வெண்புள்ளிகள் (Leucoderma) – சரவணன் பார்த்தசாரதி

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

சில கேள்விகள்:
1. தெருவில் உங்கள் குழந்தையுடன் நடந்து செல்கிறீர்கள். அப்போது உடலெல்லாம் வெண்புள்ளிகள் நிரம்பிய ஒருவர் எதிரே வருகிறார். அவர் ஏன் அப்படி இருக்கிறார் என்று உங்கள் குழந்தை கேட்கிறாள். என்ன பதில் கூறுவீர்கள்?
2. அவர் உங்கள் கைகளைத்தொட்டுக் குலுக்கிவிட்டுச் செல்கிறார். உடனே நீங்கள் என்ன செய்வீர்கள்?
3. ஓர் உணவகத்திற்குப் போகிறீர்கள். அங்கு பரிமாறுபவரின் கைகளில் வெண்புள்ளிகள் இருப்பதைக் காண்கிறீர்கள். அங்கு உணவு உண்பீர்களா?
4. வெண்புள்ளிகள் கொண்ட ஒரு நபர் ரத்ததானம் அளிக்க முன்வருகிறார். நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா?

பதில்கள்:
உங்கள் பதில் இப்படியாக இருக்கலாம்.
1. அவருக்கு வெண்குஷ்டம் என்ற நோய் தாக்கியிருப்பதாகச் சொல்வேன்.
2. நோய்த்தோற்று ஏற்பட்டுவிடக்கூடாது என்பதால் கைகளைக் கழுவுவேன்.
3. அங்கு உணவு உண்ணமாட்டேன்.
4. இல்லை. ஏற்றுக்கொள்ளமாட்டேன்.

சரி. இக்கட்டுரையைத் தொடர்ந்து படியுங்கள்.

வெண்புள்ளிகள் என்பவை யாவை?
நீங்கள் பார்த்த நபர்களுக்கு இருக்கும் குறைபாட்டின் பெயர் – லியூகோடெர்மா (Leucoderma) அல்லது விட்டிலைகோ (Vitiligo). தமிழில் – வெண்புள்ளிகள். மெலனின் (melanin) என்ற நிறமிதான் நமது தோலின் நிறத்தை நிர்ணயிக்கிறது. இந்த நிறமியின் அளவு குறையும் இடங்களில் தோல் தன் நிறத்தை இழக்கத் தொடங்கும். பிறகு வெளிறிய நிறத்தில் சிறு திட்டுகள் தோன்றும். அவை கொஞ்சம் கொஞ்சமாக முழுமையான வெண்மை நிறத்தை அடையும். இவை பெரும்பாலும் அரிப்பையோ, தடிப்பையோ ஏற்படுத்துவதில்லை. இதன் பிறகு உடலின் வெவ்வேறு பகுதிகளில் இதுபோன்ற திட்டுகள் தோன்றவும், தோல் முழுமையாக வெண்மையாகவும் மாறக்கூடும். சிலருக்கு உடலின் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே தோன்றி அங்கேயே நின்றுவிடவும் வாய்ப்பிருக்கிறது.

ஏன் தோன்றுகின்றன?
மரபு தொடர்பான காரணங்கள் தொடங்கி ஆட்டோ இம்யூன் கோளாறுகள், மன இறுக்கம், தொடர்ச்சியாக சில வேதிப்பொருட்களைக் கையாளுதல், வைட்டமின் – D குறைபாடு, வேறுபல நோய்களுக்கு எடுத்துக்கொள்ளும் மருந்துகள், ஈரல் சார்ந்த நோய்கள் உட்பட பல நூறு காரணங்களால் இக்குறைபாடு தோன்றக்கூடும்.
யாருக்குத் தோன்றக்கூடும்

பாலின வேறுபாடுகள் ஏதுமின்றி யாருக்கும் இது தோன்றக்கூடும். இப்புள்ளிகள் தோன்றுவதற்கு வைட்டமின் – D குறைபாடு முக்கிய காரணமாகச் சொல்லப்படுகிறது. குறிப்பிட்ட நேரத்தில் வெய்யிலில் நடமாடுவதன் மூலம் தேவையான அளவிற்கு இச்சத்தினைப் பெறமுடியும். இன்றைய குழந்தைகள் பெரும்பாலும் வெய்யிலில் நடமாடுவதில்லை என்பதால் அவர்களுக்கு இச்சத்து கிடைப்பதில்லை. இதுவும் வெண்புள்ளிகள் தோன்ற ஒரு காரணமாகிறது.

