மற்றும் விளையாட்டுகள் என சிறார்களின் மகிழ்ச்சியை மட்டும் நோக்கமாக கொண்டு நடத்தப்பட்ட நிகழ்வுகள்.நிகழ்வு முடிந்ததும் சிறுவர்கள் சூழ்ந்துக்கொண்டு சொல்லப்பட்ட கதைகளையும், பாடல்களையும் பற்றி பேச ஆசைப்பட்டனர். இது ஒரு ஆக்கப்பூர்வமாண விசயமாக பார்க்கிறேன். இந்த நிகழ்வினைப் பற்றி தகவலுக்காகவும், செய்தியாகவும் பதிவாக எழுது நினைத்து அந்த அனுபவங்களை எழுதுகிறேன்.
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, சோழகன் குடிகாடு : [ஒரத்தநாடு]
நண்பர் விஜயன் மூலம் இந்தப் பள்ளி அறிமுகமானது. (அவரது மகள் இங்கு பயிலுகிறார்.) பெற்றோர்களும் ஆசிரியர்களும் சேர்ந்து பல நன்முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கும் பள்ளி. 40 மாணவர்கள் இருந்தனர். 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை. கதைகள், பாடல்கள், விளையாட்டுகள் என மிகவும் மன நிறைவாக இருந்தது. போதுமான நேரமும், ஆசிரியர்-மாணவர்கள் ஒத்துழைப்பும் நிகழ்வை மேலும் அழகாக மாற்றியது. இது மட்டுமல்ல அன்று பள்ளியில் ஆசிரியர்-பெற்றோர்கள் சந்திப்பும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவர்களும் நிகழ்வில் கலந்துக்கொண்டு விளையாடியது சிறுவர்களை மேலும் சந்தோசப்படுத்தியது. துவக்கத்தில் பெயர் கேட்கும் போது சில சிறுவர்களுக்கு இருந்த தயக்கம் என்னுடைய பெயர் “பஞ்சு மிட்டாய்” பிரபு என்று சொல்லும் தருணத்தில் மறையத் துவங்கியது. மெல்ல மெல்ல என்னுடன் அனைவருமே எந்தவித கூச்சமுமின்றி பேசி கதையினுள்ளும், பாடல் மற்றும் விளையாட்டிலும் முழுதாக இருந்தனர். மீண்டும் அடுத்த முறை வர வேண்டும் என்று செல்லமாக கண்டிப்புடன் விடைக்கொடுத்தனர். இந்தப் பள்ளியில் கதைப் பெட்டி வைத்திருக்கிறோம். கதைப் பெட்டி மூலம் எங்களது உறவு தொடரும் என்று நம்புகிறோம். இங்குள்ள அனைத்து ஆசிரியர்கள், பெற்றோர்களுக்கு எங்களது அன்பான நன்றிகள்.
குறிப்பு : பெற்றோர்களுடன் பேசியதைப் பற்றிய விசயங்களை சிறுவர்கள் வீட்டிற்கு சென்று விசாரித்ததாக கூட ஒரு செய்தி காதுக்கு எட்டியது.
தஞ்சாவூரில் :
தஞ்சையில் இரண்டு தனியார் பள்ளிகளில் பஞ்சு மிட்டாய் நிகழ்வுகள் நடந்தது. இந்த இரண்டு பள்ளியிலும் ஒரே மாதிரி சூழல் தான் இருந்தது. தமிழ் வழி நிகழ்வினை சிறிய தயக்கத்துடனே அனுமதித்தனர். இரண்டு பள்ளிகளிலும் 1ஆம் வகுப்பு மாணவர்களை சந்தித்தேன். மாணவர்கள் போலவே ஆசிரியர்களும் இது என்ன மாதிரி நிகழ்வு என்று அறிமுகம் இல்லாமல் தான் இருந்தார்கள். ஆதலால் அங்கு ஒரு வகுப்பறை சூழலே நிலவியது. வகுப்புறை சூழலிருந்து நிகழ்விற்கான சூழலை உருவாக்கி சிறுவர்களுடன் 1 மணி நேரம் பயணித்தேன். இதை ஏன் சொல்கிறேன் என்றால் “அமைதியா இருந்தா கதை சூப்பரா கேட்க்கலாம்” என்று நான் சொன்னதும் கையை வாயின் மேல் வைத்தார்கள். அந்தச் சூழலை மாற்றுவது மிகவும் முக்கியமென நினைக்கிறேன். இங்கு விளையாடுவதற்கான சூழல் அமையவில்லை ஆதலால் பாடல் மற்றும் கதையுடனே நிகழ்வு சென்றது. இங்கு சிறார்களுக்கு மிகவும் பிடித்தது கி.ராவின் “டொக்கு” கதை. நிகழ்வு முடித்து வெளியே வரும் போதும் கதையினுள் இருந்த மந்திரத்தை சொல்லிக்காட்டி என்னை வழி அனுப்பி வைத்தனர். அனைத்து சுட்டிகளுக்கும் எனது அன்புகள். இந்த இரண்டு இடங்களிலும் ஆசிரியர்கள் பாடல்களைப் பற்றி விசாரித்தார்கள்.நானும் சில அறிமுகங்களை கொடுத்தேன். வகுப்புறைகள் புதுப்புது பாடல்கள் எதிர்காலத்தில் ஒலிக்கும் என்று நம்புகிறேன்.
