ஆங்கில வழிக் குழந்தை வளர்ப்பு – ‘பஞ்சுமிட்டாய்’ பிரபு

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

“1813-ன் கல்வி சாசனம் தனது நான்காவது ஷரத்தாக ஒரு முக்கிய அறிவிப்பைக் கொண்டிருந்தது.இன்றைய நமது வகுப்பறைகளின் உயிர்நாடி அதுதான்.

இந்திய மக்களுக்குக் கிழக்கிந்தியக் கம்பெனியின் பல்வேறு துறைகளில் வேலை பார்க்க சாதி மத அந்தஸ்து எதுவும் தேவையில்லை.கல்வித் தகுதி அடிப்படையில் மட்டுமே வேலை வழங்கப்படும்.’ 

இந்தக் கல்வித்தகுதி ஆங்கிலப் பள்ளி வழிக் கல்வி!”

‍ – இது யாருடைய வகுப்பறை – இரா.நடராசன்.

1813 ல் போடப்பட்ட விதை,இந்த 200 வருடங்களில் பெரும் மரமாய் நம்முன் நிற்கின்றது.சென்ற தலைமுறையில் எப்படி ஆங்கில வழிக்கல்வி அத்தியாவசிய‌மாய் நினைக்கப்பட்டதோ , இந்தத் தலைமுறை;ஆங்கில வழிக் குழந்தை வளர்ப்பை அத்தியாவசிய‌மாய் எண்ணத் துவங்கிருக்கிறது.முக்கியமாக பெரு நகரங்களில். ‘What do you want டா செல்லம்’ ‘Dont go there அம்மு’ போன்ற வசனங்களை மிக எளிதாகக் கேட்க முடிகிறது.அன்பையும்,பாசத்தையும் வெளிக்காட்ட மட்டும் தாய்மொழியை கொஞ்சம் ஊறுகாய் போலத் தொட்டுக்கொள்கின்றனர்.

இரண்டு ஆண்டிற்கு முன் நடந்த நிகழ்வு , எனது தோழி தனது இரண்டு மகன்களுடன்(சிறுவர்கள்) தனியே அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு வந்தார்.அவரது இரண்டாவது மகனிற்கு 3 வயது இருக்கும்.அமெரிக்காவில் பிறந்தவன் அவன் , முதன்முதலாக இந்தியாவிற்கு வருகின்றான்.அவனைக் காண பெரும் ஆர்வத்துடன் தாய் வழி மற்றும் தந்தை வழி தாத்தா இருவரும் விமான நிலையத்தில் காத்திருந்தனர்.இரவெல்லாம் உறங்காமல் பிஞ்சுகளுடன் கொஞ்சிப் பேசக் காத்திருந்தனர்.சிறுவர்களைப் பார்தததும் கட்டி அணைத்து ஆராவாரத்துடன் பேசினால் , மொழி நடுவே பெரும் முட்டுக்கட்டையாக நிற்கின்றது.எதுவுமே பேச முடியாமல் தவித்த காட்சி இன்றும் எனது நினைவில் இருக்கிறது.

வெளிநாட்டில் வாழும் தமிழர்களின் நிலை இதுவென்றால், தமிழ்நாட்டை விட்டு வெளியே இருக்கும் நம்மவர்களின் நிலை வேறு மாதிரி இருக்கிறது.பெங்களூரில் வேலை பார்க்கும் பெரும்பாலோர் தங்களது குழந்தைகளிடம் ஆங்கிலமே பேசுகின்றனர்.பல்வேறு கலாச்சாரமும் , பல்வேறு மொழிபேசுவோரும் இங்குக் கலந்து இருப்பதால் ஆங்கிலத்தைத் தங்களது தாய்மொழியாய் மாற்றிக்கொள்ளவே ஆசைப்படுகின்றனர்.இந்த ஆசைக்கு

மேலும் நீர் ஊற்றி வளர்க்கும் வகையில் , 3 வயது சிறுவர்களுக்கே – “வீட்டில் ஆங்கிலத்தில் பேசுங்கள்” என்று பள்ளி நிர்வாகம் பரிந்துரைக்கிறது.குழந்தை வளர்ப்பில் ஆசிரியர்களை கடவுள் நிலையில் வைத்திருக்கும் நம்மவர்கள் , எதற்காக இப்படி பரிந்துரைக்கின்றனர் என்று சிறிதும் சிந்திக்காமல் இது போன்று சொன்னதும் வீட்டில் சூழலை தலைகீழாய் மாற்றிவிடுகின்றனர்.வீட்டிலுள்ள அனைவருமே ஆங்கிலத்தில் சிறுவர்களிடம் பேசுவது தான் நல்லது என்று நம்பத் துவங்கிவிடுகின்றனர்.”எஞ் சாமி..சாப்பிட்றா” என்று கொஞ்சிய தாய் இதற்கு இனையான வார்த்தகளை ஆங்கிலத்தில் தேடிவிட முடியும் என்ற நம்பிக்கை எனக்கில்லை.

