உலகனேரிக்கு ஒரு சீட்டு – க. சம்பத்குமார்

வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

“உலகனேரிக்கு ஒரு சீட்டு” எனக் கேட்டு வாங்கிய டிக்கெட்டை மடித்து சட்டைப்பையில் வைத்த நான்தான், உண்மையில் அன்றைக்கு அந்த இடத்தில் உலகனேரியை இறக்கி வைத்தவன். ஆம், ஒருவாரத்திற்கு முன்பு வரை ஒருமுறை கூட உச்சரித்திராத இடத்தை வந்திறங்கிய நிமிடத்திற்கு முன்புவரை ஓராயிரம் முறை தேடியிருந்தேன் கைபேசியில். ஒருவழியாக தசிஎகச வின் கருத்தியல் பயிலரங்கு தொடங்கவிருந்த நாளின் விடியலில், மனதில் தூக்கிச் சுமந்த உலகனேரியை அதே இடத்தில் எவ்வித சேதாரமுமின்றி இறக்கி வைத்தேன். என்னை இறக்கிவிட்டுக் கிளம்பிய பேருந்தில் நடத்துனரின் விசில் சத்தத்தில் கூடுதல் உற்சாகம் தெரிந்தது. பேருந்து நிறுத்தத்தில் இறங்கியதும் ஏற்கனவே நெறிப்படுத்தப்பட்டிருந்த திசையில் நோக்கினேன். பெருத்த ஏமாற்றம்.

வழிகாட்ட ஒரு பதாகை இல்லை; கொடி இல்லை; தோரணம் இல்லை. கடந்தவாரம் அவிநாசியில் பெரும் படாடோபமாக நிகழ்ந்த வணிகர் சங்கத்தின் தொடக்கவிழா நிகழ்வு ஒரு கணம் மனதில் நிழலாடியது. கல்விக்கும் வியாபாரத்திற்குமான வித்தியாசத்தை மனதில் அசைபோட்டபடி நடக்கத் துவங்குகையிலேயே இடதுபுறம் தென்பட்டது லாஸ் ஹவுஸ். முதலில் பார்க்கையில் அவ்வளவு சின்னதாகத் தோன்றிய ‘லாஸ் ஹவுஸ’  நாள் முழுவதும் கவனித்ததில் அவ்வளவு பெரியதாகத் தோன்றியது. ‘லாஸ் ஹவுஸ்’ இல்லத்தின் பொறுப்பாளரும் ஆதி வள்ளியப்பன் அவர்களின் ஆசிரியருமாக இருந்தவருடனான உரையாடல் வழி அவர்களின் செயல்பாட்டிலும் அவ்வில்லப் பணியாளர்கள் வழி அவர்களின் பணிநேர்த்தியிலும் பெரும் மதிப்பு கூடியது. இதுவரை அறிமுகமில்லாத மதுரையில் புதிதாக ஒரு உறவினர் இல்லத்திற்கு வந்து அன்றைய நாள் முழுதும் தங்கி உறவாடிச் செல்வதுபோல இருந்தது. வீடு திரும்பும்போது நினைத்தேன், “நல்லவேளை, கொடியுமில்லை; தோரணமுமில்லை.”

நிகழ்வு துவங்க இன்னும் ஒருமணி நேரமிருந்தது. வரவேற்பறையில் காத்திருக்க, ‘பஞ்சுமிட்டாய்’ பிரபு உள்ளே நுழைந்தார். சில வருட இடைவெளிக்குப் பிறகான சந்திப்பில் அவர், இளைத்திருப்பதாய் எண்ணிக் கொண்டேன். ஆனால் அவர், தனது வாசிப்பிலும் தொடர் பணிகளிலும் கூடுதல் போஷாக்கோடு இருப்பதை அன்றைய தினத்தில் நேரில் கண்டு மகிழ்ந்தேன். இவர் போன்றவர்களால் இன்னும் திடம்பெறட்டும் தசிஎகச.

அவிநாசியில் இருந்து இன்னும் வந்துசேர்ந்திராத நீரோடை மகேஸ் அவர்களை அழைத்துப் பேசியபின் இதுவரை அறிமுகமில்லாத புதிய நண்பர்களை கவனித்தபடி அமர்ந்திருந்தேன். அருகில் அமர்ந்த பாவேந்தர் தாய்த்தமிழ் பள்ளி தாளாளர் அவர்களை அடையாளங் கண்டு அவர்களோடு உரையாடிக் கொண்டிருக்கையில் நல்ல பாடலோடு நிகழ்வு தொடங்கியது.

