பஞ்சு மிட்டாய் நிகழ்வுகள் – அறிமுகம்

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

பெங்களூரை சேர்ந்த பஞ்சுமிட்டாய் சிறார் குழு இரண்டு வருடத்திற்கு(நவம்பர் 2015 முதல்) முன்பு தங்களது அடுக்குமாடி குடியிருப்பிலுள்ள‌ தமிழ் சிறார்களுக்கு கதைகள் சொல்லத் துவங்கியது. கதைகள் என்றதும் வழக்கமான நீதி போதனை கதைகளை தேர்வு செய்யாமல் சிறார்களை மகிழ்விக்கும் கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தனர். கதையுடன் பாடல்கள், பாரம்பரிய விளையாட்டுகள்,ஓவியங்கள் என தங்களது தேவைக்கேற்ப நிகழ்வை வடிவமைத்தனர். வாரந்தோறும் பெரியோர்களும் சிறார்களும் குடும்பமாக ஒன்றுக் கூடி கதைகள் பேசி விளையாடி வருகின்றனர். இதுவரை சுமார் 50 நிகழ்வுகள் நடத்தியிருக்கின்றனர். பெரியோர்கள் கதைகள் சொல்லி அதனை மகிழ்ந்த சிறுவர்கள் திடீரென தங்களது கற்பனைகளுக்கு வடிவம் தந்து கதைகள் சொல்லத் துவங்கினர். அதுவே பஞ்சுமிட்டாய் இதழாக உருமாறியது. முதல் நான்கு இதழ்கள் இணைய இதழாக வெளியானது. இதழுக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து பஞ்சுமிட்டாய் ஐந்தாம் இதழ் அச்சு இதழாக வெளியாகி தனது சிறகை விரித்து பறக்கத் துவங்கியது. பெங்களூரூ,கோவை,கோத்தகிரி,தஞ்சை,சென்னை,காயல்பட்டிணம் என வெவ்வேறு ஊர்களில் நிகழ்வுகளை நடத்தியிருக்கிறது.

சிறார்களுக்கான பாடல்கள்,கதைகள்,விளையாட்டுக‌ள் என நிகழ்வுகள் அனைத்தும் சிறார்களை முதன்மைப்படுத்தியே வடிவமைக்கப்படுகிறது. சிறார் பாடல்கள் என்றதும் பாடப் புத்தகத்திலுள்ள‌ rhymes போல ஒப்புவிக்கும் பாடலென நினைத்துவிட வேண்டாம். கொம்பு முளைச்ச யானை என்றதும் இங்கு அனைவரது தலைகள் மீது இரண்டு கொம்புகளாக கைகள் மாறிவிடும். பெற்றோர்களும் சிறார்களாக மாறிடும் காட்சிகள் ஏராள‌ம். வாழைமரம் ஏறி வழுக்கி வழுக்கி மொத்த கூட்டமும் கீழே விழுந்து சிரித்து சிரித்து மகிழும். குர் குர் குர் என குளவி கூட்டம் துரத்துவதாக மொத்த கூட்டமும் அரங்கினை சுற்றும். இப்படி ஒவ்வொரு பாடலுமே ஆட்டத்துடன் கலைக்கட்டுவது தான் வழக்கம். பாடல்களில் ஆட்டம் போல் கதைகளிலும் சிங்கம் போல் சிரித்தும் குருவிப் போல பேசியும் சிறார்களை மகிழச் செய்யும் அனைத்து விசயங்களும் நிகழ்வில் நிறைந்திருக்கும்.

சிறார் உலகில் கதை,பாடல்கள் போல விளையாட்டுக்களுக்கு எப்பொழுதும் ஒரு முக்கிய இடமுண்டு. அப்படித் தான் இந்த நிகழ்விலும் விளையாட்டுகள் நிறைந்திருக்கும். விளையாட்டுக‌ள் என்றதும்  பெரியோர்களும் ஆர்வத்துடன் கலந்துக்கொண்டு தங்களது வயதை குறைத்துக்கொண்டனர். நமது பாரம்பரிய விளையாட்டுகளின் சிறப்பு அம்சங்களின் ஒன்று விளையாட்டுகளுடன் இணைந்திருக்கும் பாடல்கள்.  அந்தப் பாடலிலுள்ள‌ வார்த்தைகள் தனித்துவமானது. மொழியை இது போன்ற விளையாட்டுகள் மூலம் தான் எளிமையாக அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்லமுடியும் என்ற நம்பிகையில் தான் பஞ்சுமிட்டாய் குழு இயங்குகிறது. அதன்படியே   டிக் டிக் யாரது,காட்டுக்குள்ள மரம் இருக்கு,குடு குடு ராசா,அட்டலங்கா புட்டலங்கா   போன்ற விளையாட்டுக்களை நிகழ்வில் விளையாடி மகிழ்வோம். விளையாடும் போது சிந்தும் புன்னகைகளுக்கு தனி அழகு இருக்கத்தான் செய்கிறது என்று மீண்டும் உணரும் தருணங்கள் அவை.

நிகழ்வுகள் அனைத்துமே குழந்தைகள் மகிழ்வுடனும் , விடுதலை உணர்வுடனும் இருந்திடும் விதத்தில் அமையும் வண்ணம் பார்த்துக்கொள்ளப்படுகிறது. அதுவே குழந்தைகளை சுதந்திரமாக தங்களது மனதில் உள்ளவற்றை பொது வெளியில் பகிரும் இடமாக நிகழ்வை மாற்றுகிறது. பல நிகழ்வுகளில் சிறார்கள் தாங்களாகவே கதை சொல்லவோ,பேசவோ முன்வருகின்றனர். கிட்டத்த 100 நபர்கள் உள்ள நிகழ்வில் அவர்களுக்கு மேடை பயம் என்று சொல்லப்படுகின்ற அந்தக் கூச்சம் அவர்களிடத்தில் இல்லாமல் இருப்பதை நன்றாக உணர முடியும்.

இதுப் போன்ற நிகழ்வுகள் ஒவ்வொரு இடங்களிலும், அவரவர் சுற்றத்திலும் நண்பர்கள் நடத்திட வேண்டும். அதற்கு உதவிகள் தேவைப்படும் பட்சத்தில் பஞ்சு மிட்டாய் சிறார் குழு அதனை செய்திட‌ தயாராக இருக்கிறது. அதேப் போல் பள்ளிகள், பிறந்த நாள் விழாக்கள், வேறு நிகழ்வுகளில் சிறார்களுக்கு நிகழ்வுகள் நடத்திடவும் பஞ்சுமிட்டாய் நண்பர்களை தொடர்பு கொள்ளலாம்.

பஞ்சுமிட்டாய் பற்றி பொதிகை தொலைக்காட்சியில் வெளியான நேர்காணல் :

Leave a comment