“கடந்த நூற்றாண்டில் மிகப் பெரிய தாக்கம் செலுத்திய 100 முக்கியப் புத்தகங்களில்(டைம் பத்திரிகை வெளியிட்ட பட்டியல்), ஒரு சுற்றுச்சூழல் புத்தகத்துக்கும் இடம் உண்டு: அது ரேச்சல் கார்சன் எழுதிய ‘மெளன வசந்தம்’. இப்புத்தகம் 1962 ஆம் ஆண்டு வெளியாகி ஒன்றரை ஆண்டுகளுக்குள் 10 இலட்சம் பிரதிகள் விற்றன. இந்தப் புத்தகம்தான் உலகிலுள்ள உயிரிங்கள் அனைத்தும் ஒன்றையொன்று சார்ந்து வாழ்கின்றன என்பதை முதன்முதலில் எடுத்துச் சொன்னது.” (ரேச்சல் கார்சனின் மெளன வசந்தம் – உலகை மாற்றிய நூல் – ஆதி வள்ளியப்பன்)
ரேச்சல் கார்சனின் புத்தகம் சமூகத்திலும் அறிவார்ந்த துறைகளிலும் பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தியது. அதன் தாக்கம் இலக்கியத்திலும் இடம்பெற்றது. அது, இலக்கியத்தில் Eco-Criticism எனும் புதிய இலக்கிய வகைமையை உருவாக்கியது. இதன் தொடர்ச்சியாக 1970 ஆம் ஆண்டிலிருந்து ஆங்கில விமர்சன இலக்கியத்தில்(literary criticism) சூழலியல் பார்வை இடம் பெறத் தொடங்கியது.
Eco-Criticism / Green Studies / Environmental texts: இலக்கியத்தையும் சூழலியலையும் தொடர்புப்படுத்தும் சொற்கள் இவை. மனிதர்களுக்கும் இயற்கைக்கும் உள்ள உறவைக் குறித்துப் பேசும் இலக்கியங்களைக் கவனித்து அதனை முதன்மைப்படுத்தி சூழலியல் பார்வையில் விவாதிப்பதே Eco-Criticism.
“The Country and the City – Raymond Williams”(16ஆம் நூற்றாண்டிலிருந்து ஆங்கில இலக்கியங்கள் எவ்வாறெல்லாம் தங்களது நிலங்களை விவரிக்கிறது என்று ஆய்வு செய்யும் புத்தகம்), “Home at Grasmere: Ecological holiness – Karl Kroeber” (William Wordsworth & Dorothy Wordsworth எழுத்துகளில் விவரிக்கப்படும் நிலம் குறித்து ஆய்வு செய்யும் கட்டுரை) – இந்தப் படைப்புகள்தாம் முதன்முதலில் சூழலியலை விமர்சன இலக்கியத்தில் அறிமுகப்படுத்தியது என்கின்றனர் இலக்கிய விமர்சகர்கள். அதன் பிறகு 1978ஆம் ஆண்டு அமெரிக்க எழுத்தாளர் வில்லியம் ரக்கெர்ட் (William Rueckert) என்பவர் “Literature and Ecology: An Experiment in Ecocriticism” என்ற தனது ஆய்வுக் கட்டுரை வழியே Eco-Criticism எனும் ஒரு சொல்லை அறிமுகம் செய்கிறார். தற்போது அச்சொல் விமர்சன இலக்கியம் எனும் எல்லையைக் கடந்து சூழலியல் படைப்புகளைக் குறிக்கும் சொல்லாக இருந்து வருகிறது.
சூழலியலில் நான்கு முக்கிய கோட்பாடுகள் உள்ளன.
- உலகிலுள்ள உயிரினங்கள் அனைத்தும் ஒன்றையொன்று சார்ந்து வாழ்கின்றன.
- இயற்கை அனைத்தையும் மறு உற்பத்தி செய்யக்கூடியது
- எது சரியானது என்பது இயற்கைக்குத் தெரியும்
- பயனுள்ள வளங்களையெல்லாம் பயனற்றதாக மாற்றுவதே இயற்கை சுரண்டலுக்கு நாம் கொடுக்கும் பெரும் விலை.