மதுரை மாவட்ட கிளை தலைவரும் எழுத்தாளருமான சரவணன் அவர்களின் சுருக்கமான வரவேற்பிற்குப் பிறகு தலைமை உரையாற்றிய தலைவர் உதயசங்கர், “மாநில அமைப்பாக திருச்சியில் திரட்டிக் கொண்ட நாம் கருத்தியலாக நம்மை இன்னும் ஆழப்படுத்திக் கொள்ள இந்த முகாம் உதவியாக இருக்கும்” என்றார். அதோடு இன்றைய பதிப்பு சூழலில் உள்ள அறமின்மைகளையும் எழுத்தாளர்கள் சிறார் குறித்த பார்வைகளை வளர்த்துக் கொள்ள வேண்டிய தேவை குறித்தும் தன் உரையில் தெரிவித்தார். அமைப்பாக செயல்படுவது குறித்த புரிதலை நாம் உருவாக்கிக் கொள்வதன் அவசியம் குறித்தும் அதன்வழி பெரியவர்களிடமும் குழந்தைகளிடமும் நாம் செயல்பட வேண்டிய தன்மை குறித்தும் பேசி முகாமின் நோக்கங்களை தெளிவுப்படுத்தினார்.

நிகழ்வில் தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் மற்றும் பாரதி புத்தகாலயம் இணைந்து பதிப்பித்த ‘பஞ்சுமிட்டாய்’ பிரபு அவர்களின் ‘ஆத்திசூடி குழந்தைப் பாடலா?’ என்கிற சிறுபுத்தகம் மாநிலக்குழு பொறுப்பாளர்களால் வெளியிடப்பட்டது.

திருச்செந்தூர் கிளை பொறுப்பாளர் திரு. சகேஷ் சந்தியா அவர்கள் தனது வாழ்த்துரையில் குழந்தைகள் நூல் குறித்து சில நடைமுறை சார்ந்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். குழந்தைகளிடம் வழங்கப்படும் நூல்களை முதலில் செயல்பாட்டாளர்கள் வாசித்திருக்க வேண்டியது அவசியம் என தனது கருத்தை முன்வைத்தார். அதோடு குழந்தைகள் சார்ந்த புத்தகங்களில்கூட அவர்களுக்குப் பொருந்தாத கருத்துகள் இடம்பெற்று வருவதால் சிறார் இலக்கியக் கண்காணிப்பு குழு அமைக்கப்படுதல் அவசியம் என்பதை வலியுறுத்திப் பேசினார். ஆன்மீகத்தின் பெயரில் மதவெறி கருத்துகளும் மூடநம்பிக்கை பிரச்சாரங்களும் மிக எளிதாக குழந்தைகளிடம் கொண்டு செல்லப்படும்போது நாம் அம்பேத்கரையும் பெரியாரையும் குறித்து உரையாடத் தயங்குவது அவசியமற்றது என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார். அடுத்த பத்து தினங்களுக்குள்ளாகவே சென்னை மாநகராட்சிப்பள்ளியில் நிகழ்ந்த மகாவிஷ்ணு என்கிற மூடநம்பிக்கைப் பேச்சாளரின் பேச்சால் அது உண்மைதானென நிரூபணமானது.

