ஜாடியில் அடைத்து வைக்க  நாங்கள் பூதமுமில்லை – ஷ‌ர்மிளா

வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

லிவின். 4 வயது நிரம்பிய எங்களது குழந்தை. பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்ததும் வீட்டுப் பாடம் செய்வதற்காக, நானும் அவனும் புத்தகத்தை எடுத்தோம். ஒற்றைப் படை, இரட்டைப் படை எண்களை, அடையாளம் காணச் சொல்லும் பகுதி அது. அவன் கேட்டான், அம்மா ஒற்றைப் படை என்றால் என்ன? இரட்டைப் படை என்றால் என்ன? எப்படி சொல்லி சரியாக விளக்குவது என்பது எனக்கு தெரியவில்லை. நாம் என்ன விளக்கம் கொடுத்தாலும், அவன் என்னை கூர்ந்து நோக்கினான். அந்தபார்வையின் அர்த்தம் எனக்கு விளங்கவில்லை. இவனுக்கு புரிகிறதா, இல்லை புரியாமல் பார்க்கிறானா என்று!

இந்த சமயத்தில் தான், என் கண்ணில் பட்டது,“எவ்வாறு குழந்தைகள் கற்கிறார்கள்” என்ற இந்த புத்தகம். வாசிக்க ஆரம்பித்த பின்பு தான் என்னால் புத்தகத்தோடு குழந்தைகளை தொர்டர்பு படுத்தி சிறிது சிறிதாக பார்க்க தெரிந்தது. குழந்தைகளின் கற்றல் வழிமுறைகளுக்கான தெளிவு பிறக்க ஆரம்பித்தது.

குழந்தைகள் ஓர் இடத்தில் சும்மா அமர்ந்திருக்க மாட்டார்கள். அப்படியே அமர்ந்திருந்தாலும், அவர்களின் உடல் மொழி மூலமாக ஏதாவது செயல் அங்கு நடந்து கொண்டுதான் இருக்கும். இந்த கூற்று பிறந்த குழந்தைகளிடத்தில் இருந்தே தொடங்குகிறது.

பிறந்த குழந்தை பசி வந்தால் அழுகிறது. இங்கு அவர்களுக்கு அழவேண்டும் என்று சொல்லிக் கொடுத்தவர் யாருமில்லை. தனக்கு மொழி பற்றிய புரிந்துணர்வு இல்லா நிலையிலும். தன்னுடைய அழுகை மூலமாக. மற்றவர்களிடம் உரையாட கற்றுக் கொள்கிறது. இந்த அழுகையும் ஒரே மாதிரியானது அல்ல. பசிக்கு ஒரு வித அழுகை. தூக்கம் வந்தால் ஒரு வகை அழுகை. வயிறுவலித்து அழுகிற அழுகைக்கும், வயிறு பசித்து அழுகிற அழுகைக்கும் வித்தியாசம் இருக்கும் அவர்களிடம்.

குப்புற விழுதல், தவழுதல், மண்டியிட்டு நகருதல், காலால் நடத்தல் என பல பருவங்கள் பிறந்தது முதல் ஒன்றரை வயது வரை உண்டு. இதில் அவர்கள் எடுக்கும் முயற்சிகள் ஒவ்வொன்றும் காண்பதற்கு இனிமையானது. எத்தனை தோல்விகளை சந்தித்தாலும் மறுபடி மறுபடி, முயற்சி செய்து அவர்கள் நினைத்த இலக்கை அடைந்து விடுகின்றனர்

லிவினின் தாத்தா ஒரு தமிழாசிரியர். லிவின் பிறந்ததிலிருந்து, பேரனுக்காக நிறைய பாடல்கள் இயற்றி அவனருகிலிருந்து பாடுவது வழக்கம். தொட்டிலை ஆட்டிக் கொண்டே பாட்டுப் பாடிகொண்டே இருப்பார். பாடுவதையோ தொட்டில் ஆட்டுவதையோ நிறுத்தினால் இவன் சத்தம் எழுப்புவான் அல்லது அசைந்து கொடுப்பான். பாட்டு, தாலாட்டு இரண்டும் ஒன்றாக வேண்டுமாம். இது லிவின் பிறந்த பத்து நாட்களில் நடந்ததொன்று. தனக்கு தாலாட்டுப் பாட்டு வேண்டுமென்பதை பிறந்த பத்தாவது நாளிலையே, சொல்லக் கற்றுக்கொண்டுவிட்டான்.

