குழந்தைகள் உணவு அவர்களின் உரிமை – சரவணன் பார்த்தசாரதி

கடந்த சில நாட்களாக எனது நண்பர்கள் சிலரின் புலம்பல்களைக் கேட்க நேர்ந்தது. அவற்றில் பெரும்பாலான புலம்பல்கள் – அவரவர் குழந்தைகளின் கல்வியைச்சுற்றியே அமைந்திருந்தன. எப்போதும்போல் தமிழர்களிடையே ‘கல்வி நம்மை விடுதலை செய்யும்’ என்ற உணர்வு நிறைந்திருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கத்தான் செய்தது. ஆனால் இன்னொருபுறம், அக்குழந்தைகளின் உணவு உரிமைபற்றி இவர்கள் யாரும் கவனத்துடன் பேசுவதில்லை என்பதையும் என்னால் உணரமுடிந்தது.

குழந்தைகளின் முறைசார்ந்த கல்வி, அதற்கு வெளியில் அமைய வேண்டிய முறைசாராக் கல்வி ஆகியனபற்றிய விவாதங்கள்கூட நிகழ்ந்து வருவதைக் காணலாம். ஆனால் குழந்தைகளின் சிந்தனை வளம் சார்ந்த தேவைகளை அதிகமும் பேசி, உடல் நலன் சார்ந்த விஷயங்களைப் புறக்கணிக்கும் ஒரு தலைமுறையாக நாம் இருக்கிறோமோ என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க இயலவில்லை.

குறைந்தது பாதிப்பேராவது தங்கள் குழந்தைகளின் உணவுத்தேவை குறித்த புரிதலுடன் இருப்பார்கள் என்று நான் நினைத்திருந்தேன். அந்நோக்கில் நான் சில கேள்விகளை பெற்றோரிடம் கேட்க, அதற்குக் கிடைத்த பதில்கள் அதிர்ச்சி அளித்தன. அவர்களில் பெரும்பாலோர், தங்கள் குழந்தைகளின் உணவு மற்றும் உடல்நலன்பற்றிய அக்கறையின்றி இருப்பது தெரியவந்தது.

‘தினசரி சமைக்க வேண்டுமா?’ என்ற கேள்வி என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது என்றால், வாரம் இருமுறை சமைத்து அதை குளிர்சாதனப்பெட்டிக்குள் வைத்து உண்ணும் வழக்கம் பெற்றோரிடையே இருப்பதையும் இப்போதுதான் நான் அறிந்துகொண்டேன். இன்னொருபுறம், பள்ளிகளிலேயே உணவு வழங்கப்படுவதாகவும், நம்முடைய பங்கு ஆண்டுக்கட்டணம் கட்டுவதோடு முடிந்தது என்றும் சிலர் பெருமையாகக் கூறினர். அப்படியான இடத்தில் சேர்க்கும் அளவிற்குப் பணம் இல்லையென்பது வேறு சிலரின் கவலையாக இருந்தது. கிட்டத்தட்ட வெளியில் இருக்கும் நிறுவனங்களுக்குத் தேவையான தொழிலாளர்களை உற்பத்தி செய்துதரும் எந்திரங்களாகப் பெற்றோர் இருக்க, அவர்களை உருக்கி உருவாக்கும் வேலையைப் பள்ளிகள் செய்கின்றன.

குழந்தைகளைப் பெற்று வளர்ப்பது என்பது எந்திரங்களை உருவாக்கும் வேலையல்ல. மாறாக அது ஒரு பொறுப்புணர்வுடன் தொடர்புடைய பணி. குழந்தைகளுக்குத் தேவையான சத்துகள், அவர்களுக்குப் பிடித்த உணவுகள், நோயெதிர்ப்பு சக்தியை அளிக்கும் உணவுகள் ஆகியனபற்றியெல்லாம் யோசிக்காமல் கூண்டுகளில் வளரும் பிராய்லர் கோழிகளுக்கு உணவு புகட்டப்படுவதுபோல் இக்குழந்தைகளுக்கு உணவு வழங்கப்படுகிறது. அவர்களும் பிராய்லர் கோழிகள் போலவே உயிருணர்ச்சியற்ற நோஞ்சான் மனிதர்களாக வளர்கின்றனர்.

கிட்டத்தட்ட அரசுப்பள்ளிகள் தவிர்த்த ஏனைய பள்ளிகள் அனைத்திலுமே அசைவ உணவிற்கு எழுதப்படாத தடையுள்ளது. தானே உணவிடும் தனியார் பள்ளிகள் இம்முறையை நேரடியாக நடைமுறைப்படுத்துகின்றன என்றால் ஏனைய பள்ளிகள் அசைவ உணவைக் கொடுத்துவிடாதீர்கள் என்று பெற்றோரை ‘செல்லமாக’ மிரட்டுகின்றனர்.