பெரும்பாலான சிறப்புக் குழந்தைகள் உடலில் வைட்டமின் – D மிகக்குறைவாகவே இருக்கும். மேலும் பாதுகாப்பு சார்ந்த (தொலைந்துபோய்விடுவார்கள் என்று நினைப்பது) காரணங்களாலும், பிற குழந்தைகளுடன் இணைத்து பழகுவதில்லை என்பதாலும், இயல்பாகவே ஒதுங்கியிருக்கும் மனநிலையாலும் அவர்கள் தங்கள் வீட்டிற்குள்ளேயே வாழப்பழகிவிடுகின்றனர். இது அவர்கள் உடலில் வெண்புள்ளிகள் தோன்ற முக்கிய காரணமாகிறது.

உடலின் எப்பகுதியில் தோன்றும்?
முக்கியமாக மூட்டுகள், கழுத்தின் பின்பகுதி போன்ற கருமையான இடங்களிலும், கை விரல்கள், கால் விரல்கள் போன்ற கருப்பும், வெளுப்பும் சந்திக்கும் பகுதிகளிலும், உடலின் மென்மையான பகுதிகளாக அறியப்படும் உதடு, மூக்கு, தொப்புள், ஆண் – பெண் உறுப்புகள் போன்ற இடங்களில் வெண்புள்ளிகள் தோன்றுகின்றன.

இது நோயா?
வெண்புள்ளிகள் – நோய் (disease) என்று குறிப்பிடப்பட்டாலும் – அவை ஒருவகைக் குறைபாடு (disorder) என்றுதான் கருதவேண்டும். இக்குறைபாடு பிறருக்குப் பரவ வாய்ப்பேயில்லை (non-contagious). மற்ற பல குறைபாடுகளைப்போல் வெண்புள்ளிகளும் வாழ்நாள் முழுவதும் ஒருவரது உடலில் தொடரக்கூடியவைதான். அரிதாக சிலருக்கு இக்குறைபாடு குணமாகக்கூடும்.

நமது நாட்டில் இக்குறைப்பாட்டை கிருமிகளால் ஏற்படும் தொழுநோயுடன் தொடர்புபடுத்தி இதற்கு ‘வெண்குஷ்டம்’ என்று பெயர் சூட்டிவிட்டனர். இதன் காரணமாகவும், இக்குறைபாட்டினால் பாதிக்கப்பட்டோரின் தோற்றத்தினாலும் மக்கள் அவர்கள்மீது ஒருவகை வெறுப்புணர்வினை அடைகின்றனர். இது நோயல்ல எனும் நிலையில் சமூகம் தரும் இத்தகைய அழுத்தம் மட்டுமே இக்குறைபாடு கொண்டோரைப் பெரிதாகப் பாதிக்கிறது. மன இறுக்கத்தால் தற்கொலை செய்துகொண்டோரும் உண்டு.

நிறவெறிக்கும், மக்கள் இப்படி நடந்துகொள்வதற்கும் பெரிய வேறுபாடு இல்லை.
இந்த மனநிலையை மாற்றும் விதமாக தமிழக அரசு 2011-ஆம் ஆண்டில் இக்குறைபாட்டை ‘வெண்புள்ளிகள்’ என்று அழைக்கவேண்டும் என்றும், வெண்குஷ்டம் என்ற சொல்லைப் பயன்படுத்தக்கூடாது என்றும் அரசாணை பிறப்பித்தது.