இதன் அடிப்படையிலும் சூழலியல் எழுத்துகள் விவாதிக்கப்படுகின்றன. மேற்கத்திய நாடுகளைப் பொறுத்த வரை சூழலியல் இலக்கியத்தில் இரண்டு அலைகள் வீசியதாகக் குறிப்பிடுகின்றனர்.
முதலாம் அலை 1 (1980-1990) : சூழலியல் இலக்கியத்தின் ஆரம்ப நிலையாக இது கருதப்படுகிறது. இக்காலத்தில் கீழ்வரும் தலைப்புகளில் புத்தகங்கள் வெளியாகின.
- இயற்கையின் அழகை, வனப்பகுதியின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டி, சுற்றுச் சூழலைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தை உணர்த்தும் படைப்புகள்.
- இயற்கைக்கும் – மனிதர்களுக்கும் உள்ள உறவை மையப்படுத்தும் படைப்புகள்.
- சூழலியலாளர்களில் அறிமுகங்கள் மற்றும் வாழ்க்கை குறிப்புகள்.
- இலக்கியங்களில் கூறப்படும் நிலங்களை பற்றியும் அதன் மாற்றங்களையும் குறித்து ஆய்வு செய்தல்
- பழம்பெரும் இலக்கியங்களைச் சூழலியல் பார்வையில் ஆய்வு செய்தல்.
- வன அழிப்பு, காற்று மாசுபாடு, நீர் நிலை மாசுபாடு ஆகியவற்றையும் ஆங்காங்கே நடைபெற்ற சூழலியல் சார்ந்த போராட்டங்களையும் மையப்படுத்தி வெளிவரும் படைப்புகள்.
இரண்டாம் அலை(1990க்கு பிறகான காலம்) : 1990க்கு பிறகு சூழலியல் பார்வை என்பது மிகவும் விரிவான துறையாக உருமாறியது.
- கிராமப்புறம்-நகரப்புறம் வேறுபாடுகளை உணர்ந்தும் படைப்புகள். நகரப்புறத்தின் பார்வையில் இயற்கையை அணுகுதல் எனும் புதிய பார்வைகள் வரத் தொடங்கின.
- Eco-Feminism எனும் புதிய கோட்பாடுகள் உருவாகின.
- environmental justice, environmental resource distribution, and socioeconomic and minority impacts related to environmental circumstances போன்ற எண்ணற்ற புதிய சிந்தனைகள் உருவாகின.
இவ்வாறாக தற்போது சூழலியல் எழுத்துகள் என்பது இலக்கியத்தில் இன்றியமையாத இடத்தினைப் பெற்றுள்ளன. பெரியோர் இலக்கியத்தில் நடைபெற்ற இந்த மாற்றங்கள் அனைத்தும் ஆங்கிலச் சிறார் இலக்கியத்திலும் பிரதிபலித்தன. படக் கதைகள் முதல் இளையோர் நாவல் வரை எண்ணற்ற புத்தகங்கள் சூழலியல் கருத்தியலை அடிப்படையாகக் கொண்டு வெளியாகி வருகின்றன.
பச்சையம் மிகுந்த மொழி, தமிழ். பச்சையம் என்பது நம் நிலத்தின் சுற்றுச்சூழல். சூழல் நீங்கினாலும் மொழி உலரும். மொழி நீங்கினாலும், சூழல் உலரும். ஆகவே, தமிழ் ஒரு சூழலியல் மொழி என்று முன்மொழிகிறார் எழுத்தாளர் நக்கீரன் அவர்கள். ஒரு நிலத்தில் வாழும் ஓர் உயிரினம் அழிந்தால், அங்குப் பேசப்படும் மொழியிலுள்ள அவ்வுயிரினம் தொடர்பான சொற்களும் சேர்ந்து அழியும் என்கிறார். 1935ஆம் ஆண்டில் ஆங்கிலத்தில் “Eco-System” என்ற அறிவியல் கலைச்சொல்லை ஆர்தர் டான்ஸ்லே அறிமுகம் செய்கிறார். இது Ecology & System எனும் இரு சொற்களின் இணைவில் உருவான ஒரு கூட்டுச்சொல். இது காரணப் பெயராக அமைந்துள்ளது. இதனை தமிழில் சூழல் அமைவு அல்லது சூழல் தொகுதி என்று புரிந்துகொள்ளலாம். ஆனால், இதற்கு நிகரான ஒரு சொல் பழந்தமிழில் உள்ளது “Eco-System” என்பதற்குத் தமிழில் வழங்கும் இடுகுறிப்பெயர் திணை என்கிறார் எழுத்தாளர் நக்கீரன்.
