காலம் மாறாது…அம்மாக்கள் நாம்தான் மாற்ற வேண்டும் – கிர்த்திகா தரண்

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
பொள்ளாச்சி ச‌ம்பவத்திற்கு பிறகு ஏகப்பட்ட ஆலோசனைகள் இணையத்திலும் வீட்டிலும் சுற்றத்திலும் அருவிப் போல கொட்டிக் கொண்டே இருக்கிறது. இவற்றையெல்லாம் தொகுத்துப் பார்த்தால், அதிகம் “பெண்ணை எப்படி போற்றி பாதுகாத்து வளர்க்க வேண்டும்” என்ற தலைப்பிலே இருக்கிறது. அதிலும் பெரும்பான்மையான பதிவுகள் குப்பையாகவே இருக்கிறது. இவ்வுலகில் மிக எளிதானது அறிவுரை தான் அதிலும் மிக மிக எளிது பெண்ணைக் காப்பாற்றும் எச்சரிக்கை அறிவுரைகள்.

அது ஒரு புறம் இருக்க..வீட்டின் நிலையை சற்றே யோசித்துப் பார்க்கிறேன்..”அம்மா தண்ணீ தாம்மா” என்கிறான் மகன். பல வீடுகளில் இன்று வரை தண்ணீர் அருகிலையே இருந்தாலும் அம்மாதான் பெரும்பாலும் தண்ணீர் கொண்டு வந்து தர வேண்டும். என்றைக்காவது “நீயே போய் தண்ணீ எடுத்துக்கோ” என்று குழந்தையை சொல்கிறோமா என்றால். பெரும்பாலும் இல்லை என்றே சொல்லலாம்.

தண்ணீருக்கே இந்த நிலை என்றால் உணவைப் பற்றி சொல்ல வேண்டாம். சிறு குழந்தை இருக்கும் வீட்டினை எப்பொழுதும் கிண்ணத்துடன் திரியும் அம்மாக்களை வைத்து கண்டுப்பிடித்து விடலாம். உணவு என்ற அடிப்படை விசயத்தினைக் கூட ஊட்டினால் தான் சாப்பிட முடியும் என்று தான் குழந்தைகளை வளர்க்கிறோம். இதற்கு முந்தைய தலைமுறையில் எல்லாம் ஊட்டுவதற்கெல்லாம் நேரம் இருக்காது, மொத்த குடும்பமும் ஒன்றாக அமர்ந்து ஒரே இடத்தில் சாப்பிடும் வழக்கம் தான் இருந்து வந்தது. எங்கிருந்து திடீரென “கட்டாயமாக ஊட்டும்” கலாச்சாரம் முளைத்தது என்று தெரிய‌வில்லை. இன்று பல குடும்பங்களில் சிறுவர்களை சுயமாக சாப்பிடச் சொல்வது என்பது ஏதோ குற்றச் செயலாகவே கருதப்படுகிறது.

வீட்டில் விருந்தாளி என‌ யார் வந்தாலும், அலுவலக பணிக்கு இடையில் பெண் தான் கவனிக்கனும். தாய்மை பெண்ணுக்கு என்பது இயற்கையின் விதி. ஆனால் குழந்தை வளர்ப்பும், குழந்தையின் கல்வி சார்ந்த பொறுப்பும் அந்த இயற்கையின் விதியின் உள்ளதாகவே நமது குடும்பங்களில் கருதப்படுகிறது. பள்ளியின் நடக்கும் பெற்றோருக்கான சந்திப்பிற்கு வருபவர்கள் பெரும்பான்மையினர் அம்மாவாகவே இருக்கின்றனர். அப்பாக்கள் தனியாக வந்து நான் பார்த்ததில்லை. தற்காலத்தில் சிறு சிறு மாற்றங்கள் நடக்கிறது என்பதே மனதிற்கு சிறு ஆறுதல்.