சென்னையில் வாழும் எழுத்தாளர் விழியன் தனது முகப்புத்தகத்தில் இப்படிப் பதிந்திருக்கிறார் ,

“அடுத்த தலைமுறையினருக்கு குறைந்தபட்சம் தமிழ் பேசவும் தமிழை வாசிக்கவுமாவது கற்றுத்தர வேண்டும். ஐந்தாம் வகுப்பில் தமிழ் மூன்றாம் பாடமாக வருகின்றது, வேற வழியே இல்லாமல் தமிழ் படிக்க வைக்க வேண்டும் என்ற சலிப்பு ஒரு புறம். என் பையனுக்கு ஏற்கனவே படிப்பு சுமை, இதில் தமிழை வேற திணிக்க வேண்டாம்னு நினைக்கிறேன்னு ஒரு சப்பைக் கட்டு. தன் தாய்மொழியை கற்க வைப்பது திணிப்பில் வருமா?

உங்கள் குழந்தைக்குத் தமிழ் தெரியாமல் போனால் அந்த சந்ததியே தமிழ் கற்காமல் போகும் வாய்ப்பு உள்ளதை நீங்கள் அறிவீர்கள் தானே?”

ஆக சென்னையிலும் நிலை இது தான்.அட்டவனை போட்டு சிறுவர்களின் உலகை சுருக்கிவிட்டு , தமிழ் என்றதும் சுமை , திணிப்பு என பாச மழை பொழியத் துவங்கிவிடுகின்றனர் இன்றைய பெற்றோர்கள்.நாட்டுப்பற்றை க்ரிக்கெட்டிலும் , மொழிப்பற்றை சினிமாவிலும் காட்டிக் காட்டி பழகிவிட்ட நமக்கு இவையெல்லாம் சுமையாகத் தான் தெரியும்.

சிறுவர்கள் என்றும் தாய்மொழியை சுமையாக நினைப்பதில்லை , எனது தெருவிலுள்ள சிறுவர்களிடமும் , கதை சொல்லும் நிகழ்விற்கு வரும் சிறுவர்களிடமும் நான் பேசிப்பழகும்பொழுது இதை நன்கு உணர முடிகின்றது.அவர்களுடன் தமிழில் பேசினால் அவர்களும் தமிழில் தான் பேசுகின்றனர்.நமது ஆங்கில அறிவை நிரூபிப்பதால் தான் அவர்கள் ஆங்கிலத்திற்கே மாறுகின்றனர்.அவர்களது சூழலில்; தமிழ் பேச்சு இயல்பாக இருந்தால் அவர்களும் தமிழில் தான் பேசுவார்கள்.அவர்களது சூழலில் ; தமிழ் வாசிக்கும் நபர்களைப் பார்க்கும்பொழுது அவர்களும் தமிழை வாசிக்க வேண்டும் என்று ஆசைபடுவார்கள்.

“தமிழ் பேசுனா புரிஞ்சிப்பாள்/ன் , ஆனா தமிழ்ல பேச வராது” ,”தமிழ் பேசத் தெரியும்,ஆனால் தமிழ் எழுதப் படிக்கத் தெரியாது” என்ற வார்த்தைகளை ஒரு பக்கம் சொல்லிக்கொண்டு மறுபக்கம் தமிழர் என்று பெருமிதம் கொள்வதில் அர்த்தம் ஏதுமில்லை.முதலில் பிள்ளைத் தமிழின் சுவையை ருசிப்போம், பின்னர் தமிழன் என்றும் தமிழச்சி என்றும் மார்தட்டிக் கொள்வோம்.

நன்றி : மலைகள் இணைய இதழ் [ http://malaigal.com/?p=8130]

3 Comments

Leave a comment