தமிழ், இயல்பாகவே இயற்கை சார்ந்த மொழியாக இருக்கிறது. அப்படியிருக்க, தமிழ்ச் சிறார் இலக்கியத்தில் சூழலியல் பார்வை எப்படி இருக்கிறது? சூழலியல் துறை சார்ந்த அறிவியல் இலக்கியத்தில் பிரதிபலிக்கிறதா? அடுத்து வரும் தலைமுறையினருக்கு சூழலியல் குறித்து தமிழ்ச் சிறார் இலக்கியம் என்ன பேசுகிறது என்பதை இனி இக்கட்டுரையில் காண்போம்.
தமிழில் சிறார் இலக்கியம் என்றதுமே, நிலா நிலா ஓடி வா, மாம்பழமாம் மாம்பழம், ஓடி விளையாடு பாப்பா, அணிலே அணிலே ஓடி வா, தோட்டத்திலே மேயிது வெள்ளை பசு போன்ற சிறுவர் பாடல்கள்தான் பலருக்கும் நினைவிற்கு வரும். சுற்றத்திலுள்ள விலங்குகள், பறவைகள், இயற்கை வளங்கள் என அனைத்தையும் தமிழ்ச் சிறார் இலக்கியம் பாடல்களாக வழங்கியுள்ளது(பாடல்கள் போலவே பெ.தூரனின் மஞ்சள் முட்டை, கொ.மா.கோதண்டமின் காட்டுக்குள்ளே திருவிழா போன்ற சிறார்களுக்கான கதைகளும் சூழலியல் சார்ந்து வெளியாகியுள்ளன). கிட்டத்தட்ட 100 நூற்றாண்டுகளாக இதுபோன்ற பாடல்கள் தமிழில் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. ஆனால் அதுவே நம்மை ஒரு இக்கட்டான இடத்திற்குக் கொண்டு சென்றுள்ளதாகக் கருதுகிறேன். காகம், குயில், பூனை, எலி, அணில் எனப் பறவைகள், விலங்குகள் குறித்து மேலோட்டமாக பாடல் அமைந்தாலே போதுமானது என்ற மனநிலை, புதிய முயற்சிகள் எதையும் எடுக்கவிடாமல் தடுப்பதாக எண்ணுகிறேன்.
இந்நிலையில் நவீனத் தமிழ்ச் சிறார் இலக்கியத்தில் சூழலியல் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் படைப்புகள் மொழிபெயர்ப்பு மூலமே இடம்பெறத் தொடங்கியுள்ளன. ரஷ்ய, ஐரோப்பிய மொழிகள், ஆங்கிலம் போன்ற உலக மொழிகளிலிருந்தும், கன்னடம், மலையாளம் போன்ற இந்திய மொழிகளிலிருந்தும் பல்வேறு சூழலியல் சார்ந்த சிறார் இலக்கியப் படைப்புகள் தமிழில் வெளியாகியுள்ளன.