இன்றும் பல வீடுகளில், தாத்தா பாட்டியை அதிகாரம் செய்வதையும், அப்பா அம்மாவை அதிகாரம் செய்வதையும் தான் காணமுடிகிறது. வயதான காலங்களில் அம்மாக்கள் மகன்களை மட்டுமே நம்பி வாழ்வது நிதர்சனம்.  அங்கு அவர்கள் பல சமயம் காசில்லா வேலைக்காரிகள். பெரும்பாலும் பெண்ணை சுரண்டும் இந்த சமூக அமைப்பில் தான் ஒரு குழந்தை வளர்க்கப்படுகிறது.

கீழேயுள்ள இந்த வசனங்களை குழந்தைகள் கடக்காமல் நமது சமூகத்தில் கண்டிப்பாக வளர்ந்திருக்க முடியாது,

“இந்த குடும்பத்துள நீதான் ஆம்புள புள்ள. அக்கா, தங்கச்சிய நீதான் பார்த்துக்கனும் , நீதான் கரை சேர்க்கனும்”
“கல்யாணம் செய்து வச்சு இன்னொரு வீட்டுக்கு போறவ.”
“பொம்புள புள்ளனா, சாயுங்காலம் ஆறுக்குள்ள வீட்டுக்கு வந்திடனும்”
“பொம்பள புள்ளைக்கு இத்தனை திமிரா..”
“பொம்பளன்னா கொஞ்சம் பொறுத்து தான் போகணும்”
இந்த வசனங்களை கடந்து , அம்மாக்குளுக்கு ஒரு குடும்பம் சூட்டும் தியாக தன்மையும் புதித தன்மையும் தனி ரகம்.

குழந்தை வளர்ப்பு Psychology ல் nature vs nurture என்ற விஷயம் உள்ளது. பாதி பாரம்பரியம். மீதி வளர்ப்புச்சூழல். அப்படி இருக்கும்பொழுது இயற்கையில் கொஞ்சம் ஆணாதிக்க வீரம் இருக்கும் அதை வளர்ப்புச்சூழலில் மாற்றலாம். ஆனால் சமூகம் இப்படி பெண்களை அடிமை நிலையில்  வைத்தே பார்க்கும் பொழுது அதில் வளரும் ஆண் ஆணாதிக்க சிந்தனை இல்லாமல் வளர்வது  எப்படி முடியும்?

இங்கு படிப்படியாக சிந்தனை மாற்றங்கள் தேவை. அதற்கு முதலில் அம்மா மாற வேண்டும். பிறகு தான் சமூகம். கொஞ்சம் ஆரம்பக்கால குழப்பங்கள் வரலாம். ஆனால் சமூகமாற்றங்கள் அப்படிதானே இதுவரை நடந்திருக்கிறது.

பெரியவன் படித்த பள்ளியில் ஆண், பெண் வித்தியாசமின்றி வளர்ந்த சூழல். அவனோடு வெளிநாடு சென்றிருந்தபொழுது அவன் பல்கலைக்கழகத்தில் சிலப்பெண்கள்  நீச்சல் உடையில் வைட்டமின் டி க்காக சூரிய உளியில் காய்ந்துக்கொண்டிருந்தனர் (Sun bath). சட்டென “என்னடா இது..நட்ட நடுக்கல்லூரியிலா?” என்றேன். “அம்மா இப்படி அவர்களை கவனிக்காதே..அது தவறு..நான் செய்யக்கூடாது என்று சொல்லிருக்கிறாய்..அதுதான் உனக்கும்” என்றான். பெண் உடலை அவர்கள் அனுமதியின்றி விமர்சனம் செய்வது பெண்ணே இருப்பினும் அது நாகரிகமற்ற செயல், அவர்கள் உலகில் மூக்கை நுழைப்பது போன்றது என்ற பாடம் சுறுக்கென உரைத்தது. இந்தப் பாடத்தை கற்றுக்கொடுத்தது எனது பையனின் அந்தப் பதில் தான். ஆணுக்கான் விஷயங்களுக்காக அதற்கு அனுமதிக்கப்பட்ட இடங்களில் அவர்கள் பார்க்கலாம், அது அவர்கள் தனிப்பட்ட விஷயம். அதே சமயம் இன்னொருப்பெண் உடலை அவள் சம்மதமின்றி உற்று நோக்குவது கூட நாகரிமற்ற செயல். நாலு ஆண்கள் சேர்ந்தால் பெண்கள் உடலை வர்ணித்து சிரிக்கும் மட்டரக நகைச்சுவை உள்ள தமிழ் சினிமாவின் பிரதிபலிப்பாக எனது மகன் இல்லை என்று நினைக்கும் போது மனம் நிறைவாக இருக்கிறது. இது எனது மகன் என்பதால் மட்டுமல்ல என்பதையும் மனதார சொல்லிக்கொள்கிறேன்.

