சமகாலத்தில் குழந்தைகளின் உடலும் மனமும் கடுமையான சிக்கல்களுக்கு உள்ளாக்கப்படுவதைப் பற்றிய புரிதல் பெரியவர்களுக்கு உண்டா என்ற கேள்வி வலுவாகிக்கொண்டே செல்கிறது. கலை, விளையாட்டு, கற்றல் மட்டுமில்லாது பாலியல் தொடர்பான விசயங்களிலும் ஆசிரியர்களும் பெற்றோர்களும் குழந்தைகளைத் தோழமையோடு அனுக வேண்டிய அவசியம் உள்ளது. பாலியல் பிரச்சினைகளாலும் குழப்பங்களாலும் குழந்தைகள் மனம் ஒடுங்கிப்போவதைத் தடுப்பவர்களாகவும் அதை சீர்செய்பவர்களாகவும் பெரியவர்கள் இருக்க வேண்டும். அதற்கான ஒரு அடிப்படைப் புரிதலுக்கு இந்த நூல் நம்மை அழைத்துச் செல்லும் என நம்புகிறோம்.
குட்டி ஆகாயம் குழந்தைகளுக்கான கதை நூல்கள் வெளியிடுவதோடு குழந்தைகளின் உள் உலகம் தொடர்பான தாய்மொழிக் கல்வி, கற்றல் குறைபாடு, உலக சிறுகதைகள், பாலியல் வன்முறை தொடர்பான நூல்களையும் வெளியிட இருக்கிறது. இந்த நூல் கூடு பெண்கள் வாசிப்பரங்கத்தோடு இணைந்து வெளியிடப்படுகிறது. இது தொடர்பான கலந்துரையாடல் நிகழ்வுகளும் திட்டமிடப்படுகிறது. இந்த நூல் பரவலாக ஆசிரியர்களையும் பெற்றோர்களையும் கல்லூரி மாணவ மாணவிகளையும் சென்றடைய மிகக் குறைந்த விலையில் மக்கள் பதிப்பாக வெளிவந்துள்ளது. இந்நூல் மேலும் பரவலாக கொண்டும் செல்லும் நோக்கின் இந்நூல் பற்றின நண்பர்களின் அறிமுகங்களை இங்கு பகிர்கிறோம்.
நன்றி : குட்டி ஆகாயம் குழு
குழந்தைகள், பட்டாம்பூச்சிகள் போல அக, புற மென்மையும் துடிப்பும், அடுத்தடுத்த விசயங்களுக்குப் பயணிக்கும் ஆர்வமும் உடையவர்கள். சிறிய மனிதர்கள் என்றாலும் அவர்களுக்கு அவர்களது உடல், மனம் குறித்த அடிப்படை உரிமையுண்டு. அவர்களைக் கசக்கும், அடிக்கும் கண்ணியமற்ற உறவுக்கு உள்ளாக்கும், ஏன் அவர்களுக்கு விருப்பமில்லாத பட்சத்தில் உறுத்துப் பார்ப்பதும், தொடுவதும் கூட வன்முறைதான். ஆனால் குழந்தைகளுக்கு நடக்கும் வன்முறைகள் – வெளியில் வந்தவை, வராதவை, குடும்பம், பள்ளி, நட்பு போன்ற உறவுகளாலேயே கூட நடப்பவை அதிகரித்துக் கொண்டே போகின்றன. இந்த சூழலில் குழந்தைகளுக்கு பாலியல் வன்முறைக்கு எதிராக விழிப்போடிருக்க, செயல்பட, பேச, தன் உடல் தனக்குரியது என்றுணர, எச்சரிக்கையோடு இருக்க ஊக்குவிக்கிறது “யாரேனும் இந்த மௌனத்தைத் தகர்த்திருந்தால்” என்ற இக்கையேடு. குழந்தைகளை நேசிக்கும், பாதுகாக்க விரும்பு உங்கள் ஒவ்வொருவரின் வாசிப்பிற்குமாய்… இனி….