குணப்படுத்த முடியுமா?
இன்றைய நிலையில் புற ஊதாக்கதிர்கள் கொண்டு சிகிச்சை அளிப்பது, நிறம் மாறிய பகுதியில் பச்சை குத்துவது, வைட்டமின் – D சார்ந்த சிகிச்சை, வேறோர் இடத்தில் இருந்து தோலை எடுத்து பாதிக்கப்பட்ட இடத்தில் வைப்பது, ஊக்கமருந்து சார்ந்த சிகிச்சைகள் என்று பல குணமாக்கும் முறைகள் பயன்பாட்டில் உள்ளன. இவை யாவுமே முழுமையான பலனை அளிப்பதில்லை என்பது சோகமான உண்மை.
சித்த, ஆயுர்வேத, யுனானி மருந்துகள் வழியே குணப்படுத்த இயலும் என்று கூறப்பட்டாலும் நடைமுறையில் அவற்றின் வெற்றி சதவிகிதம் எவ்வளவு என்பது கேள்விக்குறியே. இன்னொருபுறம் நீண்டகாலம் ஊக்க மருந்துகள் எடுத்துக்கொள்வதால் ஏற்படும் பின்விளைவுகள் இவர்களைக் கடுமையாகப் பாதிக்கின்றன.

ஆகவே ‘குணப்படுத்த முடியுமா?’ என்ற கேள்விக்குப் பதில் ‘குணப்படுத்த வேண்டுமா?’ என்ற கேள்வியைக் கேட்பது அனைவருக்குமே நன்மை பயக்கும் என்று தோன்றுகிறது. ‘தேவையில்லை’ என்பதே எனது பதில்.

என்னதான் தேவை?
‘சமூகப்புரிதல் – அவ்வளவுதான்.’ உயரமாக, குள்ளமாக, கருப்பாக, வெளுப்பாக, வழுக்கையுடன், நீண்ட முடியுடன் இருப்பதெல்லாம் சமூகத்தின் பன்மைத்துவ அடையாளங்களாகப் பார்க்கப்படும் நிலையில் உடலில் ஆங்காங்கே நிறமிழந்த ஒருசிலர் மட்டும் தனித்து அடையாளப்படுத்தப்பட்டு ஒதுக்கப்படுவது சரியல்ல. இல்லையா? இந்தப் புரிதல் ஏற்பட்டுவிட்டால் இக்குறைபாட்டைச் சரி செய்வதற்காக அவர்கள் லட்சக்கணக்கில் பணம் செலவிடத் தேவையில்லை. மேலும் தனிமை, புறக்கணிப்பு அவை தரும் மன இறுக்கம் ஆகியவற்றில் இருந்தும் அவர்கள் வெளிவந்துவிட இயலும். இதன்மூலம் இக்குறைபாடுகொண்டோர் இயல்பான வாழ்க்கை வாழவும் வழிபிறக்கும்.

வெண்புள்ளி கொண்ட பிரபலங்கள்
மைக்கேல் ஜாக்சன் (Michael Jackson)
அமிதாப்பச்சன் (Amitabh Bachchan)
லீ தாமஸ் (Lee Thomas)
ப்ரையன் டேனியல்சன் (Bryan Danielson)
க்றிஸ் காலிகோ (Krizz Kaliko)
க்ரஹாம் நார்டன் (Graham Norton)
சந்திரபாபு நாயுடு (Chandra Babu Naidu)
அமி டியானா (Amy Deanna)
கார்ல் டன்பர் (Karl Dunbar)
ஆசிபா பூட்டோ சர்தாரி (Asifa Bhutto Zardari)
கௌதம் சிங்கானியா (Gautam Singhania)

எனது வேண்டுகோள்
பெற்றோருக்கு – குழந்தைகளை வெய்யிலில் விளையாடவிடுங்கள். வெண்புள்ளிகள் கொண்டோருடன் இயல்பாகப் பழகுங்கள்.
ஆசிரியர்களுக்கு – வெண்புள்ளிகள் நோயல்ல என்ற புரிதலைக் குழந்தைகள் மற்றும் பெற்றோரிடையே ஏற்படுத்துங்கள்.
இக்குறைபாடுகொண்டோருக்கு – குறைபாட்டை நினைத்து வருந்தாதீர்கள். இயல்பாக இருங்கள். சக மனிதர்களிடம் இதுகுறித்துப் பேசுங்கள். தனிமையைத் தவிருங்கள். சமூகத்தில் நிமிர்ந்து நில்லுங்கள். இக்குறைபாட்டினைக் களைவதற்காக மருத்துவம் செய்துகொள்ளவேண்டிய அவசியமில்லை என்பதை உணருங்கள்.

சமூகப்புரிதல் உருவாகும் என்ற நம்பிக்கையில், வெண்புள்ளிக் குறைபாடுகொண்ட
சரவணன் பார்த்தசாரதி.

Leave a comment