மாணவர் பாராளுமன்றம் – ராம் பிரகாஷ் கிருஷ்ணன்

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

ஒரு நாள் பசி மிகுதியால் ஒரு கடைக்குச் சென்று இரண்டு இட்லி வாங்கினேன். பார்பதற்கு பெரிய கடை, கடையிலும் நல்ல‌ கூட்டம். பத்துநிமிடங்கள் கழித்து வந்து சேர்ந்தது அந்த ஆறிப்போன, நூற்கண்டு இட்லி. விழுங்குவதற்கு கடினமாகத் தான் இருந்தது. ஒரு இட்லி தாண்டியவுடன் பில் கேட்டேன். இட்லியின் விலை எழுபது ரூபாய். என்ன தான் ஐந்து சதவீதம் வரி என்றாலும் அந்த இட்லிக்கு எழுபது ரூபாய் அதிகம் தான். இட்லி நன்றாக இல்லை, எழுபது ரூபாய் அதிகம் என்று கூறுவதா? இல்லை பணத்தை தண்டம் செய்து விட்டோமே என்று வருந்துவதா என்று மனக்குழப்பதிலேயே பணத்தை செலுத்தி விட்டு எழுந்து விட்டேன்.

இந்த நிகழ்ச்சி என்னை விட்டு விலகவே இல்லை. எவ்வளவு பெரிய கோழையாக இருந்திருக்கிறேன் என்று வருத்தியதும் உண்டு. காசு கொடுப்பது நாம், அதை உண்பது நாம், அது தரமானதாக இல்லையெனில் கேள்வி கேட்பதற்கு மட்டும் ஏன் ஐயம்?

ஏனெனில் நாம் கேள்வி கேட்டுப் பழகவில்லை, பள்ளிகளும் பழக்கவில்லை. வகுப்பறைகளில் நாம் கேள்வி கேட்பதும் அரிதிலும் அரிது. பள்ளிகளில் படித்த பதினான்கு வருடங்களும் பதிலைத் தான் படித்தோமே தவிர கேள்விகள் கேட்டது கிடையாது.

விஞ்ஞானிகளை சற்று உற்று நோக்கினால் புரியும், அவர்கள் கண்டுப்பிடித்த அனைத்துமே கேள்விகள் உருவாகத்தான் தோன்றியிருக்கும். ஆப்பிள் ஏன் கீழே விழுந்தது என்ற கேள்வி தான் நியூட்டன் விதிகளாக உருமாறியது.

வெறும் இரண்டு இட்லி அதை உண்பதால் பெரிய பாதிப்பு இல்லை. நம் கல்வி என்பது அப்படியா? நான் என்ன செய்கிறேன் என்று கேள்வி கேட்காமல் செய்வதாகட்டும், தன் பள்ளிகளில் நடக்கும் தவறுகளில், “அவர்கள் செய்தால் தப்பில்லை” என்ற எண்ணம் தோன்றி விட்டால் இட்லி மட்டும் இல்லை எந்த தவறு நடந்தாலும், எதை நாம் பார்த்தாலும் நம் குழந்தைகள் கேள்வி கேட்பதை நிறுத்தி விடுவார்கள். பொய் பிரச்சாரங்களை கண்மூடித்தனமாக நம்ப நேரிடும்
.
சரி மாணவர்கள் பாடங்களிலும், வகுப்பறைகளிலும் முதற்கட்டமாக கேள்விகள் கேட்க வேண்டும் என்று கேள்வி எழுப்பியப்பின் தான் தோன்றியது மாணவர்கள் பாராளுமன்றம்.

ஐந்திலிருந்து ஒன்பதாம் வகுப்புகளில் மாணவர்களிடம் பேசினோம். கல்வித் துறை, சுத்தம் மற்றும் சுகாதாரம், கலை நிகழ்சிகள் என ஆறு துறைகளும், அதற்க்கு உதவியாளர்கள், பின் ஒரு குடியரசுத் தலைவர் , ஒரு பிரதமர், ஒரு பொருளாளர் என மொத்தம் முப்பது பதவிகளுக்கும் தேர்தல் அறிவித்தோம்.

