ஏன் சன்னும் மூன்னும் சேர்ந்து வரமாட்டேங்கிது – சந்தியா

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

பஞ்சுமிட்டாய் சார்பாக கி.ரா குழம்பு நாடகம் நடத்த ஏற்பாடு செய்தோம். இந்த நிகழ்வை பற்றி பலரிடம் எப்படிக் கொண்டு சேர்ப்பது? எத்தனை பேர் வருவார்கள்? நிதியுதவிக்கு என்ன செய்வது? என பல கேள்விகளுக்கு பிறகு செய்துப் பார்க்கலாம் என்று இறங்கிவிட்டோம். இன்ப அதிர்ச்சி என்னவென்றால் எதிர்பார்த்ததை விட வெகு மக்களிடம் இந்த நிகழ்வு சென்று சேர்ந்து, அரங்கம் நிறைந்தது .

நாடகம் தொடங்குவதற்கு முன்னர் உற்சாகம் அளிக்கும் வண்ணம் ஒரு சிறுமியின் பறை இசையை கேட்க நேர்ந்தது. பறை இப்போதெல்லாம் மிக அரிதாகிவிட்டது என்றே சொல்லலாம், அந்தச் சிறுமியின் தாயும் அதே உற்சாகத்துடன் வாசித்தது கூடுதல் சிறப்பு. இப்போது குழந்தைகளுக்கு  படிப்புக்கு அப்பாற்பட்டு ஏதேனும் சொல்லிக்கொடுக்க நாம் தேர்ந்தெடுக்கும் பல கலைகள், அதனால் பிற்காலத்தில் பணமும் புகழும் ஈட்ட முடியுமா என்ற கேள்விகளுக்கு பின்னரே முடிவு எடுக்கப் படுகிறது. அதுமட்டுமின்றி அழியும் கலைகளான பறையாட்டம் ,ஒயிலாட்டம் , கரகாட்டம் போன்றவற்றையும் நம் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்கலாம்.

எனக்கு நாடகம் நேரடியாக பார்த்த அனுபவம் இல்லை, இதுவே முதல் முறை அதனால் எந்த பெரிய எதிர்பார்ப்பையும் இன்றி சென்று அமர்ந்தேன்.  ‘பாம் பொம் பாம் பாம் பொம் பாம்’ என்ற பாடி ஆடிக் கொண்டே வந்தனர் நாடக குழு. கி. ராஜநாராயணன் பற்றி சிறிய அறிமுகத்திற்கு பின்னர் அவர்களை பற்றியும் சிறிது கூறிவிட்டு கதைக்குள் சென்றோம் (குழந்தைகளுடன் எங்களையும் அந்த உலகத்துக்கு அழைத்து சென்றனர்).

அது பூமிக்கும் வானத்துக்கும் ஆன காதல் கதை, “அட நமக்கு பிடிச்ச ஏரியா ஆச்சே” என்று ஆர்வமானேன். பல ஆண்டுகளுக்கு முன்பு, வானம் பூமியில் இருந்து மூன்று அடி தூரத்தில் இருந்தது.  ஒட்டகங்கள் தவழ்ந்தன . பறவைகள் தரவை என அழைக்கப்பட்டன, அவை தரையில் நகர்ந்தன. சூரியனும் சந்திரனும் வானம் பூமியின் குழந்தைகள். இருவரும் மிகவும் குறும்புக்காரர்களாக இருந்தனர். மனிதர்கள் யாரும் அவர்களை தடுத்து நிறுத்த முடியவில்லை, ஒரு இட்லி விற்ற பாட்டி தவிர. சூரியன் சந்திரனை பாட்டி அடித்து மேலே விரட்ட அம்மா வானமும் அவர்களைத் தேடிச்சென்றது. பூமியில் உள்ள அனைத்து பருத்தி பந்துகளும் வானத்தில் பறந்து மேகங்களை உருவாக்குகின்றன. அப்படி தான் முதலில் மேகம் உருவானது என்று தொடங்கி பருந்து ஏன் உயர பறக்கிறது? கோழி எதை கீழே  தேடிக்கொண்டே இருக்கிறது? மொச்சைக்கொட்டையில் ஏன்  நடுவில் வெள்ளை கோடு உள்ளது? பாம்பு ஏன் சட்டை உரிக்கிறது? என குழந்தைகளுக்கு அடிக்கடி தோன்றும் பல கேள்விகளுக்கு கற்பனையில் ஒரு கதையாக சென்றது ஒரு மணிநேரம்.  அதுமட்டும் இன்றி அரசியலில் சூடான தலைப்புகளான ஆதார் கார்டு, மாட்டு இறைச்சி பற்றியும் ஆங்காங்கே நகைச்சுவை வெடித்தது .

இதுபோன்ற பல கேள்விகளை குழந்தைகள் கேட்கும் பொழுது நம் அதற்கான உண்மையான காரணத்தை கூறவே விழைகிறோம். ஆதிரனும் ஒரு முறை ‘ஏன் சன்னும் மூன்னும் சேர்ந்து வரமாட்டேங்கிது’ என கேட்டான், நான் முதலில் அவனிடம் பூமி சூரியனை சுற்றுகிறது என தொடங்கி ரொட்டேஷன் ரெவொலுஷன் என கிளாஸ் எடுக்க தொடங்கிவிட்டேன் அவனுக்கு விடை திருப்தி அளிப்பதாய் இல்லை,

இந்த நாடகம் பார்த்த பின்னர் அனைத்து கேள்விகளுக்கும் உண்மை காரணங்களை கூறுவதை விட, கற்பனை கதைகளை கூறுவது இன்னும் அவர்களை நிறைய சிந்திக்க வைக்கும் என்றே தோன்றியது . நாம் எப்போதும் குழந்தைகளை நம் உலகிற்கு விரைவில் அழைத்துச்செல்ல முயற்சிக்கிறோம். நம் அவர் உலகத்திற்கு செல்வது கடினமாக இருந்தாலும் அதுவே அழகு. இந்த நாடகம் குழந்தைகளுக்கு என்பதை விட பெரியவர்களிடத்தில் உள்ள குழந்தைகளை வெளியில் கொண்டு வர ஒரு தளமாகவும் அமைந்தது. மேலும் இதுபோன்ற பல நிகழ்வுகளை நடத்தவும் பெரிய உந்துகோலாக இருந்தது.

-சந்தியா

பஞ்சுமிட்டாய் சிறார் குழு

Leave a comment