அனிதா என்னும் நட்சத்திரம் – பிரேமா ரேவதி

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

ஆற்றுப்படுத்திக்கொள்ள முடியாத துயரங்களில் பிரதானமானவை குழந்தைகள் மரித்துப்போவது. அதுவும் தம்மை மாய்த்துக்கொள்ளும் பிரகாசமான தாரகைகள் – ரோஹித், செங்கொடி, அனிதா அப்புறம் இந்த ஆண்டு நீட்டால் பலிவாங்கப்பட்டுவிட்ட பிரதீபா வரை இம்மரணங்கள் மனதை பெரிதும் முடக்கிப் போட்டுவிடுகிறது.

அனிதாவின் அந்தக் கனிவான பிஞ்சுமுகம் நம் அனைவருக்குமே மறக்கமுடியாத ஒரு பாரம். கண்காணா சிறுநகரங்களில் பொருளாதார பின்புலமோ சமூக பிண்ணனியோ இல்லாத குழந்தைகளோடு பணிபுரிந்து வரும் எவருக்கும் அனிதாவும் பிரதீபாவும் பயணித்திருக்கும் தூரங்களின் வலிகள் தெரியும். அது வார்த்தைகளில் விவரித்துவிடக்கூடிய போராட்டம் அல்ல.
அத்தனையையும் தம் படிப்பால் வென்றுவிட முடியும் என தாண்டி எழும் அவர்களின் மனவலிமை எல்லாம் இந்த அடிமை அரசுகளால் அலைகழிக்கப்பட்டு இக்குழந்தைகளின் தற்கொலைகளாக மாறிப்போனது மிக இறுக்கமான ஒரு முட்டுச்சந்தில் நம்மை தள்ளியது.

இன்னொரு புறம், டாக்டர் ஆவதும் இஞ்சினியர் ஆவதும் தான் எல்லாம் அது இல்லாவிட்டால் வாழ்க்கையே இல்லை எனும் ஒரு பந்தயத்தின் விதிகள் வாழ்வியலால் வலிமையான நம் குழந்தைகளை குலைத்துப் போடுவதையும் ஏற்க முடியவில்லை.

ஒருநாள் இனியன் அழைத்து அனிதாவின் கிராமத்தில் குழந்தைகள் கலை இலக்கியக் கொண்டாட்டம் நடத்தப் போகிறேன், அனிதாவின் அண்ணன் மணிரத்தினமும் ஆர்வமாக இருக்கிறார், வானவில் குழந்தைகளின் நாடகத்தைப் போடமுடியுமா? எனக் கேட்டபோது மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டோம். இது எங்கள் கடமையும் தானே எனும் எண்ணத்தோடு.

அனிதாவின் ஊருக்கு 25 குழந்தைகளோடு பொங்கிப் பெருக்கெடுத்தோடும் காவிரியை கடந்து கங்கைகொண்ட சோழபுரத்தில் உணவருந்தி மழைச் சாரல் அங்கங்கே வரவேற்க போய்ச் சேர்ந்தோம். வழியெல்லாம் அனிதாவைப் பற்றியும் குழுமூர் பற்றியும் பல கேள்விகளை கேட்டுக் கொண்டே வந்தனர் குழந்தைகள்.

அனிதா திடல் என பெயர்பலகையில் அனிதாவின் அழகுமுகம் மனதை கலங்கடித்தது. மேகமூட்டமாய் இருந்தது ஊர். தாண்டி உள்ளே சென்றால், சமுதாய கூடத்தில் ஏராளமான குழந்தைகளும் பெரியவர்களும் கூடியிருக்க குழந்தைகளின் நூல் விமரிசன அரங்கு கனஜோராக நடந்துகொண்டிருந்தது. குழந்தைகளின் உற்சாகமான குரல்கள் மீண்டும் மனதை ஒருமுகப்படுத்தின. இறுபத்தைந்து குழந்தைகள் இனியனின் ஒரு மாத கால தயாரிப்பு பணிகளில் நூல்களை தேர்வு செய்து வாசித்து உள்வாங்கி, அதை தமக்கே உரிய வழிகளில் முன் வைத்துக் கொண்டிருந்தனர். அவர்களின் அறிவுக் கூர்மையும் சமயோசிதமும் வாசிப்பு ஆர்வமும் எல்லா துக்கங்களையும் அறுத்தெறியும் வல்லமை படைத்த வைரமாய் அந்த பழைய கட்டிடத்தில் அந்த சிறு கிராமத்தில் ஒளிர்ந்துகொண்டிருந்தன.

நாடகத்திற்கு குழந்தைகள் உடைமாற்ற ஒரு தோழரின் வீட்டுக்கு போனோம். அவர் எதிரில் இருந்த வீட்டைக் காட்டி அதுதான் அனிதாவின் வீடு என்றார். எனக்கும் முன்னால் குழந்தைகள் அனிதா அக்காவின் வீட்டுக்கு ஓடினர். சிமெண்ட் பூசப்பட்டாலும் தன் காயங்களை மறைக்க வழியில்லாமல் தனியாய் இருந்தது வீடு. இறுகிப் போன முகத்தோடு எங்களிடம் அன்பாய் பேசினார் அனிதாவின் அப்பா. திடலுக்கு மௌனமாய் திரும்பினோம்.

கஜா என்னிடம் வந்து கேட்டான்,

“அக்கா நட்சத்திரம் எல்லாம் எங்க இருந்து வருது?”

