பிஞ்சு ஓவியங்கள்  – “பஞ்சு மிட்டாய்” பிரபு

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

“பெரிய வண்ணமயமான ஓவியங்களை வண்ணக் கலவையைக் கொண்டே வரைய குழந்தைகள் சுதந்திரமாக அனுமதிக்கப்பட வேண்டும். எந்த ஒரு நபரும் அக் குழந்தையின் முதுகுக்குப் பின்புறம் நின்று கொண்டு இப்படிச் செய் அப்படிச் செய் என்றோ,நீ செய்வது தவறு என்றோ சொல்லிக்கொடுக்காமல் இருந்தால் மிகவும் நல்லது.”

– ஜான் ஹோல்ட்

சென்ற தலைமுறை சிறார்களை விட தற்கால சிறார்களுக்கு crayons, sketch, water colors, paint,இயற்கை சாயம் என  வண்ணங்கள் நிறைய வடிவில் கிடைக்கிறது. இவற்றை பெற்றோர்களும் ஆர்வமாக வாங்கித் தருவதை கவனிக்க முடிகிறது. கடைகளில்  இந்த வண்ணங்களோடு  வண்ணம் தீட்டும் புத்தகமும்(coloring book), தரமான வெள்ளை தாள்களை கொண்ட‌ ஓவியம் வரையும் புத்தகமும் நிறைய‌ கிடைக்கிறது. இதில் குறிப்பாக 3-6 வயது குழந்தைகளுக்கு நிறைய‌ வண்ணம் தீட்டும் புத்தகங்களை பெற்றோர்கள் வாங்கித் தருகிறார்கள். பல வடிவத்திலும் (சின்ன-பெரிய),வெவ்வேறு விலையிலும் கிடைப்பதாலும் குழந்தைகளின் கிறுக்கல்களை ஒரு எல்லைக்குள் ஒழுங்குப்படுத்தும் வகையில் இருப்பதாலும் பெற்றோர்கள் இதனை அதிகம் தேர்வு செய்கிறார்கள்(எனது சுற்றத்தில் கவனித்தவை).

எனது மகளுக்கும் இதுப் போன்று நிறைய வண்ணம் தீட்டும் புத்தகங்கள் கிடைத்தது. ஆனால் அவளது ஆர்வமோ முதல் சிலப் பக்கங்களே நீடித்தது. அவளுக்கு பிடித்த வடிவங்கள் உள்ளே இருந்தபோதும் அவளுக்கு குறிப்பிட்ட எல்லைக்குள் வண்ணம் தீட்டுவது என்பது ஒருவித சலிப்பை தருவதாக‌ உணர்கிறேன். அவளுக்கு வண்ணம் தீட்டும் புத்தகங்களை விட வெறும் தாளில் வரைவதே விருப்பமாக இருக்கிறது. வெந்நிற தாள்களை விட அதிகம் பரவசம் தருவது சுவர் தான். சுவரில் கிடைக்கும் அந்த சுதந்திர உணர்வு அவளை மேலும் மேலும் ஓவியங்கள் பக்கம் இழுப்பதை நன்கு உணர முடிகிறது. எனது சுற்றதிலுள்ள நண்பர்களும் தங்களது பிள்ளைகளுக்கு சுவரில் வரைய அனுமதித்துள்ளனர். அங்குள்ள ஒவ்வொரு ஓவியத்திலும் ஏதேனும் காட்சியோ அல்லது நிகழ்வோ ஒளிந்திருக்கிறது. அவர்களிடம் அன்பாகவும் நிதானமகவும் விசாரித்தால் அந்த ரகசியங்கள் நமக்கு கிடைக்கும். மழை,காடு,சந்தித்த மனிதர்கள்,வீடு,பூங்கா என நிஜ உலகின் காட்சிகள் அந்த கிறுக்கல்களில் பிரதிபலிக்கிறது. குழந்தைகளை உருவாக்கும் விளையாட்டானாலும் சரி ஓவியமானாலும் சரி அவர்களது எந்தவிதமான சொந்த படைப்புகளுக்கும் நிஜ உலகத்திற்கும் உள்ள‌ தொடர்பை பற்றி ஜான் ஹோல்ட் நிறைய பேசுகிறார். அதிலிருந்து சிறு பகுதி…

“தம்மை சுற்றியுள்ள உலகைக் கண்டுணரும் அதுகுறித்து தாம் உணர்ந்தவற்றை வெளிப்படுத்தவும் ஓவியம் மிகவும் சக்தி வாய்ந்த,தேவையான வழிமுறை. அது வெளிச்சுற்றில் உள்ள அம்சம் அல்ல. மாறாக மானுட நடவடிக்கையின் மையமான அம்சம் ஆகும்.நாம் தொடர்ந்து நிராகரித்து வருவதும் இதுவே.”

