உடையட்டும் இலக்கணங்கள் – பஞ்சு மிட்டாய் 7ம் இதழ் வெளியீடு

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

தலையிடாத சுதந்திரம் பஞ்சு மிட்டாயின் பலம். பஞ்சு மிட்டாயில் கதைக்கான இலக்கணங்களுக், ஓவியத்துக்கான இலக்கணங்களும் உடைவதைக் காணக் காண ஆனந்தம். பஞ்சு மிட்டாய் – ஒரு பரவசம். – ச‌.மாடசாமி.

ச.மாடசாமி அய்யாவின் மேலுள்ள வாழ்த்துக்களுடன் பஞ்சு மிட்டாய் 7ம் இதழ் வெளியாகி இருப்பது மிகப்பெரிய உற்சாகத்தை தருகிறது. ஒவ்வொரு இதழுக்கான பயணங்கள் புதுப்புது அனுபங்களை கொடுத்துக் கொண்டே இருக்கிறது. அந்த அனுபவங்களே வெவ்வேறு விதமான முயற்சிகளையும் செய்ய தூண்டுகிறது. அப்படித் தான் இம்முறை புதிய‌ முயற்சியாக “காட்டுப் பக்கம் போவோமா?” என்ற விளையாட்டினை உருவாக்கியுள்ளோம். முதல் பார்வையிலே சிறுவர்களை புத்தகப் பக்கம் கண்டிப்பாக இந்த விளையாட்டு ஈர்க்கும். விளையாட்டின் எண்ணத்திற்கு உயிரோட்டம் தந்திருக்கிறது ஓவியர் ராஜன் அவர்களின் ஓவியம். இந்த விளையாட்டிற்கு மட்டுமல்ல கதைகள், பாடல்கள், புதிர் மற்றும் அட்டைப் படம் என‌ பஞ்சு மிட்டாய் இதழ் அவரது தூரிகையால் பளபளவென மின்னுகிறது. ஓவியர் ராஜன் அவர்களுக்கு ஆசிரியர் குழுவின் சார்பில் பெரிய நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

தற்கால சிறார் இலக்கியத்தின் முக்கிய எழுத்தாளர்களான‌ என்.சொக்கனின் பாடலும், விஷ்ணுபுரம் சரவணின் கதையும் இந்த இதழில் வந்திருக்கிறது. தங்களது படைப்புகள் மூலம் ஆதரவு தந்துள்ள‌ இருவருக்கும் நன்றிகள். சென்ற இதழில் முக்கியமானதாக ஆசிரியர்கள் மத்தியில் பேசப்பட்ட ராஜ் சிவா & யாழு சிவாவின் காமிக்ஸ் வடிவம் இம்முறையும் வந்திருக்கிறது. ஆம், அறிவியல் துணுக்குகளை தங்களது காமிக்ஸ் மூலம் சிறார்களுக்கு கொண்டு சேர்க்கும் அவர்களது எண்ணங்களை பஞ்சு மிட்டாயும் சேர்ந்து பயணிக்கிறது. 12 வயதிற்குள்ள் குழந்தைகளுக்கு அறிவியல் விசயங்களை ஒரு கதை ஓட்டத்தில் சொல்ல‌ வேண்டும் என்றதும் விரிவாக எங்களுடன் உரையாடி அழகான காமிக்ஸை வடிவத்தை கொடுத்தனர். அவர்களுக்கும் எங்களது நன்றிகள்.

ஒவ்வொரு இதழிலும் புதிர் விளையாட்டிற்கு சிறுவர்களிடையே நல்ல எதிர்ப்பார்ப்பு உண்டு. இம்முறையும் அழகான ஓவியத்துடன் குழந்தைகளுக்கு மிகவும் பரிச்சயமான எளிமையான‌ வார்த்தைகளுடன் புதிர் வந்துள்ளது. அதேப் போல் சிறார்களை விளையாட தூண்டும் மரபு விளையாட்டின் அறிமுகமும் வந்துள்ளது.

இம்முறை சிறார்களின் கதைகள் வெவ்வேறு இடங்களிலிருந்து பெறப்பட்டது. ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு வடிவம். இந்தக் கதைகள் அனைத்துமே நிஜ வாழ்வில் குழந்தைகள் காணும் விசயங்களை தங்களது கற்பனைகளால் கதைகளாக மாத்தியுள்ளனர் என்றே சொல்ல வேண்டும். இவை இதழுக்காக படைக்கப்பட்ட கதை அல்ல. வீட்டிலோ அல்லது பள்ளியிலோ அவர்கள் படைத்த கதைகளை தான் நாங்கள் இதழில் கொண்டுவந்துள்ளோம். பஞ்சு மிட்டாய் இதழைப் பார்த்ததும் பல பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் எங்களைத் தொடர்பு கொண்டு தங்களது சிறார்களின் படைப்புகள் இதழில் இடம் பெற வாய்ப்புள்ளதா என்று விசாரிப்பார்கள்.

