தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் மதுரை பயிலரங்கம் – அமுதா செல்வி

வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பாக மாநிலக்குழு உறுப்பினர்களுக்கு கடந்த செப். மாதம் 1ஆம் தேதி மதுரையில் பயிலரங்கம் நடைப்பெற்றது. 

பயிலரங்கம் காலை 10 மணி அளவில் 60 பங்கேற்பாளர்களுடன் தொடங்கியது.   திரு க. சரவணன்  பயிலரங்கத்திற்கு வந்திருந்த பங்கேற்பாளர்களை வரவேற்று வரவேற்புரை நல்கினார்.

தலைமை: எழுத்தாளர் உதயசங்கர்

அதனைத் தொடர்ந்து  தோழர் உதயசங்கர் மாநிலத் தலைவர் தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் அவர்கள் தலைமை உரையாற்றினர் தலைமை உரையின் போதே அன்றைய பயிலரங்கத்தின் சாராம்சம் என்ன  என்பதைத் தெள்ளத்தெளிவாக விளக்கிக் கூறினார். சிறார் இலக்கியம் குறித்த புரிதலை சரியான முறையில் பொதுச் சமூகத்திற்கு ஏற்படுத்த வேண்டிய அவசியமும் தேவையும் இருப்பதாகத் தலைமை உரையில் தோழர் உதயசங்கர் அவர்கள் கூறினார். சிறார் சங்க உறுப்பினர்களுக்கு அமைப்பு குறித்த புரிதலை ஏற்படுத்த வேண்டியது மிக மிக அவசியம் ஆகவே அமைப்பு குறித்த புரிதலை ஏற்படுத்துவதற்காகத் தனி அமர்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதனையும் கூறினார். சிறார் சங்கத்தின் முக்கிய செயல்பாடுகளாக குழந்தைகளுக்காகச் செயல்படுவது, இலக்கியம் சார்ந்த பார்வையைப் பெரியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் ஏற்படுத்துவது, பெண்களைக் குறித்த சரியான பார்வையை பொது சமூகத்திற்கு ஏற்படுத்துவது நுகர்வு கலாச்சாரம் குழந்தைகளை எந்த இடத்தில் வைத்திருக்கிறது என்பதைக் குறித்த முறையான புரிதல்களை ஏற்படுத்த வேண்டிய தேவை அதிகமாகியுள்ளதால் சங்கம் இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு தன்னுடைய செயல்பாடுகளை வடிவமைத்துக் கொள்ள வேண்டும். மூத்தவர்களும் குழந்தைகளும் இணைந்து கற்க வேண்டிய தேவை இன்று மிகுதியாய் காணப்படுகிறது. குழந்தைகள் மீதான வன்முறை சமீபத்தில் அதிகரித்துக் கொண்டே வருகிறது எனவே மேற்கண்ட அம்சங்கள் குறித்து தலையீடு செய்வதிலும் சரியான புரிதலை ஏற்படுத்துவதிலும் நமது சிறார் சங்கத்திற்குக் கூடுதலான பொறுப்புகள் இருக்கின்றது என்பதை உணர்வதாக மாநில தலைவர் தன்னுடைய தலைமை உரையில் கூறினார். அடுத்தடுத்த அமர்வுகள் குறித்தும் அமர்வுகளை யார் நெறியாழ்கை செய்யப் போகிறார்கள் என்பதையும் அறிமுகம் செய்து தன்னுடைய தலைமை  உரையை நிறைவு செய்தார். தலைமை உரையின் ஒட்டுமொத்த சாராம்சம் சங்கத்தின் நீண்ட கால இலக்கையும் இலக்கு நோக்கிய பயணத்திற்கு நாம் பின்பற்ற வேண்டிய யுக்திகளையும் இலக்கை அடைவதற்குச் செய்ய வேண்டிய  பணிகள் குறித்த திட்டமிடலையும் உள்ளடக்கியதாக இருந்தது. இவ்வாறு சங்கத்தின் இலக்கு நோக்கிய பயணத்தில் தொய்வின்றி செயல்பட அமைப்பாகத் திரள்வோம் இதனை விரிவாகக் கூறுவதற்காகத் தோழர் வேலாயுதம் அவர்கள் வந்திருக்கிறார்கள் என்று அறிமுகம் செய்து தன்னுடைய உரையை நிறைவு செய்தார்

