*Six Seven* – இங்கிலாந்து குழந்தைகளிடம் வைரலாகும் புதிய சொற்றொடர்: மகிழ்ச்சியா? பாடநேர சவாலா? – பஞ்சு மிட்டாய் பிரபு

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

இங்கிலாந்தில் ஆரம்ப நிலைப் பள்ளிக் குழந்தைகள் மத்தியில் “Six Seven” (இதில் Seven என்பதை இழுவையாகவே சொல்வார்கள்) என்ற சொற்றொடர் சமீப காலமாக வைரலாகி வருகிறது. ஆசிரியர்கள் வகுப்பில் “67ஆம் பக்கத்தைத் திருப்புங்கள்” என்று கூறினாலோ, “6–7 நிமிடங்களில் வருகிறேன்” என்று சொன்னாலோ, உடனடியாக குழந்தைகள் அனைவரும் சேர்ந்து “67!” என்று உற்சாகமாகக் கத்துவது பல பள்ளிகளில் வழக்கமான காட்சியாக மாறியுள்ளது. ஒரே ஒரு குழந்தை “67” என்று ஆரம்பித்தாலே, அந்த உற்சாகம் வேகமாக மற்ற குழந்தைகளிடமும் பரவி, அந்தச் சத்தம் அடங்க சில நேரம் பிடிப்பதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

வகுப்பறைக்கு வெளியிலும் இதன் தாக்கம் தெளிவாக தெரிகிறது. சாலையில் நடக்கும் போது, கடைகளில் அல்லது எங்காவது 67 என்ற எண்ணைப் பார்த்தாலே குழந்தைகள் அதை மகிழ்ச்சியுடன் முனுமுனுக்கத் தொடங்கிவிடுகின்றனர். இந்தப் பழக்கம் பள்ளி வளாகத்தைத் தாண்டி பொதுவெளிகளிலும் தொடர்வது, குழந்தைகள் இணைய கலாச்சாரத்துடன் எவ்வளவு நெருக்கமாக இணைந்திருக்கிறார்கள் என்பதற்கான ஒரு எடுத்துக்காட்டாகப் பெற்றோர்கள் குறிப்பிடுகின்றனர்.

‘6-7’ எங்கே இருந்து வந்தது?

இந்த ‘6-7’ சொற்றொடர், Skrilla – Doot Doot (6 7) என்ற பாப் பாடலில் இடம்பெறும் வரியிலிருந்து உருவானதாகக் கூறப்படுகிறது. அந்தப் பாடலில் வரும் “67” என்ற பகுதியை மையமாகக் கொண்டு சமூக ஊடகங்களில் பலர் ரீல்ஸ்களை வெளியிட்டனர். இதன் மூலம் அந்தச் சொற்றொடர் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் வேகமாகப் பரவியது.

அதேபோல், கூடைப்பந்தாட்ட விளையாட்டில் சில வீரர்களின் உயரத்தை அடையாளப்படுத்த “67” என்று அழைக்கும் பழக்கமும் ஏற்கனவே இருந்து வருகிறது. ஒரு போட்டியின் போது, ஒரு பள்ளி மாணவன் தனது விருப்பமான வீரரை “67” என்று அழைத்தபடி கைகளை அசைத்துச் செய்த சைகை இணையத்தில் வைரலானது. அந்தக் காணொளியும் குழந்தைகள் மத்தியில் ‘6-7’ பிரபலமாவதற்குக் காரணமாக அமைந்ததாகக் கூறப்படுகிறது.

ஆசிரியர்களின் பார்வை

ஆரம்பத்தில் ஆசிரியர்களும் பெற்றோர்களும் இதனை குழந்தைகளின் இயல்பான உற்சாகமாகவும், சமூகவலைத்தள தாக்கத்தின் ஒரு வெளிப்பாடாகவும் எடுத்துக் கொண்டனர். ஆனால் நாளடைவில், இந்தச் சொற்றொடர் வகுப்பறைகளில் குழந்தைகளின் கவனம் சிதறுவதற்கும், வகுப்பறை சூழலில் இடையூறு ஏற்படும் நிலைக்கும் காரணமாகி வருவதாக ஆசிரியர்கள் பகிர்ந்து கொள்கின்றனர். இதன் தொடர்ச்சியாக, சில பள்ளிகளில் வகுப்பறை நேரங்களில் இந்தச் சொற்றொடரைப் பயன்படுத்துவதை தற்காலிகமாக கட்டுப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சில பள்ளிகளில் இந்தச் சொற்றொடர்களுக்குத் தடையும் விதித்துள்ளனர் என்று செய்திகள் கூறப்படுகின்றன.

