மீண்டும் ஒரு கல்வியாண்டு மலர்கிறது. பெற்றோர்களே! சென்ற வருடத்திலிருந்து இந்த வருடத்தில் நீங்கள் உங்கள் நடவடிக்கைகளில் கொண்டுவர நினைக்கும் மாற்றங்கள் என்னென்ன? “குழந்தையின் நடவடிக்கைகளில் என்னென்ன மாற்றங்கள் கொண்டுவரலாம்? அதற்கு நாங்கள் என்னென்ன செய்ய வேண்டும் என்று சொல்வீர்கள் என்று எதிர்பார்த்தால் நீங்கள் எங்களை மாறச் சொல்கிறீர்களே”
இப்படி நீங்கள் நினைப்பது புரிகிறது.ஏன் அப்படிச் சொன்னேன் என்று பார்ப்போம். முதலில் கீழ்வரும் வினாக்களுக்கு உங்கள் பதில் ஆம் என்பதா இல்லை என்பதா என்று முடிவு செய்யுங்கள்.
இரண்டு வயதுக் குழந்தையும் சிந்திக்கிறது, யோசிக்கிறது.
அந்தக் குழந்தை தனக்குக் கிடைக்கும் அனுபவத்திலிருந்து ஒரு கருத்தை உருவாக்கிக் கொள்கிறது. அந்தக் கருத்தின் அடிப்படையில் தன் நடவடிக்கைகளில் மாற்றம் செய்கிறது. ஒவ்வொருவரையும் கவனிக்கிறது. தன்னோடு இணக்கமானவர்கள் யார் யார் அல்லாதவர்கள் யார் யார் என்று முடிவு செய்துகொள்கிறது.
நாம் கேட்கும் கேள்வியின் உட்பொருளை, அதன் உள்நோக்கத்தைப் புரிந்துகொள்கிறது. (பாப்பா உன் பெயரென்ன என்று கேட்டால் என்னை அம்மா……………. கூப்பிடுவார்கள், அப்பா …………………….. என்று கூப்பிடுவார்கள் என்று ஒவ்வொரு பெயராகச்சொல்லி நீங்க என்னை எப்படிக் கூப்பிடுவீங்க என்று இரண்டு வயதுக் குழந்தை கேட்கிறது) ஒரு குறிப்பிட்ட சூழலில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று புரிந்துகொள்கிறது. (வீட்டுக்கு விருந்தினர் வரும்போது மட்டும் அதுவரை அம்மா தரமாட்டேன் என்று சொன்ன பொருளைக் கேட்டு அடம் பிடிக்கும்)
இப்படி இன்னும் நிறைய சொல்லலாம். இக்கருத்துக்களை ஒத்துக்கொள்பவரா நீங்கள் அப்படியானால் மேற்கொண்டு படிக்கலாம். இவற்றுள் நான் ஒன்றேயொன்றைப் பற்றி மட்டும் பேசலாம் என்று நினைக்கிறேன். ஐந்தாவது கருத்தைப்பற்றி… நம் பேச்சின், கேள்வியின், செயலின் உள்நோக்கத்தைப் புரிந்துகொள்ளும், அதில் ஒளிந்திருக்கும் மறைபொருளைக் கண்டுபிடிக்கும் திறன் குழந்தைகளுக்குப் பிறவிலேயே கிடைத்துள்ளது. இப்போது நாம் ஒரு சூழலை நினைத்துப் பார்ப்போம்.
குழந்தை மாலையில் வீட்டுப்பாடங்கள் செய்கிறது என்று வைத்துக்கொள்வோம். பெற்றோர்கள் அதைப் பார்க்கிறார்கள். “என்ன, எல்லா வீட்டுப்பாடங்களையும் செய்துவிட்டாயா?” என்று கேட்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். இதன் உண்மையான பொருள் என்ன?
- நீ எல்லா வீட்டுப்பாடங்களையும் செய்யமாட்டாய் என்று நாங்கள் நினைத்திருந்தோம்.
- உன்னால் எல்லா வீட்டுப்பாடங்களையும் செய்ய முடியும் என்று நாங்கள் நம்பவில்லை.
- எல்லா வீட்டுப்பாடங்களையும் செய்வதற்கு அதிக நேரம் தேவைப்படும் என்று எங்களுக்குத் தெரியுமே. ஆனால் நீ சீக்கிரமே முடித்திருக்கிறாய். அதெப்படி?
அந்த ஒற்றை வினாவிலிருந்து குழந்தையின் மனத்தில் இத்தனை கருத்துகள் உருவாகும். நம்பிக்கையின்மையின் மொத்த வடிவமாகப் பெற்றோர்கள் இருக்கிறார்கள் என்று நினைக்கும். தன்னம்பிக்கையை மெல்ல மெல்ல இழக்கத் தொடங்கும். செய்வதையெல்லாம் யாரிடமாவது காட்டி சரி வாங்க வேண்டும். அப்போதுதான் என்னையே என்னால் நம்ப முடியும் என்று நம்பத் தொடங்கும்.