வாழ்த்துரை: தோழர் சுரேஷ் சந்தியா

வாசிப்பு என்ன செய்யும் என்பதற்கு தங்களுடைய பகுதியில் வாசிப்பு இயக்கத்தினை முழுமூச்சில் செயல்படச் செய்து அதன் விளைச்சலாக தாங்கள் அறுவடை செய்த அனுபவங்களையும் குழந்தைகள் மத்தியில்  தீண்டாமை சமத்துவம் குறித்த புரிதலையும் தொடர் வாசிப்பு ஏற்படுத்தியுள்ள மாற்றத்தையும் தோழர் சகேஸ் சந்தியா தன்னுடைய வாழ்த்துரையில் கூறினார். பதிப்பாளர்கள் சிறார்களுக்கான புத்தகங்களை அச்சிடும்போது மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றும் அவ்வாறு  கவனமுடன் செயல்படாத போது சிறார் இலக்கியத்தில் மத சாதிய வன்மங்கள் புகுந்துவிடும் என்றும் கூறினார். மேலும் பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ் போன்ற மாமேதைகளின்  கருத்துக்களைக் குழந்தைகளிடம் கொண்டு சேர்க்க வேண்டியது நம்முடைய தார்மீக பொறுப்பு அதை நாம்  முழுமையாகச் செய்யத் தவறி விட்டோம் என்ற வருத்தத்தையும் தெரிவித்து தன்னுடைய வாழ்த்துரையை நிறைவு செய்தார்.

