நங்கை வீடு இந்தப் பக்கம் இருக்கிறது – உமா

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

நங்கைக்கு (மகள்) ஒரு வயதான பிறகு புது வீடு கட்டி குடி வந்தோம். நங்கை நிறையக் குறும்பெல்லாம் இல்லை, சமத்துக் குழந்தை. கணவர் அலுவலகம் சென்ற பிறகு எனக்குத் துணை நங்கை தான். அவளுக்குப் புரியுமோ புரியாதோ அவளிடம் எதையாவது பேசிக் கொண்டே இருப்பேன்.கூட்டுக் குடும்பத்தில், வேலைக்குச் சென்று கொண்டு கலகலன்னு வளர்ந்தவள் நான்.
ஊர்(பெங்களூரூ) புதிது, மொழி புதிது தமிழைத் தவிர வேறு எதுவும் தெரியாது, அப்போது நங்கை இருந்தது பெரிய பலமாக‌ இருந்தது. நான் சொல்வதை, பேசுவதைக் கேட்க ஒரு ஆளாவது இருக்கிறாளே என்று எனக்கு ஒரு குஷி.

அவளிடம் பேசிக் கொண்டே இருந்த காலகட்டம் போய் கலர் கலர் படங்கள் உள்ள‌ புத்தகங்களைக் காட்டி பேச ஆரம்பித்தேன். இப்படி நான் செய்தது அவளுக்கு வியப்பாக இருந்தது. அப்படி எங்கள் நாட்கள் சென்றுகொண்டிருந்தது. ஒரு நாள் நான் பேனாவில் எழுதி கொண்டிருந்ததைப் பார்த்தாள். பார்த்ததும் பேனாவை பிடுங்கிக் கிறுக்க ஆரம்பித்தாள். அப்பொழுதிலிருந்து அவளது அப்பா சட்டையில் பேனாவைப் பார்த்துவிட்டால் போதும் அதை எடுத்து விடுவாள். சரியான “பேனா பிடுங்கி ” ன்னு செல்லமாகக் கொஞ்சுவேன்.

 

நங்கை ஓவியங்கள் - 1
நங்கை ஓவியங்கள் – 1

ஒரு நாள் கிரையான்ஸை வைத்து படம் வரைந்து காண்பித்து அடிக்கக் கற்றுத் தந்தேன். அவளால் க்ரையான்ஸை பிடிக்க வரவில்லை ஆனாலும் எழுதிக் கிறுக்குவாள். பேப்பரில் கிறுக்குவதை விட்டுவிட்டு ஒரு நாள் தரையில் கிறுக்கத் தொடங்கினாள். பேப்பர் சின்ன இடம், தரை பெரிய இடம். அது அவளுக்கு விருப்பமாகிப் போனது. தரையில் விருப்பம் போல் வரைவாள். அதனைத் துடைப்பதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடும். “புது வீடாச்சே” என்று நான் அலுத்துக் கொள்வேன். நான் அலுத்துக்கொள்வது அவளுக்கு பிடித்துப் போனது. ஆதலால் தினமும் அதிகமாக‌ தரையில் வரைந்தாள்.

திடீரென ஒரு நாள் சுவரில் கோடு போடத் தொடங்கினாள். கலர் கலராக சுவரில் கோடுகளை நிறைத்தாள் . ஏனோ அந்தக் கோடுகள் அவளுக்கு அப்படிப் பிடித்துப் போனது. அந்தக் கோடுகளை பார்த்ததும் எனக்குப் பக்கென ஆகிவிட்டது. அய்யோ! புது பெயின்டை இப்படி பண்ணிட்டாளேன்னு, கஷ்டமாக‌ இருந்தது. அவளுக்குச் சுவரில் வரைவது வழக்கமானது. அவளுக்கு வழக்கமானதால் எனக்கு அதை பார்த்துப் பார்த்து பழகி விட்டது.

“ஒரு நாள் கிறுக்குனா திட்டலாம், தினமும்னா என்ன செய்றதுன்னு, போக‌ட்டும் போ” என்று நானும் அதை ஏற்றுக்கொண்டுவிட்டேன். யாராவது கேட்டால் Modern art என்று சொல்லிக்கொள்ளலாம் என்று மனதைத் தேற்றிக்கொண்டேன்.