தன்னுடைய தேவை என்னவென்பதை குழந்தைகள் நன்கு அறிவார்கள். நாம் அவர்களுக்கு உதவி செய்கிறோம் என்று, அவர்களின் அனுமதி இல்லாமல் உள்ளே நுழையும் பொழுது, அவர்களுக்கு கோவம் வருகிறது.

அப்போது லிவினுக்கு 4 மாதம். தன்னாலும் ஓசை எழுப்ப முடியும் என்பதை உணர்ந்து கொண்டான். லிவினின் பக்கத்தில், அவனது மாமா அமர்ந்து கொண்டு வித விதமான ஒலிகளை வாயால் எழுப்பி விளையாட்டிக் காட்டிக் கொண்டிருந்தார். அந்த ஒலியில், இவனுக்குதொண்டையை கனைத்துக் கொண்டு எழுப்புகிற ஓ என்ற சத்தம் பிடித்துவிட்டது. அதை சொல்லிப் பார்க்க ஆரம்பித்தான். அவன் விரும்பிய ‘ஓ’ என்ற ஒலி வாயிலிருந்து வர ஆரம்பித்தது. இவன் ஓ முதலில் சொல்ல வேண்டும். பிறகு மாமா சொல்ல வேண்டும். சிறிது சத்தத்துடன் ஆரம்பித்த விளையாட்டு, போக போக பெருஞ்சத்தமாக மாறியது. குழந்தைக்கு தொண்டை வலிக்கும் என்று நிறுத்த முயலும் பொழுது அவனுக்கு கோவம் வந்து இன்னும் அதிகமாக, இன்னும் வலிமையாக கத்த ஆரம்பித்தான். அரைமணிநேரம் தொடர்ந்த இந்த விளையாட்டு, ஒரு வழியாக நின்றது.

மறுநாள் லிவினின் மாமா, மறுபடியும் இந்த விளையாட்டை ஆட லிவினை அழைத்தபொழுது இவன் வாயை திறக்க மறுத்துவிட்டான். தொண்டையில், வலி உணர்வு ஏற்பட்டிருக்கும் போல.  மறுபடியும் ஓங்கி கத்தி, இந்த விளையாட்டை விளையாடினால், தொண்டை வலிக்கும் என்பதை கற்றுக் கொண்டுவிட்டான். அதனால் அந்த விளையாட்டை விளையாட மறுத்துவிட்டான்.

ஐந்தாவது மாதத்தில், பொம்மைகளை காட்டி, அவனுடன் விளையாட ஆரம்பித்தோம். குறுகிய மாத இடைவெளியில், பொம்மைகளின் எண்ணிக்கை, அதிகரித்துவிட்டது. பொம்மைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தவன் ஒரு கட்டத்தில் அதனை தனித்தனியே வகைப் படுத்த ஆரம்பித்தான். விளையாட ஆரம்பிக்கும் முன் அனைத்து பொம்மைகளையும் வகைப் படுத்தி பிரித்தெடுத்தப்பின் தனக்கு தேவையான ஒரு குழு பொம்மைகளுடன் விளையாட ஆரம்பிப்பான். இந்த விளையாட்டு சற்று சோர்வு தரும் போது, அடுத்த குழு பொம்மைகளுடன் விளையாடச்செல்லுவான். இப்படி செய்யும் பொழுது நெடுநேரம் விளையாடலாம் என்று கற்றுக் கொண்டுவிட்டான்.

ஜான் ஹோல்டின் “எவ்வாறு குழந்தைகள் கற்கின்றனர்” என்ற புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்து எனக்குள் உள்வாங்கத் தொடங்கும் பொழுது, குழந்தைகளின் கற்றல் திறனை, பகுதி வாரியாக பிரிக்க முடிந்தது.