ஒரு முறை ஜான் ஹோல்ட் சிறுமி ஒருவளை சந்திக்கிறார்,அந்தச் சிறுமி பேப்பர் மற்றும் வண்ணப் பென்சில்களுடன் அமர்ந்திருக்கிறாள். ஆனால் ஏதும் வரையவில்லை. “நீ என்ன வரையப் போகிறாய்?” என்று கேட்கிறார் அதற்கு அந்தச் சிறுமி “என்ன வரைவதென்று தெரியவில்லை” என்கிறாள். உடனே அவர்,”நீ ஏன் ஒரு மரம் வரையக்கூடாது?” என்று கேட்கிறார். அதற்கு “அது எப்படி என்று எனக்குத் தெரியாது” என்கிறாள் அந்தச் சிறுமி.

அது எப்படி ஒரு மரம் வரைய தெரியாமல் போனது என்ற கேள்வி ஜான் ஹோல்ட் மனதை உறுத்திக்கொண்டே இருக்கிறது. அதுவே ஓவியம் என்பது ஒரு வகையான பிரதி எடுப்பதல்ல என்ற புரிதலையும் கொடுத்தது என்கிறார். மரம் என்று நாம் அழைக்கும் இயற்கையின் ஒரு பொருளைப் பார்க்கும் குழந்தை அதன் நிறம்,வடிவம்,தன்மை,அளவு,ஒளித்திரள் மற்றும் இருள் ஆகிய அனைத்தையும் கவனிக்கிறது. இதில் எக் குணத்தை பென்சில் மூலம் பிரதிநிதித்துவப்படுத்துவது எப்படி என்று அந்தக் குழந்தைக்கு தெரியவில்லை என்று குறிப்பிடுகிறார். குழந்தைகள் ஒரு மரத்தை வரைவதில்லை , ஒரு மரத்தின் குறியீடுகளாக அவர்கள் கற்றதைத் தான் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள் என்கிறார்.

சமீபதத்தில் எனது மகள் மரம் ஒன்றை வரைந்தாள்,மரத்தின் அருகில் குருவி ஒன்றினையும் வரைந்தாள்.ஆனால் அந்த மரத்தினை சுற்றி ப்ரவுன் வண்ண க்ரையான்களை கொண்டு தீட்டியிருந்தாள் (பெரியோர் மொழியில் சொல்ல வேண்டுமென்றால் கிறுக்கியிருந்தாள்). ஏன் இப்படி வரைந்தாள் என்று புரியவில்லை. அவள் வரைந்து முடித்த‌தும்,அவளிடம் “இது என்ன மா?” என்று விசாரித்தேன். அது காடு என்று சொன்னாள். ஒரு காட்டினை அவள் குறியீடாக வரைந்திருந்தாள். இதேப் போல் ஒரு நாள் சுவரில் க்ரையான்களை கொண்டு அடர்த்தியாக ஏதோ வரைந்திருந்தாள். என்ன கிறுக்கிற என்றதும் பதில் சொல்வதை தவிர்த்துவிட்டு ஓடினாள். ஆனால் இரண்டு நாட்கள் கழித்து அவளிடன் எதேச்சியாக என்ன வரைஞ்சிறுக்க என்ற விசாரித்ததும். அது பெரிய மழை (அடை மழை) என்றாள்.