அவர்களிடம் நாங்கள் சொல்லும் பதில் இது தான்…இதழுக்காக படைப்புகளை வாங்குவதை விட சிறார்களுடன் உரையாடவும் நெருங்கி பழகவும் கதைகள் கேட்போம் கதைகள் பேசுவோம். அப்படி அவர்கள் உருவாக்கும் கதைகளை இதழில் பதிவு செய்வோம். ஒரு இதழுக்கான படைப்பு எனும் போது அதில் பெரியோர்களின் தலையீடு இருப்பதற்கு வாய்ப்புள்ளது. அதேப் போல் நேர்த்தியான வடிவத்தை கொண்டு வர வேண்டுமென்ற ஒரு வித அழுத்தம் உருவாகவும் வாய்ப்பு உள்ளது. மேலும் இதழுக்காக மட்டுமே பெரியவர்கள் சிறுவர்களிடம் கதைகள் கேட்காமல் கதை பேசும் வழக்கத்தை ஒரு பழக்கமாகவும் அதை வாழ்வின் சிறு பகுதியாக மாற்றவே ஆசைப்படுகிறோம். ஆகவே சுற்ற்த்தில் உள்ள சிறார்களுடன் கதைகள் பேசுவோம், கதைகள் கேட்போம் அதை இலக்கியத்தினுள் கொண்டு வருவோம்.

கதைகள் போல ஓவியங்களும் சிறார்களுக்கான முக்கியமான தளமாக கருதுகிறோம். ஒவ்வொரு முறையும் பல்வேறு பள்ளிகளுடனும் செயற்பாடளர்களுடன் கதைகளுக்கான ஓவியங்களை சிறார்களிடமிருந்து பெறுகிறோம். எங்களுடன் சேர்ந்து படைப்புகளை கொண்டு வர விரும்பும் நண்பர்களுடன் தொடர்ந்து ஓவியங்கள் குறித்தும் சிறார்களின் சுதந்திரம் குறித்தும் உரையாடி, படைப்புகளை பெறுகிறோம். இதழுக்காக தான் வரைகிறார்கள் என்பதை அறிவிக்காமல் ஒரு நிகழ்வாக நடத்தி கதைகளை சிறார்களுக்கு சொல்லி ஓவியங்களை பெற சொல்கிறோம். தங்களது சிறார்களை புரிந்துக் கொள்ள மேலும் இதுப் போன்ற‌ செய்ல்பாடுகள் உதவுவதாக நண்பர்களும் உணர்கிறார்கள்.

இம்முறை ஓவியங்களுக்காக ஊ.ஒ.ந பள்ளி தொட்டிய மண்ணரை (திருப்பூர்) , ஊ.ஒ.ந பள்ளி வடுகபாளையம் (அவிநாசி) மற்றும் அரசு உயர்நிலைப் பள்ளி வெங்களத்தூர் ஆகிய பள்ளிகளுடனும் பஞ்சு மிட்டாய் நிகழ்வு மூலமாகவும் படைப்புகளை கொண்டு வந்துள்ளோம். இதுப் போன்று ஒவ்வொரு இதழுக்கும் 4-5 குழுக்கள்/பள்ளிகளுடன் சேர்ந்து பயணிக்க தயாராக இருக்கிறோம். விருப்பமுள்ள நண்பர்கள் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.

பஞ்சு மிட்டாய் 7ம் இதழ் சென்ற ஞாயிறு (ஆகஸ்ட் 19) அன்று பெங்களூரில் பஞ்சு மிட்டாய் நிகழ்வு மூலம் 60 சிறார்கள் வெளியிட “கதை சொல்லி” சதீஸ் மற்றும் தியாக சேகர் பெற்றுக்கொண்டனர். இதழ் சென்னை புத்தகத் திருவிழாவிலும் தற்போது கிடைக்கிறது. இதழ் வெளியான சூட்டுடன் தற்போது சிறார்களின் அனுபவங்கள் எங்களுக்கு வந்து சேர்கிறது. சிறுவர்கள், பஞ்சு மிட்டாய் இதழின் பக்கங்களை திருப்ப திருப்ப அவர்களுக்குள் மறைந்திருக்கும் படைப்பாற்றலை தூண்டப்படுவதை கவனிக்க முடிகிறது. எழுத்தாளர் விழியன் அவர்களது தனது மகன் செழியனுடன் பஞ்சு மிட்டாய் வாசித்ததை பகிர்ந்திருந்தார்..அவரது வார்த்தைகளில்..