மன்னார்குடியில் கதைத் திருவிழா :[நகராட்சி நடுநிலைப்பள்ளி, கோபாலசமுத்திரம்]
ஆசிரியர் மணிமாறன் மற்றும் தேவி அவர்களின் முன்னெடுப்பில் நகராட்சி நடுநிலைப்பள்ளி, கோபாலசமுத்திரம் பள்ளியில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வு. நிகழ்விற்கு மற்ற ஊரிலிருந்தும் ஆசிரியர்கள் வந்திருந்தது உற்சாகத்தை தந்தது. பள்ளியில் 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை 200 மாணவர்கள். மணிமாறன் மற்றும் எழுத்தாளர் விழியன் அவர்கள் வர சற்று தாமதாகவே நானும் எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனும் நிகழ்வினை துவங்கினோம். எங்களை வரவேற்க சுட்டிகள் இருவர்கள் எங்களைப் பற்றிய தகவல்களை எல்லோருக்கும் அழகாக சொல்லி மெல்லிய அறிமுகத்தை கொடுத்தனர்.
நிகழ்வை விஷ்ணுபுரம் சரவணன் அவர்கள் சிறிய உரையாடலிருந்து துவங்கி அப்படியே கதைக்குள் அழைத்துச் சென்றார். “ஏய் குண்டுப் பையா” என்ற குரல் கதையினுள் மட்டும் ஒலிக்காமல் அந்தப் பள்ளியில் விதவிதமாக ஒலித்தது. அவர் சிறார்களை கதையினுள் ஓட்டத்தில் குண்டுப் பையன் மூலம் அழைத்துச் சென்றார். அன்றைய தினம் முழுதும் “குண்டுப் பையன்” என்று சொன்னால் போதும் சிறுவர்கள் அனைவரும் விதவிதமாக கத்திக்காட்டினார்கள்.
அவரது கதை சொல்லலுடன், 1ஆம் முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நானும் மற்ற மாணவர்களுக்கு விஷ்ணுபுரம் சரவணனும் நிகழ்வினை துவங்கினோம். சற்று நேரத்தில் வந்த மணிமாறன் மற்றும் விழியன் அவர்களும் கலந்துக்கொண்டு நிகழ்வை அலங்கறித்தனர்.
ஒவ்வொரு நிகழ்விலும் சிறார்களுக்கு ஏதாவது ஒரு விசயம் பிடித்துவிடும். இந்த நிகழ்வில் நான் பாடிய அனைத்துப் பாடலையும் சிறுவர்கள் ரசித்தனர். ஒரு வாண்டு அடிக்கடி என்னிடம் வந்து “அந்த வாழை மரம் ஏறி வழுக்கி விட்ற பாடலை மறுபடியும் பாடுங்க” என்று முகத்தில் புன்னகை பொங்க கேட்டுக்கொண்டே இருந்தான். இந்தப் பக்கம் கதை, பாடல், விளையாட்டுப் போலவே அந்தப் பக்கமும் கதை சொல்லல், வாசிப்பு என விழியன் மற்றும் சரவணனும் நிகழ்வை அருமையாக எடுத்துச் சென்றனர். அதேப் போல் நிகழ்வின் முடிவிலும் பாடலுடன் தான் முடித்திருந்தோம். 6ஆம் வகுப்பிற்கு மேலுள்ள சிறார்களும் பாடல் கேட்டு என்னை பாடவும் ஆடவும் வைத்தனர். அவர்களுக்கு பெரியோர்கள் ஆடிப் பாடுவது அவ்வளவு மகிழ்ச்சியையும் சிரிப்பையும் வர வைத்தது.