அமைப்பும் அதன் அவசியமும்:  தோழர் வேலாயுதம்

எழுத்தாளர்களுக்கான அமைப்பு எண்ணிக்கை அளவில் நிறைய உள்ளன. ஆனால் குழந்தை எழுத்தாளர் அமைப்பு ஒப்பீட்ட அளவில் மிகக் குறைவு ஆனால் குழந்தைகளுக்கான இலக்கியம் சார்ந்த அமைப்பு மிக மிக அவசியமானது ஆகும். இன்றைய சமூகச் சூழலில் குழந்தைகளுக்கான எழுத்தாளர் அமைப்புகள் புறக்கணிக்க முடியாத அமைப்பாக இருக்க வேண்டும். அழ வள்ளியப்பா குழந்தைகள் எழுத்தாளர் சங்கம் உள்ளது. ஆனால் அது மட்டும் போதாது. அமைப்பு என்பது பல தனி மனிதர்களின் கூட்டு செயல்பாடு. தனிமனிதன் ஒரு வட்டத்திற்குள் இருக்க பெரும்பாலும் விரும்ப மாட்டான். ஏனெனில் ஒரு வரையறை சார்ந்த அமைப்புக்குள் இருக்கும்போது தனி மனிதன் தன் சுயத்தை இழக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது. தன் சுயத்தை இழந்து அமைப்பாக திரள வேண்டிய தேவை என்ன இருக்கிறது? என்ற கேள்வி எழுப்பி தோழர் வேலாயுதம் அவர்கள் பங்கேற்பாளர்கள் மத்தியில் உரையாடலை நிகழ்த்தி பல பதில்களை பெற்றார். அவற்றில் தனி மனிதனின் தன்னுடைய சுயத்தை இழக்காத வகையில் அமைப்பாக இயங்க வேண்டும்.அவ்வாறு அமைப்பாக செயல்படும்போது தனிமனிதனின் சுதந்திரம் பாதிக்கப்படும் அல்லவா!. சுயம், அமைப்பு இது இரண்டுமே முரண்பட்ட சொற்கள். சுயமாக இயங்குவது என்பது அமைப்பிற்குள் பொருந்தாத ஒன்று. அப்படி இயங்க இயலாது. ஆனாலும் அமைப்பாக திரளும் போது கருத்துக்கள் உருவாகும். எதிர் கருத்துக்கள் வரும். புதிய கருத்துக்கள் பிறக்கும். எந்த மனிதனும் தனியாக இல்லை அவன் பிறக்கும் போதிலிருந்து தன்னுடைய இறுதி காலம் வரை குடும்பம் என்ற அமைப்புக்குள் இருக்கின்றான். ஆகவே தனி மனிதனையும் அமைப்பையும் பிரிக்க இயலாது. கருத்துக்களை வெளிப்படுத்துதல் ஆற்றலுடன் செயல்படுதல் ஆழ்மன வெளிப்பாடு போன்றவற்றில் படைப்பாற்றல் பெற்று மனிதன் பொதுத்தன்மையில் இருந்து வேறுபடுகிறான். அவ்வாறு சிறந்த படைப்புகளை வெளியிடும் போதும் ஆற்றல்மிக்க செயல்பாடுகளை செய்யும் போதும் பொது சமூகம் போற்றக்கூடிய மனவெளிப்பாடுகளை பிரதிபலிக்கும் போதும் தான் சிறந்தவன் என்ற உணர்வு தனி மனிதனுக்கு வரும். தன்னை தனித்துவமாக அடையாளப்படுத்திக் கொள்ள தனி மனிதன் மிக ஆர்வம் காட்டுவான். ஆனாலும் தனிமனித செயல்பாடு என்பது ஒரு பெரும் இலக்கை நோக்கியதாக இருக்கும் என்று கூற இயலாது. அந்த இலக்கை அடைவதற்கான செயல்பாடுகள் தன்முனைப்பு சார்ந்ததாகவும், தொடர்ச்சியானதாகவும், மாற்றத்தினை ஏற்படுத்தக் கூடியதாகவும், இருக்கும் என்று கூற இயலாது. ஆகவே தனிமனிதன் தன் சுயத்தை இழக்காத வண்ணம் அமைப்பாக திரண்டு செயல்பட வேண்டிய அவசியம் இருக்கிறது. அப்படி அவனால் செயல்பட முடியும். அப்படி செயல்படுவதற்கு அவன் குடும்பத்திலும் சமூகத்திலும் பழக்கப்பட்டு இருக்கிறான். தனிமனிதனுக்கு அவனிடம் பரிணமிக்கும் சுயம் எங்கிருந்து கிடைத்தது? அது சமூகத்திடமிருந்து கிடைத்தது என்றால் அதனை யாருக்காக பயன்படுத்த வேண்டும்? தனிமனிதனின் சுயம் சார்ந்த வெளிப்பாடுகள் சமூகத்திற்காக தான் பயன்பட வேண்டும். சிந்தனை   சுதந்திரம், சுயம் இழக்காத தனித்துவம், அமைப்பாக இணைதல், இவை முரண்பாடுகள் அல்ல என்பதை புரிந்து கொண்டு செயல்பட்டால் அமைப்பும் வளரும் அமைப்பிற்குள் இருக்கும் தனிமனித சுயமும் இயல்பாக வளர்ச்சி அடையும். யாருக்காக எழுதுகிறோம்? எதைப் பற்றி எழுதுகிறோம்? என்ற புரிதல் குழந்தைகளுக்காக எழுதுபவர்களிடம் தெளிவாக இருக்க வேண்டும். குழந்தைகளுக்கான சமகால பிரச்சனை என்ன என்பதனை அறிந்து வைத்திருக்க வேண்டும். நீதி நியாயம் போன்ற பல்வேறு கருத்துகள் குறித்த உரையாடல்கள் நடக்கும் பொழுது பொது கருத்துக்கள் உருவாக்கப்படலாம். கருத்து உருவாகி, அது ஒருமித்த கருத்தாக உருபெற்று, இலக்கை நோக்கி பயணப்பட வேண்டும். எதை யாருக்காக எழுத வேண்டும் என்ற நோக்க நிலை உருவாக வேண்டும். இங்கு அனைத்துமே நிரந்தரம் அற்றது. கால மாற்றத்திற்கு உட்பட்டது. காலத்திற்கு ஏற்றபடி அது மாறிக்கொண்டே இருக்கும். கருத்து, கலந்துரையாடல், பொது கருத்து, நோக்கம், என்ன நோக்கத்திற்காக இந்த சமூகத்திற்கு பங்களிக்க விரும்புகின்றோம் என்பதனை குறித்த தெளிவான புரிதலுடன் செயல்படக்கூடிய நபர்கள் 10 பேராக 100 பேராக ஆயிரம் பேராக அமைப்பிற்குள் பெருக வேண்டும். அமைப்பு என்பது தனி மனிதனை நெருக்கடிக்கு உள்ளாகும் ஒன்று அல்ல. அமைப்பாக செயல்பட்டு அதன் பயன் என்னவென்று உணர்ந்து நட்பு வட்டம் விரிந்து சுயத்தை வெளிப்படுத்துவதற்கான களம் காண வேண்டும்.  அவற்றில் முற்போக்கு சிந்தனைகள் இருப்பின் அதுவே அமைப்பின் பலம். அமைப்பு தன்முனைப்பாளர்களுக்கு நல்ல தளத்தினை ஏற்படுத்திக் கொடுக்கின்றது. பாராட்டு, விமர்சனம், போன்றவற்றை ஏற்றுக் கொள்ளக் கூடிய மனமுடையவர்களாக இயக்க வாதிகள் இருக்க வேண்டும். தனிமனித வளர்ச்சியில் கிரியா ஊக்கியாகவும் அமைப்பு காணப்பட வேண்டும். குழந்தை உலகம் குறித்த புரிதல் கொண்டவர்கள் நிறைய பேர்  உலக அளவில் இருக்கிறார்கள். குழந்தைகள் உலகத்தை புரிந்து கொள்ள சரியான அணுகு முறையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அதை  அமைப்பு செய்து தர வேண்டும்.