உண்மையை சொல்ல வேண்டுமென்றால், எல்லா விசயங்களையும் சொல்லிக்கொடுத்து வளர்க்க முடியாது. சொல்லிக்கொடுத்தாலும் அதை குழந்தைகள் தங்களது வளர்ப்பில் அப்படியே எடுத்துக்கொள்வார்கள் என்பதையும் நிச்சயம் சொல்ல முடியாது. ஒரு குடும்ப சூழல் தான் குழந்தைக்கும் நிறைய விசயங்களை ஆத்மார்த்தமாக சொல்லிதருகிறது. அதிலும் முக்கியமாக வீட்டிலுள்ள பெண்ணின் தன்னம்பிக்கை தான் அதிகம் வாழ்கைக்கு தேவையான விசயங்களை சொல்லித்தரும். “அம்மா தண்ணீ” என்ற குரலுக்கு “நீயே எடுத்துக்கோ” என்பது எனது  பதிலாக கண்டிப்பாக இருக்கும். குடும்பத்திற்காகவும் சரி, பிள்ளைகளுக்காகவும் சரி…அம்மா எதற்காகவும் தனது தன்னம்பிக்கையை விட்டுத்தர மாட்டேன் என்பதை வலியிறுத்தும்படியே இருக்க விரும்புகிறேன். தவறான வார்த்தைகள், பெண் என்று மட்டம் தட்டும் வார்த்தைகளை எதற்கும் நான் இருக்கும் இடத்தினில் அனுமதிக்க முடியாது. இதெல்லாம் பார்க்கும் குழந்தைகளுக்கு ஓரளவு சகப்பெண் மேல் மரியாதை வர ஆரம்பிக்கும்.

“பொட்டச்சிக்கு என்ன திமிர்” என்ற வசனங்கள் இன்னும் பல இடங்களிலும் ஒலித்துக்கொண்டுத் தான் இருக்கிறது.  சமூகாலைதளங்களில் கூட ஒரு பெண் துணிவாக இருந்தால் அவளது நடத்தையை பற்றிய விமர்சனங்கள் எழுந்துக்கொண்டு தான் இருக்கிறது. பெண் என்பவள் stronger sex என்பதை முதலில் அவள் உணர வேண்டும்.தனது சுற்றத்தில் உள்ள மற்றவர்களுக்கு அதனை உணர்த்திட‌ வேண்டும். அதுதான் ஒரே வழி.

ஒரு ஆண் என்பவன் அதிகார மையமாக இருக்க கால காலமாக ஏற்பட்ட சமூக சிக்கல்கள் இது. அதிகாரம்தான் அகந்தையை அளிக்கிறது. அகந்தை இன்னொரு உடலை, மனிதத்தை மரியாதை இல்லாமல் நடத்துகிறது.  அந்த அதிகாரம் இல்லை என்னும் நாளில்தான் மரியாதை மட்டுமல்ல மதிப்பு மட்டுமல்ல…மனிதமும் வளரும்.

காலம் மாறாது..அம்மாக்கள் நாம்தான் மாற்ற வேண்டும்.

2 Comments

  • Ranjani says:

    எப்போது ஒரேயொரு குழந்தை என்று ஆனதோ அன்றிலிருந்து இந்த ஊட்டும் பழக்கம் தோன்றியிருக்கலாம்

  • கிருஷ்ணப்ரியா says:

    சிறப்பு… அம்மாக்கள், முக்கியமாக ஆண் பிள்ளைகளைப் பெற்ற அம்மாக்கள் தான் முதலில் மாற வேண்டும் என்பது தான் எனது கருத்தும். கிருத்திகா தரனுக்கு வாழ்த்துக்கள்

Leave a comment