கதைகளோடு ஓட்டியும், ஓட்டாமலும் வந்து கொண்டிருக்கும் நான் எனக்கு குழந்தைகள் பிறந்த பிறகு அவர்களுக்கான கதைசொல்லியாக மாறியுள்ளேன். கதைகளின் வழியே எனது குழந்தைகளிடம் தனிமையில் கொண்டாடிக் களிப்பவனாக இருக்கிறேன். அக்குழந்தைகள் இவ்வுலகத்தைப் புரிந்து கொள்ள கேள்விகளை உருவாக்குகின்றனர். நம்பிக்கைக்கு உரியவர்களாய் அவர்கள் நம்மை ஏற்றுக்கொண்டு கேள்விகளை நம்மிடம் வீசும்போது நம்மிடையே உரையாடல் துவங்குகிறது. அதை கதைகளாக்கிக் சொல்லும்போது அவர்களுக்கு நெருக்கமானவர்களாக மாறிப்போகிறோம். கதைகளை வலிந்து உருவாக்கிக்கொண்டு அவர்களிடம் கொட்டுவதைவிட அவர்களுடனான விளையாட்டு நேரத்தில் கற்பனையான கதைகளை நாமே உருவாக்கி சொல்வது சரியானதாக இருக்கும்.
நான் இரவு நேரங்களில் குழந்தைகளோடு கதை பேசிக் கொண்டிருக்கும்போது கதைகளின் ஊடே அவர்களையும் ஒரு கதாபாத்திரமாக இணைத்துக் கூறுவதுண்டு. இது அவர்களிடம் ஒரு ஆர்வத்தை ஏற்படுத்துவதைக் காண்கிறேன். அக்கதைகளில், தான் என்னவாக சித்தரிக்கப்படுகிறோம் என்பதில் மிகுந்த கவனம் கொள்கின்றனர். கதையில் அவர்களுக்கு வாய்ப்பான இடம் கிடைக்கத் துவங்குகையில் மீதிக் கதையை அவர்களே தொடர விரும்புகின்றனர். எனது குழந்தைகள் தொலைக்காட்சி நிகழ்வுகளை தொடர்ச்சியாக பார்க்கத் துவங்கியிருந்தாலும் இரவில் அவர்களின் பங்களிப்போடு உருவாகும் கதைகளே அவர்களுக்கு மிகப்பெரிய ஓய்வை, மகிழ்ச்சியைத் தருவதை உணருகின்றேன்.
எனது சிறுவயதில் விகடன் இதழில் வரும் கார்ட்டூன் வகை ஓவியங்களில் (உதாரணமாக இரயில் நிலையத்தில் பலவகை மனிதர்களின் சித்திரம்) எனது கற்பனைகளைக் கலந்து ரசித்துக் கொண்டிருப்பேன். இப்பொழுதும் எனக்கது விருப்பமான ஒன்றுதான். அது போன்ற ஓவியங்களை நம் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தி கற்பனையான உரையாடலை நகைச்சுவையை உருவாக்கினால் அவர்கள் விரும்புவார்கள் என நினைக்கிறேன்.
அத்தோடு இன்றைய காலங்களில் பெரியவர்கள் பேசும்போது குழந்தைகளை ஒதுங்கச் சொல்வதும், ஓரளவு வளர்ந்த சிறுவர்களைக்கூட பொது நிகழ்வுகளுக்கு அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தாமலும் இருப்பது கல்வியின் காரணமாக அதிகரித்து வருவதாக உணர்கிறேன். மாற்றாக கற்பனையான கதைகளோடு மட்டுமே அவர்களுக்கான உறவு என எண்ணாமல் பெரியவர்களின் பேச்சுக்களை அவர்கள் கவனிக்கத் தொடங்கினால் அதை தடை செய்யாமலும் இருக்க நாம் பழக வேண்டும். இதன் வழியே நமது வாழ்க்கையைக்கூட ஒரு சித்திரமாக்கி அவர்கள் பார்க்கக்கூடும். அது மட்டுமின்றி பெற்றோர்களை மதிப்பிட அவர்களுக்கு இதைக் காட்டிலும் வேறு வாய்ப்பு இருக்காது என்றே எண்ணுகிறேன்.
























