இந்த கேள்வியை சுட்டியொன்றின் குட்டிக் கேள்வியென்று என்னால் கடந்து போக இயலவில்லை. இதுவா குட்டிக் கேள்வி? இந்த சமூகம் நம் பிள்ளைகளுக்கு தந்திருக்கும் அறிவிலிருந்து அந்த குழந்தை எடுத்துக் கொண்டதைத் தானே கேள்வியாக்கியுள்ளது? இந்த குழந்தையின் கேள்வியை எப்படி வெறுமனே கடந்து செல்வது?.
மலர்வது பூவின் இயல்பு, பறப்பது பறவையின் இயல்பு என்பதைப் போல மனிதர்களின் இயல்பு ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரே மாதிரியாக கூட இருந்திருக்கலாம்.. ஆண், பெண் என்ற வேறுபாடுகள் சமூகத்தின் கட்டமைப்பால் தானே உருவாக்கப்படுகிறது?
குழந்தைகளின் பாடப் புத்தகங்களில் அப்பா பேப்பர் படிக்கிறார் அம்மா சமையல் செய்கிறார் என்று சிறு பிள்ளை முதலில் சொல்லிக் கொடுக்க தொடங்குகிறோம். அது போலவே அப்பாவுக்கு 4 தோசைகள், அம்மாவுக்கு மூன்று தோசைகள் என்று உணவில் கூட ஆணை ஓரிடத்திலும் பெண்ணை ஓர் இடத்திலும் நாம்தான் வைக்க குழந்தைகளை பழக்குகிறோம். அந்தக் கேள்விகளின் நீட்சியாகத்தான் இந்த குழந்தையின் கம்ப்யூட்டரோட அம்மா யாரு என்ற கேள்வியையும் உணர வேண்டியிருக்கிறது. இப்போது பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் குற்றங்களும் பெருகிவரும் நிலையில் , குழந்தைகளை சரியான முறையில் வளர்ப்பதின் ஆரம்பப் புள்ளியாக இதுபோன்ற கேள்விகள் தான் இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.
எல்லாவற்றிலும் ஆணை முன்னிலைப்படுத்தியும், பெண்ணை இரண்டாம் நிலையில் வைத்து பேசியும் செயல்பட்டும் வருகிற நம்முடைய கலாசாரத்தின் தொடர்ச்சியாகத்தான், இன்று பெண்ணை ஒரு சக உயிரினமாக மதிக்காத போக்கு தொடர்ந்து வருகிறது. பெண்ணை தெய்வம் என்றும் நதி என்றும் பூ என்றும் போற்றி வணங்குகின்ற கலாச்சாரம் கொண்ட நாம்தான் அவளை கொஞ்சமும் மதிக்காத காலடியில் போட்டு அடிமையாக வைத்துக்கொள்கிற கலாச்சாரத்தையும் வளர்க்கிறோம்.
எத்தனை படிப்பு படித்திருந்தாலும், பெண் என்பவள் வீட்டு வேலைகளை செய்வதில் இருந்து, குழந்தையை வளர்ப்பதில் இருந்து, சமையல் செய்வதில் இருந்து தப்பிக்கவே முடிவதில்லை. எழுத்தாளர் அம்பை ஒரு சிறுகதையில் கூறியிருப்பதைப் போல ஆயுள் முழுவதற்கும் லட்சக்கணக்கான இட்லிகளையும் வடைகளையும் தோசைகளையும் செய்து செய்தே அவள் காணாமல் போகிறாள் இந்த சமையல் போன்ற வேலைகளில் இருந்து அவளுக்கும் விடுதலை கிடைத்திருந்தால் அவளும் மரத்தில் இருந்து ஆப்பிள் கீழே விழுவதை பார்த்து புவியீர்ப்பு விசையை கண்டுபிடித்து இருக்கக்கூடும் என்பது எத்தனை நிஜம்?
இப்போதும், பெண்கள் நிறையப் படித்துவிட்டார்கள், ஆணுக்கு நிகராக எல்லா பதவிகளிலும் கோலோச்சுகிறார்கள் என்றெல்லாம் சொல்லப் பட்டாலும் அந்த பெண்களின் சதவீதத்தை நோக்கும்போது மிக மிக குறைவாகவே உள்ளதை உணர முடிகிறது.