இன்றைய உலகமும் குழந்தைகளும்: பேராசிரியர் ராஜமாணிக்கம்

ஏன் எப்படி எதுக்கு என்ற கேள்விகளை எழுப்பும் வண்ணம் படைப்புகள் இருக்க வேண்டும். இன்றைய உலகம் எப்படி இருக்கின்றது? குழந்தைகளின் முதல் உலகம் எது? போன்ற கேள்விகளை எழுப்பி பங்கேற்பாளர்கள் மத்தியில் இருந்து பதில்களை பெற்றார் தோழர் ராஜமாணிக்கம் அவர்கள் வீடு என்பது நபருக்கு நபர் வேறுபடும் என்று கூறினார் குழந்தைகளின் முதல் உலகம் வீடு என்றால் இரண்டாவது உலகம் எது? ஊரும் சமூகமும் என்றால் அங்கு காணப்படும் வேற்றுமையும் ஜாதிய பாகுபாடும் குறித்து சரியான புரிதல் நமக்கும் வேண்டும் குழந்தைகளுக்கும் ஏற்படுத்த வேண்டும். சமூகத்தில் மாறியதும் மாறாததும் நிறைய உள்ளது. குழந்தைகளின் மூன்றாவது உலகம் என்பது இடம்பெயர்தல் ஆகும். இங்கு பல்வேறு வகையில் வேறுபாடு காணப்படுகின்றது. பொருளாதார, பண்பாடு, மொழி, மதங்கள், இனங்கள், தேசியம், வரலாறு  போன்றவை மாறுபாடுகளுடன் காணப்படுகிறது. வளர்ந்த நாடுகள் பாதுகாப்பிற்கும், வன்முறை  , தற்கொலை போன்ற கருத்துக்களில் ஏராளமான செயல்பாடுகளை மேற்கொள்கிறது. வளரும் நாடுகள் மனித உரிமை சார்ந்த கருத்துக்களை உள்ளடக்கியதாக தங்களுடைய செயல்பாடுகளை வடிவமைத்துள்ளது. வளர்ச்சி குன்றிய நாடுகள் கட்டுப்பாடுகள் வறுமை போன்றவற்றில் சிக்குண்டு கிடக்கின்றன. உலக நாடுகள் சில கோட்பாடுகளின் கீழ் இயங்கிக் கொண்டிருக்கின்றன. நவீன தாராளமயமாக்கல், புதிய உலகமயமாக்கல், பண்பாட்டு தேசியம், பண்பாட்டு ஆதிக்க உலகத்தில் குழந்தைகள் வாழ்கிறார்கள். உண்மையை மறைத்து போலி உண்மையை கூறுதல் இன்று ஏராளமாக பெருகி உள்ளது. அதை போஸ்ட் ட்ருத்திசம்  என்று அழைக்கிறார்கள். மேலும் போர் எப்படி குழந்தைகளை பாதிக்கிறது என்பதனைக் குறித்தும் பருவ கால மாற்றங்கள் பற்றியும் எழுத வேண்டிய தேவை உள்ளது. நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளுக்குள் குழந்தைகள் எப்படி சிக்கியுள்ளார்கள் என்ற சரியான புரிதல் எழுதுபவர்களுக்கு வேண்டும் என்று தன்னுடைய கருத்துகளை முன்வைத்து அந்த அமர்வை தோழர் ராஜமாணிக்கம் அவர்கள் நிறைவு செய்தார்.