நன்றி : நளினி (கூடு பெண்கள் வாசிப்பரங்கம்)
இந்நூலை இன்று இரண்டு பெண் ஆசிரியர்களிடம் உடனடியாகப் படிக்குமாறு கூறினேன். இருவரும் படித்து விட்டு இந்த நூலில் உள்ளதில் என்பது சதவீதம் எனக்கும் நடந்தது என்று ஒருவரும், ஆம் இது உண்மை நானும் பாதிக்கப்படிருக்கிறேன், என் சிறு வயதில் பெற்றோர் இச்செய்திகளைப் பற்றி என்னிடம் பேசியதில்லை, மற்றவர்களிடம் பேசிக்கொண்டிருக்கும் போது நான் அருகில் சென்றாலும் பேச்சை நிறுத்தி விடுவார்கள், அன்று அவர்கள் இந்தச் செய்திகளை குழந்தைகள் அறிந்துகொள்ளக்கூடாது என நினைத்தார்கள். இன்று நான் என் குழந்தையை விழிப்புணர்வோடு வளர்க்கிறேன் என்றார். பின் என் மனைவியிடம் இதைக் கொடுத்தேன். அவரும் ஆம் நானும் பாதிக்கப்பட்டவள்தான் என்றார். அதை உன்னிடம் இப்பொழுது சொல்லலாமா எனவும் கேட்டார். பெண்குழந்தைகள் மட்டுமல்ல ஆண்குழந்தைகள்தான் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். ஆனால் இது இதுவரை பேசுபொருளாக ஆகவில்லை.
இவ்வாறு பாலியல் அத்துமீறல்களால் நீக்கமற எல்லாரும் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இன்று குழந்தைகள் மீதான பாலியல் வன்புணர்வுச் செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன. இன்றுதான் இவை நடக்கின்றனவா? என்றால் நிச்சயமாக இல்லை. இது நடந்து கொண்டே இருக்கிறது. நடப்பனவற்றில் சில மட்டும் இன்று இவை இன்றைய தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருக்கின்றன . ஆனால் இத்தகவல் தொழில்புரட்சிதான் இன்று இவ்வளவு மோசமாக பாலுறவு வெறியை வளர்த்திருக்கிறது. ஒவ்வொருவரின் கையிலும் ஓர் ஆபாசத்திரையரங்கம் உள்ளது என எழுத்தாளர் இமையம் சொன்னதை மறுக்கமுடியாது. நம் குழந்தைகள் பாதுகாப்பாகத்தான் உள்ளனர் என நம்பிக்கொண்டிருக்கும் ஒவ்வொரு நொடியிலும் அவரகள் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்க்ள என்பதை எவரேனும் உணர்ந்தால் நல்லது. தங்களுடைய கைப்பேசிலும் கணிணியிலும் தொலைக்காட்சியிலும் புதைந்துபோயுள்ள பெற்றோர்கள் குழந்தைகளை தங்களுக்கு பெரும் இடைஞ்சல் தருபவர்களாகப் பார்க்கின்றனர். அவர்களுடன் பேசவோ, விளையாடவோ, அவர்களை வெளியே அழைத்துச் செல்லவோ விரும்பாதவர்களாக இருப்பதும் அவ்வாறு வெளியே சென்றாலும் தம் கைப்பேசிகளின் திரைகளுக்குள் மூழ்குபவர்களாக இருக்கிறார்கள். குழந்தைகள் நன்கு படித்து அதிக மதிப்பெண் பெற்றுக்கொடுத்தால் போதும் என நினைப்பதும் எவ்வளவு வேதனையானது.
பாலியல் சீண்டல்களுக்கு காரணம் என்ன எனக் கேட்டால் நாம்தான் என்பதுதான் விடையாகக்கிடைக்கிறது. ஒவ்வொருவரும் தாம் பாதிக்கப்பட்டவராக இருப்பதுடன் தாம் குற்றம் செய்தவராகவும் இருக்கிறார். இவரால் இன்னொருவர் பாதிக்கப்பட்டவராக ஆகிறார். பித்தனோ, பூச்சாண்டியோ வந்து குழந்தைகளைப்பிடித்துக்கொண்டு போவதில்லை. குழந்தைகளின் மீதான சீண்டல்கள் சுற்றுப்புறத்தே இருந்துதான் நடக்கிறது. அவர்களைப் பாதுகாக்க அவர்களை வீட்டினுள்ளேயே வைத்துக்கொள்ளலாம் என்பது குழந்தைகளைச் சிறைப்படுத்தும் அல்லது யாரிடமும் அவர்கள் நெருங்காமலும் யாரும் அவர்களை நெருங்காமலும் பார்த்துக்கொள்வதும் என்பதும் மனித உறவுகளைச் சிதைப்பதாக அமைந்துவிடும். எனவே இதனை பெரியவர்கள் சிந்தித்து குழந்தைகளுக்கு சில விழிப்புணர்வுகளைக் கற்றுக்கொடுப்பதுடன், குழந்தைகள் பாதுகாப்பு இயக்கத்தை முன்னெடுக்க வேண்டும். நம் நாற்றங்கால்களில் வளரும் பயிர்களைப் பாதுகாக்கும் கடமை நமக்கிருப்பதை நாம் உணரவேண்டும்.
