வாங்க சொதப்பலாம் – “பஞ்சு மிட்டாய்” பிரபு

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

பொம்மை டென்னிஸ் பேட்டை எடுத்தாள்(தன்யஸ்ரீ வயது 6), அடுத்து கயிறு போன்ற ஒன்றை எடுத்தாள். அந்த டென்னிஸ் பேட்டின் இடையெனில் கயிறை கோற்றாள். முதல் கயிறு முடித்ததும் அடுத்து அடுத்து என இரண்டு மூன்று கயிறுகளை கோற்றுமுடித்தாள். இவை அனைத்துமே வீட்டாரின் “இப்படியா டென்னிஸ் பேட்டை வைச்சு விளையாட்றது” என்ற கேள்வி அவளிடம் வரும் வரை தொடர்ந்தது.

இதே போல் மற்றொரு சம்பவம்,அவள் தனது சிறிய அடுப்படியில் சத்தமில்லாமல் ஏதோ செய்துக் கொண்டிருந்தாள். சின்ன சின்னதாக இருந்த ப்ளாஸ்டிக் சொப்பு பாத்திரங்களை வைத்து தடபுடலாக சமையல் செய்துக்கொண்டிருந்தாள். ஆனால் அவளுக்கு பாத்திரத்தினுள் எதுவுமில்லாமல் சமைப்பது சற்றே சோர்வைக் கொடுத்திருந்தது. அதனால் அவளே காய்கறி,அரிசி மற்றும் இதர சமையலுக்கு தேவையாக அனைத்தையும் காகிதத்திலிருந்து தாயரித்திருந்தாள். காகிதங்களை துண்டுகளாக அந்த பிஞ்சு கைகளால் கிழித்தாள். ஒரு பாத்திரத்தில் சோறாக அது மாறியது, மறு பாத்திரத்தில் குழம்பின் காய்கறிகளாக மாறியது. இன்னும் சூப்,ஐஸ்க்ரீம்,காபி என பலவிதமான விருந்து பதார்த்தங்கள் உருவானது. ஆனால் இவை அனைத்தையும் சமைக்க அவளுக்கு தண்ணீரும் தேவையாக இருந்தது. உடனே அருகிலிருந்து தண்ணீர் எடுத்து வந்தாள். எடுத்து வருகையில் அது வீடெங்கும் சிந்தியது. அப்பொழுது தான் அவள‌து சமையல் வீட்டிலிருப்போரின் கண்களில் பட்டது. தண்ணீர் வைத்து விளையாடாதே என்றும் கிழித்த பேப்பர் துண்டுக்கள் எதற்கு என்ற கேள்விகள் அவளது விளையாட்டை இடமறித்தது.

இதுப் போன்று விளையாட்டுகளை கவனிக்கும் போதெல்லாம் எனக்கு சுவாரஸ்யமாக தோன்றுவது அதிலுள்ள கற்பனையும் அதில் அரங்கேறும் சிறிய நாடகமும் தான். குறிப்பாக‌ சமையல் விளையாட்டு ,  பாடம் எடுக்கும் விளையாட்டு,பெற்றோர்கள் போல் நடித்துக் காட்டும் அப்பா-அம்மா விளையாட்டு,வண்டி ஓட்டும் விளையாட்டு இவை அனைத்திலும் பெரியோர்களாக கற்பனை செய்து அவற்றின் பிம்பங்களாக அவர்கள் இருப்பதை கவனிக்க முடிகிறது. இந்த கற்பனையை குறித்து ஜான் ஹோல்ட்

“யதார்த்த உலகில் இருந்து விலகுவதற்காக அல்ல;அந்த உலகினுள் நுழைவதர்காக குழந்தைகள் அதீத புனைவுகளைப்(கற்பனைகளை) பயன்படுத்துகிறார்கள்” என்று குறிப்பிடுகிறார்.

மேலும் சிறுவர்களின் புனைவுகளையும் பெரியோர்களால் சிறுவர்கள் மீது திணிக்கப்பட்ட புனைவுகளையும்(சூப்பர்மேன்,சோட்டா பீம்,சக்திமான் போன்ற கதாப்பாத்திரங்களும் இதில் அடங்கும்) இவ்வாறு வேறுப்படுத்தி காட்டுகிறார்.

“குழந்தைகள் உளவியல் துறையில், குழந்தைமை பேராற்றல் குறித்து ஏராளமாகப் பேசப்பட்டுள்ளது. யதார்த்த உலகிலிருந்து விடுபட்டு எந்த உலகில் தம்மால் காரியங்களை ஆற்ற முடியுமா,அவ்வுலகதிற்குள் செல்வதற்கான வழியாகக் குழந்தைகள் அதீதபுனைவு உள்ளது என்ரு அந்த உளவியல் கூறுகிறது. ஆனால் குறைந்தபட்சம் தொலைக்காட்சிகளின் அதீதப் புனைவுகள் அறிமுகமாதல் வரையாவது அவர்களது பேராற்றல் உள்ளவர்களாக விரும்புவதில்லை. ஆற்றல் ஆற்றவர்களாகவும் விரும்பவில்லை. தம்மை சுற்றியுள்ள பெரியவர்கள் மேற்கொள்ளு செயற்பாடுகளைப் படித்தல்,எழுதுதல்,பல இடங்களுக்குச் செலுத்துதல்,கருவிகள்,இயந்திரங்களைக் கையாளுதல் போன்ற செயபாடுகளைத் தாங்களும் மேற்கொள்ள விரும்புகிறார்கள்.”

