குட்டி ஆகாயம் சிறார் காலாண்டு இதழ் – அறிமுகம்

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

குழந்தைகள் என்ன சிந்திப்பார்கள்? என்னவெல்லாம் சிந்திப்பார்கள்? எவ்வாறெல்லாம் சிந்திப்பார்கள்? இரண்டு வருடத்திற்கு முன்பு ஒரு மருத்துவமனையில் நாள் முழுவதும் இருக்க வேண்டிய சூழ்நிலையில் என் பிள்ளைகள் இருவரும் நாள் முழுவதும் உற்சாகக் குறைவு சிறிதுமின்றி விளையாடிக் கொண்டிருந்தனர்.

என்னை விட அதிகமாக மாடிகளை அதிகமாகவும், வேகமாகவும் ஏறினார்கள், இறங்கினார்கள், ஓடினார்கள். இவர்களுக்கு மட்டும் நாள் முழுவதும் ஆற்றல் எப்படி கிடைக்கிறது என யோசித்தபோதே , புரிந்தது. அந்தந்த நிமிடத்தை அந்தந்த நிமிடத்தில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் குழந்தைகள் என்று. கடந்தகால எதிர்கால சிந்தனைகளே உடல் ஆற்றலை பெரிதும் இழக்கச் செய்யும். உண்மைதானே? குழந்தைகள் ஆற்றலின் மூலங்கள். படைப்பாற்றல் இயல்பாகவே அவர்களிடம் இருக்கும். ஏதும் சொல்லித்தந்து கற்றுக்கொள்ள வேண்டியதில்லை அவர்களுக்கு.

கற்றல் என்பதை இயல்பாக்கிக்கொண்டு, கற்றதையே மாற்றுக்கோணத்தில் பார்க்கும் ஆற்றல் உள்ளவர்கள் குழந்தைகள். அந்த படைப்பாற்றலை, மாற்றுக்கோணத்தை அறிமுகப்படுத்துவதுதான் பெற்றோர் மற்றும் சமுதாயத்தின் கடமை.குழந்தைகளின் உலகத்தில் யாரும் அனுமதியின்றி நுழைந்துவிட முடியாது.ஆனால் அவர்கள் விரும்பி நுழையும் உலகம் கதைகள்.

கதைப் புத்தகங்கள் என்றாலே என் நினைவில் வருவது அம்புலி மாமா புத்தகமே.
சிறிய வயதில் அம்புலி மாமா புத்தகக் கதைகளை படிப்பேன். அந்தப் புத்தகத்தின் வடிவாக்கமே சிறப்பு தற்போது யோசிக்கும்போது. பெரிய பெரிய எழுத்துகளில் படங்களுடன் சிறிய சிறிய பத்திகளாகப் பிரித்து வடிவமைக்கப்பட்டிருக்கும்.படிப்பதற்கான ஆர்வத்தை ஏற்படுத்துவதில் இந்த வடிவமைப்பு பெரும் பங்காற்றியது என நினைக்கிறேன்.

தற்போது என் பிள்ளைகளுக்காக சிறுவர் இதழ்களைத் தேடியபோது இணையத்தில் குட்டி ஆகாயம் மற்றும் பஞ்சுமிட்டாய் புத்தகங்களைப் பார்த்தேன்.  குழந்தைகளுக்கு கற்பித்தலை நோக்கமாகக் கொள்ளாமல் இயல்பாக அவர்களின் படைப்பாக்கங்களையே பெற்று, பெரிய பெரிய எழுத்துகளில் கதைகளும் அவற்றுக்கான ஓவியங்களுமென குழந்தைகளின் கைகளில் தவழச் செய்கின்றனர்.. 10 வயதிற்கும் குறைவான குழந்தைகளுக்கு மிக நீண்ட வாக்கியங்களையும், தொடர்களையும் கண்டாலே வாசிப்பதில் தயக்கம் கூட ஏற்படலாம்.

குட்டி ஆகாயம் கதை புத்தகங்கள் பொருத்தமான வண்ணப்படங்களையும், அழகான குட்டிக் குட்டிக் கதைகளையும் கொண்டிருக்கிறது. இதனால் பிள்ளைகள் ஆர்வமுடன் படித்துவிடுகின்றனர்.படங்களை மட்டுமே வரைந்தும் பார்க்கின்றனர். படங்களை மட்டும் பார்த்து அவர்களே வேறொரு கதைச்சொல்லாக்கமும் புனைகின்றனர். என் பள்ளி மாணவர்கள் என் வகுப்பிலேயே அரைமணி நேரத்தில் படித்து முடித்துவிடுவதால், தான் ஒரு முழுப் புத்தகத்தை படித்த தன்னம்பிக்கையும்,அடுத்த புத்தக வாசிப்புக்கான ஆயத்த மனநிலையையும் பெறுகின்றனர். படைப்புத்திறனை வளர்க்கவும், தங்கள் படைப்புகளை புத்தகங்களில் காணும்போது, தாங்கள் சிறிய வயதிலேயே அத்தகைய ஆற்றல் பெற்றிருக்கிறோம் என்பதை அறியும்போது மாணவ மற்றும் குழந்தைகள் சமுதாயத்தில் ஒரு நல்ல பாஸிடிவ் மாற்றம் தென்படுகிறது.

குழந்தைகளை நட்சத்திரங்களாக்கி மின்ன வைக்கும் இத்தகைய குட்டி ஆகாயங்கள் ஒவ்வொரு குழந்தைக்கும் நிழல் தந்து, ஒளி தந்து, வானமாய் விரிந்து தன்னைத் தொட்டுச் செல்லும் பறவையாய் குழந்தைகள் மனதில் சிறகை முளைக்கவிடுகின்றன.

குட்டி ஆகாயம் ஒவ்வொரு குழந்தைக்குமான வானம்தான்.

குட்டி ஆகாயம் பற்றின குறிப்புகள்:

குட்டி ஆகாயம் சிறார் காலாண்டு இதழ் கடந்த 2 வருடங்களாக 6 இதழ்களை வெளியிட்டுள்ளது(2018 ஆகஸ்ட் வரை). முதல் இதழ் மே 2016 அன்று வெளியானது. குழந்தைகளுக்கான பெரியவர்களின் படைப்புகளும் குழந்தைகளின் படைப்புகளும் இணைந்து புத்தகம் உருவாகிறது. ஒவ்வொரு இதழும் குறிப்பிட்ட சில விசயங்களை மையமாக வைத்து வெளியாகிறது. குறும்புசெய்யும் குழந்தைகள் குறித்தும், தாமிரபரணி நதி குறித்தும், ஒளிப்படக்கலை, பயண அனுபவம் மற்றும் கடித இலக்கியம் குறித்தும் இதழ்கள் வெளிவந்துள்ளன. கடைசியாக வந்துள்ள ஆறாம் இதழ் மே 2018 அன்று வெளியானது.

10 இதழ்கள் சந்தா : 400/- . தொடர்புக்கு :  98434 72092,96054 17123 |  vaanamtheexistence@gmail.com

Leave a comment