ஜான் ஹோல்ட் தான் சந்தித்த ஒரு சிறுமி பற்றியும் அவள் வரைந்து தள்ளிய‌ ஓவியங்கள் பற்றி கீழ்வருமாறு கூறுகிறார். “அவளுக்கு பொருட்களைப் பார்ப்பது பிடித்தது. பிடித்ததை வரைந்து தள்ளினாள். தான் அவற்றை எவ்வாறு பார்த்தாளோ அவ்வாறு வரைந்தாள். வாழ்க்கை குறித்து தான் கற்றுக் கொண்டவற்றை வெளிப்படுத்தும் ஊடகமாக ஓவியம் இருந்தது, அது அவளது பார்வையைக் கூர்மைப்படுத்தியது,அடுத்து என்ன ,அடுத்து என்ன என்ற தேடலை அவளுக்குள் ஏற்படுத்தியது.” இதேப் போல் குழந்தைகளின் ஓவியங்களில் பல‌ நுட்பமான விடய‌ங்கள் இருக்கின்றது என்கிறார். “சிலக் குழந்தைகள் வரையும் மனிதர்களின் கைகளில் ஐந்து விரல்க‌ள் இருந்தன,ஒவ்வொன்றும் அதற்குரிய நீள வித்தியாசங்களோடு இருந்தன. நகங்களைக் கூட அவற்றின் அளவுக்கேற்ப வரைகின்றனர். அதேப் போல சிறார்கள் தாங்கள் வரைந்த ஓவியங்கள் குறித்து பேசிக்கொள்கின்றனர். அதிலுள்ள நுட்பமான விவ‌ரங்களைப் பற்றியும் அதில் இடம்பெறாத விவரங்கள் என்ன என்பது பற்றிச் சிந்திக்கிறார்கள்” என்று தனது அனுபவங்களை நம்முடன் பகிர்கிறார். அவருடைய‌ இந்தப் பகிர்வு குழந்தைகளின் படைப்பாற்றல் குறித்து நிறைய சிந்திக்க வைக்கிறது.

ஆனால் குழந்தைகளின் இந்தப் படைப்பாற்றல் வளர்க்கப்படும் சூழல் நமது சமூகத்தில் இருக்கிறதா? என்ற கேள்விக்கு விடை தேடும்போது  எனது பார்வையில் முக்கியமாக‌ இரண்டு விதமான தடைகளை உணர முடிகிறது.

முதலாவது தடை,சிறு குழந்தைகள் ஏதாவது வரைய முற்பட்டால் உடனே அதனில் திருத்தங்களை சொல்லிக் கொண்டே இருப்பது. இது தவறு அது தவறு,இப்படி வரை,அப்படி வரை என்று அவர்களது சிந்தனைகளில் பெரியோர்கள் தலையிடுவதை கவனிக்க முடிகிறது. வீடொன்றை ஒரு குழந்தை வரைய முற்படுகிறது. இங்கும் அங்குமாய் சிலக் கோடுகளை தீட்டுகிறது. ஆனால் உடன் அமர்ந்திருக்கும் பெற்றோரால் பொறுமை காட்க முடியவில்லை. இப்படி வரையக் கூடாது என்று சொல்லி கீழே ஒரு சதுரம் மேலே ஒரு முக்கோணம் என்று வரைந்து காட்டி இது தான் வீடு என்று சொல்லித் தரப்படுகிறது. ஆனால் அந்த உதவியை குழந்தை எதிர்ப்பார்க்கவேயில்லை என்பதை விட குழந்தைக்கு அந்த உதவி தேவையேயில்லை என்பதே நிதர்சனம்.  செய்திதாள்களில் வரும் சிறார் ஓவியங்களை தொடர்ந்து கவனித்தால் அனைத்து இயற்கை காட்சி ஓவியங்களும் அதிகப்பட்சமாக ஒரே மாதிரி இருப்பது புரியும். ஏன் அவை அனைத்தும் இரண்டு மலை,நடுவில் அருவி,மேலே சூரியன்,நதியின் அருகே ஒரு வீடு என  ஒரே மாதிரியாக இருக்கிறது என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.  எனை பொறுத்தவரை  பள்ளி வாழ்வு ஆரம்பிக்கும் முன்பே,வீட்டிலே படைப்பாற்றலுக்கு எதிரான செயல்கள் நடக்கிறது என்பேன்.