இதை ஆரம்பிக்கும்போது இரண்டு குறிக்கோள்கள் தான் இருந்தது.

1. இந்தக் குழுவில் இருக்கும் மாணவர்களுக்கு இப்பள்ளியில் தங்களுக்கும் உரிமைக் குரல் இருக்கிறது என புரிந்துகொள்ள வேண்டும்.

2. ஒவ்வொரு பிரச்சனைகளும் எப்படி பார்க்க வேண்டும்? அவற்றை எவ்வாறு அணுக வேண்டும்? எது சரி? எது தவறு? என்று எப்படி பார்ப்பது, என்பதே.

முப்பது மாணவர்களும் தேர்தலில் அனைத்து மாணவர்களாலேயே தேர்வு செய்யப்பட்டனர். பதவி பிரமாணம், நெஞ்சில் ஒரு பேட்ச் என எல்லா சடங்குகளும் முடிந்தப் பின் முதல் கூட்டம் நடந்தது. ஆனால் துவக்கத்திலே நாங்கள் நினைத்த எதுவும் சாத்தியம் ஆகாதோ என்ற எண்ணம் வந்தது. அந்த‌ அளவிற்கு ஏகப்பட்ட விசயங்கள் அந்தக் கூட்டத்தில் அரங்கேறியது. ஒருவன் ஒன்று சொல்லுவதற்கு முன்னால் இன்னொருவன் வேறு சொல்வான். அதைப் பிடிக்காத இன்னொருத்தி வேறு கூறுவாள். “குழந்தைங்க தெய்வங்க” மாதிரி என்று சொல்பவர்களையெல்லாம் ஒரு நாள் ஆசிரியாராக்கி விட வேண்டும். அதன் பிறகு அந்த வார்த்தையை கண்டிப்பாக சொல்லவே மாட்டார்கள்.

முதல் வாரத்தின் அனுபவமே மனதை விட்டு நீங்கவில்லை, அதற்குள் அடுத்த வாரத்தின் கூட்டம் உடனே வந்தது. இம்முறை சில நெறிமுறைகளை முன்வைத்தோம். ஒருவர் பேசும் போது மற்றவர்கள் கேட்க வேண்டும். அடுத்தவர் பேச வேண்டுமாயின் கை உயர்த்தி தங்கள் விருப்பத்தை பதிவு செய்து கொள்ளலாம். பிறகு சென்ற வாரம் கூட்டத்தின் பற்றின விவாதம் நடைப்பெற்றது. அவர்களே அது சரியில்லை இது சரியில்லை என ஒரு பட்டியலிட்டனர்.

பின்பு சில மாதங்கள் தலைவர்கள் பிறந்தநாள் விழாக்கள், பள்ளி கலை நிகழ்ச்சிகள் என ஒரு அரசியல் கட்சிகள் செய்யும் வழக்கமான நிகழ்வுகள் அனைத்தும் எங்களது பள்ளியிலும் நடந்தது. ஆனால் இந்த நிகழ்வுகள் அவர்களிடையே ஒருங்கிணைத்து வேலை செய்யும் பண்பை விதைத்தது.

கொஞ்சம் கொஞ்சமாக அவர்களை திசை திருப்பினோம். உங்கள் பள்ளியில் பிடிக்கும் பிடிக்காததை பட்டியலிடுங்கள் என கூறினோம். அவர்கள் இல்லாததைத் தான் பிரச்சனையாக கூறினார்கள். மின்விசிறி வேண்டும், விளையாட பொருட்கள் வேண்டும் என ஆரம்பித்தனர். பிரச்சனையின் ஆழத்திற்கு செல்ல சிறிது காலம் பிடித்தது. இருப்பதில் என்ன பிரச்சனை முதன்மையானது என யோசிக்க ஆரம்பித்த காலம் அது..