மேலே சொன்ன இரண்டு சம்பவங்களைப் போன்றே தனது வாழ்வில் சந்தித்த சிறுவர்களை வைத்தும்,நண்பர்களின் அனுபவங்களை கொண்டும் தனது சிறுவயது நினைவுகளை கொண்டும் ஜான் ஹோல்ட் இந்தப் புத்தகத்தில் நம்மிடையே பேசுகிறார். அதுவே சிறார் விளையாட்டுகளிலுள்ள கற்பனை உலகின் முக்கியத்துவத்தையும் அந்த கற்பனை உலகத்தின் கட்டமைப்பின் மீது பெரியோர்களுக்கு எந்தவித உரிமையும் கிடையாது என்பதையும் நன்கு உணரச் செய்கிறது.

மேலே சொன்ன டென்னிஸ் பேட் விளையாட்டில் ஒரு விடயத்தை கவனிக்க முடிகிறது. ஒரு விளையாட்டு பொருளை அதன் விளையாட்டு முறையில் தான் பயன்படுத்த வேண்டுமென்ற எதிர்ப்பார்ப்பு பெரியோர்களுக்கு இருக்கிறது. சிறார்கள் தங்கள் விருப்பம் போல் பயன்படுத்த நிறைய தடைகள் இருக்கிறது. சிறுவர்களுக்கும் விளையாட்டுப் பொருட்களுக்குமான தொடர்பினைப் பற்றி சொதப்புதல் என்ற தலைப்பில் விரிவாக பேசுகிறார். ஒரு விளையாட்டு பொருளை சிறுவர்களுக்கு அறிமுகம் செய்யும் போது முதலில் அதனுடனான தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள அவர்களை அனுமதிக்க வேண்டும் என்கிறார். அந்தப் பொருளுடனான தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளும் காலத்தை விளையாட்டின் சொதப்புதல் நிலை என்று குறிப்பிடுகிறார்.

விளையாட்டு பொருட்களுடனான தொடர்பு என்றால்,விளையாட்டு பொருளை சிறுவர்களுக்கு கொடுத்துவிட்டு பெரியோர்கள் எந்தவித விளக்கமும் தராமல் ஒதுங்கிக் கொள்ள வேண்டும் என்கிறார். உதாரணமாக ஒரு puzzle விளையாட்டு வாங்கிக்கொடுத்தால் அதனை இப்படித் தான் சேர்க்க வேண்டும் என்று சொல்லித் தராமல் முதலில் அவர்களது கையில் அதை கொடுத்து நாம் ஏதும் சொல்லாமல் விளகிவிட வேண்டும். அந்தப் பொருளுடன் சிறுவர்கள் எது வேண்டுமானாலுல் செய்துக்கொள்ள விட்டுவிட வேண்டும். அதை வைத்து அவர்கள் ரயில் விளையாட்டு விளையாடலாம் அல்லது வேறு எது வேண்டுமானாலும் செய்யலாம். இதைத் தான் ஜான் ஹோல்ட் சொதப்புதல் என்று குறிப்பிடுகிறார்.

இந்தச் சொதப்புதல் நிலையை அவர் விளையாட்டுடன் மட்டும் தொடர்புப்படுத்தவில்லை விளையாட்டில் துவங்கி, கணிதம், மொழி, எழுத்து, கலைகள், கல்வி என அனைத்துவிதமான கற்றலிலும் முக்கியமான இடத்தினைப் பிடித்திருக்கிறது என்கிறார். எங்களது பஞ்சுமிட்டாய் சிறார் நிகழ்வில் கூட இந்த நிலையை தான் கையாள்கிறோம் என்று தோன்றுகிறது. பெங்களூரில் எங்கள் பகுதி சிறுவர்களுக்கு தமிழுடனான தொடர்பு இப்படித் தான் ஏற்பட்டிருக்கிறது. முதலில் தமிழுடனான தொடர்பை கதைகள்,பாடல்கள்,உரையாடல்கள்,விளையாட்டுகள் மூலம் ஏற்படும் சூழலை நாங்கள் பார்த்துக்கொண்டோம். அதுவே இன்று சிறுவர்களுக்கு தமிழுடனான‌ ஒரு இணக்கத்தை உருவாக்கி இருக்கிறது. தமிழை ஆர்வத்துடன் எழுத்துக்கூட்டி வாசிக்கும் படியும் செய்திருக்கிறது. இது ஜான் ஹோல்ட் கூறிய சொதப்பல் நிலையின் வெற்றி என்று சொல்வேன்.