டியர் பஞ்சுமிட்டாய், இந்த இதழ் மிகச்சிறப்பாக வந்துள்ளது. வந்த இதழ்களில் இது தான் பெஸ்ட். வடிவமைப்பு முந்தைய இதழிலேயே உச்சத்தை தொட்டுவிட்டது. இணைப்பாக வந்த காட்டுக்கு போகலாமா விளையாட்டு செம ஈர்ப்பு. செழியனும் நானும் காலையிலேயே அரைமணி நேரம் விளையாடினோம். சில சண்டைகளும் (குருவியும் காகமும் ஒரே மாதிரி இருக்காம்). காசி ராசா பாட்டு நினைவில் இருக்கு அவனுக்கு. எப்படி விளையாடவேண்டும் என்று எனக்கு வழிகாட்டினான். இதனைவிட மிக மகிழ்வான விஷயம் அவனே ஒரு டயரியும் பேனாவும் கொடுத்த தன் முதல் முழு கதையை கூறினான். அவன் சொல்லச்சொல்ல நான் எழுதி வைத்துள்ளேன். நிச்சயம் ஒரு அப்பனுக்கு இது பொக்கிஷம். நன்றி பஞ்சுமிட்டாய். – விழியன்

இதுப் போல் எங்கள் நிகழ்விற்கு வந்திருந்த ராதா அவர்கள் பஞ்சு மிட்டாய் நிகழ்வு மற்றும் இதழ் குறித்து இவ்வாறு தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

The best thing I learnt from the programme and the magazine is… All these days I have done a blunder to my daughter. Whenever my daughter used to tell stories on her own, I just stop her telling சும்மா உளராத. I have just encouraged to her to tell stories of others. So I have been a big barrier to her own imagination all these days. After seeing பஞ்சு மிட்டாய் Magazine, it’s really a eye opening for a mom like me. My daughter was so much motivated to see the pictures of the magazine and the stories of little ones. Stories, games, songs… All in one word we can tell… பஞ்சு மிட்டாய் Is குழந்தைகளால் குழந்தைகளுக்காக படைக்க பட்ட குழந்தைகளின் உலகம். Thanks a lot பஞ்சு மிட்டாய் Team, கதை சொல்லி Sathish and origami Thiyaga sekar. Keep rocking guys. -ராதா 

குழந்தைகளின் மகிழ்ச்சியும் இந்த வார்த்தைகளும் தான் எங்களை பெரிதும் உற்சாகம் ஊட்டுகிறது. தொடர்ந்து ஆதரவு தரும் அனைத்து நண்பர்களுக்கும் எங்களது அன்பை தெரிவித்துக் கொள்கிறோம்.

கடைசியாக,

இது எங்களது மூன்றாவது அச்சு இதழ். இந்த மூன்று இதழின் அச்சு வடிவமும் அண்ணன் வானம் மணிகண்டன் அவர்களின் கை திறனால் உருவானது. ஒவ்வொரு முறையும் பஞ்சு மிட்டாயின் பயணத்தையும் எங்களது நோக்கத்தையும் முழுவதுமாக உள்வாங்கி , குழந்தைகளின் படைப்புகள் பற்றி ஒரு நீண்ட உரையாடல் செய்து அதன் பின்னர் படைப்புகளுக்கு நேர்த்தியான வடிவத்தை கொடுத்து இதழை சிறார்களுக்கு மேலும் நெருக்கமானதாக‌ மாற்றியுள்ளார். மணிகண்டன் அவர்களுக்கு எங்களது அன்புகள்.

பஞ்சு மிட்டாய் இதழ் தனி குழுவினால் உருவாவது அல்ல. ஒவ்வொரு இதழின் உருவாக்கத்திலும் 20 க்கு மேலான நண்பர்கள் வழியே 300 க்கும் மேலான சிறார்களை சந்தித்து அதன் மூலம் வடிவம் பெற்று நேர்த்தியாக உருவாகிறது. இதேப் போல் ஒவ்வொரு இதழையும் கொண்டு வர ஆசைப்படுகிறோம்.

பஞ்சு மிட்டாய் சந்தா விபரங்கள் : 10 இதழ்கள் – ரூ.500/- , தனி இதழ் : ரூ.50/- . தொடர்புக்கு : பிரபு – 9731736363 / editor.panchumittai@gmail.com

Leave a comment