  1. தாமாக முயற்சி செய்து கற்றல்
  2. மற்றொருவர் செய்வதை பார்த்து கற்றல்
  3. சொல்வதை புரிந்து கற்றல்

பிறந்தது முதல் ஒரு வயது வரை பெரும்பாலான செயல்களை குழந்தைகள் தாமாகவே கற்றுக்கொண்டு விடுகின்றனர். ஒரு வருடத்திற்கு மேல் அவர்களின் கற்றல் திறன் மற்றொருவரின் செய்கையைப் பார்த்தோ அல்லது சொல்லவதை புரிந்து கொண்டோ வளர ஆரம்பிக்கும்.

லிவினுக்கு ஒரு வயது இருக்கும், கிரிக்கெட் மட்டையும் பந்தும், லிவினின் அப்பா அவனுக்காக வாங்கி கொடுத்தார். மட்டையும் பந்தும் அவனுக்கு புதியது. மற்ற பொருள்களை போலவே இதுவும் ஒன்று என்று நினைத்து கையில் வைத்துக் கொண்டு இருந்தான். அப்பா லிவினிடம் இருந்து மட்டையை வாங்கி கையில் வைத்து மட்டையை நோக்கி பந்தை எரியச் சொன்னார். பந்து மட்டையை நோக்கி வரும்போது, ஓங்கி தட்டி பந்தை தள்ளி விட்டார். லிவினுக்கு புரிய ஆரம்பித்தது. இது இருவர் விளையாடும் விளையாட்டு என்று. முதலில் மட்டையை சரியாக பிடிக்கத் தெரியவில்லை. மறுபடி மறுபடி கேட்டு முயற்சி செய்து மட்டையை பிடிக்கக் கற்றுக் கொண்டான். பந்து முன்னோக்கி வரும்போது மட்டையை எப்படி பந்தை நோக்கி அடிக்க வேண்டும் என்று பார்த்து கற்றுக் கொண்டான்.

திடீரென குழந்தைகளுக்கு எழும்பும் கோவம், அழுகை, பிடிவாதம், இவற்றிக்கான, காரணத்தை புரிந்து கொள்வது மிகவும் சிரமம். காரணமே இல்லாமல் எப்போது தூங்கி எழும்பினாலும் அழுது கொண்டே இருப்பான். அழுகை ஆரம்பிக்கும் பொழுது அவனை தூக்கி தட்டிக் கொடுக்க வேண்டும். அப்படி செய்ய தாமதமானால். கோவம் வந்து அடிக்க ஆரம்பிப்பான். ஒன்றுமே புரியாது, எதனால் இந்த அழுகையும், கோவமும், பிடிவாதமும்.

இந்த விசித்திரமான சூழலை, லிவினின் இது போலான நடவடிக்கையை புரிந்து கொள்ள சற்று பிரயாசை பட வேண்டி இருந்தது. மற்ற குழந்தைகளுடன் நெருங்கி பழக ஆரம்பித்தது இந்த இடத்தில் இருந்துதான். பலதரப்பட்ட குழந்தைகளுடன். பழக ஆரம்பிக்கும் பொழுது, நமது குழந்தையின் நடவடிக்கையை. சற்று இலகுவாக புரிந்து கொள்ளலாம் என்ற நம்பிக்கையும் கூட.