சுனு சுனு நத்தை, காட்டில் உள்ள வரிகள், மாங்கனிப் பறவைகள், பூச்சிகளின் விந்தை உலகம், ஃபூ-கூ, மோரா வாசு சந்தித்த தலைப்பிரட்டை, குட்டி அலை, காளியும் சாரைப்பாம்பும், ப்யாட்ரிக்ஸ் பாட்டர் கதைகள் (தமிழில்: சரவணன் பார்த்தசாரதி) போன்ற ஏராளமான படக் கதைகள் தமிழில் மொழிபெயர்ப்புகளாக வெளியாகியுள்ளன. படக் கதைகளைத் தொடர்ந்து சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள், காமிக்ஸ் என பல்வேறு பிரிவுகளிலும் தொடர்ந்து புத்தகங்கள் வெளியாகி வருகின்றன. சூழலியல் எழுத்துகளைப் பொறுத்தவரை மொழிபெயர்ப்புகள் உறுதியான அடித்தளத்தை அமைத்து வருகிறது என்று சொல்லலாம். அதன் தொடர்ச்சியாக மிகவும் முக்கியமான படைப்புகளும் தமிழில் நேரடியாக வெளியாகியுள்ளன. அதுமட்டுமல்ல, சூழலியல் துறையில் இருக்கும் வல்லுநர்கள், எழுத்தாளர்கள், காட்டுயிர் புகைப்படக் கலைஞர்கள், ஆர்வலர்கள், அறிவியலாளர்கள், கடல்வாழ் உயிரின ஆராய்ச்சியாளர்கள் போன்ற பலரும் நேரடியாகக் குழந்தைகளுக்கு எழுதி வருகின்றனர்.
உலகப் புகழ்பெற்ற சித்திரக்கதை வரிசை(பாரதி புத்தகாலயம்) என்ற பெயரில் எழுத்தாளர் கொ.மா.கோ இளங்கோ சூழலியல் சார்ந்த படக் கதைகள் பலவற்றை தமிழுக்கு கொண்டு வந்துள்ளார். மாயி-சான் ஹிரோசிமாவின் வானம்பாடி (தோசி மாருகி) என்ற மிக முக்கியமான சிறார் நூலையும் தமிழில் தந்துள்ளார். ஹிரோசிமாவில் நடந்த அணுகுண்டு வீச்சுத் தாக்குதலின் வலியை, மாபெரும் துயரக் காட்சிகளை இப்புத்தகம் குழந்தைகளுக்குத் தெரியப்படுத்துகிறது.
பறவைகளின் வீடுகள்(ஜீ லி, தமிழில்-சாலை செல்வம், குட்டி ஆகாயம்) என்ற புத்தகம் சீன பறவைகளின் கூடு கட்டும் முறைகள் குறித்து விரிவாகப் பேசுகிறது. ஜாதவின் மொலாய் காடு (தமிழ் & ஆங்கிலம்: நிலா – இயல்வாகை) என்ற புத்தகத்தின் வழியே தனி ஒருவராகக் காடு வளர்த்த ஜாதவ் பயேங்க் அவர்களை குழந்தைகளுக்குப் படக் கதையாக அறிமுகம் செய்துள்ளார் சாலை செல்வம்.
சிவப்புக் கிளி (மூலம்: கன்னடம், வசுதேந்திரா – மலையாளம் வழி தமிழில் யூமா வாசுகி, வெளியீடு: பாரதி புத்தகாலயம்) – பண்ணையார் நிலவுடைமை காலத்திலிருந்து கார்ப்பரேட் பெரும் முதலாளி காலத்தில் நடக்கும் நிலம் சார்ந்த மாறுதல்களை இந்நாவல் காட்சிப்படுத்துகிறது.
பேரன்பின் பூக்கள்(மலையாளம்: சுமங்களா), மாத்தன் மண்புழுவின் வழக்கு(மலையாளம்: சிவதாஸ்) ஆகிய சூழலியல் சார்ந்த சிறார் புத்தகங்களையும் மலையாளத்திலிருந்து தமிழில் யூமா வாசுகி அவர்கள் வழங்கியுள்ளார்.
கதை கேளு கதை கேளு காக்காவின் கதை கேளு: (மலையாளம்: சிவதாஸ், தமிழில்: உதயசங்கர், வானம் பதிப்பகம்) – காகம் சிலரின் தலைகளில் கொட்டுவதில் தொடங்கி, கோழிக் குஞ்சுகளை எடுத்துச் செல்வது, விருந்தினர் வருவதை அறிந்துதான் காகங்கள் கரைகிறதா? புதிய நிலத்திற்கு இடம்பெயரும் காகங்கள் எனக் காகங்கள் பற்றி பல முக்கியமான அறிவியல் உண்மைகளை எடுத்துச் சொல்கிறது இந்தப் புத்தகம். இயற்கையின் அற்புத உலகில்(வானம் பதிப்பகம்) என்ற சிவதாஸ் அவர்களில் சூழலியல் சார்ந்த கதைத் தொகுப்பையும் எழுத்தாளர் உதயசங்கர் மொழிபெயர்த்துள்ளார்.