கருத்தியல் முகாமின் முதல் அமர்வில் கே. வேலாயுதம் (மாநிலக்குழு, தமுஎகச) அவர்கள், ‘அமைப்பும் அதன் தேவையும்’ என்கிற தலைப்பில் உரையாற்றினார். தனது உரையை பங்கேற்பாளர்களுடனான உரையாடலாக மாற்றிக் கொண்டதால் அவரது பணி மிக எளிதாக நிறைவேறியது எனலாம். அரங்கில் பங்கேற்பாளர்கள் பகிர்ந்து கொண்ட குறிப்புகளைக் கொண்டே எது சுயம், ஏன் அமைப்பு என்கிற கேள்வியை உருவாக்கி ஒரு சிடுக்கான சூழலுக்குள் அனைவரையும் நெருக்கிக் கட்டிவிட்டு கொஞ்ச நேரம் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டார். தங்களை விடுவித்துக் கொள்ள ஒவ்வொரு பதிலையும் ஆயுதமாக்கிப் பார்த்தனர் பங்கேற்பாளர்கள். பிறகு, உரையாளர்  உதிர்ந்து கிடந்த சொற்களில் தகுந்தவற்றையெல்லாம் எடுத்து கோர்வையாக்கியதும் சிடுக்கு நீங்கி எல்லாம் சரியானது. பதினைந்து நிமிடங்களுக்கு நீடித்த இவ்விளையாட்டில் தனிமனிதர்களிடம் இயல்பாக உருவாகிவரும் ‘சுயம்’ என்கிற உணர்வு ‘அமைப்பு’ என்பதை விலக்கிப் பார்க்கத் தூண்டுகிறது. உண்மையில்  ‘சுயம்’ என்பதே சமூக அமைப்புகளால் நமக்குள் உருவாகி வரும் கருத்தாக்கமே எஎன்கிற புரிதலை உருவாக்கினார். இதுவரை முரணாக இருந்த சுயம் மற்றும் அமைப்பு என்கிற இரு மனிதர்கள் இவ்வுரைக்குப்பிறகு அப்படியொரு சுவடே தெரியாத வண்ணம் கைகோர்த்து செல்வதுபோலத் தெரிந்தது என் மனக்கண்களில். இவர் தனது உரையைத் தொடங்கும்போது “நாம் பல நேரங்களில் வயதுக்கு மீறிய வயோதிகத்தோடு இருக்கிறோம்” என்கிற வரியை குறிப்பிட்டார். இவ்வரி நிகழ்வு முடிந்து பயணிக்கும்போதும் என்னுளிருந்து தொந்தரவு செய்து கொண்டே இருந்தது. தொடர்ந்து செயல்பாட்டாளர்கள் உடனான சந்திப்பும் களசெயல்பாடுகளும் இச்சிக்கலைத் தவிர்க்க நம் எல்லோருக்கும்  உதவக்கூடும்.

இரண்டாவது அமர்வில் எப்போதும் துளிர் இதழ் வழியாக மட்டும் பார்த்து வந்த பேரா. பொ. இராஜமாணிக்கம் அவர்கள் “இன்றைய உலகமும் குழந்தைகளும்” என்கிற தலைப்பில் உரையாற்ற வந்திருந்தார். நேரில் சந்திக்கக் கிடைத்த தருணத்திற்காக மகிழ்ந்தேன். குழந்தைகள் வாழும் உலகங்களை பல்வேறாக பகுந்தாய்ந்து அந்தந்த சூழல்கள் குழந்தைகளிடம் உருவாக்கும் தாக்கங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார். குழந்தைகளின் முதல் உலகம் வீடுதான். ஒரு தலைமுறைக்கு முன்புவரை வீடு என்பது பல்லுயிரிணச் சூழலாக விளங்கியது. ஆனால் குழந்தைகளின் இன்றைய வீட்டுச்சூழல் மாறியுள்ளது. அதற்கேற்ப அமையும் குழந்தைகளின் உலகத்தைப் புரிந்துகொள்ள பெரியவர்கள் முன்வர வேண்டும் என தன்னுடைய கருத்தினை முன்வைத்தார். பொருளாதார வளர்ச்சி அடிப்படையிலான உலகம், போர்ச்சூழல், அரசியல் செயல்பாடுகள், பண்பாட்டு தாக்கங்கள் என குழந்தைகளின் உளவியலை பாதிக்கும் காரணிகளை பட்டியலிட்டு எல்லா நிலைகளிலும் குழந்தைகள் பாதிப்புக்கு உள்ளாவதை தெளிவுபடுத்தினார். கூடவே போலி உண்மைகளை பிம்பப்படுத்துவதன் வாயிலாக குழந்தைகளின் அறிவியல் மனப்பாங்கை சிதைக்க நடக்கும் முயற்சிகளை கண்டறியவும் அதற்கெதிரான தீவிரமான நிலைப்பாட்டை முன்னெடுக்கவும் நாம் தயாராக வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி தனது உரையை நிறைவு செய்தார்.