நண்பர்கள் ஒன்று கூடி குழந்தைகளுக்கு கதை சொல்லும் ஒரு அமைப்பு ஒன்று ஆரம்பித்து அதற்கு “பஞ்சுமிட்டாய்”” என்று பெயர் வைத்தோம். லிவினுக்கு அப்போது 2 வயது. வார வாரம் கதை சொல்லும் நிகழ்வு அரங்கிற்கு உள்ளே நடக்கும். இவன் உள்ளே வரமாட்டான். நாங்கள் அரங்கிற்கு வெளியே நிற்போம். விளையாடிக் கொண்டு இவன் உள்ளே வர மறுத்ததற்கு முக்கிய காரணம், அவனை ஒரே இடத்தில் அமர செய்வது. இந்த சமயத்தில் லிவினுக்கு ஓடி கொண்டே இருக்க வேண்டும். எங்களுக்கோ லிவினை புரிந்து கொள்ள வேண்டும். தினமும் லிவினிடம், காரணமே இல்லாமல். பெற்றோர் நாங்கள் அடி வாங்கி கொண்டு இருந்தோம், விடையை கண்டுபிடித்து விடலாம் என்கிற நம்பிக்கையோடு.

சில வாரங்கள் செல்லச்செல்ல உள்ளே வந்து சிறிது நேரம் அமரத் தொடங்கினான், கதைகளை உள் வாங்கத் தொடங்கினான். கதை என்றால் என்ன என்று புரிந்து கொள்ள தொடங்கினான். சில பல வாக்கியங்களில் கதை ஒன்றை அங்கு இருக்கும் பொருட்களின் மீது அவனுடைய. கற்பனையும் கலந்து கதை சொல்ல ஆரம்பித்தான். பஞ்சுமிட்டாய் நண்பர்கள் இவன் சொல்வதை பொறுமையாக கேட்டனர். இவனுக்கு அது உற்சாகத்தை கொடுத்தது. கூட்டத்தின் மீதான பயம் விலக ஆரம்பித்தது.

லிவினின் செயல்களில் நிறைய மாற்றங்கள். குழந்தைகளுடன் நெருக்கத்தை இன்னும் அதிக படுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்கு அதிகரித்து விட்டது. மற்ற குழந்தைகளுடன் நாங்களும் அவனுடன் சேர்ந்து பழகினோம்.

குழந்தைகளுடன் நெருக்கத்தை அதிக படுத்துவதற்காக, பஞ்சுமிட்டாய் நண்பர்களின் உற்சாகத்தோடு, தமிழ் வகுப்பு ஒன்றை தொடங்கினேன். வாரத்திற்கு ஒரு நாள் வகுப்பு. கட்டணம் எந்த சூழ்நிலையிலும் வாங்கக் கூடாது என்ற உறுதியும் கூட. கதை சொல்லல் நிகழ்வில் பார்த்த குழந்தைகள் தான் இவர்கள். ஆனால் நிகழ்விற்கும், வகுப்பிற்கும் பெரிய வித்தியாசம் இருந்தது. ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதம். ஒவ்வொரு குழந்தையிடமும் லிவின் ஏதாவதொரு வகையில் ஒத்திருந்தான். தனி ஒரு ஆள் நான். பதினைந்து விதமான குழந்தைகள்.

முதல் வகுப்பு அன்று ஒரு குழந்தையும் நான் சொல்வதை சிறிது கூட கவனிக்கவில்லை. நண்பர்கள் ஒன்று கூடிய மகிழ்ச்சி அவர்களுக்கு. இவர்களை புரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் எனக்கு.

குழந்தைகள் அத்தனை பேரையும் ஒருமுகப் படுத்த வேண்டும். வகுப்பு ஆசிரியர் போல, எந்த சூழ்நிலையிலும், கண்டித்து விடக் கூடாது, என்ன செய்யலாம், என்று யோசித்த பொழுது, பாட்டும் விளையாட்டும் நடனமும் கண்முன்னே வந்தது. தமிழ் எழுத்துக்களை பாடல்களாக பாட ஆரம்பித்த பொழுது குழந்தைகள் என்னை நோக்கி திரும்ப ஆரம்பித்தனர்.

தமிழ் எழுத்துக்களை ஒன்று, ஒன்றாக சொல்லிக் கொடுக்கும் போது அவர்கள் கற்றதை விட, பாடல்கள் மூலமாக சொல்லிக்கொடுக்கும் போது விரைவாக கற்க ஆரம்பித்தனர். தமிழ் எழுத்து வரிசையில் முதல் எழுத்தை மட்டும் கூறினால் போதும். முழுப் பாடலையும் சரியாக பேச ஆரம்பிக்காத குழந்தை கூட இப்போது பாடி விடுகிறது. பிறரிடமிருந்து கற்றாலும் கூட, அவர்களுக்கு இரசனையாய் இருந்தால் மட்டுமே கற்கிறார்கள். இல்லாவிடில் நாம் சொல்வதை திரும்பிச் செய்யும் இயந்திரம் போல் நடக்கிறார்கள்.

