மகிழ்ச்சி! – பஞ்சு மிட்டாய் 7ம் இதழ் குறித்து நண்பர்கள்

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

மகிழ்ச்சி: சமீப காலமாக குழந்தைகளுக்கான சிறுபத்திரிகைகள் அதிகமாக வெளிவந்து கொண்டிருப்பது மகிழ்ச்சியான விஷயம்.

கேரளத்தில் வயதுவாரியாக குழந்தைகளுக்கு பத்திரிகைகள் வருவதைப்பற்றியும் தமிழில் அப்படியான முயற்சி இல்லையே என்ற ஆதங்கத்தையும் கடந்த இருபது வருடங்களாக சொல்லிக்கொண்டிருப்பது வழக்கம். அந்தக்குறையைத் தீர்க்க வந்திருக்கும் பத்திரிகையாக பஞ்சு மிட்டாய் சிறுவர் இதழ் வெளிவந்து கொண்டிருக்கிறது..

முதல் இதழிலிருந்தே வாசித்து வருகிறேன். இதழுக்கு இதழ் வண்ணமயமான வடிவமைப்பிலும், உள்ளடக்கத்திலும் மெருகேறிக்கொண்டே வருகிறது. பத்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான பத்திரிகையாக வெளிவந்து கொண்டிப்பது் பஞ்சு மிட்டாய். இதழின் மிக முக்கியமான சிறப்பு

குழந்தைப்படைப்பாளிகளின் ஓவியம், பாடல், கதை, என்று குழந்தைகளின் உலகத்திற்குள் நம்மைக்கூட்டிச்செல்கிறது. அவர்களுடைய மனவுலகை புரிந்து கொள்ள முடிகிறது. அத்துடன் விளையாட்டுப்பாடல்கள், விளையாட்டு என்று களை கட்டுகிறது.

என்.சொக்கன், ஸ்ரீவித்யா, விஷ்ணுபுரம் சரவணன்,பிரபு ராஜேந்திரன், ஆதர்ஷினி, நிரஞ்சன்,ராஜ்சிவா, யாழுசிவா,ஸ்ரீலஷ்மண்,ஜகந்நாதன், சிவானி, மேனகா,ஆதிரன், லட்சுமி, ஆகாஷ், ஆகியோரின் படைப்புகள் உண்மையிலேயே குழந்தை இலக்கியத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுபோகிற பாதையை அமைத்துக்கொண்டிருக்கின்றன.

தொடர்ந்த இந்தப்பயணத்தில் ஒரு புதிய இலக்கியப்பாதை உருவாகும். தொடருங்கள் பஞ்சுமிட்டாய்! குழந்தைகளின் இனிப்பான பஞ்சுமிட்டாய்!

நன்றி,
உதயசங்கர்

அனுபவங்களின் வாயிலாக பக்குவத்துடன் வளர்த்தல் :

அனுபவங்களின் வாயிலாக நாளுக்கு நாள் பக்குவத்துடன் வளர்த்தல் என்பது இதுதான். முதல் இணைய இதழ் துவங்கி 7ம் அச்சு இதழ் வரை முழுவதுமாக பார்த்தும் இயன்ற இடங்களில் எல்லாம் கொண்டு சேர்த்தும் வருகிறேன்.

ஒவ்வொரு முறையும் உள்ளே இருக்கிற விசயங்கள் முழுவதும் குழந்தைகள் படைப்புகளை முன்னிறுத்தி செயல்படுதல் என்பது குழந்தைகளுக்கான அங்கீகாரப் புள்ளி.

யாராக இருந்தாலும் அங்கீகாரம் என்பதை விருபாத மனிதர்கள் பெரும்பாலும் யாருமில்லை எனச் சொல்லலாம். அதிலும் குறிப்பாக குழந்தைகளுக்கு அவ்வுணர்வு அதிகம் தான். அவர்களுக்கு கிடைக்கக்கூடிய சிறுசிறு அங்கீகாரங்கள் அதிலும் குறிப்பாக முதல் அங்கீகாரம் அதிமுக்கியத்துவம் வாய்ந்தவை.

அந்த வகையில் முழுக்க முழுக்க குழந்தைகளுக்கான அங்கீகாரங்களை முந்தைய இதழ்களை விட அதிகளவு சுமந்து வந்திருக்கும் பஞ்சு மிட்டாய் இதழ் 7 குழந்தைகள் மற்றும் சிறார் தளங்களில் முக்கியமான முன்னெடுப்பு.

குழந்தைகளுக்கான‌ சிந்தனை ஊக்கம். வாழ்த்துகள் பஞ்சு மிட்டாய் குழுவினர்.

நன்றி,
இனியன்

திகட்டாத இனிப்பைச் சுமந்து வரும் பஞ்சுமிட்டாய் (சிறார் இதழ்)

அனைத்து வகை விளம்பரங்களும் சிறுவர்களை மையப்படுத்தி எடுக்கப்படும் சூழலில், அவர்களுக்கு உற்சாகம் தரும், புது எண்ணங்களை விதைக்கும் ஆரோக்கியமான செயல்பாடுகள் குறைந்துகொண்டே வருகின்றன. புத்தகம் வாசித்தல் பெரும் மாற்றத்தை சிறுவர்களுக்குத் தரும். ஆனால், புத்தகங்களை நோக்கிய பயணத்தை, சிறுவர் இதழ்களே அளிக்கும். எனவே சிறுவர் இதழ்களின் பங்களிப்பு என்பது மிகவும் முக்கியமானது.

நண்பர் பிரபு ராஜேந்திரன், ஜெயகுமார் உள்ளிட்ட பெங்களூர் நண்பர்கள் நடத்தி வரும் பஞ்சு மிட்டாய் சிறார் இதழ் தனித்துவமானது. ஆட்டோகிராஃப் புத்தக வடிவம் பார்ப்பதற்கு அழகாகவும் எடுத்துப் படிக்கத் தூண்டுவதாகவும் இருக்கிறது. இதழின் பெரும்பகுதி சிறுவர்களின் பங்களிகின்றனர். முழுக்க வண்ணத்தில் இருப்பது இதன் பலம். கதை, விளையாட்டு, பாடல், விடுகதை என… சுவை மிகுந்த பகுதிகளால் நிறைந்திருக்கின்றன. சமீபத்தில் வெளிவந்துள்ள ஏழாம் இதழோடு சிறுவர்கள் உற்சாகமாக விளையாட ஓர் அழகான இணைப்பும் உள்ளது. சிறு வட்டத்தில் பகிரப்படும் சிறுவர் இதழில் இதுபோன்ற இணைப்பு தருவது ஆச்சர்யமானது; (அநேகமாக இதுவே முதன்முறையாக இருக்கக்கூடும்). நான் எழுதிய கதை ஒன்றும் அழகான ஓவியத்துடன் பிரசுரமாகியிருக்கிறது. வடிவமைப்பு அருமை. ஒவ்வொரு பக்கங்களிலும் வழிந்தோடும் குழந்தைமையை ஏந்திகொள்ளும் புதிய அனுபவத்தைத் தருகிறது. நீங்களும் படித்துப் பார்க்கப் பரிந்துரைக்கிறேன்.

பஞ்சுமிட்டாய் ஆசிரியர் குழுவுக்கும் அதில் பங்களிக்கும் அனைவருக்கும் அன்பும் நன்றியும். தொடர்ந்து தொய்வின்று இயங்க வாழ்த்துகள்.

நன்றி,
விஷ்ணுபுரம் சரவணன்

Leave a comment