நீ கரடி என்று யார் சொன்னது(ஃபிராங்க் தாஷ்லின், தமிழில்: ஆதி வள்ளியப்பன், பாரதி புத்தகாலயம்): குளிர் கால உறக்கத்தை முடித்து வெளியே வரும் கரடிக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. அங்கிருந்த காடு தொலைந்து, ஒரு பெரிய தொழிற்சாலை இருக்கிறது. கரடியைக் கண்டதும் தொழிற்சாலையில் இருப்பவர்கள் வேலைக்கு மணியாகிவிட்டது உடனே தொழிற்சாலைக்குள் செல்லும்படி கட்டளையிடுகின்றனர். தான் ஒரு கரடி என்று அது நிரூபிக்க முயற்சிப்பதே கதை. தொழிற்புரட்சி காலத்தில் நடந்த காடழிப்பைக் காட்சிப்படுத்துவதாக இக்கதை அமைந்திருக்கும்.
வங்காரியின் பசுமைத் தூதுவர்கள் (ஜேனட் வின்டர், பாரதி புத்தகாலயம்) என்ற சூழலியலில் மிக முக்கியமான படக் கதையையும், தமிழில் ஆதி வள்ளியப்பன் மொழிபெயர்த்துள்ளார். ரேச்சல் கார்சனின் மெளன வசந்தம் – உலகை மாற்றிய நூல்(காக்கைக்கூடு), சிட்டு: குருவிகளின் வாழ்வும் வீழ்ச்சியும்(காக்கைக்கூடு), கிரெட்டா துன்பர்க் பூவுலகைக் காக்கப் புறப்பட்ட சிறுமி, எனைத் தேடி வந்து சிற்றுயிர்கள்(எதிர்) இயற்கையின் விலை என்ன? (காக்கைக்கூடு), வாவுப் பறவை, காலநிலை மாற்றம், நாராய் நாராய், தாத்தா பூ எங்கே போகிறது(லிங் சாங்யிங் பாரதி புத்தகாலயம்) போன்ற சூழலியல் சார்ந்த விசயங்களை நேரடியாக பேசும் பல முக்கியமான உரைகளை, புனைவு எழுத்துகளை, ஆய்வுகளின் அறிமுகங்களை, கட்டுரைகளை தமிழில் தொடர்ந்து மொழிபெயர்த்து வருபவர்களில் முக்கியமானவர் எழுத்தாளர் & இதழாளர் ஆதி வள்ளியப்பன்.
தமிழ் ஒரு சூழலியல் மொழி, இயற்கை 24X7, நீர் எழுத்து, சூழலும் சாதியும், காடோடி எனத் தமிழில் சூழலியல் சார்ந்து புதிய பார்வைகளைத் தொடர்ந்து பதிவு செய்து வரும் எழுத்தாளர் நக்கீரன் அவர்கள் “பசுமைப் பள்ளி” எனும் புத்தகத்தின் வழியே சிறார் இலக்கியத்திற்கு நேரடியாக பங்களித்துள்ளார். ஐந்திணைகளுக்கும் சென்று திணைக்கான மரத்தைத் தேடும் சாகசப் பயணமே இந்தப் புத்தகம்.
ஒற்றைச் சிறகு ஓவியா: டெல்டா பகுதியில் நடந்த மீத்தேன் எரிவாயு கசிவு மரணங்கள் குறித்து இந்நாவல் பேசுகிறது. தமிழ் நிலத்தின் சூழலியல் சீர்கேடுகளைச் சிறார் இலக்கியத்தில் ஃபேன்டசி வடிவில் பேசிய முதல் நாவல் இது என்று கருதுகிறேன்.