இரண்டு அமர்வு முடிந்ததும் தேநீரும் பிஸ்கட்டும் காத்திருந்தது. அதன்பிறகு அரங்கமே “பஞ்சுமிட்டாய்” பிரபு அவர்களுக்காக காத்திருந்தது. “பஞ்சு மிட்டாய்” பிரபு அயலகச் சிறார் இலக்கியம் என்கிற தலைப்பில் தனது பார்வைகளையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார். பலருக்கும் விருப்பமான அமர்வாக இது அமைந்திருந்தது. தனது உரையையே ஐரோப்பிய தேசத்தின் நாட்டார் பாடல் ஒன்றோடு தொடங்கினார். அப்படியான பாடல்கள் இங்கு மெமரி போயம் என்கிற வகைமைகளுக்குள் சிக்கியிருப்பதை நகைச்சுவையாகப் பகிர்ந்து கொண்டார். ஐரோப்பிய தேசங்களில் குழந்தைகளின் வாசிப்பு பழக்கம் எப்படியாக இருக்கிறது. அதில் பெரியவர்களின் செயல்பாடு எந்தளவிற்கு உதவியாக அமைகிறது என்பதை சில உதாரணங்களோடு பகிர்ந்து கொண்டது நல்ல அதிர்வினை அரங்கில் ஏற்படுத்தியது. தெருக்கள் அனுமதித்தால் குழந்தைகள் விளையாடவே விரும்புகிறார்கள். தெரு விளையாட்டு உலகெங்கிலும் உள்ள குழந்தைகளுக்கு விருப்பமானவைகளே. அதில் நமது பகுதியை மட்டும் புனிதப்படுத்தி பார்க்க வேண்டிய அவசியமில்லை என்பதையும் தெளிவுப்படுத்தினார். ஐரோப்பிய குழந்தைகளுக்கான வகுப்பறைச்சூழல் குறித்தும் குழந்தைகள் பாடங்களை அணுகும்முறை பற்றியும் நல்ல விளக்கங்களை அளித்தார்.

அயலக இந்தியர்களிடம் இன்னமும் மாறாது இருக்கும் தமிழ்மொழி குறித்த சிந்தனை இறுக்கம் குழந்தைகளுக்கும்  அம்மொழிக்கும் இடையிலான இயல்பான வளர்ச்சிக்கும் பார்வைக்கும் பாதகமாக அமைந்திருப்பது குறித்தும் அயலகப் பெற்றோர்கள் தமிழை நீதிநெறி சார்ந்த சிமிழுக்குள் அடைக்கப்பட்ட பதார்த்தமாகவே பார்த்துப் பழகியிருப்பது குறித்தும் தனது உரையில் குறிப்பிட்டார்.

“பஞ்சுமிட்டாய்” பிரபு அவர்கள் அரங்கில் பகிர்ந்து கொண்ட செய்திகள் பலவும் அவரது பஞ்சுமிட்டாய் இணையதளத்தில் ( panchumittai.com) வாசிக்கக் கிடைக்கிறது. தவறாது அதனை வாசித்துவிடுவது சிறார் செயல்பாட்டாளர்களுக்கு உதவிகரமாக அமையும். நமது பார்வை எல்லையைத் தாண்டி நிகழும் செயல்பாடுகளை இப்படியான மனிதர்கள் வழியே கேட்கும்போது அதன் உண்மைத்தன்மை இன்னமும் கூடியிருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். நேரில் உணர்ந்தோம்.

இப்போது மதிய உணவு இடைவேளை. சுவையும் சூடும் குறையாக சைவ, அசைவ உணவுகள் எங்களுக்காக காத்திருந்தன. இதற்கென மதுரை கிளை அமைப்பினர்களுக்கு வயிறு நிறைந்த நன்றி மகிழ்வோடு.

மதிய உணவிற்குப் பிறகு கலந்துரையாடல் நிகழ்வு ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது. “குழந்தைகளுக்கெதிரான வன்முறைகளும் சிக்கல்களும்” என்கிற தலைப்பிலான உரையாடலில் ரக்ஷனா குழந்தைகள் அமைப்பு சார்ந்த ராணி அவர்களும் சோக்கோ டிரஸ்ட் சார்ந்த வழக்கறிஞர் செல்வ கோமதி அவர்களும் முதலில் உரையாற்றினர்.  குழந்தைகள் சார்ந்து நிகழ்ந்த சிக்கல்களையும் அவற்றினை இவர்கள் எதிர்கொண்ட சூழல்களையும் மனம் கனத்துப்போகும்படி பகிர்ந்து கொண்டனர். பாலியல் சார்ந்தும் உளவியல் சார்ந்தும் குழந்தைகள் எதிர்கொள்ளும் அபாயங்களை இன்னமும் சமூகம் பொருட்படுத்துவதில்லை என்பதை உணர முடிந்தது. குழந்தைகளின் கற்றலை பாதிக்கும்படியாகவே கல்வித்துறையால் உளவியல் கோட்பாடுகள் பயன்படுத்தப்படுவதை மிக அழுத்தமாக இங்கு பதிவு செய்யப்பட்டது. அரங்கில் பெரும்பான்மையினராக இருந்த ஆசிரியர்களின் எண்ணங்களும் உரையாளரின் கருத்துக்கு ஒப்பாக இருந்ததையும் உணர முடிந்தது.

