பஞ்சுமிட்டாய் சிறார் நிகழ்வு – ஆகஸ்ட் 2018

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

பெங்களூரை சேர்ந்த பஞ்சு மிட்டாய் சிறார் குழு கடந்த மூன்று வருடமாக பெங்களூர், சென்னை, தஞ்சை, காயல்பட்டிணம், ஓசுர் என்று பல்வேறு இடங்களில் சுமார் அறுபத்திற்கும் மேலான சிறார் நிகழ்வுகளை நடத்தியுள்ளது (முழுக்க முழுக்க சிறார்களுக்கான நிகழ்வு). பஞ்சு மிட்டாய் மூன்று விதமான சிறார் நிகழ்வுகளை நடத்துகிறது.

1. எங்கள் பகுதி குழந்தைகளுக்கு தொடர்ந்து வாரந்தோறும் நிகழ்வுகள் நடத்துவது.

2. வெளியிடங்களுக்கு சென்று பஞ்சு மிட்டாய் நண்பர்கள் சிறார் நிகழ்வுகளை நடத்துவது.

3. பெங்களூரில் தமிழ் சிறார்களுக்காக நிகழ்வுகளை ஏற்பாடு செய்வது. நிகழ்விற்கு குழந்தை செயற்பாட்டாளர்களை அழைத்து வெவ்வேறு கலை வடிவங்களை அறிமுகம் செய்வது.

இப்படி நிகழ்விற்கான எங்களது பயணம் அமைகிறது. தற்போது வரும் ஆகஸ்ட் 19ம் தேதியன்று (ஞாயிறு) மதியம் 3 மணிக்கு பெங்களூர் தமிழ் சிறார்களுக்கு நிகழ்வினை நடத்துகிறோம். விருந்தினர்களாக கதை சொல்லி சதீஸ் மற்றும் ஓரிகாமி தியாக சேகர் வருகிறார்கள். நிகழ்வு பற்றின தகவல்களை பகிர்ந்ததும் பெற்றோர்களிடமிருந்த அழைப்புகள் வந்தது. அந்த அழைப்புகள் அனைத்திலும் நிகழ்வு என்ன மாதிரியாக இருக்கும் என்ற கேள்வி கண்டிப்பாக இருந்தது. அதுவும் ஆச்சரியத்துடன் அவர்கள் கேட்கும் போது இன்னும் விரிவாக அதைப் பற்றி பேசிட வேண்டும் என்ற எண்ணம் மனதில் தோன்றியது.

நிகழ்வு எது மாதிரி இருக்கும் ?

இது முழுக்க முழுக்க சிறார்களுக்கான நிகழ்வு. சினிமா சம்மந்தப்பட்ட எந்த ஒரு விசயமும் இல்லாமல் பார்த்துக்கொள்கிறோம். நிகழ்வில் சிறுவர்களுக்கு பிடித்தமான வகையில் கதை, பாடல்கள், விளையாட்டுகள், கலை அறிமுகங்கள் இருக்கும். கதை என்றதும் நீதி போதனை மாதிரியான கதைகள் இல்லாமல் சிறார் இலக்கியத்திலிருந்து கதைகள் எடுத்து அதை சிறுவர்களுக்கு பிடித்தமான வகையில் சொல்வோம். அதேப் போன்று பாடல்கள், சிறார்களுக்கான பாடல்களை சிறுவர்களுடன் ஆடிப் பாடி மகிழ்வோம்.

சிறப்பு விருந்தினர்களாக இம்முறை கதை சொல்லி சதீஸ் மற்றும் ஓரிகாமி தியாக சேகர் அவர்கள் வருகிறார்கள். கதை சொல்லி சதீஸ் தமிழக பள்ளிக் குழந்தைகளிடம் நன்கு அறிமுகமானவர். குழந்தைகள் மத்தியில் ஒரு கோமாளியாக வல‌ம் வருபவர். தனது மொழியாலும் உடல் அசைவுகளாலும் குழந்தைகளுடன் மிகவும் நெருக்கமானவராக மாறுபவர்.