குழந்தைகள் கொண்டுவரும் அசைவ உணவு நாறுகிறது. மேலும் அவர்கள் அவற்றைச் கீழே சிந்திவிடுகின்றனர் என்று அதற்கு அவர்கள் கூறும் காரணங்கள் மிகவும் நகைப்புக்கு உரியன. அசைவ உணவு மட்டுமா நாறுகிறது என்றோ, நாறாத அசைவ உணவினைக் கொண்டுவர அனுமதிக்கலாமே என்றோ, சிந்தாமல் உண்ணும் வழக்கத்தைக்கூட குழந்தைகளுக்குக் கற்றுத்தர இயலாத பள்ளிகள் வாழ்வியல் சார்ந்து எதை அவர்களுக்குக் கற்றுக்கொடுத்துவிடுவார்கள் என்றோ கேள்விகள் எழுப்பினால் முறையான பதிலேதும் தரப்படாது. ஆனால், வேறு பள்ளிக்குச் சென்றுவிடுங்கள் என்ற அதிகார மமதை மிக்க பதில் தவறாமல் கிடைக்கும்.

இதுபோக உணவு அட்டவணை என்ற ஒன்றை அவர்கள் தருகிறார்கள். அதில் எந்தவோர் அசைவ உணவும் இடம்பெறாது எனும் நிலையில் ‘சரிவிகித உணவு’ என்ற முழக்கத்துடன் எடுக்கும் இந்நடவடிக்கை கேலிக்கூத்தாக மட்டுமே நீடிக்கிறது. என்னுடைய குழந்தைக்கு என்ன உணவு அளிக்கப்பட வேண்டும் என்று யாரும் என்னிடம் கூற முடியாது என்ற அடிப்படை உணர்வு பெரும்பாலான பெற்றோருக்கு இருப்பதில்லை. இதற்குப் பலியாவது குழந்தைகளின் உடல் மற்றும் மனநலன்தான்.

இடைவேளையில் கொறிப்பதற்கு என்னென்ன உணவுகள் கொடுத்துவிடப்பட வேண்டும் என்று பட்டியலிடும் பள்ளிகள் இருக்கின்றன. சாக்லேட், சிப்ஸ், பீட்ஸா போன்ற ‘குப்பை உணவுகளைக்’ கொண்டுவரக்கூடாது என்று கடுமையாகக் கூறும் இப்பள்ளிகள் மதிய உணவாக நூடுல்ஸை அனுமதிப்பது என்னமாதிரியான கோமாளித்தனம் என்று எனக்குப் புரியவில்லை.

நீண்டநேரம் உரையாடியபிறகுதான், இது பெற்றோர்-பள்ளி இடையிலான புரிந்துணர்வு என்பது எனக்குத் தெரிந்தது. எளிதாகச் சமைக்கக்கூடிய துரித உணவுகளைப் பெற்றோராகிய நீங்கள் சமைத்துக் (??????) கொடுத்துவிடுங்கள். ஆனால் அதே சமயம் அசைவம் கூடாது என்பதில் எங்களுக்கு ஒத்துழையுங்கள் என்பதே பள்ளிகளின் கோரிக்கை. இது ஒரு வகை வின்-வின் (Win-win) நிலைதான். ஆனால் மாணவர்கள் உடல்நிலை மட்டும் தோல்வியடையும். அதைப்பற்றி நமக்கென்ன? யார் அதைப்பற்றிப் பேசப்போகிறார்கள்?

ஒருபுறம் அசைவ உணவின் மீதான தாழ்வுணர்ச்சியை இவை கட்டியமைக்கின்றன; இன்னொருபுறம் வளர் பருவத்தினருக்குக் கிடைக்கவேண்டிய ஊட்டச்சத்துகள் சரிவரக் கிடைப்பதில்லை. இப்படியாகக் குழந்தைகளின்மீதான இன்னோர் அடக்குமுறை ஏவப்படுகிறது.

உணவு என்பது அவரவர் உரிமை. குழந்தைகள் என்பதற்காக அவ்வுரிமையை மறுப்பதற்கு பெற்றோர் அல்லது ஆசிரியராகிய நமக்கு எவ்வித உரிமையும் கிடையாது. பெற்றோர் அவரவர் குழந்தைகளின் உரிமையாளர் கிடையாது – பாதுகாவலர் மட்டுமே. ஆகவே இன்றிலிருந்தாவது சத்துள்ள, சரிவிகித, விருப்பம் சார்ந்த உணவுகளை அவர்களுக்கு அளிக்க முயல்வோம். அதன் வழியே அவர்களின் உடல் மன ஆரோக்கியத்தைப் பேணுவோம்.

ஏனெனில் ஏட்டுக்கல்வி மட்டுமே நம்மை விடுதலை செய்துவிடாது. உரமான உடலும், வலுவான மனமும் கொண்ட ஒருவனையே கல்வி விடுதலை செய்யும்.

Leave a comment