நீலமலைப் பயணம்(ஞா. கலையரசி பாரதி புத்தகாலயம்) நாவல் ஒரு உண்மை செய்தியை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. சசமராபீஜியா ஒமிசா. (CEROPEGIA OMISSA H. HUBER). இந்தக் காட்டுத் தாவரம் 1916 ஆம் ஆண்டுக்குப் பிறகு, 2017 ஆம் ஆண்டில் குற்றாலத்தில் கண்டுபிடித்தார்கள். இந்த மலரைத் தேடிச் செல்வதாகவே இந்த நாவல் அமைந்துள்ளது. அறிவியல்-தமிழ்-தாவரங்கள்-நிலப்பரப்பு என நாவல் பல்வேறு விசயங்களை அதன் தேவைக்கேற்ப சரியாகச் சொல்லிச் செல்கிறது.
ஆமைகாட்டிய அற்புத உலகம்(யெஸ். பாலபாரதி), கிச்சா பச்சா(விழியன்), மலைப்பூ(விழியன்), வேகல் நடனம்(தமிழில்: ஸ்டாலின்), கடற்கரையோரம் ஒரு நடைப்பயணம்(த.வி.வெங்கடேஸ்வரன்), ஆயிஷா நடராசனின் அறிவியல் புத்தகங்கள், துளிர் இதழ், உயிர் பதிப்பகத்தின் வெளியீடுகள், பூச்சிகள்-விலங்குகள் குறித்த கோவை சதாசிவம் அவர்களின் புத்தகங்கள் என இந்தப் பட்டியல் நீள்கிறது.
பஞ்சு மிட்டாய் & ஓங்கில் கூட்டம்: பஞ்சு மிட்டாய் சிறார் இதழ் தொடர்ந்து சிறு குழந்தைகளுக்குச் சூழலியல் விசயங்களைப் புதிர் வடிவிலும் விளையாட்டுகளாகவும்(Board Games) வழங்கி வருகிறது. காட்டுப் பக்கம் போகலாம் விளையாட்டு, “சின்னதம்பி” யானை தனது குடும்பத்தைச் சென்றடையும் புதிர், முலய் காடு – “Forest Man of India” என்று அழைக்கப்படும் ஜாதவ் அவர்களின் வாழ்வை பிரதிபலிக்கும் விளையாட்டுப் புதிர், காட்டுக்குள்ள விளையாட்டுப் போட்டி, என்னைத் தெரியுமா – சுறா மீன், பறவை பார்த்தல் புதிர் என விளையாட்டு வடிவில் நேர்த்தியான ஓவியங்கள் & வடிவமைப்போடு குழந்தைகளுக்கு சூழலியல் சார்ந்து அறிமுகங்களை ஏற்படுத்தியுள்ளது. அதனுடன் குழந்தைகளுக்கான சூழலியல் அறிமுகங்களை ஏற்படுத்தும் பாடல்கள், கதைகள் எனத் தொடர்ந்து பதிவு செய்துவருகிறது பஞ்சு மிட்டாய் படைப்புகள்.
பதின்பருவத்தினருக்கான புத்தகங்களை ஓங்கில் கூட்டம் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது. வாசிப்புப் பழக்கம் நோக்கி சிறார்களை நகர்த்த அறிவியல், சமூகம், சூழலியல், ஆளுமைகளின் வாழ்க்கைச் சித்திரம், கவிதை போன்ற வெவ்வேறு தலைப்புகளில் சிறுசிறு புத்தகங்களை ஓங்கில் கூட்டம் வெளியிட்டுவருகிறது. தமிழ், ஆங்கிலம் என இரண்டு மொழிகளில், எளிமையான மொழிநடையில், அழகிய ஓவியங்களுடன் புத்தகங்களை வெளியிடுவது வரவேற்பைப் பெற்றுள்ளது. இதுவரை(2024 வரை) 24 புத்தகங்களை ஓங்கில் கூட்டம் வெளியிட்டுள்ளது. அதில், சூழலியல் சார்ந்து மட்டும் 9 புத்தகங்களை வெளியிட்டுள்ளது.