அதேப் போல் தியாக சேகரும், தமிழகத்தில் ஓரிகாமி கலையில் முக்கியமானவர். ஓரிகாமி கலையை சிறார்களுக்கு மிகவும் நேர்த்தியாக எடுத்துச் செல்பவர். ஒவ்வொரு குழந்தைக்கும் தனது நிகழ்வின் முடிவில் காகித மடிப்பு கலையில் மீதான ஆர்வத்தை ஏற்படுத்த கூடியவர். தனது கலைத் திறன் தாண்டி குழந்தையுடன் பழகும் திறனும் கொண்டவர். இவர் தற்போது புது முயற்சியாக நமது நிலம் சார்ந்த பொருட்களையும் ஓரிகாமியில் கொண்டு வந்துக்கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நிகழ்வு சுமார் மூன்று மணி நேரம் இருக்கும். குழந்தைகளுடன் பெற்றோர்களுடன் சேர்ந்து தங்களது பொழுதை இனிமையாக்கும் வகையில் அமைந்திருக்கும். இது குடும்பமாக நாம் அனைவரும் ஒன்றாகி நமது பொழுதை மகிழ்வோடு குழந்தைகளுடன் கொண்டாடும் நிகழ்வாக இருக்கும்.

பஞ்சு மிட்டாய் 7 ம் இதழ் வெளியீடு :

ஆம் இம்முறை பஞ்சு மிட்டாய் 7 ம் இதழ் தயாராகி விட்டது. இந்த நிகழ்வில் நமது 7ம் இதழும் வெளியாகிறது. சிறார் இதழ் சிறார் நிகழ்வில் வெளியாவது இரட்டை மகிழ்ச்சி தானே. இந்த இதழில் சிறார்கள் சொன்ன கதைகள் , கதைகளுக்காக அவர்கள் வரைந்த ஓவியங்கள், சிறார் எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனின் கதை, எழுத்தாளர் என்.சொக்கனின் பாடல், புதிர், ராஜ் சிவா-யாழினி அவர்களின் அறிவியில் கேள்விகளுக்கான காமிக்ஸ் வடிவத்தின் கதை,குடு குடு ராசா மரபு விளையாட்டு அறிமுகம் என வண்ணமயமாக வந்துள்ளது. இது இல்லாமல் இலவச இணைப்பாக “காட்டுப் பக்கம் போவோமா?” என்ற விளையாட்டையும் கொண்டு வந்துள்ளோம்.

வண்ணமயமான வடிவமைப்பு, எளிமையான மொழி, தரமான அச்சிடல், நேர்த்தியான ஓவியங்கள் சிறுவர்களின் கற்பனைகளை முதன்மைப் படுத்துதல் என பஞ்சு மிட்டாய் இதழ், சிறார்களின் மகிழ்ச்சியை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு செயல்படுகிறது. அதுவே மொழியையும், வாசிப்புப் பழக்கத்தையும் சிறுவர்களிடம் எளிமையாகக் கொண்டு சேர்க்கிறது.

கதைப் பெட்டி:

சிறார்களுக்காக அவர்கள் கூடும் இடங்களில் பஞ்சு மிட்டாய் இதழ் சார்பாக “கதைப் பெட்டி” வைப்பது வழக்கம். நமது நிகழ்விலும் கதைப் பெட்டி இருக்கும். சிறார்கள் வீட்டிலே கதைகள் எழுதி கொண்டு வரலாம். அதனை பெட்டிக்குள் சேர்த்திடலாம். சேரும் கதைகள் தற்கால சிறார் இதழ்களுடன் (பஞ்சு மிட்டாய், குட்டி ஆகாயம் மற்றும் சில குழுவினருடன்) பகிரப்படும். அரங்கிலும் எழுதுவதற்கான அனைத்து வசதியும் செய்து தரப்படும்.

புத்தகங்கள்:

ஒவ்வொரு முறை நிகழ்விலும் குழந்தைகளுக்கான புத்தகங்கள் மற்றும் குழந்தைகள் பற்றி தெரிந்துக்கொள்ள பரிந்துரைகள் கேட்கப்படுகிறது. ஆதலால் இம்முறை சிலப் பிரபலமான தமிழ் புத்தகங்களை அரங்கில் ஏற்பாடு செய்திருக்கிறோம். அவை விற்பனைக்கு கிடைக்கும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம். குறிப்பாக சிறார் புத்தகங்களை பதிப்பித்து வரும் வானம்,பாரதி மற்றும் குட்டி ஆகாயம் புத்தகங்கள் கிடைக்கும்.

கட்டணம் ஏதும் உண்டா?

நிகழ்விற்கு கட்டணம் ஏதுமில்லை. விருப்பமுள்ள நண்பர்கள் எங்களது செலவுகளை பகிர்ந்து கொள்ளலாம்.

முன்பதிவு தகவல்கள்: [இடம் பற்றின தகவலுக்கும்]

ஜெயக்குமார் – 9008111762

அருண் கார்த்திக் – 99027 69373

பிரபு – 9731736363

Leave a comment