முதலாவது தடையில் தப்பித்த குழந்தையின் படைப்பாற்றலுக்கு இரண்டாவதாக பெரிய தடை இந்தக் கல்வி சூழலில் இருக்கிறது. கல்வி சூழலிலுள்ள தடைகள் குறித்து ஜான் ஹோல்ட்,

“கல்வி ஆண்டு கால அட்டவணைப்படி பாடங்களை முடிக்க வேண்டிய நெருக்கடி ஆசிரியர்களுக்கு இருக்கிறது. குழந்தைகளின் முன்னேற்றம் குறித்துப் பெற்றோர் கொண்ட கவலை – எக்ஸ்பிரஸ் ரயில் சரியான நேரத்தில் சென்று கொண்டிருக்கிறதா என்ற கவலையைப் போன்று – மாணவர்களையும்,ஆசிரியரையும் நெருக்குதலுக்குள்ளாக்கியது. இதனால் ஓவியத்திற்கு நேரம் ஒதுக்க முடியாது என்பதைக் குழந்தைகள் உணரத் தொடங்குகிறார்கள். பெரியோர்களின் மதிப்பீடுகளுக்குக் குழந்தைகள் மிகவும் உணர்வுபூர்வமாக இருக்கிறார்கள். உற்சாகமற்ற வெறும் கடமைக்காக கிடைக்கும் பாராட்டக்களுக்கு பின் அக்குழந்தை முட்டாள் தனமான வீட்டுபாடங்களுடன் வீட்டுக்குச் செல்கிறது. விரைவில் வீட்டுப்பாடங்கள் ஓவியங்களை ஓரம் கட்டிவிடுகிறது.”  என்கிறார்.

இந்தத் தடைகளை நீக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்ததால் தான் பஞ்சு மிட்டாய் , குட்டி ஆகாயம் போன்ற சிறார் இதழ்கள் குழந்தைகளின் படைப்பாற்றலை முன்நிறுத்தி செயல்படுகிறது. ஆனால் இதுப் போன்ற குழந்தைகளின் ஓவியங்களில் இன்னும் நேர்த்தியான ஓவியங்களை தேர்வு செய்ய வேண்டும்,அப்பொழுது தான் மற்ற குழந்தைகள் ஓவியங்களின் நேர்த்தியை உணர முடியும் என்கின்ற விமர்சனங்களும் எங்களுக்கு (பஞ்சு மிட்டாய் மற்றும் குட்டி ஆகாயம் இதழ்களுக்கு) கிடைக்கிறது. நேர்த்தியான ஓவியங்கள் என்ற பெரியோர்களால் கருதப்படும் ஓவியத் திறமையை சிறார்களுக்கு அறிமுகம் செய்திடல் வேண்டும் ஆனால் அதே நேரம் சிறார்களின் படைப்புகளில் நேர்த்தியில்லை என்ற விமர்சனத்தை என்னளவில் ஏற்க முடியவில்லை. சிறார்களின் ஓவியங்களில் தான் உயிரோட்டத்தை நன்கு உணர முடிகிறது. குழந்தைகளின் ஓவியங்களை குறித்து பெரியோர்களின் பார்வை இன்னும் வளர வேண்டும்  என்கிறார் ஜான் ஹோல்ட். பெரியோர்களின் புரிதலைக் குறித்து ஜான் ஹோல்ட்  தனது நண்பரின் கடிதத்தின் மூலம் இவ்வாறு மேற்கோள் காட்டுகிறார் .

“குழந்தைகளுக்கான மோசமான வரைபொருள்களை விற்ப‌னை செய்பவர்களைக் காணும் போதும்,குழந்தைகளின் ஓவியங்களைக் காட்சிப்படுத்தும் விதத்தைப் பார்க்கும் போதும்,குழந்தைகளின் கலைத்திறன் பற்றிய மோசமான கருத்துகளையும்,மாயைகளையும் கேட்கும் போதும்..நான் உண்மையிலேயே மோசமான கோபக்காரனாக மாறிவிடுகிறேன்”

இதனைத் தொடர்ந்து சீனாவில் 1980களில் வெளியான சிறுவர்களின் ஓவியங்களை கொண்டு வெளியீடப்பட்ட காலண்டர்  குறித்து சிலாகித்து பேசுகிறார். ஏன் அதுப்போன்ற முயற்சிகள் (அவரது நாடான) அமெரிக்காவில் ஏதும்  எடுக்கப்படவில்லை என்று ஆதங்கப்படுகிறார். அவரது ஆதங்கம் தான் சிறார் படைப்புகளை முன்நிறுத்தும் எங்களது முயற்சிகளுக்கு (பஞ்சுமிட்டாய் மற்றும் குட்டி ஆகாயம்) ஊக்கம் தருவதாக இருக்கிறது.

Leave a comment