கலந்துரையாடலின் நிறைவாக உரையாற்றிய சாலை செல்வம் அவர்கள் குறிப்பிட்ட கருத்துகள் குழந்தைகளுக்கு எதிரான சிக்கலுக்கு தீர்வாக முன்வைக்கப்பட்டது. குழந்தைகளை கண்டித்தல், தண்டித்தல் என்கிற நடைமுறைகளைத் தவிர்த்து மாற்று பழக்கங்களுக்கு பெரியவர்கள் தயாராக வேண்டும். குழந்தைகளை புரிந்து கொள்ளவும் பெரியவர்கள் பழக வேண்டும் என்பதை குறிப்பிட்டார். பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்களில் ஆண்கள் ஏன் காப்பாளர்களாக இருக்க முடிவதில்லை? பாலியல் அத்துமீறல் சம்பவங்களில் ஆண்களும் பெண்களும் ஏன் இணைந்து செயல்பட முடிவதில்லை என்கிற கேள்விகளையும் முன்வைத்து அவசியமான விவாதத்தினை துவக்கி வைத்தார்.

இறுதி நிகழ்வாக “சிறார் இலக்கியத்தின் சவால்கள்” என்கிற தலைப்பில் ஆதி வள்ளியப்பன் அவர்கள் சில விமர்சனங்களை முன்வைத்தார். இன்றைய சூழல், ஈசலென சிறார் எழுத்தாளர்கள் பெருகியுள்ள காலமாக இருக்கிறது. இது பாராட்டுதலுக்கு உரியது என்றாலும் புதியவர்களின் எழுத்துகளில் புதிய வகைமைகள் ஏதாவது தென்படுகிறதா? என்கிற கேள்வியோடு அவர்களை அணுக வேண்டியது அவசியம் என்றார். அறிவியல் மற்றும் சூழலியல் சார்ந்து எழுத ஆர்வமுள்ளவர்கள் தங்களது படைப்புகளில் தவறான செய்திகள் இடம்பெறாமல் இருப்பதை உறுதிசெய்து கொள்ள வேண்டும். அதோடு தான் எழுத விரும்பும் துறை சார்ந்த அறிவினை வளர்த்துக்கொள்ள முயற்சிக்கவும் வேண்டும் என வழிகாட்டினார். சிறார் இயக்க செயல்பாடுகளின் வழியே குழந்தைகளை படைப்பாளிகளாக நகர்த்திச் செல்ல முற்படும்போது அவர்களை அவசரப்படுத்தாது ஆர்வத்தை தூண்டும்படியாக மட்டும் நம் செயல்பாடுகளை அமைத்துக் கொள்ள வேண்டும் எனவும் பங்கேற்பாளர்க்கான வழிகாட்டுதல்களை வழங்கினார்.

அமைப்பின் மாநில துணைப் பொருளாளர் கார்த்திகா கவின்குமார் அவர்கள் அமைப்பின் கட்டுமானத்திற்கு ஆதாரமாக விளங்கும் உறுப்பினர் சேர்ப்பு குறித்த சில கருத்துகளைக்கூறி கவனப்படுத்தினார். அதோடு அன்றைய மொத்த நிகழ்வினையும் தொகுத்து வழங்கிய கலகல வகுப்பறை சிவா அவர்களின் பாணியும் நிகழ்விற்கு சிறப்பாக அமைந்தது. தனக்கான வாய்ப்பில் சிறப்பாக நிகழ்வை தொகுத்து வழங்கினார்.

இன்னுமொரு செய்தி.

நிகழ்வு முடிந்து ஊர் திரும்பும்போது கருத்தியல் சிந்தனைகளோடு சேர்த்து உலகனேரியையும் லாஸ் ஹவுஸையும் என்னுடனேயே அழைத்து வந்துவிட்டேன். யாரும் தேட வேண்டாம்.

நன்றி, வணக்கம்.

க. சம்பத்குமார்,

செயலாளர்,

தசிஎகச, அவிநாசி.

Leave a comment