அயலகச் சிறார் இலக்கியம்: பஞ்சுமிட்டாய் பிரபு

ஆங்கில இலக்கியத்தின் பொற்காலமாக மூன்று காலகட்டங்களை குறிப்பிடுகிறார்கள் அவை சிறார் இலக்கியத்தின் பொற்காலம் என்று கருதுகிறார்கள் இந்த காலகட்டத்தினை பொற்காலம் என்று கருதுவதற்கு  ஆலிஸ் இன் ஒண்டர்லேண்ட் நார்னியா ஹாரி பாட்டர் போன்ற உலகின் மிகச்சிறந்த படைப்புகள் காரணமாக அமைந்தன.

1970கள் வரை – ஆங்கிலச் சிறார் இலக்கியத்தில் யுத்தக் கால நினைவுகளும் அச்சங்களும் பாதிப்புகளும் அதிகம் இடம் பெற்றன. அவை அனைத்துமே வெள்ளையர்களின் வாழ்வையே அதிகம் பேசின. போர்க்காலத்தில் குழந்தைகள் பாதிக்கப்பட்டதும் அந்த பாதிப்பு எவ்வாறு இலக்கியத்தில் வெளிப்பட்டது என்பதனை குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார். ஆனால் 1980கள்-1990களில்  வேறு ஒரு இடத்திற்கு சிறார் இலக்கியம் மாறிச் சென்றது. வெள்ளையர்களுக்கு சமமான அளவில் கறுப்பின மக்கள் அதிகம் எழுதியுள்ளனர். அதேப் போன்ற புலம்பெயர்ப்புச் சார்ந்த வாழ்வியல் சிறார் இலக்கியத்தில் அதிகம் இடம் பெற தொடங்கின.

மேலும் படக்கதைகள் வயதிற்கு ஏற்றார் போல் அமைய வேண்டும் என்றும் 1480 களில் ஜெர்மனியில் நீதிக் கதைகள் சார்ந்த சிறார் இலக்கியம் வரத் தொடங்கியது என்றும் கூறினார். இலக்கியங்கள் வாயிலாக இனப் பாகுபாடு எவ்வாறு புரிந்து கொள்ளப்பட்டது பேசப்பட்டது என்பதனையும் எடுத்துரைத்தார். மேலும் இடைக்காலத்தில் ஜெர்மானிய எதிர்ப்பு மற்றும் ஹிட்லரை வில்லனாக சித்தரித்து வந்த இலக்கியப் படைப்புகள் குறித்தும்  திரைப்படங்கள் குறித்தும் அதன் பின்னணியையும் எடுத்துரைத்தார். அயல்நாடுகளில் 150 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து இலக்கியம் வசிக்கிறார்கள். நாம் இப்போது வரை எங்கிருக்கிறோம் என்ற சிந்தனையை தூண்டும் விதமான கேள்விகளை இடையிடையே எழுப்பினார்.

குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளும் சிக்கல்களும் – சாலை செல்வம், செல்வகோமதி, ராணி

