ஒரு நாள் படுக்கையை ஈரப்படுத்திய உடனேயே குழந்தை நல மருத்துவரைத் தேடி ஓடினால், நிச்சயம் அவர் சிரிப்பார். தொடர்ந்து உங்கள் குழந்தையை உற்று நோக்குங்கள். படுக்கையில் சிறுநீர் கழித்தல் பகல் வேளையில் நடந்தால் அல்லது உங்கள் குழந்தை 6 வயதோ அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவராகவோ இருந்தால், மருத்துவரைச் சந்திக்க அதுவே தக்க சமயம். அதுபோல, தொடர்ந்து 6 மாதங்கள் படுக்கையில் சிறுநீர் கழிக்காமல் இருந்துவிட்டு பின்னர் திடீரென படுக்கையில் சிறுநீர் கழித்தாலும் மருத்துவரைச் சந்திக்கலாம்.
படுக்கையில் சிறுநீர் கழிக்கும் உங்கள் குழந்தைக்கு எப்படி உதவி செய்யலாம்?
குழந்தைகளை, குறை சொல்லவோ திட்டவோ செய்யாதீர்கள்! அவமானப்படுத்துதலும் தண்டனையும் ஒருபோதும் சிறுநீர் பை கட்டுப்பாட்டை வளர்க்க உதவுவதில்லை.
படுக்கையில் சிறுநீர் கழிப்பது, சிறுவயது குழந்தைகளுக்கு இயல்பானதே!
தூங்கச் செல்லும்முன் சிறுநீர் கழிக்கச் செய்யுங்கள்.
இது ஒரு சாதாரண பிரச்னை என்று கூறி, குழந்தையின் தாழ்வு மனப்பான்மையை அகற்றுங்கள்.
இரவில் கழிவறைக்குப் போகும் வழியில், காலில் இடரும்படியான பொருட்கள் இல்லாமல் இருக்க வேண்டும். கழிவறைக்குச் செல்லும் பாதையில், குழந்தைகள் பார்ப்பதற்கு வசதியாக இரவு விளக்கு எரியட்டும்.
படுக்கையில் படுத்தவுடன் உறங்காமல் நீண்டநேரம் விழிந்திருந்துவிட்டு உறங்கும் பழக்கம் இருந்தால், உறக்கம் தொடும் முன் மீண்டும் ஒருமுறை கழிவறைக்குப் போகச்சொல்லி வலியுறுத்தலாம்.
நீர் உறிஞ்சும் தன்மையுள்ள படுக்கை விரிப்புகளைப் பயன்படுத்தலாம். படுக்கை ஈரமானால் அறிவிக்கும் அலாரத்தையும் பயன்படுத்தலாம்.
காலையில் படுக்கையைச் சுத்தம் செய்யும்போது, குழந்தையிடம் கடுஞ்சொற்கள் சொல்லாமல், தண்டனை கொடுக்காமல், சுத்தப்படுத்தும் பணியில் குழந்தையையும் சேர்த்துக் கொள்ளலாம்.
ஒத்த வயதுடைய குழந்தைகளாக இருந்தாலும் ஒவ்வொரு குழந்தையும், வெவ்வேறு காலகட்டத்தில் சிறுநீர்ப்பை கட்டுப்படுத்துதலைப் பழகிக்கொள்கிறார்கள்.