நன்றி : தமிழ்ப்பரிதி தமிழ்
நீங்கள் என்றேனும் மௌனமாய் இருந்திருக்கிறீர்களா? யாரோ ஒருவரினால் உங்களுக்கு மௌனமாய் இருக்க வேண்டிய நிலை நேர்ந்திருக்கிறதா? மௌனமாய் இருத்தல் சரியானதா? எல்லாவற்றையும் மௌனத்தால் கடத்தலும், எல்லாரும் அம்மௌனத்தை கடத்தலும் எவ்வளவு தாக்கத்தை ஒரு குழந்தையின் மனதில் ஏற்படுத்தக்கூடும்!? அதிலும் ஒரு குழந்தைக்கு மிகுந்த குழப்பத்தை அளிக்கக்கூடிய விடயமான தன் சொந்த உடல் சார்ந்த குழப்பங்களையும் மௌனத்தால் கடந்து போகச் செய்வதைப் போன்று சிறந்த பிழை வேறேதும் இல்லை. தன் உடலைப் பற்றியே புரிதலற்று குழப்பத்தில் ஆழ்ந்திருக்கும் ஒரு குழந்தைக்கு எதிர்பாலினத்தின் உடல் குறித்த புரிதல் எவ்வாறு வாய்க்கும்!? பெரியவர்களிடம் பேசுவோம். குழந்தைகளிடம் நிறைய பேசுவோம்.
எப்போதுமே என் வாழ்வில் சிறிய சிறிய புத்தகங்களே (பக்க அளவில்) மாற்றங்களை நிகழ்த்தியிருக்கின்றன. அவ்வகையில் இப்புத்தகமும் ஒன்று. உங்கள் அனுபவங்களை கேள்விக்குள்ளாக்கும், உங்களையும் கேள்விக்குள்ளாக்கும், உங்கள் மௌனங்களையும், நீங்கள் கடந்து வந்த மௌனங்களையும் கேள்விக்குள்ளாக்கும்.
மௌனத்தை தகர்ப்போம். தொடர்ந்து பேசுவோம். என்னளவில் கொஞ்சம் எழுதவாது பிரயத்தனப்படலாம் என்று தோன்றுகிறது. அப்படியாவது யாருடைய மௌனமாவது உடைபடட்டுமே…
நன்றி : சந்திரிகா
இந்தப் புத்தகத்தை பெண் குழந்தைகளை பெற்றவர் மட்டுமல்ல அனைவருமே வாசிக்கவேண்டிய பாலியல் விழிப்புணர்வு நூல். அக்காலத்தில் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்ததால், குழந்தைகள் அதிக நேரம் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் வாய்ப்பு குறைவாக இருந்தது. எப்போது வேண்டுமானாலும் யாரேனும் அவ்வழியே கடந்து செல்வர் என்ற எண்ணத்தால் கூட, அப்பாவின் நண்பரோ, தெரிந்த மாமாவோ யாருடைய தொடுதலும் அதிக நேரம் நீடித்திருக்க வாய்ப்பு இல்லாமல் இருந்தது. மிக அதிக அளவு வன்புணர்ச்சி என்பதான சம்பவங்கள் நிகழாமல் இருக்க கூட்டுக்குடும்பங்கள் துணைபுரிந்திருக்கின்றன.
தற்போது நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் பற்றி அறிந்திருந்தாலும் கூட, அருவருப்பு தரத்தக்க தொடுகையிலிருந்து விடுபட தைரியமும், வாய்ப்பும் குறைவாக இருக்கிறது. ஏனெனில் நிறைய பேர் இருக்கும் இடத்தில் இதுபோன்ற பாலியல் துன்புறுத்தல்கள் நிகழ்கிறது என்று உணரும் தருவாயில் பாட்டி கூப்பிடுகிறார்கள் இல்லைன்னா அத்தை அழைக்கிறாங்கன்னு சொல்லி தப்பிக்க முடியும். தற்போது தன்னை நெருக்கி அழுத்தும் வீணர்களிடமிருந்து எவ்வாறு விடுபடமுடியும். என்னை இவ்வாறெல்லாம் தொடாதீர்கள் என்று முகத்திற்கு நேரே சொல்ல ஒரு தைரியம் வேண்டுமல்லவா? மறுத்தல் திறன் வேண்டுமே?