கடல்வாழ் உயிரின ஆராய்ச்சியாளரான முனைவர் நாராயணி சுப்ரமணியன் அவர்கள் எழுதிய ஆழ்கடல் – சூழலும் வாழிடங்களும் புத்தகம் ஆழ்கடல் குறித்து தமிழில் இளையோருக்கு வெளியான முதல் நூலாகும். இந்தப் புத்தக்கத்தின் மற்றொரு சிறப்பு அதன் ஓவியங்கள். ஓவியர் தியனேஷ்வரனின் ஓவியங்கள் ஆழ்கடல் வாழிடங்களை மிகத் துல்லியமாகக் காட்சிப்படுத்தின. சூழலியல் புத்தகங்களில் ஓவியங்களின் பங்கு மிக முக்கியமானது என்பதை இந்தப் புத்தகம் உணர்த்துகிறது. நாராயணியின் விலங்கும் பாலினமும் (ஹர் ஸ்டோரிஸ்) பெரியவர்களுக்கான புத்தகம், அவை முன்வைக்கும் விசயங்கள் தமிழில் “eco-feminism”க்கு அடித்தளமாய் அமையக்கூடியவை.
விஞ்ஞானிகள் அறையே விட்டு வெளியே வர வேண்டும் என்று 250 ஆண்டுகளுக்கு முன்பே கூறிய ஹம்போல்ட் அவர்களை அறிமுகப்படுத்துகிறார் ஆராய்ச்சியாளர் ஹேமபிரபா. மனித நடவடிக்கையால் தூண்டப்படும் காலநிலை மாற்றத்தைக் கண்டறிந்தவர் ஹம்போல்ட். அதே போல் சார்லஸ் டார்வினின் கடல் பயணங்கள் குறித்தும் இந்திய நிலப்பரப்பில் சூழலியல் சார்ந்து சமூக அக்கறையுடன் செயல்பட்டவர்களான சாலிம் அலி, ஜானகி அம்மாள் அவர்களையும் ஓங்கில் கூட்டம் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஓங்கில் கூட்டம் சூழலியல் வெளியீடுகள்:
- தண்ணீர் என்றொரு அமுதம்: (சி.வி. இராமன், தமிழில்: கமலாலயன்)
- ஹம்போல்ட்: அவர் நேசித்த இயற்கை (ஹேம பிரபா)
- ஆழ்கடல் நாராயணி – சூழலும் வாழிடங்களும் (நாராயணி சுப்ரமணியன்)
- உயரப் பறந்த இந்தியக் குருவி – சாலிம் அலி (ஆதி வள்ளியப்பன்)
- சார்லஸ் டார்வின் – கடல் பயணங்களால் உருவெடுத்த மேதை (அன்பு வாகினி)
- வாசிக்காத புத்தகத்தின் வாசனை – கொ.மா.கோ.இளங்கோ
- ஜானகி அம்மாள் இந்தியாவின் கரும்புப் பெண்மணி – இ.பா.சிந்தன்
- Humboldt – A Scientist’s encounter with nature (English) – Hemaprabha, Translator: Ilamparithi
- Salim Ali (English) – Aadhi Valliappan, Translator: Ilamparithi
செயற்பாட்டாளர்கள்: கதைசொல்லிகள், தென்னங் கீற்று & பனை ஓலை பொம்மைகள் கலைஞர் திலகராஜன், தியாக சேகர் போன்ற ஓரிகாமி கலைஞர்கள், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், பூவுலகின் நண்பர்கள், உதிரி நாடக நிலம் விஜயகுமார், நாடக கலைஞர் திருநெல்வேலி மதியழகன் எனப் பலரும் சூழலியல் சார்ந்த விழிப்புணர்வைப் ஏற்படுத்தி வருகின்றனர். NCBH, துலிகா, வானம், இயல்வாகை, காக்கைக் கூடு, குட்டி ஆகாயம், பஞ்சு மிட்டாய் & ஓங்கில் கூட்டம், போன்ற பதிப்பகங்கள் தொடர்ந்து காலத்திற்கேற்ற சூழலியல் கருத்துகளைக் குழந்தைகளுக்கு வெளியிட்டு வருகின்றனர். துளிர், உயிர், மின்மினி, சுட்டி யானை, குட்டி ஆகாயம் போன்ற இதழ்களும் மிக முக்கியமான பங்களிப்பைச் செலுத்தியுள்ளன. சூழலியல் புத்தகங்களைத் தனியே காட்சிப்படுத்துவது, புத்தக அறிமுக கூட்டங்கள் நடத்துவது, குறுநூல் வெளியிடுவது, புத்தகக் கண்காட்சியில் தனித்துவமான அரங்க வடிவமைப்பது, பறவைப் பார்த்தல் நிகழ்வை ஒருங்கிணைப்பது என சூழலியல் சார்ந்து காக்கைக்கூடு போன்ற அமைப்புகள் இயங்கி வருகின்றனர்.
