5ம் வகுப்புக்கும் 8ம் வகுப்புக்கும் பொதுத் தேர்வு என்ற அறிவிப்பு வந்தவுடன் எனக்கு தூக்கமில்லை. இதை நண்பர்களிடம் சொன்னதும் எனக்கு எதிரே நின்ற கேள்விகள் இவை தான். “ஏன் உங்களுக்கு தேர்வு பயமா ?” , “உங்கள் குழந்தைகள் தேர்வில் தோற்று போய்விடுவார்கள் என்ற பயமா?”. இந்தக் கேள்விகளுக்கு பதில் தருவதை விட ஒரு பெற்றோராகவும், கல்வி சார்ந்து இயங்கும் நபராகவும் எனது கவலைகளை அவர்களுடன் உரையாட நினைத்தேன். முடிந்தவரை அவர்களுடன் சுதந்திரமாக உரையாடவும் செய்தேன். இருந்தும் மனதினுள் இங்கும் அங்குமாக அலைபாயும் சிந்தனைகள் ஓடிக்கொண்டிருந்தது. அதன் வெளிப்பாடே இந்தக் கட்டுரை.
எந்த வகுப்பிற்கும் அரசு பொதுத் தேர்வை அறிவிப்பு செய்யலாம், அவர்களுக்கு அதில் எல்லாம் எந்தக் கவலையுமில்லை. ஏனென்றால் அரசு இதை செய்யுங்கள் என்று கட்டளை மட்டுமே இடப் போகிறது. அதன் சுமைகள் யாவும் ஆசிரியர்கள் மீதும் பெற்றோர்கள் மீதும் தான் வந்து சேரப்போகிறது. அந்தச் சுமையின் பாரம் மெல்ல மெல்ல குழந்தைகள் மீது தீரா வடுவாக மாறப்போவதற்கே வாய்ப்புகள் இங்கு அதிகம். பொதுத் தேர்வு முடிவுகள் இந்தச் சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கங்கள் நாம் அறிந்ததே. 10ஆம் & 12ஆம் வகுப்பு வயது குழந்தைகளிடமே மனதளவில் பக்குவத்தை வளர்க்க முடியாமல் தவிக்கும் இச்சமூகத்தில் 5ஆம் வகுப்பு குழந்தைகளிடம் என்ன செய்யப் போகிறோம் என்ற கேள்வி கண் முன்னே சுற்றிக் கொண்டே இருக்கிறது. குழந்தைகள் மனதை தயார்படுத்தி கொண்டாலும் சுற்றியுள்ள சமூகம் கல்விமுறையிலுள்ள பொதுத்தேர்வை மையமாக வைத்து என்னவெல்லாம் பேசும் என்பது அனைவரும் அறிந்ததே. தன்னம்பிக்கையை வளர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டிய கல்விமுறை மீண்டும் மீண்டும் பொதுத் தேர்வு என்று சொல்லி பிஞ்சு குழந்தைகளின் மனதில் நஞ்சை விதைப்பதாகவே தோன்றுகிறது. தனக்கு நேர்ந்த பாலியல் ரீதியான துன்புறுத்தல்களை கையாள்வதில் குழந்தைகளுக்கு முன்பு எதிர்நிற்கும் சிக்கல்களே போலவே குறைந்த மதிப்பெண் பெறுவதையும் ,படிக்க கடினமாக இருப்பதையும் ,தேர்வும் ,தேர்ச்சி பெற்றால் தான் அடுத்த வகுப்புக்கு செல்ல முடியும் என்கிற பயமுறுத்தல்களை கையாள்வதில் பெரிய சிக்கல்கள் உருவாகும் என்பதை இங்கு யாராலும் மறுக்க முடியாது.
அடுத்து, ஆசிரியர்களுக்கு இது ஒரு மிகப்பெரிய சவால் 5ஆம் வகுப்பிற்கும், 8ஆம் வகுப்பிற்கும் பொது தேர்வு வந்து விட்டால் அவர்கள் 100 சதவீதம் தேர்ச்சியை காண்பிக்க கட்டாயப்படுத்தப் படுவார்கள். 100 சதவித தேர்ச்சி என்பது ஏற்கனவே இருக்கும் ஆசிரியர்களின் பணிச்சுமையுடன் இதுவும் பெரும் அழுத்தமாக மாறிவிடும். அந்தச் சிறு வகுப்பிலே ஆசியர்கள்- மாணவர் உறவில் விரிசல் விழும். நன்கு படிக்கும் மாணவர்கள் மீது கவனம், படிக்க திணறும் மாணவர்கள் மீது வெறுப்பு என்ற கட்டமைப்பு சிறு வயதிலே பள்ளிகளில் உருவாக வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இதனால் இடை நிற்றல் அதிகரிக்கும்.