அதனைத் தொடர்ந்து உணவு இடைவேளையும் உணவு இடைவேளைக்குப் பிறகு சோகோ டிரஸ்ட் நிறுவனத்தைச் சார்ந்த திருமதி செல்வ கோமதி அவர்களும் ரக்ஷனா மையத்திலிருந்து திருமதி இராணி மற்றும் தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநிலச் செயலாளர் தோழர் சாலை செல்வம் அவர்களும் குழந்தைகள் எப்படிப்பட்ட வன்முறைக்கு உட்படுத்தப்படுகிறார்கள் மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் அவர்கள் எவ்வாறெல்லாம் சித்திரவதை செய்யப்படுகிறார்கள் அதன் விளைவாக எப்படி மனப்பிறழ்வு நோய்க்கு ஆளாகிறார்கள் அதை எப்படி தடுக்கின்றோம் என்பதை குறித்து விரிவாக எடுத்துரைத்தனர் திருமதி செல்வகணபதி அவர்கள்  பணி செய்த காலகட்டத்தில் வடமாநிலத்தில் இருந்து மீட்டுக் கொண்டு வந்த கொத்தடிமை குழந்தைகள் குறித்தும் அவர்களுக்கான மறுவாழ்வு குறித்தும் பேசினார் திருமதி ராணி அவர்கள் இன்றைய சமூகம்,பள்ளி, குடும்ப சூழ்நிலையில் குழந்தைகள் எப்படி வன்முறைக்கு உள்ளாகிறார்கள் மனரீதியான நுண்ணிய பாதிப்புகளிலிருந்து அவர்களை எவ்வாறு மீட்டு எடுப்பது போன்ற கருத்துக்களை தன்னுடைய அனுபவங்களில் வாயிலாக எடுத்துரைத்தார். தோழர் சாலை செல்வம் அவர்கள் பேசும்போது குழந்தைகள் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் அவர்கள் மீது செலுத்தப்படும் வன்முறை தடுக்கப்பட வேண்டும் குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் சீண்டல்களும் வன்கொடுமைகளும் குழந்தைகள் ரசித்து அனுபவிக்கும் மனநிலைக்கு சென்று விடாத படி அவர்களை மீட்டெடுத்து காக்க வேண்டிய பொறுப்பு உள்ளது என்று கூறி தன்னுடைய உரையை மூவரும் நிறைவு செய்தனர்

சிறார் இலக்கியம் – சவால்கள் : தோழர் ஆதி வள்ளியப்பன்

சிறார் இலக்கியத்தில் இருக்கக்கூடிய சிக்கல்களும் சவால்களும் எழுத்தாளர்கள் மாற்றிக்கொள்ள வேண்டியவைகளும் புரிந்து கொள்ள வேண்டியவைகள்  குறித்த கருத்துக்களை தன்னுடைய அமர்வில் எடுத்துரைத்தார். சிறார் இலக்கியத்தில் எவையெல்லாம் கைவிடப்பட்ட பகுதிகளாக உள்ளது எவையெல்லாம் அதீதமான ஆக்கிரமிப்புக்குள்ளானப்பகுதிகளாக உள்ளது என்பதனையும் சிறார் எழுத்தாளர்கள் இன்றைய சூழலில் எப்படி குழந்தைகளை தங்கள் படைப்புகளின் வழியாக அணுகுகிறார்கள் எழுத்தாளர்களுக்கு இருக்க வேண்டிய தார்மீக பொறுப்பு குறித்தும் எடுத்துரைத்தார். சிறார் இலக்கியத்தில் விலங்குகளும் பறவைகளும் எப்படி வஞ்சிக்கப்படுகின்றன மனிதர்கள் தாங்கள் சொல்ல நினைக்கும் கருத்துக்களை மனித கதா கதாபாத்திரங்கள் வழியாக கூற வேண்டும் என்றும் விலங்குகளின் வழியாக கூறுவது சரியானது அல்ல என்றும் தன்னுடைய கருத்தை கூறினார் சிறார் இலக்கியம் குறித்த முறையான சரியான விமர்சனங்களை முன்னெடுத்து தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்து கொண்டார் வாசிப்பு இயக்க புத்தகங்களில் இருக்கக்கூடிய முரண்பாடுகளை கூறி தன்னுடைய உரையை முடித்தார்.

நன்றியுரை: அமுதா செல்வி

இறுதியாக நன்றி உரையை அமுதா செல்வி வழங்கினர் பயிலரங்கத்தின் ஒட்டுமொத்த அமர்வுகளையும்  தொகுத்து வழங்கும் பொறுப்பினை தோழர் ரெ. சிவா அவர்கள் ஏற்றுக்கொண்டு மிகச் சிறப்பாக தொய்வின்றி செய்து முடித்தார். தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் மதுரை பயிலரங்கம்.

Leave a comment