டேங்கரில் அமர்ந்த படியே. குழலியின் நண்பர்களுக்குள் என்னையும் இணைக்கத் துவங்கினேன். பள்ளி வேனில் வரும் குழந்தைகள் வகுப்பிற்குக் கொஞ்சம் முன்னரே வந்துவிடுவார்கள். தினமும் அவர்களுடன் பத்து நிமிடம் தான் செலவு செய்வேன். அன்றைக்குத் தேவையான சக்தியினையும் உற்சாகத்தையும் ஊட்டிவிடுவார்கள். வெறும் களத்தினையும் உரையாடலுக்கான ஆரம்பத்தினை மட்டுமே அவர்களுக்கு நான் தருவேன், அதுவும் சில நேரத்தில் தான்.
ஊருக்கு போன கதை, போகப்போகிற கதை, அவள் லீவு, அவனுக்கு முட்டியில அடி, குர்ஷாத்துக்கு உடம்பு சரியில்லை, எங்க சித்தி தான் என்னை ஸ்கூட்டர்ல விட்டாங்க, எங்க அப்பா யாரு தெரியுமா? எனக்கு தம்பி பாப்பா பொறந்திருக்கே, எனக்கு கைல அடி, நான் ஹோம்வொர்க் செய்யல, நான் ஏரோப்ளைன் பார்த்தேன், நானும், நான் கூட, மிஸ் என்னை குட் பாய் சொன்னாங்க, என் பொம்மை உடைஞ்சிடுச்சு, உங்க வீட்டுக்கு வரேன், குழலிக்குச் சாக்லெட் கொடுத்தேன், நான் லட்டு சாப்பிட்டேன், எனக்கு வயித்து வலி…இவ்வாறாகக் கதைகள் நீளும் சுவாரஸ்யமாக.
இங்கே இவர்களுடன் நான் பகிர்ந்ததெல்லாம் ஒரு கைநீட்டலும் காது நீட்டலும் தான். அவர்கள் பேசுவதைப் பொறுமையாகக் கேட்டேன். தினமும் இருந்த உரையாடல் தொடர்ந்தது. அப்போது கவனித்த விஷயம் இவர்களின் சின்னச் சின்னச் சந்தோஷங்கள் காது கொடுத்து கேட்கப்படுவதே இல்லை. நமக்குச் சின்ன விஷயமாக இருக்கலாம், ஆனால் அவர்களின் குதூகலத்திற்கு அதுவே வித்தாக இருக்கும். பள்ளியில் ஆசிரியர்கள் பேச விடப்போவதில்லை, எத்தனை மாணவர்களுக்குத் தான் அவர்கள் காது கொடுப்பது ? முடிந்த அளவிற்கு அவர்களும் தர தான் வேண்டும். அடுத்தது பெற்றோர்கள். இவர்களுக்கு இந்த முழுப் பொறுப்பும் இருக்கின்றது. அவர்கள் கூறுவதைத் கவனமாக கேளுங்கள், அவர்கள் கேட்கும் கேள்விகளைக் காது கொடுத்துக் கேளுங்க, கேள்விகளை நசுக்கிவிட வேண்டாம். கேள்விக்கு பல சமயம் பதில் தெரியாமல் போகலாம், அல்லது கேள்விகேட்கும்போது நமக்கு உடல்சோர்வு, வேலை பளு இப்படி இருக்கலாம், ஆனால் கேள்விகேட்கும் அவர்கள் ஆர்வத்தை நசுக்கிவிட வேண்டாம்.
குழந்தைகளின் உலகினை முழுமையாகப் புரிந்துகொள்ளப் பெரிய காதுகள் அவசியமாகின்றது. அதன் மூலமே அவர்களின் சொல் வளமும் நமக்குத் தெரியும். அவர்களின் கதை சொல்லும் திறன் நமக்கு விளங்கும். அவர்கள் நம்மிடம் விரும்புவது எதைவிடவும் நம் காதுகளைத்தான்.
பள்ளியின் கடைசி நாள். குழலியை வகுப்பில் விட்டு அவளுடைய நண்பர்களுக்கு வாழ்த்து சொல்லிவிட்டு வெளியே வந்தேன். கொஞ்சம் சோர்வாககூட இருந்தது கடைசி நாள், இனி கொஞ்ச காலத்திற்கு எல்லோரையும் பார்க்க முடியாது என்று. தூரத்தில் குழலியின் வகுப்பு தோழி மிகச்சோர்வுடன் மெல்ல அவள் தாயுடன் நடந்து வந்தாள். இந்த வயதில் என்ன வாட்டம் என்று தெரியவில்லை. சில முறை அவளுடன் பேசி இருக்கேன். எனக்குக் கை கொடுப்பதில் அவ்வளவு ப்ரியம் அவளுக்கு. தூரத்தில் என்னைப் பார்த்ததும் முகம் மலர்ந்து ஓடி வந்தாள். கை கொடுத்தாள். ‘குழலி எனக்கு நேத்து ஒரு நூல் கொடுத்தா’ ( துணியில் இருக்கும் நூல். அது இவர்களுக்குள் ஒரு விளையாட்டு) ‘லீவுக்கு நான் நாளைக்கு ஊருக்கு போனேன் (போறேன்)..’ இப்படியாகப் பேச ஆரம்பித்தாள். அவளுடைய அம்மா ‘வா வா நேரமாச்சு பாரு..’ எனத் தள்ளிக்கொண்டு போனார்கள்.சோர்வாக இருந்தவள் மிக உற்சாகமாக மாறி இருந்தாள். திரும்பி ஒரு டாட்டா காட்டிவிட்டு மறைந்தாள். என்னிடம் வந்து பேசியதற்கு முக்கியக் காரணம் அவர்களிடம் காட்டிய என் பெரிய காதுகளை மட்டும் தான்.
பெற்றோர்களே, கொஞ்சம் பெரிய காதுகளை வளர்த்துக்கொள்ளுங்கள் !
நன்றி : http://vizhiyan.wordpress.com
