விமர்சனங்கள் & போக்குகள்: மாணவர்களுக்கான ஓவியப் போட்டிகள் என்றாலே எரியும் பூமி பந்து, தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் புகை, “Save Nature” என ஒன்றுபோலவே ஓவியங்கள் வரையப்படுவதை 25 ஆண்டுகளுக்கு மேலாக நாம் காண்கிறோம். நம் சமூகத்தின் கற்பனைத் திறன் என்பது ஒரு வட்டத்திற்குள் அகப்பட்டு சுழன்று கொண்டிருப்பதையே இது உணர்த்துகிறது. சிறார் இலக்கயத்திலும் இதுபோன்ற சிக்கல்கள் உள்ளன. சூழலியல் என்றதுமே மரம் வளர்த்தல் என்ற ஒற்றைத் தீர்வை வழங்கும் கதைகளை அதிகம் எழுதப்படுகின்றன. குழந்தைகளுக்குதானே எழுதுகிறோம் என்ற மன்ப்பான்மையின் வெளிபாட்டின் விளைவாகவே இதை நான் கருதுகிறேன்.
சிறார் இலக்கியத்தில் ஓவியங்கள் உயிரினங்களின் வகைமை, வாழிடங்கள் போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும். ஆங்கிலத்தில் டார்வினின் “The Origin of Species” புத்தகத்தை குழந்தைகளுக்கான படக் கதையாக ஓவியர் சபீனா வழங்கியுள்ளார். அதுபோன்ற முயற்சிகள் தமிழில் நடைபெற வேண்டும்.
சிறார் இலக்கியத்தில் விமர்சனங்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். அதுவே நம்மை ஆக்கப்பூர்வமான இடத்திற்கு அழைத்துச் செல்லும். ஆனால், எப்போது விமர்சனம் எழுந்தாலும், விமர்சகர் பக்கம் அனைவரும் நின்றுகொள்வதும், அதன் மூலம் தங்களது படைப்புகள் மீதான விமர்சனங்களைத் தவிர்ப்பதுமாகவே சூழல் நிலவுகிறது. இந்தப் போக்குகள் சூழலியல் சார்ந்த படைப்புகளுக்கு ஒருவித தேக்க நிலையை உருவாக்குகின்றன. சூழலியல் சார்ந்து எழுதப்படும் படைப்புகள் அந்தத் துறைசார்ந்த அறிவியலாளர்கள் & வல்லுநர்களிடம் மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும். இவற்றையெல்லாம் கடந்து சிறார் இலக்கியம் பயணிக்க வேண்டும். பயணிக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்.
References:
- Childern As Ecocitizens – Ecocriticism and environmental texts – Geraldine Massey and Clare Bradford
- Literature and Ecology – William Rueckert
- Deep into Nature: Ecology, Environment and Children’s Literature
- ரேச்சல் கார்சனின் மெளன வசந்தம் – உலகை மாற்றிய நூல் – ஆதி வள்ளியப்பன்
- தமிழ் ஒரு சூழலியல் மொழி – நக்கீரன்
- சூழலியலும் சிறார் இலக்கியமும் – ஆதி வள்ளியப்பன் (நவீனத் தமிழ்ச் சிறார் இலக்கியம் நூலில் இடம்பெற்ற கட்டுரை)
குறிப்பு: புது மலர் சூழலியல் சிறப்பு இதழில் வெளியான கட்டுரை.