இறுதியில் அனைத்துச் சிறார்களை ஒன்றாக அமர வைத்திருந்தோம். விழியன் அவர்களின் முயற்சியில் பள்ளிக்கு சிறார் இலக்கிய புத்தகங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டது. அதனுடன் பஞ்சு மிட்டாய் இதழும் தரப்பட்டது. விழியன் அவர்கள் புத்தகம் பேசுது பாடலைப் பாடி அசத்தினார். பள்ளிக்கு வந்திருந்த ஓய்வு பெற்ற கல்வித்துறை அதிகாரியான அய்யா மாரியப்பன் அவர்கள் சிறுவர்களுக்கு ஒரு பாடலை அருமையாக ஆடிப் பாடி மகிழ வைத்தார். அவர் சிறுவர்களை பாடலுடன் எடுத்துச் சென்ற விதம் எங்களையும் உற்சாகப்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக பாவண்ணன் அய்யா அவர்கள் பஞ்சுமிட்டாய் இதழுக்கு எழுதிய குர் குர் பாடலை பாடியும் ஆடியும் நிகழ்வை முடித்தோம். நிகழ்வு முடிந்ததும் சிறுவர்கள் எங்கள் அனைவரிடம் அன்பாக விடைப்பெற்று சென்றார்கள்.
சில வீடியோ காட்சிகள்:
5ஆம் வகுப்பு கீழேயுள்ள சிறார்களுக்கான நிகழ்வில் ஒரு கட்டத்தில் சிறுவர்களுக்கு வாசிக்க ஏதாவது கொடுக்க வேண்டுமென்ற நிலை இருப்பதாக தோன்றியது. என்னிடம் அப்போது பஞ்சுமிட்டாய் இதழுக்காக வைத்திருந்த நோட்டிஸ் இருந்தது. அதைக் கொடுத்தேன். கொடுத்ததும் ஒவ்வொரு சுட்டியும் ஆர்வமாக வாசித்தனர். அது நான் ஏற்கனவே பாடிய பாடல் என்பதாலும் மிகவும் எளிமையானது என்பதாலும் அவர்கள் அதை நெருக்கமாக நினைத்திருக்க கூடும். வாசிப்பதில் எந்தவித தயக்கமுமின்றி அதனை வாசித்தனர். வாசித்துவிட்டு அருகில் ஆசிரியர் கையில் வைத்திருந்த பஞ்சு மிட்டாய் இதழ் மீது அவர்களது பார்வை திரும்பியது. “எங்களுக்கு அந்தப் புக் தர மாட்டீங்களா?” என்று சில குரல்கள். கையில் புத்தகம் இல்லாததாலும் அத்தனைப் பேருக்கும் தருவது எளிதானதில்லை என்பதாலும் பள்ளிக்கு கொடுத்த புத்தகத்தை பற்றி சொல்லி சமாளித்தேன். ஆனால் மனம் அவர்களுக்குள் எழுந்த ஆர்வத்தை நினைத்துக்கொண்டே இருக்கிறது.
விரைவில் அந்தப் பள்ளியில் ஒவ்வொரு குழந்தைக்கும் பஞ்சு மிட்டாய் இதழ் சேர இருக்கிறது. அதன் தகவல்கள் விரைவில் பகிர்கிறோம். அதேப் போல் பஞ்சு மிட்டாய் சார்பில், பள்ளி அழகான கதைப் பெட்டி ஒன்றினை வைத்திருக்கிறது. பெட்டி நிறைந்து அடுத்த இதழ் அந்தச் சுட்டிகளின் படைப்பில் வெளிவரட்டும்.
மற்ற நிகழ்வுகள் :
கடந்த வாரம் தமிழகமெங்கும் பல்வேறு சிறார் நிகழ்வுகள் நடந்திருக்கிறது என்ற செய்தி ஆக்கப்பூர்வமான எதிர்காலத்தை கண் முன்னே காட்டுகிறது. சிவகாசியில் தியாக சேகரின் ஓரிகாமி, திருப்பூரில் (யோகி செந்தில்) கி.ரா குழம்பு நாடகம், கும்பகோணத்தில் வாசிப்பு முகாம், விழியன், விஷ்ணுபுரம் சரவணனின் தொடர் பயணங்கள், சென்னையில் (இனியன் & கதை சொல்லி சதீஸ்) வாசக சாலியின் நிகழ்வு, கோவையில் குட்டி ஆகாயம் குழுவின் திரையிடல் நிகழ்வு என அக்டோபர கடைசி வாரம் சிறார்களுக்கானதாக இருந்திருக்கிறது.
தொடர்ந்து பயணிப்போம் நண்பர்களே…