என்ன, எல்லா வீட்டுப்பாடங்களையும் செய்துவிட்டாயா என்று நாம் கேட்கும் தொனி, நம் குரல் ஏற்றத்தாழ்வு, நம் முகபாவனை போன்றவை மேலும் ஆயிரம் அர்த்தங்களைக் குழந்தைகளுக்குச் சொல்லும். அப்படியானால் என்னதான் செய்வது… பரிசோதிக்க வேண்டாமா என்று என்னைக் கேட்டால் வேண்டாம் என்று உறுதியாகச் சொல்லுவேன்.
“ஐயோ… அவர்களுக்கு எதுவும் தெரியாதே… வழி தவறிவிடுவார்களே… பிறகு அவர்களை நல்வழிப்படுத்த முடியாதே…” என்றெல்லாம் புலம்பினால் நாம் பெற்றோர்கள் அல்ல, மாறாக கண்காணிப்பாளர் என்று பொருள்.
யாரும் நம்மைக் கவனிப்பதில்லை என்ற நிலை வரும்போது குழந்தைக்குப் பொறுப்புணர்வு கூடும். என்னை நானே கவனித்துக்கொள்ள வேண்டும். அதனால் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று நினைக்கும். மெல்ல மெல்ல தன் செயல்கள் சரியா தவறா என்று ஒருமுறைக்கு இருமுறை அலசிப் பார்க்கும்.
இந்தக் கருத்தை நீங்கள் நம்பினால், அன்புள்ள பெற்றோர்களே இந்தக் கல்வியாண்டில் கீழ்வரும்படி நடந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். நெஞ்சம் பதபதைக்கும், படபடக்கும், ரத்த அழுத்தம் கூடும். இருந்தாலும் சற்று பொறுமையோடு மனத்தை ஒருநிலைப்படுத்துங்கள்.
- படிப்பு உன் பொறுப்பு.
- அதை நீ பார்த்துக்கொள்வாய் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இந்த வருடம் நீ அதைப் படித்தாயா இதைப் படித்தாயா என்று கேட்க மாட்டேன்.
- உனக்கு என்ன உதவி வேண்டுமோ தாராளமாகக் கேள்… முடிந்தால் செய்கிறோம். முடியாவிட்டால் ஏன் முடியவில்லை என்று புரிய வைக்கிறோம்.
- பள்ளிக்கூடத்திற்குப் புறப்படத் தாமதமானால் பதற்றப்படாதீர்கள். ஒருநாள் போகாமல் இருக்கட்டும். அதற்குப் பிறகு அதைப் பற்றிப் பேசுங்கள்.
- நாங்கள் சென்ற வருடம் செய்து வந்த உதவிகளை மெல்ல மெல்லக் குறைத்துக் கொள்வோம்
(உங்கள் சூழலுக்கேற்ப மேலும் சிலவற்றைச் சேர்த்துகொள்ளலாம்.)
மொத்தத்தில் ஒரு முதிர்ந்த, பெரிய மனிதரிடம் எப்படி நடந்துகொள்வீர்களோ அப்படி குழந்தைகளிடமும் நடந்துகொள்ள முயற்சி செய்யுங்கள்.
ஓரிரு மாதங்கள் பாருங்கள். குழந்தையிடம் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்பதைக் கவனியுங்கள். குழந்தை மகிழ்ச்சியாக இருக்கிறதா என்பதைக் கவனியுங்கள். இல்லாவிட்டால் மேலும் ஓரிரு மாதங்கள் தொடருங்கள். ரத்த அழுத்தம் கூடுவதை உங்களால் சமாளிக்க முடியாவிட்டால் பழையபடி ஒவ்வொரு நிமிடமும் குழந்தை என்ன செய்கிறது என்பதைக் கவனிக்கும் கண்காளிப்பாளாராக மாறுங்கள். கூடவே உங்களை எப்படியெல்லாம் ஏமாற்றலாம் என்று குழந்தைகள் புதுப்புது யுத்திகளை யோசிப்பார்கள். உங்களை அழகாக ஏமாற்றுவார்கள் என்பதையும் நினைவிற்கொள்ளுங்கள்.
நம்பிக்கை; அதுதானே எல்லாம்.
எல்லா பெற்றோருக்கும் புதுக்கல்வியாண்டு வாழ்த்துகள்.
நன்றி,
ஜி. ராஜேந்திரன்
கல்வி ஒருங்கிணைப்பாளர்
Qrius Learning Initiatives – Coimbatore
www.qriuslearning.wordpress.com
