இதன் பின்னணியில், குழந்தைகளின் மகிழ்ச்சியையும் கற்றலையும் சமநிலைப்படுத்துவது தான் தற்போதைய சவாலாக இருப்பதாகக் கல்வியாளர்கள் கூறுகின்றனர்.

பிரதமரின் பள்ளி வருகையும் ‘6-7’ தருணமும்

சமீபத்தில் இங்கிலாந்து பிரதமர் Sir Keir Starmer ஒரு பள்ளிக்கு சென்ற போது, வகுப்பில் குழந்தைகளுடன் உரையாடும் தருணத்தில் ஒரு குழந்தை என்று சொல்ல உடனே அவர் “67” என்ற சைகையைச் செய்ததாக கூறப்படுகிறது. அதைக் கண்ட மற்ற குழந்தைகள் அனைவரும் உற்சாகமாக அதையே செய்யத் தொடங்கினர். இந்த நிகழ்வு குழந்தைகள் மத்தியில் ‘6-7’ எவ்வளவு பரவலாக உள்ளது என்பதைக் காட்டும் ஒரு சுவாரசியமான தருணமாக சமூக ஊடகங்களில் பேசப்பட்டது.

பின்னர், ஆசிரியர்கள் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டதைத் தொடர்ந்து, பிரதமர் ஆசிரியர்களின் நிலையைப் புரிந்து கொண்டு மன்னிப்பு கேட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சில பள்ளிகளில் இதனை வகுப்பறை நேரங்களில் கட்டுப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

குழந்தைகளின் உலகில் ‘6-7’

குழந்தைகளுக்கு “6-7” என்பது ஒரு விளையாட்டு, ஒரு நகைச்சுவை. அதன் அர்த்தம் குறித்து அவர்களிடையே பல்வேறு கதைகள் உலா வருகின்றன. அதில் பரவலாகச் சொல்லப்படும் ஒன்று:

குழந்தை1: Six எண்ணுக்கு பிறகு வரும் மூன்று எண்கள் எவை?
குழந்தை2: Seven – Eight – Nine
குழந்தை1: பார்த்தியா? (Seven ate nine) — 7, 9-ஐத் தின்றுவிட்டது! அதனால்தான் 6க்கு 7ஐ கண்டால் பயம்…அதுதான் 67

இந்தச் சிறிய வார்த்தை விளையாட்டு, குழந்தைகளுக்கு பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்து, “6-7” என்ற சொற்றொடரைச் சிரிப்புடன் பயன்படுத்தத் தூண்டுகிறது.

மனநல ஆலோசகர்கள் என்ன சொல்கிறார்கள்?

மனநல ஆலோசகர்கள் இதனை “Brain Rot” என்ற சொல்லுடன் தொடர்புபடுத்திப் பேசுகின்றனர். இணையம் மற்றும் சமூக ஊடகங்களில் அதிக நேரம் செலவிடுவதால் உருவாகும் புதிய சொற்கள், சைகைகள் மற்றும் மொழிப் பயன்பாடுகளே இதன் அடையாளம். “Brain Rot” என்ற சொல் 2024 ஆம் ஆண்டு ஆக்ஸ்போர்ட் அகராதியில் சேர்க்கப்பட்டது.

இது போன்ற நிகழ்வுகளை முழுமையாகத் தவறானதாகப் பார்க்காமல், குழந்தைகள் எவ்வாறு இணைய கலாச்சாரத்தைக் கற்றுக் கொள்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்றும், பெற்றோர்களும் ஆசிரியர்களும் குழந்தைகளுடன் உரையாடல் வழியாக அவர்களை வழிநடத்த வேண்டும் என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

“6-7” போன்ற சொற்றொடர்களை தடை செய்வதைவிட, அவை பிறருக்கு இடையூறு இல்லாத வகையில் எப்போது, எங்கே பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை குழந்தைகளுக்கு மென்மையாகக் கற்றுக் கொடுப்பதே சிறந்த வழி என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

இது போன்ற சொற்றடர்களை நாட்டுப்புறவியலில் தொடர்ச்சியாகவே பார்க்க வேண்டும் என்றும் நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.

நன்றி,

பஞ்சு மிட்டாய் பிரபு

References:

https://www.bbc.co.uk/news/articles/cgexj5271l1o

https://www.parents.com/why-cant-kids-stop-saying-six-seven-11722015#toc-worrisome-or-just-annoying

https://www.parents.com/brain-rot-2024-oxford-word-of-the-year-8754608

 

Leave a comment