மெல்ல கற்கும் மாணவர்கள் அதிகமானவர்கள் பள்ளிக் கல்வி என்பதிலிருந்து விலகி தூரச் செல்லும் வாய்ப்புகள் அதிகமாகும். மெல்ல கற்கும் மாணவர்களின் தேவைகளை புரிந்துக்கொண்டு அதற்கேற்ப செயல்பட ஆசிரியர்களுக்கு மனம் இருந்தாலும் நேரம் இருக்குமா? ஆசிரியர்களின் நிலை அறிந்து அவர்கள் குறைகளையும் ,ஆலோசனைகளையும் கேட்க இந்த அரசுக்கு பொறுமை இருக்குமா ? கற்றல் குறைபாடு குறித்து கிண்டல் செய்ய மட்டுமே இங்கு சாத்திய கூறுகள் அதிகமாக இருக்கும் நிலையில் இதை எல்லாம பற்றி யார் பேசுவார்கள் என்று நினைக்கையில் கோபம் மட்டும் மனதினுள் எஞ்சி நிற்கிறது.
பெற்றோர்கள் இந்த விசயத்தில் குழந்தைகளையும் புரிந்து கொள்ளப் போவதில்லை ஆசிரியர்களின் நிலையையும் புரிந்துக் கொள்ளப் போவதில்லை .பெற்றோர்களை பொறுத்தவரை அவர்களை குழந்தைகளும்,ஆசிரியர்களும் பெருமைப்படுத்தும் படி செய்ய வேண்டும். இல்லையென்றால் அவர்கள் ஆசிரியர்களையும் ,குழந்தைகளையும் தான் குறை கூறுவார்கள். ஆனால் ஆசிரியர்கள் இதனை குழந்தைகள் மீது சுமத்திவிட்டு எளிதாக கடந்து வந்து விடுவார்கள். இறுதியாக பாவம் இந்த 5ம் வகுப்பு 8ம் வகுப்பு குழந்தைகள் தான். பெரியவர்களாலே சிறிய தோல்விகளை எதிர்நோக்க முடியாத நிலையில் சிறார்களிடம் எதனை எதிர்ப்பார்ப்பது. “இதெல்லாம் ஒரு சின்ன தோல்வி தானே. அடுத்த முறை தேர்வு எழுதி வெற்றி பெறலாமே” என்ற குரல்கள் ஒலிப்பது எனது செவிக்கு எட்டாமல் இல்லை. அவர்களுக்கெல்லாம் நான் சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்று தான். அதெற்கெல்லாம் அவர்கள் இன்னும் பக்குவப்படவில்லை அவர்களை பக்குவப்படுத்தும் அளவிற்கும் நம் கல்வி முறையிலும் , நம் மத்தியிலும் இன்னும் எந்தவித மாற்றங்களும் நடைப்பெறவில்லை.
தங்கத்தை விட நல்ல விலைக்கு விற்கப்படுகிறது கல்வி, பொது தேர்வு கட்டாயமாகும் சூழல் உருவாகினால் எங்கும் கல்விக்கான விளம்பரங்களை காணலாம். குழந்தைகளை வைத்து குதிரைப் பந்தயம் போல இனி போட்டிகள் நடக்கும் “எங்கப் பள்ளி தான் மாநிலத்தில் முதலிடம் ,மாவட்டதில் முதலிடம் ,100 சதவீத தேர்ச்சி” என பெருமைக்காக இந்த பிள்ளைகள் எல்லாம் பந்தயக் குதிரைகள் ஆக்கப் படுவார்கள் அதுவும் 4ம் வகுப்பிலிருந்தே தொடங்கி விடும்.
12ஆம் வகுப்பு பொது தேர்வென்றால் 11ஆம் வகுப்பிலிருந்து படிக்க வைப்பதும், 10ம் வகுப்பு பொது தேர்வென்றால் 9ஆம் வகுப்பிலிருந்து படிக்க வைப்பதும் தானே நமக்கு பழக்கம். இனி 5ஆம் வகுப்பிலிருந்தே பொதுத் தேர்வென்றால் விட்டு வைப்போமா ? குழந்தைகளை எல்.கே.ஜி யிலிருந்தே ஆரம்பித்து விடுவோமே நம் ஆட்டத்தை. இனி குழந்தைப்பரும் என்பதே இருக்காது தான் குழந்தை பிறந்ததிலிருந்தே தேர்வு பருவமும் அதற்கு முன்னோட்ட மாக பருவத் தேர்வுகளும் தான்.
இங்கு பாவப்பட்டவர்கள் குழந்தைகள் தான்.
