ஒரு நாள் தபால்காரர் எங்களது வீட்டில் உள்ள ஓவியங்களை எதார்த்தமாகப் பார்த்தார். பார்த்ததும் என்னிடம் வந்து “நீ ஒரு நல்ல அம்மா”ன்னு பாராட்டினார். திடீரென அவர் அப்படிச் சொன்னதும் ஒன்றும் புரிய‌வில்லை. “ஏன் அப்படி சொல்றீங்கன்னு?” கேட்டேன், குழந்தையோட மனசில் சந்தோஷங்கள் இருக்கும், அதை இந்த மாதிரி ஓவியத்தில் வெளிப்படுத்தி சந்தோஷப் படுவார்கள்.ஆனால் நிறையப் பெற்றோர்கள் ஒரு கட்டத்துக்குள்ள, ஒரு பேப்பர் குள்ளயே வரைய விடுவார்கள், என்ன தான் பக்கெட் குளியல் சுகம் என்றாலும், அருவிக் குளியல், ஆற்றுக் குளியல் போல் வருமா? அது போல குழந்தைகளுக்குச் சுவர், தரையில் எழுதுவது, வரைவது என்பது அலாதி சுகம். அதை அனுமதிக்கும் பெற்றோர்கள் குறைவு. வீட்டின் அழகே இது போன்ற கிறுக்கல்கள் தான்” என்றார்.

அவர் சொன்ன விஷயங்கள் என்னை நிறைய‌ யோசிக்க வைத்தது. அவர் சொல்லும் வரையில் நான் அப்படியெல்லாம் சிந்தித்ததே இல்லை. என்னால் அவள் விரல்களை கட்டிப் போட முடியவில்லை. அதனால் அவளை நான் தடுக்கவில்லை என்பதே உண்மை. அந்தத் தபால்காரர் சொன்ன பிறகு என்னிடம் இருந்த கொஞ்ச நஞ்ச பதட்டமும் நீங்கிவிட்டது. சுவரின் மீது நான் வைத்திருந்த கவலை அவள் மீதான அக்கறையாக மெல்ல மெல்ல மாறியது.

வானவில்லில் ஏழு நிறங்கள் தான், ஆனால் எங்கள் வீட்டின் சுவர்களில் 7000 நிறங்கள் இருக்கும் .நான் எதுவும் சொல்வதில்லை என்பதை அவள் உணர்ந்ததும் சுவர் ஓவியங்கள் அதிகமாகியது. கூடத்தில் மட்டும் இருந்த கிறுக்கல்கள் சமையல் அறை, சாமி அறை என வீடு முழுதும் பரவியது.அவள் வளர வளரக் கிறுக்கல்களின் உயரமும் அதிகமாயின. ஒரு கட்டத்தில் சுவரே தெரியவில்லை.

இப்பொழுது நங்கை ஒன்பதாம் வகுப்பு படிக்கின்றாள். வண்ணங்களின் கலவை குறித்தும் அவள் தேர்ந்தெடுக்கு முடிவுகள் அனைத்துமே என்னை மிகவும் மகிழ்வுறச் செய்கிறது. ஒவ்வொரு முறை ஓவியம் சார்ந்த நிகழ்விற்கு அவள் செல்லும் போதெல்லாம் என்னை மிகவும் கவர்ந்தது அவளது தன்னம்பிக்கை தான்.

பஞ்சு மிட்டாய் 4ம் இதழுக்கு நங்கை வரைந்த ஓவியம்

அவளுக்குச் சற்றே விவரம் தெரிந்ததும் வீட்டிற்கு வண்ணம் பூசினோம். தற்பொழுது வீட்டின் சுவர் பளிச்சென‌ இருக்கிறது. ஆனால் அதில் ஏனோ எந்தவித ஈர்ப்பும் இல்லாமல் இருக்கிறது. இந்தக் கட்டுரையை அவளுக்கு வாசித்துக்காட்டும் போது..ஒரு அழகிய சம்பவத்தை அவளிடம் கூறினேன்.
“Apartmentயில் உள்ள சுவரில் நங்கை வீட்டிற்கு வழி இது தான் என ஆங்காங்கே வரைந்து வைத்துவிடுவாய்..அது நம்ம வீடு இல்லைமா…” என்று புரியவைக்க படாதபாடு பட்டேன் என்றேன்.

“ஓ! இப்படியெல்லாம் செய்திருக்கிறேனா” என்று அழகிய புன்னகையை சிந்திவிட்டுச் சென்றாள். இந்தக் கட்டுரையை எழுதும் போது ஒரே ஒரு வருத்தம் மட்டும் இருந்துகொண்டே இருந்தது..அந்தச் சுவரை முழுவதுமாக ஒரு புகைப்படம் கூட எடுத்து வைக்காமல் விட்டுவிட்டேன் என்ற வருத்தம் தான் அது.

1 Comment

  • Jayachandran says:

    சுவர்கள் தேவை..வாழ் வதர்க்கு அல்ல..பிஞ்சுக்களின் வண்ணங்கள் பதிய…அது சொல்லும் அவர்களின் என்னங்களை…வரிகள் அருமை …நங்கயின் ஓவியம் போல!!

Leave a comment