“நாம் ஏன் ஆங்கிலத்தில் பேச கூச்சப்படுகிறோம்? என கேள்வியை உயர்த்தியது கல்வி அமைச்சர்.

“இப்போ இது ரொம்ப அவசியமா?” என்பது போல் இருவர் கூற,

இல்லை அவசியாமானது என்று தலைவி அந்தக் கேள்வியை எடுத்துக்கொள்ள, பொருளாளரோ குறிப்புகளை எடுக்கத் தொடங்கினார்.

“வெளிப்பள்ளிகளுக்கு போட்டிக்கு சென்றால் அவர்களால் அழகாக ஆங்கிலத்தில் பேச முடிகிற போது நம்மால் முடியவில்லை.”

“ஆங்கிலத்தில் தான் படிக்றோம்..ஆங்கிலத்தில் தேர்வு எழுதிகிறோம்..பிறகு ஏன் ஆங்கிலத்தில் பேச கூச்சம்?”.. இது வேறொரு அமைச்சர்

“ஆங்கில ஆசிரியை கூட ஆங்கிலத்தில் பேசுவதில்லை” இது இன்னொருவர்

“நம் வீட்டில் பேச இடமில்லை, இருந்தாலும் கூச்சமாக இருக்கிறது” நெளிந்து கொண்டே கூறுகிறார் இன்னொருவர்.

“ஸ்போகேன் இங்கிலீஷ் என்ற வகுப்பு இருக்குமே அதை என்ன செய்கிறோம்,அந்த வகுப்பை வேறொரு ஆசிரியை வாங்கிக்கொள்கின்றனர். அதனால் ஸ்போகேன் இங்க்லீஷ் வகுப்பு நடப்பதேயில்லை” மீண்டும் தலைவி.

இனி நம் கூட்டங்களில் ஆங்கிலத்தில் உரையாடலாமா? எவ்வளவு பேருக்கு சம்மதம்? என கேட்டது ஐந்தாம் வகுப்பு மாணவி.

தவறாக உரையாடினால் எந்த தவறும் இல்லை யாருக்கும் இங்கு ஆங்கிலம் முழுவதும் தெரியாது அனைவரும் பேசுவோம் என்றான் ஆறாம் வகுப்பு மாணவன்.

“இனிமேல் ஸ்போகேன் இங்கிலீஷ் வகுப்பை அந்த ஆசிரியரே வந்து நடத்த வேண்டுமாறு ஒரு கடிதம் பள்ளி முதல்வருக்கு எழுத வேண்டும். அதை யார் செய்கிறீர்கள்” என தலைவி கேட்க ஒருவர் முன்வருகிறார், பின் அடுத்த நாள் அந்த கடிதத்தில் அனைத்து அமைச்சர்களும் கையெழுத்திட்டார்கள்.

இரண்டு நாட்களில் அந்த விவாதம் பள்ளி முழுவதும் பரவுகிறது. முதல்வர் ஆசிரியர்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிடுகிறார். அதில், ஸ்போகேன் இங்கிலீஷ், நூலக நேரம், விளையாட்டு வகுப்புகளை மற்ற ஆசிரியர்கள் வாங்க கூடாது. அந்தந்த வகுப்புகளில் அந்தந்த பாடங்கள் மட்டுமே நடத்திட வேண்டும் என்று மாணவர் மன்றம் கூற அதை பள்ளியும் ஏற்றுக்கொள்கிறது. உடனே முதல்வருக்கு பாராட்டுக்கடிதம் எழுதி தங்கள் நன்றியை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள்.

வெற்றிக் களிப்போ அல்லது கூச்சலோ கிடையாது. தங்கள் கடமையை உணர்ந்தவர்களாக அடுத்த கேள்வி என்ன என யோசிக்க தொடங்கி விட்டார்கள்.

நன்றி,

ராம் பிரகாஷ் கிருஷ்ணன்,
துணை நிறுவனர்,
வித்யா விதை.

http://vidhyavidhai.org/

3 Comments

Leave a comment