“அது அங்கேயேதான் மா இருக்கு”

“இல்ல அக்கா செத்துபோனவங்கதான் நட்சத்திரமா வந்து நம்மை பாத்துக்குவாங்களாம். அங்க பாருங்க ஒரே ஒரு நட்சத்திரம் எவ்ளோ அழகா ஜொலிக்குது. அது அனிதா அக்காவா இருக்குமா கா?”

எனக்கு சொல்ல பதில் ஏதும் இல்லை.

நாடகம் ஒப்பனை செய்வது முதலே பல குழந்தைகள் ஆர்வமாய் சுற்றிக்கொண்டனர். முகமெழுதும் இடத்தில் பல வாண்டுகள் தமக்கும் முகமெழுத வேண்டும் என நச்சரித்தனர். இலக்கிய நிகழ்வு முடிந்து வந்து நாடகத்தைப் பார்க்க குழுமினர் குழுமூரின் குழந்தைகள். குமார் அம்பாயிரத்தின் டிஜிரூடு இசை நிகழ்வு சொல்லமுடியாமல் தேங்கிக் கிடக்கும் வலிகளையும் ஏக்கங்களையும் அசைத்து ஒரு லயத்தில் சேர்த்தது. உங்களுக்கும் நான் டிஜிருடு கற்றுத்தருவேன் என அவர் முடிவில் சொன்னபோது பல பிஞ்சுக் கைகள் உயர்ந்து நான் கத்துக்கறேன் நான் கத்துக்கறேன் என குரல்கள் எழுந்தன.

விஜயகுமார் அவர்களின் பிரமாதமான நெறியாள்கையில் வானவில் குழந்தைகள் மிக தாமதமாக தொடங்கியும் பிசிறின்றி நாடகத்தை நடத்தி முடித்தனர். நாடகம் முழுதும் 9.30 மணிவரை சோறு தின்ன தேடிக்கொண்டிருந்த தாய்மாரையும் பாட்டிமாரையும் பொருட்படுத்தாமல் குழந்தைகள் உன்னிப்பாக பார்த்தனர். உங்களோடும் விஜயகுமார் அண்ணன் நாடகம் செய்வார் எனச் சொன்னதும் பட்டியலே தயார் செய்தனர் யார் யாரெல்லாம் நடிப்பது என்று. இன்னிக்கு எனக்கு தூக்கமே வரமாட்டேன்னுது, ராத்திரியெல்லாம் நாடகம் போடுங்க என்றான் ஒரு வாண்டு. நாளைக்கும் வருவீங்களா என்றாள் இன்னொருத்தி. வானவில்லுக்கு வாங்க என அழைப்பு விடுத்ததும் காலாண்டு வலீவில் வருவதாக திட்டமிட்டனர்.

இறுதியில் அனிதா நினைவு நூலகத்திற்கு நூல்கள் வழங்கி தொடர்ந்து கலை இலக்கிய கொண்டாட்டங்களை முன்னெடுப்பது எனும் உறுதியேற்போடு நிகழ்வு முடிந்தது. மேடையில் முழுதும் சிறுமிகளும் சிறுவர்களும். இடையிடையே குழந்தைகளின் மனங்கவர் கோமாளி கதைசொல்லி சதீஷின் பாடல்களும் நகைச்சுவையும். ஆடம்பரங்களில்லை. குழந்தைகள் விழா என்று சொல்லி பத்து இருபது பெரியவர்கள் பேசும் கொடுமை இல்லை. எல்லாவற்றையும் குழந்தைகளை மையப்படுத்தி நிகழ்ச்சியை உருவாக்கியிருந்த இனியனுக்கு கொடுக்க அன்பு மட்டுமே இருக்கிறது.

வெளியே ஆயிரம் பேசிவிடலாம், ஆனால் உள்ளூரின் சிக்கல்களுக்குள் அதன் சட்டதிட்டங்களுக்குள் இருந்து இப்படி ஒரு நிகழ்வை எல்லா குழந்தைகளையும் ஒருங்கிணைத்து நடத்திய மணிரத்தினத்தின் உறுதியும் தெளிவும் போற்றுதலுக்குரியவை.

எதைச் செய்தாலும் படைப்பூக்கத்தை முன்னிறுத்தி செய்வதாக முடிவடுத்திருப்பதாக இனியனும் மணிரத்தினமும் சொன்னபோது, கண்கள் கலங்கியது. அனிதாவின் கனவுகளை நிறைவேற்றுவது என்பது எல்லோரும் மருத்துவர் ஆவது மட்டுமில்லை, அது வாழ்வோடு மல்லுக்கட்டி போராடும் நம் குழந்தைகளுக்கு ஆசுவாசத்தையும், கற்பனையின் வலிமையையும் கலையின் எல்லையற்ற ஆனந்தத்தையும் கூட கையளிப்பதும்தான் என நம்பும் சக பயணிகளைக் காணும்போது வரும் நெகிழ்வு கண்களை நிறைத்தது.

இரவு உணவருந்தி நாங்கள் கிளம்பும்போது மணி பத்து இருக்கும். மூட்டம் கலைந்து மேகங்கள் நகர்ந்துவிட முழுநிலா சமுதாயக் கூடத்தின் மேலே காய்ந்துகொண்டிருந்தது. அந்த நிலவொளியில் பெயர்ப்பலகையில் இருந்து அனிதா எங்களை வழியனுப்பி வைத்தாள். கனவுகளுக்கு அருகே கொஞ்சம் கற்பனையின் களிம்பை எடுத்துவைத்த நிறைவோடு நாங்கள் வானவில்லுக்கு திரும்பினோம்.

Leave a comment