பெண்களுக்கு எதிரான இந்த சமூக கலாச்சார வன்முறைகள் மாறுவதற்கான ஆரம்பத்தை நாம் பிள்ளைகளிடம் இருந்து துவங்க வேண்டும் என்ற புரிதலை நமக்கு கொடுக்கின்ற கேள்வியாக இந்த குழந்தையின் கேள்வியை நான் எடுத்துக் கொள்கிறேன். கம்ப்யூட்டருக்கு அப்பா இருப்பது எவ்வளவு முக்கியமோ அதைப் போலவே அம்மா இருப்பதும் முக்கியம் என்று உணர்கிற அந்த குழந்தையின் ஆரம்ப கால புரிதலை வளர்த்தெடுக்காமல் அப்பாவை பற்றி மட்டுமே அதன் மூளையில் பதிய செய்து வளரும் பருவத்தில் பெண்ணுக்கான இடத்தை கொடுக்காத குழந்தையாக அந்த குழந்தையை மாற்றுகிற மாபெரும் பாதகமான காரியத்தை நாம் தானே செய்கிறோம்?. இந்த சின்ன தவறை, பெரும் தவறாக மாற்றி கொண்டிருப்பதை ஒவ்வொரு பெற்றோரும் உணருகின்ற தருணம் தான் எதிர்கால தலைமுறைக்கான சிறப்பான ஆரம்பத்தை கொடுக்கும்.
இங்கு பெற்றோர் என்று கூறும் பொழுது அம்மாக்களின் நிலையையும் சேர்த்து பேசவேண்டியுள்ளது. குடும்பத்துக்காக ஓடாய் உழைத்து தேய்ந்து கொண்டிருப்பதையே பெருமை என்று எண்ணிக்கொண்டு, பல பெண்கள் தங்கள் சுயத்தை மறைத்தும், இழந்தும் வாழ்கிறார்கள். வாழ நிர்ப்பந்திக்கப் படுகிறார்கள். கவிஞர் இளம்பிறை ஒரு பேட்டியில் சொல்வதைப் போல், மாலை 6 மணி ஆன பிறகு, வீடு திரும்பாமல் வெளியில் இருக்க நேர்ந்தால், குழந்தைகளுக்கு பசிக்குமே, குழந்தைகள் வீடு வந்து சேர்ந்து இருக்குமே, ஒன்றும் செய்து வைத்துவிட்டு வரவில்லையே என்ற பதட்டத்தோடு தான் பெண்கள் இருக்க வேண்டியுள்ளது.
குடும்பம் என்ற அமைப்பின் ஆணிவேர், அச்சு என்றெல்லாம் சொல்லி பெண்ணை அப்படி ஒரு இக்கட்டில் இந்த சமூகம் வைத்திருக்கிறது. இதை அம்மாக்களோடு சேர்ந்து அப்பாக்களும் உணர வேண்டும். அப்படி அம்மாவும் அப்பாவும் சேர்ந்து பொறுப்புகளை ஏற்றுக் கொள்வதுதான் நல்ல குடும்பம் என்று குழந்தைகளுக்கு சொல்லி பழக்க வேண்டும். அப்படி பார்த்து பழகி வளர்கிற குழந்தைகள் அவை ஆண்குழந்தையாக இருந்தாலும் பெண் குழந்தையாய் இருந்தாலும், நிச்சயமாக வருங்காலத்தில் நல்ல ஒரு பெண்ணாகவோ ஆணாகவோ இந்த சமூகத்தில் பொறுப்புள்ளவர்களாக நடந்து கொள்வார்கள். அவர்களை வளர்க்கும் போது சரியான திசையில் சரியான வழிகாட்டியாக நிற்பது மட்டும் தான் நம் கடமையே தவிர, நமது விருப்பங்களையும், நமது வன்மங்களையும் அவர்கள் மீது திணித்து அவர்களை காணாமல் செய்வது அல்ல. இதை ஒவ்வொருவரும் உணரும் தருணத்தில் நம் குழந்தைகளுக்கான அழகான உலகம் உருவாகும் என்பதில் நிச்சயமாக எந்த சந்தேகமும் இருக்க முடியாது..வெறும் படிப்பும், பெரிய வேலையும் கை நிறைய பணமும் மட்டுமே வாழ்க்கை என்று வாழ்கின்ற கடைசி தலைமுறை நம்முடையதாகவே இருக்கட்டும். வளரும் தலைமுறையாவது அன்பையும், பரிவையும், சமமான உரிமைகளையும், நீதியையும் ஒருங்கே பெற்ற நல்ல தலைமுறையாக வாழ நாம் துணை நிற்போம்.
நிலாவுக்கு போனா கூட வடை தான் சுட வேண்டும் அவ்வை என்று பேராசிரியர் ராஜேந்திரன்(அன்னை வேளாங்கண்ணி கல்லூரி, தஞ்சை) முகநூலில் எழுதியிருந்தார். எத்தனை உண்மை.!? இந்த உண்மையின் இன்னொரு முகம் தான் இந்த குழந்தையின் கேள்வி. பதில்களை கண்டடைதல் ஒவ்வொருவரின் கடமை.

























1 Comment
உண்மை