அதைத்தான் நாம் வளர்ப்பதேயில்லையே?? பெண் குழந்தைகள் வீட்டில் சமைக்கும் உணவைத்தான் உண்ண வேண்டும்.பெரியவர்கள் சொல்வதை அப்படியே கேட்டுக்கொள்ள வேண்டும். உயர்கல்வி மறுக்கப்படும் பெண்களுக்கு. இப்போதும் எனக்குத் தெரிந்த ஆசிரியர் மகனை ஆங்கில வழிக் கல்விக்கு பணம் கட்டியும், மகளை ,பெண்தானே என்று ஊரிலேயே உள்ள அரசுப்பள்ளியிலேயே படிக்க வைத்துக்கொண்டிருக்கிறார். இவ்வாறுதான் உள்ளது பெண் குழந்தைகளுக்கான அங்கீகாரம். ஆண் குழந்தைக்கு வேண்டுமானால் விரும்பும் உணவை சமைத்துக்கொடுப்பார்கள். ஆனால் பெண் குழந்தைகளுக்கு குடும்பத்தில் எதையும் வேண்டும், வேண்டாம் என்று சொல்ல உரிமை இருக்கிறதா? . சில பணக்காரர்கள் வீடு தவிர, நடுத்தர மற்றும் ஏழை வீடுகளில் உள்ள பெண் குழந்தைகளுக்கு எதையுமே மறுக்காமல் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இயல்பாகவே பழக்கவைக்கப்படுகின்றனர்.
அதனாலேயே பெண் குழந்தைகள் இவ்வாறான தவறான தொடுகைகளை உணரும்போது தொடாதே என்று சொல்லலாமா? சொன்னால் இவ்வளவு நாள் பழகியவர்கள் என்ன நினைப்பார்கள். இதில் தன் தவறுதான் ஏதோ என்பது போலான குற்றவுணர்ச்சிக்கு ஆளாகின்றனர். அதனாலேயே வாய்திறவாமல் வேதனைகளை வலிகளை மென்று விழுங்கி தங்களைத் தாங்களே காயப்படுத்திக்கொள்கின்றனர். இதற்கான சரியான ஆதாரம் தற்போது குழந்தைகளிடையே நடைபெற்று வரும் பாலியல் வன்முறைகளே!!!
அனைத்து மனிதர்களிடமும் இந்தப் புத்தகத்தை கொண்டு சேர்ப்பது நம் கடமை. பாலியல் வன்முறையை முற்றிலும் ஒழிக்க இவ்வாறு யாரேனும் எங்கேயும் எப்போதும் பேசிக்கொண்டே இருந்தாக வேண்டும். பெரியவர்களால் இவ்விஷயத்தை இயல்பாக யாரிடமும் தொடங்க இயலாத நிலையில் இப்புத்தகத்தை கொடுத்து படிக்கச் சொல்லலாம். அது அவர்கள் மனங்களை திறக்கும். அவர்களின் மௌனங்களை உடைக்கும்.
எல்லோரும் பேசாமலே மௌனமாய் சுமந்துதிரியும் சில மரத்துப்போன உணர் வுகளை இப்புத்தகம் நினைவில் ஊறச்செய்யும். மனிதர்கள் பொதுவாகவே கஷ்டமாக பேசினால் அவர்களின் வாழ்க்கை கஷ்டங்களை எடுத்துப்பேசத் தொடங்குவார்கள். இல்லாது மகிழ்ச்சியாக பேசினால் மகிழ்ச்சியான சம்பவங்களை பேசத் தொடங்குவார். அவ்வாறேதான் இப்புத்தகமும் ஒரு பெண் குழந்தையின் 5-10 வயதில் தனக்கு நடந்த பாலியல் கொடுமைகள் பற்றி பேசுகிறார். பிறகு நம் பால்ய கால பாலியல் நிகழ்வுகள் பற்றிய நினைவுகளை கேட்கிறார்.எனக்கும் மனதில் நான் சந்தித்த நிகழ்வுகள் நினைவில் ரத்தத்தை கொப்பளிக்கச்செய்கிறது தற்போது.
இவ்வாறே தொடங்குவோம். மீண்டும் மறுபதிப்புடன் இப்புத்தகம் சரியான நேரத்தில் வெளிவந்திருக்கிறது. பாண்டி சாலை செல்வம் அவர்கள் கமலா பாசின் ஹிந்தியில் எழுதிய இப்புத்தகத்தை மொழிபெயர்த்திருக்கிறார்.
ஆசரியர்களும் பெற்றோர்களும் படிக்க வேண்டிய புத்தகம். அனைவருக்கும் பரிசாக தரவேண்டிய புத்தகம்.
நன்றி : உதயலட்சுமி
