பஞ்சுமிட்டாய் நிகழ்வில் சில குழந்தைகள் மட்டுமே கதை சொல்லுவார்கள், பேசுவார்கள். பல குழந்தைகள் அமைதியாகவே இருப்பார்கள். புதிதாக கதையுடன் விளையாட்டை அறிமுகப்படுத்தலாம் என்றெண்ணி, மறந்து போன குழு விளையாட்டுகளை அறிமுகப் படுத்ததொடங்கினோம் . அமைதியாக இருந்த குழந்தை முதற்கொண்டு அனைத்து குழந்தைகளும் துள்ளிக் குதித்து விளையாடியது. விளையாட்டின் நுணுக்கத்தை முதலில் புரிந்து கொண்டது இதுவரை அமைதியாக இருந்த ஒரு குழந்தை தான். 5 வயது அவளுக்கு. மற்ற குழந்தைகளை விட ஒரு அசாத்திய திறமை அந்த குழந்தையிடம் இருக்கிறது என்று அன்று தான் எங்களுக்கு தெரிய ஆரம்பித்தது.

அதன் பிறகு, அவளை உற்று நோக்க ஆரம்பித்தோம். அவள் எங்களுடன் உரையாடுவதில்லையே தவிர, மற்ற எல்லா காரியங்களிலும் கண்ணாக இருக்கிறாள், உள் வாங்குகிறாள், சரியாகச் செய்கிறாள். பேசாமல் இருப்பதால் அவளுக்கு எதுவும் தெரிவதில்லை என்ற அர்த்தம் இல்லை. கூர்ந்து கவனிக்கும் கற்றல் கலையை அவள்  அறிந்திருக்கிறாள். அதனால் சொல்வதை புரிந்து கொண்டு எளிதாக அவளால் கற்க முடிகிறது.

விளையாட்டுகள் நிகழ்வில் தொடர்ந்து இடம் பெற ஆரம்பித்தது. தயக்கங்கள், அச்சங்களை குழந்தைகள் விலக்க ஆரம்பித்தனர். ஒரு கட்டத்தில் எல்லாக் குழந்தைகளும் கதை சொல்ல ஆரம்பித்து விட்டனர். கற்றலில் விளையாட்டு, விளையாட்டில் கற்றல் இரண்டும் நடக்க தொடங்கியதை உணர்ந்த தருணம் அற்புதமானது.

குழந்தைகளுக்கு தேவை அவர்களுக்கான சுதந்திரம். எந்த ஒரு கணத்தில் அவர்கள் அதனை உணருகிறார்களோ அல்லது கிடைக்கப் பெறுகிறார்களோ, அப்போது அவர்கள் தங்களுடைய திறனை எளிதாக வெளிக் கொண்டு வர ஆரம்பிக்கிறார்கள்.

ஜான் ஹோல்டு அவர்களின் அற்புதமான வரிகளில் ஒன்று இதனை உறுதிப் படுத்துகிறது.

ஜாடியில் அடைத்து வைக்க  நாங்கள் பூதமுமில்லை, சொல்வதைச் செய்யும் இயந்திரமுமில்லை, நாங்கள் குழந்தைகள்”.

குறிப்பு : குழந்தைகள் குறித்த உரையாடல் நிகழ்விற்காக எழுதிய கட்டுரை.

புத்தகம் : குழந்தைகள் எவ்வாறு கற்கின்றனர்?, ஆசிரியர் : ஜான் ஹோல்ட், தமிழில்: அப்பணசாமி விலை : ரூ.220/- வெளியீடு : பாரதி பதிப்பகம்

Leave a comment