தமிழ் மொழிக்கான அவசியத்தை வெவ்வேறு வடிவத்தில் ஏற்படுத்தியிருந்தோம் அதேப் போல் மொழியுடன் சிறுவர்கள் பழக (சொதப்ப) சந்தர்ப்பங்கள் நிறைய இருந்தது. சிறுவர்களுக்கும்-பெரியோர்களுக்குமான  உரையாடல்கள் தமிழிலே இருக்கும்படியும் பார்த்துக்கொண்டோம். இதுவே அவர்களுக்கு தமிழ் மொழியின் தேவையை உணர்த்தியது என்று நம்புகிறோம். நடைமுறையில் அவர்கள் மொழிக்கான தேவையை உணர்வதால் அதனுடனான அவர்களது தொடர்பும் எளிமையாக இருந்ததால் அவர்கள் அதனை ஏற்றுக்கொண்டதாகவே பார்க்கிறோம்.

சொதப்பல் நிலையால் கிடைத்த அனுபங்களைப் போன்று சொதப்பல் நிலையில்லாத காரணத்தினால் விளையாட்டை முழு ஈடுப்பாட்டுடன் ஆட முடியாத தனது அனுபவங்களையும் நம்முடன் பகிர்கின்றார். சொதப்பல் நிலையில்லாத காரணத்தினால் அந்த விளையாட்டு பொருளின் மீதோ அல்லது அந்த கற்றல் மீதோ ஏற்படும் அச்சத்தைப் பற்றி அவர் கூறியது மிகவும் முக்கியமானது. சமீபத்தில் பள்ளி ஒன்றினுக்கு சென்றிருந்தேன். கதைகள்,ஆட்டம் பாட்டம்,விளையாட்டு என நிகழ்வு கலைக்கட்டியது. கதைகளில் வரும் சிங்கம் மற்றும் குருவியைப் போன்று குரலை மாற்றி பேசியதும் சிரிப்பொலிகள் அரங்கை நிறைத்தது. அதேப் போல் எலி-பூனை,குலை குலையா முந்திரிக்கா,பூப்பறிக்க வருகிறோம் விளையாட்டுகளில் சிறுவர்கள் ஆடி அசத்தினர். அவர்களுக்கு பஸ் என்ற‌ புது விளையாட்டை அறிமுகம் செய்தேன். அதுவரை எனதருகிலே சுற்றிக் கொண்டிருந்த சிறுவன் திடிரென தலைத் தெறிக்க ஓட்டம் பிடித்தான். அருகிலிருந்த நண்பர்  தான் அவனைப் பார்த்திக்கொள்வதாகச் சொன்னார்,நான் விளையாட்டை தொடர்ந்தேன். நிகழ்வு முடியும் வரை அந்த இருவரும் கண்ணில் படவில்லை. பிறகு நண்பரிடம் விசார்த்தப் பொழுது தான் தெரிந்தது,”என்ன அந்த மாமா வரிசையா நம்பரெல்லாம் சொல்லச் சொல்றாரு அதுவும் 100 வரைக்கும்..நம்ளால முடியாதுப்பா” என்று சொல்லியிருந்தானாம். எண்கள் அவன் மீது எவ்வளவு பயத்தினை விடவும் ஒருவித‌ வன்முறையை செலுத்துகிறது என்று தான் கூற வேண்டும். எண்கள் மீதான பயம் தான் கணக்கின் மீதான பயமாகவும் உருமாறுகிறது. இந்தச் சம்பவத்தை நினைக்கும் போதெல்லாம் கல்வியில் சொதப்பல் நிலையின் அவசியத்தை என்னுள் உணர்த்துகிறது. சொதப்பல் நிலையில் தான் குழந்தைகள் ஒருவித அன்பையும் நேசத்தையும் உணருகிறார்கள். அந்த அன்பையும் நேசத்தையும் குறித்து

“பல் சக்கரகங்கள்,துரும்புகள்,இலைகள்,குழநதைகளின் உலகை நேசிக்கின்றன. இதனால் அதைப்பற்றி அந்த உலகைப் பற்றி கற்றுக்கொள்ள மிகவும் விரும்புகிறார்கள். அது அன்பாக,நேசமாக இருப்ப‌தால்,அதில் தந்திரங்களோ,புதிய தொழில்நுட்பச் சிந்தனைகளோ இல்லை. எல்லா கற்றல்களும் இதயத்தில் பதிந்துள்ளன. அந்த அன்பு,நேசத்தின் மூலமாக குழந்தைகள் கற்றலை நிகழ்த்த நாமாகவே அவர்கள் பக்கமாக நெருங்கிச் செல்ல இயலுமா? “

என்று பல ஆண்டுகளுக்கு முன்பு ஜான் ஹோல்ட் எழுப்பிய‌ கேள்வி இன்று என்னுள் உரக்க கேட்கிறது.

நன்றி : புத்தகம் பேசுது, குழந்தைகள் குறித்த உரையாடல்

Leave a comment